அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் திறந்திருந்த அறைக் கதவின் வழியே உள்ளிருந்தவர்களுக்கும் கேட்டது.
சுதாகரன் கண்ணில் அங்கிருந்த செவிலி பட, “சிஸ்டர் ஈவ்னிங் டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தீங்க? இன்னும் எவ்வளவு நேரமாகும்?” என்று அவரிடம் கேட்டு, மருத்துவமனை நடைமுறைகளைக் கவனிக்கச் சென்றான். அவனுக்கு முன்னே சென்று அதைச் செய்து கொண்டிருந்தார் அவன் மாமனார். அவரோடு இணைந்து கொண்டான் அவன்.
இங்கே ரம்யா திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.
“நேத்து தேனு அண்ணி வந்தாங்களாம்மா? எப்போ வந்தாங்க? நீயேன் என்கிட்ட சொல்லவேயில்ல?” என்று கேட்டாள்.
“அவ நீ தூங்கும் போது வந்துட்டு போனா. லோகேஷ் பொண்டாட்டி அன்பு கூட வந்தா. உன்கிட்ட நான் சொல்லலையா? மறந்திருப்பேன்” என்றார் எதுவும் நடவாதது போல. அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துப் பையில் வைத்தபடி.
“நீ என்னைய எழுப்பி இருக்கலாம் இல்லம்மா? நானென்ன அம்புட்டு நேரமா தூங்குனேன். அவங்க வந்தது கூடத் தெரியாம?” என்றவள், அலைபேசியை எடுத்து தேன்மொழியை அழைக்கப் போனாள்.
வேகமாய் மகளிடம் இருந்து அலைபேசியைப் பிடுங்கி ஓரமாக வைத்தார் கீதாராணி.
“என்னம்மா பண்ற? போனை குடும்மா?” என்று படுக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவள், அப்போதுதான் அம்மாவின் முகத்தை நன்றாகக் கவனித்தாள்.
“அம்மா, தேனு அண்ணி வந்தத நீயேன் என்கிட்ட சொல்லல?”
“பெரிய தேனு அண்ணி. உன்னய விடச் சின்னவ அவ..”
“அதுக்காகப் பேர் சொல்லியா பேச முடியும்?” என்று கேட்டவள், அம்மாவை கூர்ந்து நோக்கினாள்.
“அதில்ல ரம்யா..”
“என்னம்மா பண்ண? அவங்களை எதுவும் சொல்லிட்டியா?”
“இல்லடி. நீ வேற. அவ வந்த நேரம் உன் பொண்ணும் நீயும் நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. அதேன்..”
“அண்ணிக்கிட்ட குழந்தையைக் குடுக்கலையாம்மா நீ?” நொடியில் சரியாகக் கணித்துக் கேட்டிருந்தாள். அதிர்ச்சியுடன் அம்மாவை பார்த்தாள்.
“ஐயோ அப்படிலாம் குடுக்காம இருப்பேனா? என்னா பேச்சு பேசுற நீ. நான் குடுத்தேன் அவதேன் வாங்கல”
“அம்மா, ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு” என்று பல்லைக் கடித்தாள்.
“பச்சை உடம்புக்காரி நீயேன்டி அவளுக்காக இப்படிக் கத்திட்டு இருக்க. அதுவும் பேத்தி தூங்கும் போது..”
“அம்மா, அண்ணிகிட்ட பாப்பாவ குடுக்கலையா நீ?”
“அதெல்லாம் குடுத்தேன் குடுத்தேன். அந்த அன்பு வாங்கினா, அப்புறம் உன் அண்ணிகிட்ட நீட்டினா அவ வாங்கல..” என்றவர், “அவளே கோவிச்சிட்டு குழந்தையை வாங்காம போய்ட்டா. அதுக்கு நான் என்ன பண்ண? நீ பேசாட்டு இருந்தா போதும். என்னத்தயாவது உன் புருஷன் முன்னாடி உளறி வைக்காத. அப்புறம்..” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே, “நீ பண்ணது மட்டும் அவருக்குத் தெரிஞ்சது, அவ்ளோதான் மா.” என்றாள் ரம்யா, அம்மாவை ஆதங்கத்துடன் பார்த்து.
