அந்த வேனிற்கால அதிகாலைப் பொழுதின் காற்றில் சற்றுக் குளுமை கூடியிருந்தது.
அழகியநல்லூர் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில் அதிநவீன கார் ஒன்று ஊருக்குள் நுழைந்து கொடி இல்லத்தின் முன் நின்றது.
ஆளுக்கு முதல் வாசம் பிடித்து, “ம்ம்மா.. மே..” என்று குரல் எழுப்பின அவ்வீட்டின் ஜீவராசிகள்.
பொற்கொடி கதவை திறந்து விட வீட்டுக்குள் நுழைந்தார்கள் மாமனும், மச்சானும்.
கணவன் ஊரில் இல்லையென்றதும் தாய் வீடு சென்றிருந்த மனைவியைக் காண நேராக அங்கே வந்திருந்தான் தலைவன்.
தேன்மொழியை அணைத்தபடி ஒரு பக்கம் ரோஜாவும், மற்றொரு பக்கம் தர்ஷனாவும் படுத்திருந்தார்கள். குட்டிகள் இருவரும் அத்தையின் மேல் காலை கையைப் போட்டு அவளை அசைய விடாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
இரண்டே வயதான தர்ஷனா பூனைக் குட்டியை போல அத்தையை உரசி, பசியில் விரலை வாயில் வைத்திருந்தாள்.
தன் கண் முன் கவிதையாக விரிந்திருந்த காட்சியை மென்நகையுடன் பார்த்திருந்தான் தர்மதுரை. கால்கள் வேரோடியது போல அசையாமல் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.
இரவு முழுவதும் காரோட்டி வந்தது அசதியை கொடுக்க, கையில் இருந்த பயணப் பையில் இருந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
சற்று நேரத்தில் அவன் குளித்து வர, படுக்கையில் குழந்தைகளைக் காணவில்லை.
தேன்மொழி தூக்கக் கலக்கத்தில் படுக்கையைத் துழாவ, உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவள் கைகளுக்குள் நுழைந்தான்.
சட்டென வாசம் பிடித்து, “தர்மா எப்போ வந்தீங்க?” என்று இமைகளைப் பிரிக்க முடியாமல் பிரித்து வினவினாள்.
“இப்போதான் வந்தேன்” என்று அவன் சொல்ல, “அன்பு எங்கே?” என்று தம்பியை தேடினாள்.
“ரெஸ்ட் எடுக்கப் போனான்”
“தள்ளுங்க. எனக்கு அவனப் பாக்கணும்” அவன் தோளில் கை வைத்து தள்ளி விட்டாள்.
“அடிப்பாவி. கண்ணைத் தொறந்ததும் அன்புவதான் தேடுற. எம்மேல அன்பே இல்ல உனக்கு”
“ஆமா.” அவன் மீசையைப் பிடித்திழுத்து நெற்றியில் முட்டி கன்னத்தில் அழுத்தமாக இதழ்களைப் புதைத்து விலகினாள்.
“ஆஹா, சிலுப்பி இதுதான்டி கம்மிங் ஹோம் ஃபீல்” என்றவன், ஒரே புரட்டலில் மனைவியை அண்ணாந்து தன் முகம் பார்க்கச் செய்திருந்தான்.
“தர்மா, காலயிலயே..” என்று ஆரம்பித்தவளின் பேச்சு சற்று நேரத்தில், சொல்ல வந்ததை மறந்து, தர்மா எனும் மந்திரந்தை உச்சரித்துக் கொண்டிருந்தது.
தலைவன் சுக அயர்ச்சியில் அப்படியே கண்ணயர்ந்து விட, தலைவி குளித்து, தயாராகி வெளியில் வந்தாள்.
“அன்பு..” என்று அவள் சத்தமாக அழைக்க, “ராசாத்தி, உனக்குக் காப்பித் தரவா?” என்று வந்தார் முத்தம்மா.
வீட்டுக்குள் மெலிதாக வெளிச்சம் பரவி பொழுது புலர்ந்து விட்டது என்றது. ஆடு, மாடு, கோழியும் போட்டி போட்டுக் கொண்டு சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன.
“நான் காப்பிப் போடுறேன் அம்மாச்சி. நீங்க உக்காருங்க” என்றவள், மெல்ல முன்னே நடந்து பழைய வீட்டை பார்க்க, “அன்பு பய மாடியில இருக்கான். இந்தக் குட்டிங்களுக்கு விளையாட்டு காட்டிட்டு இருக்கான்” என்றார் அம்மாச்சி.
“நீ போய் அவனைப் பாரு. நான் காப்பிப் போடுறேன்”
“நீங்க உக்காருங்க அம்மாச்சி” என்றவள், சமையல் அறைக்குள் நுழைந்தாள். பொற்கொடி பின்பக்கம் மாட்டுக் கொட்டகையில் இருந்தார். கந்தன், கருப்பண்ணசாமி எழுந்து வேலைக்குக் கிளம்ப, அனைவருக்கும் காஃபி போட்டு கொடுத்து, தம்பிக்குக் கையில் எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.
“அன்பு..” என்று அவள் அழைக்க, “க்கா..” என்று மலர்ந்த முகத்துடன் திரும்பினான் அன்பழகன்.