“இதுவே எனக்கு நடந்திருந்தா என்னம்மா பண்ணுவ நீ?”
“உனக்கென்ன டி கொற. நீ தங்க விக்ரகம் மாதிரி பேத்தியை பெத்திருக்க..”
“அம்மா, அண்ணாக்கும்தான்..”
“ஏய் உங்கண்ணே குழந்தை வேணாம்னு இருக்கான்.”
“உங்கிட்ட பேச முடியாதும்மா..” கடுப்புடன் முகம் திருப்பிக் கொண்டாள்.
“நான் என்ன பண்ணேன்னு இம்புட்டு பேசுற..” என்று அவர் சொன்னது எதுவும் அவள் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அம்மாவின் செயல் அவளுக்கு அத்தனை வருத்தத்தை அளித்தது.
சுதாகரனை அவள் விரும்பி மணந்தாள். அவனுக்காகக் காத்திருந்து, அவனிடம் தனியாகப் பேசி அவர்களின் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தாள். திருமணத்திற்குப் பிறகு விருப்பமும் அன்பும் இருவருக்கும் பொதுவானதாக மாறியிருந்தது.
அவளுக்கு மாமியார் வீட்டிலும் ஒரு குறையும் இல்லை. உலக நியதிப்படி சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மாமியாரிடம் வந்திருக்கிறது. ஆனால், பொற்கொடி அதற்காகக் கோபித்துக் கொள்பவர் உடனடியாக மறந்தும் விடுவார்.
சுதாகரன் தேன்மொழியின் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அவள் நன்கு அறிவாள்.
மருத்துவமனையில் இருந்து வீடு வந்ததும், மனம் தாங்காமல் அம்மா செய்ததைக் கணவனிடம் மறைக்காமல் சொல்லி விட்டாள் ரம்யா.
“என்னது? என்ன சொன்ன நீ? என்ன பண்ணாங்க உங்கம்மா?” பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து நின்றவன், கோபத்தில் குரல் உயர வினவினான்.
“இல்லங்க..”
“ஓ அப்போ உங்கம்மாக்கு சப்போர்ட்டா நீ?”
“அச்சோ, இல்லங்க. மொதல்ல உக்காருங்க” என்று அவன் கைப் பிடித்தாள். கோபத்துடன் அவள் கையை உதறினான்.
சில கணங்கள் ஒன்றும் பேசாமல் மனைவியையும் மகளையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தான்.
“தேனு அண்ணி வந்ததே எனக்குத் தெரியாதுங்க.”
“ம்ம்..” மனைவி முகத்தைப் பார்த்தவனுக்கு, தங்கையின் முகம் மனக்கண்ணில் வந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்தில் வார்த்தையை விட்டு காலத்துக்கும் வருந்தும் விதமாகப் பேசி, மனைவியை வருத்த விரும்பவில்லை அவன்.
இங்கு நடந்ததைத் தேன்மொழி இன்னமும் யாரிடமும் சொல்லவில்லை என்பது மனைவி சொல்வதை வைத்தே அவனுக்கு விளங்கியது. அவன் வீட்டுக்கு தெரிந்தால் மனம் வருந்துவார்கள். ஆனால், யாரின் மனமும் வருந்தும் விதமாக நிச்சயம் பேச மாட்டார்கள்.
“நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றான். அவனையே அண்ணாந்து பார்த்தவள், யோசனையுடன் அமைதியாகச் சரியெனத் தலையசைத்தாள்.
“என்ன மாப்ள இந்நேரம் கிளம்பறீங்க? காலைல போகலாம் இல்ல?” என்று மாமனார் கேட்க, “வேலை இருக்கு மாமா” என்றான் அவர் முகம் பாராமல்.
“என்ன மாப்ள பொழுது போய்..” என்று ஆரம்பித்த கீதாராணி மகள் முறைக்கவும் சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்தினார்.
“நான் இங்கருக்க வரைக்கும் தேனு அண்ணி குழந்தையை வந்து பாக்க சங்கடப்படுவாங்க. நீங்க அத்தகிட்டயும் அப்பத்தா கிட்டயும் நல்ல நாள் பாக்க சொல்லுங்க. நா நம்ம வீட்டுக்கு வர்றேன்” என்று கணவனிடம் சொன்னாலும் அதைச் சத்தமாகவே சொன்னாள் ரம்யா.
“என்னம்மா அவசரம்..” மகளின் பேச்சுப் புரியாமல் குழம்பி அவளையே பார்த்தார் ரம்யாவின் அப்பா கணபதி.
அவசரமாக உள்ளே சென்று மகளைப் பார்த்து விட்டு திரும்பிய சுதாகரன், “நா வர்றேன்” என்று பொதுவாகச் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
கணபதி மகளிடம் விசாரிக்க, அம்மாவை கை காட்டி விட்டாள் அவள்.
“பைத்தியமாடி உனக்கு? அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா?” என்று மனைவியைக் கடிந்தார்.
சிலருக்கு சில விஷயங்களில் அறிவு வேலை நிறுத்தம் செய்து விடும் போலும். அறிவு வேலை செய்தால் தானே அடுத்தவரின் வலி புரியும்?
மாலை மயங்கும் வேளையில் தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அதிசயமாக அன்று தர்மதுரையும் நின்று செம்பருத்தி, சங்கு பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தான். கொந்தளித்துக் கொண்டிருந்த அவன் மனத்தைப் பூக்கள் வருடி சாந்தப்படுத்தியதோ என்னவோ.
“இங்கன நான் பார்த்துக்கறேன். நீ வீட்டுக்குப் போறதுன்னா போய்ட்டு வாப்பா” என்று மகனின் தோளைத் தொட்டு சொன்னார் சுந்தரராஜன்.
தர்மமா மறுக்காமல் உடனே வீடு திரும்பினான்.
அப்பத்தா கூடத்தில் அவரிடத்தில் அமர்ந்திருக்க, அவர் பக்கத்தில் சம்மணமிட்டு அமர்ந்து ஏதோ கதை கேட்டு கொண்டிருந்தாள் தேன்மொழி.
“கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வேண்டிக்கிட்டு..” என்று அப்பத்தாவின் குரலை கேட்டுக் கொண்டே வந்தவனுக்கு, அவர் சொன்ன வேண்டுதல் எதற்கென்று புரிய பெரிய ராக்கெட் விஞ்ஞானம் தெரிய வேண்டியதிருக்கவில்லை.
“தேன்னு..” என்றழைத்தான். அவள் கவனமெல்லாம் அப்பத்தாவின் பேச்சில் இருக்க, அவன் குரல் கேட்டதும் விலுக்கென்று திரும்பி பார்த்தாள்.
“போத்தா, போய் டீ போட்டு குடு”
“டீ வேணாம்” என்றவன் அறைக்குச் செல்ல அவனைப் பின் தொடர்ந்தவள், அமைதியாகச் சென்று படுக்கையில் சுருண்டு படுத்து விட்டாள்.
மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு முன்தின நிகழ்வுகளே கண் முன் வந்து நின்று தொல்லை செய்தது.
தேன்மொழியின் மனநிலையைப் போலதான் அன்று வானிலையும் இருந்தது. படுக்கையில் உறங்கும் பாவனையில் இருந்தாள். தர்மா மனைவியை நெருங்க அவள் கண்களில் மெலிதான கண்ணீர் தடம்.
“தேன்னு..” என்று அவளின் தலைக் கோதினான்.
“ம்ம்ம்..” என்ற விசும்பலுடன் எழுந்து நின்று அவனைப் பார்த்தாள்.