அவனோடு விளையாடிக் கொண்டிருந்த குட்டிகள் இருவரும், “அத்த” என்று அவளிடம் ஓடி வந்தார்கள்.
தளிர் நடைப் போட்டு அவள் காலைப் பிடித்த தர்ஷனாவை தூக்கிக் கொண்டவள், தம்பியின் கையை அழுந்த பற்றினாள்.
“சாதிச்சுட்டடா தம்பி. ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்றாள் கண் கலங்க.
“இந்நேரம் அப்பத்தா இருந்திருந்தா ரொம்பச் சந்தோஷப்பட்டிருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுருக்கும். ஊரெல்லாம் பெருமை பீத்தியிருக்கும்.”
“எல்லோருக்கும் சேர்த்து நீ சந்தோஷப்படுறியேக்கா. நம்ம சந்தோஷத்தை அப்பத்தா பார்த்துட்டேதான் இருக்கும்” என்றான் கரகரத்த குரலில்.
“அம்மாப்பா இருந்திருக்கலாம் டா அன்பு. இதெல்லாம் பார்க்க.. நாம நல்லா இருக்கறதா பாக்க..” உணர்ச்சிவசப்பட்டு அவள் சொல்ல, “அவங்க ஆச நிறைவேறினதிலயே அவங்க ஆத்மா சாந்தியடைஞ்சுருக்கும். உன்னோட சந்தோஷத்துல எப்பவும் நான் அவங்களைப் பாக்கறேன் கா” என்ற தம்பியை ஆதூரமாகப் பார்த்து அவன் தலை கோதிக் கொடுத்தாள். அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வைரமாய் மின்ன, அவளின் பின்னே வந்து நின்றான் தர்மதுரை.
மனைவி, மச்சினன் இருவரின் தோளிலும் கைப் போட்டு, “என்ன ஒரே பாசமலர் பீலிங்ஸ்ஸா இருக்கு” என்றான் சிரிப்புடன்.
மாமன் சிரிக்கவும் அத்தை கையில் இருந்த தர்ஷனாவும் சிரித்தாள்.
“மாமா நானு..” என்று ரோஜா கத்த, அவளைக் கையில் அள்ளிக் கொண்டான் தர்மா.
“உங்க மாமா வந்திருக்காங்க தேன்னு. கீழ போலாம் வாங்க” என்று இருவரையும் பார்த்து அவன் சொல்ல, “வாக்கா” என்று கத்தி விட்டு, கீழிறங்கி ஓடினான் அன்பழகன்.
“மாமா..” என்று மூச்சு வாங்க அவர் முன்னே சென்று நின்றான்.
மணிவண்ணன், நிர்மலா இருவரும் அமர்ந்திருக்க, படக்கென்று அவர்கள் முன் குனிந்தான். சட்டென்று அவனைத் தடுத்துப் பிடித்து அவன் தோள் பிடித்து நிமிர்த்திப் பெருமையுடன் அவன் தோளில் தட்டினார் மணிவண்ணன்.
அவரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அத்துணைப் பெருமையாக உணர்ந்தார்.
கந்தனுக்கு அந்நேரம் அவரின் ஆத்தா பெரியநாச்சி சொன்னதுதான் நினைவில் வந்தது.
“மணிவண்ணன் அன்ப பெரிய ஆளா கொண்டு வருவான் பாரு” உண்மைதான். பெரியவரின் கனவை நனவாக்கி விட்ட பெருமை மணிவண்ணனின் வீட்டாருக்கு நிச்சயமாக உரித்தாகும்.
தேன்மொழி வீட்டில் விளக்கேற்ற அந்தக் காலைப் பொழுதில் ஒட்டு மொத்த குடும்பமும் கூடத்தில் இருந்தது.
தெய்வங்களை வணங்கி, வீட்டு பெரியவர்களிடமும் ஆசிப் பெற்றான் அன்பழகன்.
சுதாகரன், ஜெயபாலன் என அண்ணன்களும், அக்கா குடும்பமும் வாழ்த்த அன்பழகன், அக்காவுடன் நின்று தெய்வமாகி விட்ட அப்பத்தா, அம்மா, அப்பா படங்களையும் வணங்கினான்.
அத்தனை கொண்டாட்டத்திற்கும் காரணம் அன்பழகன் தமிழகத் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றிருந்தான்.
இதோ சென்னைக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்று, பணி ஆணை பெற்று மாமனுடன் வீடு திரும்பியிருந்தான்.
இப்பொழுது அவன் மாவட்ட வருவாய் உதவி அலுவலர்.
அவனுக்குச் சொந்த ஊரில் பதவியும் பணியும் கிடைக்கவில்லை. பக்கத்து மாவட்டமான விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருந்த வருவாய் அலுவலகத்தில் பணிபுரிய ஆணை கிடைத்திருந்தது.
அவனது பல வருட படிப்புக்கு பலன் கிடைத்திருந்தது.
அவனது தேர்வு முடிவுகள் வந்ததில் இருந்தே வீட்டினர் அனைவர்க்கும் அத்தனை மகிழ்ச்சி, பெருமை.
இன்று அவனது பதவி அறிந்து கூடுதலாக மகிழ்ந்தார்கள்.