வெளியே மழை மெலிதாகத் தூறத் தொடங்கியது.
“என்னடி..” என்றவனுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
யாரோ மூச்சுக் குழலை நெரித்தது போல அவனது தொண்டைக்குழி ஏறியிறங்கியது.
“என்ன பண்ணாங்க அவங்க? உன்னைய ஏதாவது சொல்லிட்டாங்களா அந்தம்மா?”
வேகமாக இல்லையெனத் தலையசைத்தவள், தன்னிரு கைகளையும் முன்னே நீட்டினாள்.
அவன் பிடிக்கப் போகப் பட்டெனக் கையைப் பின்னிழுத்துக் கொண்டாள்.
அவன் புரியாமல் பார்க்கையில் மீண்டும் உள்ளங்கைகளை விரித்து முன்னே ஏந்தினாள். தன் கையையே உற்று பார்த்து பார்த்து, வெடித்து வெளிவரவிருந்த அழுகையை உதடு கடித்து அடக்கினாள்.
அண்ணன் மாமியாரின் முன் குழந்தைக்காக இப்படித்தான் கையேந்தி நின்றாள். ஒரு முறை, இரு முறை அல்ல, மூன்று முறை.
அந்த நிலையும், அந்த மறுப்பும் இப்போதும் அவள் மனத்தைத் தாக்கியது.
அவர் அவளைப் பார்த்த அலட்சிய பார்வை, வாவென்று அழைக்காதது, உட்கார் என்று உபசரிக்காததெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. ஆனால், அண்ணன் மகளை அவளிடம் தர மறுத்ததை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவளது அண்ணன் மகளை அவள் தூக்கினால் என்னவாகிடப் போகிறது? அதற்குக் கூடத் தகுதி இல்லாமல் போனாளா அவள்.
“அந்தம்மா உங்கண்ணே மாமியாரா போச்சு. இல்லனா..” தர்மா ஆத்திரத்துடன் சொல்ல, இன்னமும் தன் கையைதான் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன தேனு, ஏதாவது விசேஷமா?” திருமணமான மறுமாசத்தில் இருந்து அவளிடம் பலரும் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்கள். இன்றும் கேட்கிறார்கள்.
“என்ன மாப்ள இன்னமும் நீங்கதான் ஓடி பிடிச்சு விளையாண்டுட்டு இருக்கீங்களா? எப்போ வர்றான் என் மருமகன்? அவன் கூட விளையாட வேணாமா?” என்று ஊரில் தர்மாவையும் கேலி செய்து கேள்வி கேட்கிறார்கள்தான். ஆனால், யாரும் இப்படிக் காயப்படுத்தியதில்லை. அவமானப்படுத்துவது போல நடந்ததில்லை. தன் வீட்டினர் அப்படி யாரும் தன்னை நடத்த வாய்ப்பளிக்கவில்லை என்பது இன்றுதான் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
“அழாத டி..” ஆதங்கத்துடன் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
“எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது தர்மா? எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா? நானா வேணாம்னு சொன்னேன். நான் என்ன பண்ணேன்னு எங்கிட்ட குழந்தையைக் குடுக்கல..” அழுகையில் பேச்சு வராமல், உதடுகள் துடிக்க, அவன் மார்பில் முகம் பதித்தாள்.
“அழாத டி..”
“ம்ம்..” என்றவளின் அழுகையும், அணைப்பும் கூடியது. அவள் உச்சியில் தன் முகத்தைப் பதித்து இறுக்கமாக அணைத்து நின்றவன் மனம் மட்டுமல்ல கண்களும் கலங்கியது.
இப்பொழுதும் சுருண்டு படுத்திருந்தவளை நெருங்கி, “என்னடி பண்ணுது? டாக்டர் பார்க்க போவோமா?” என்று கேட்டான்.
“ப்ச், வேணாங்க. எனக்குப் பீரியட்ஸ்..” அதைச் சொன்னவளின் மனத்தை, அவளின் உடைந்த குரல் பிரதிபலித்தது.