இந்த வாழ்வென்பது – 26 (1)

தர்மதுரை அழுத்தமாக மனைவியின் கரம் பிடித்தான். அனிச்சையாக அவன் கரத்தை இறுக்கினாள் தேன்மொழி.

“உக்காருங்க தம்பி” என்று அவனிடம் சொன்ன கீதாராணி அவராகவே குழந்தையை அவனிடம் நீட்டினார். ஒரே ஓர் நொடி அவன் தயங்க, அன்பு கை நீட்டி குழந்தையை வாங்கிக் கொண்டாள். தர்மா அமரவேயில்லை, அப்படியே நின்றிருந்தான். அங்கிருந்த சூழலை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மனைவியின் கண்களில் தெரிந்த வேதனை, என்ன நடந்திருக்கும் என்று அவனுக்குப் படம் போட்டு காட்டிக் கொடுத்து விட்டதே.

“இந்தாங்கம்மா, ஃப்ளாஸ்க்ல டீ இருக்கு. குடிங்க” என்று அவருக்காக எடுத்து வந்திருந்த தேநீரை நீட்டினான்.

“வீட்ல போட்ட டீயா அன்பு? உக்காருங்க நீங்களும் ஒரு கப் குடிப்பீங்க” என்று உபசரித்தார்.

ம்ஹூம், அசையவேயில்லை அவர்கள்.

தேன்மொழியின் தொண்டைக் குழி அவஸ்தையுடன் ஏறியிறங்க, ஆசையுடன் அண்ணன் மகளைப் பார்த்திருந்தாள்.

அவளின் கண்கள் கலங்கி, குழந்தையின் பூ முகத்தை மறைத்தது.

அன்புக்கரசி குழந்தையைக் கையில் ஏந்தி தம்பி, தம்பி மனைவிக்கு நடுவில் வந்து நின்றாள்.

தேன்மொழியின் கரம் அவளையும் அறியாமல் குழந்தையை நோக்கி நீண்டது. ஆனால், குழந்தையைக் கையில் வாங்கிடவில்லை அவள். அவள் பார்வை கீதாராணி பக்கம் சென்று திரும்ப, ஒற்றை விரலால் குழந்தையின் பட்டுக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தாள்.

யாருமே எதுவுமே பேசவில்லை. அப்படியொரு மௌனம்.

தர்மாவுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. இன்னும் சில நிமிடங்கள் அங்கு நின்றால் கோபத்தில் ஏதேனும் பேசி விடுவோமோ என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.

“மருமகன் வரலையாம்மா அன்பு?” கீதாராணி கேட்க, “இல்லம்மா, அவரு வெள்ளென வேலைக்குக் கிளம்பிட்டார்” என்றாள் அன்பு.

“அப்போ நாங்களும் கிளம்பறோம்ம்மா. திண்டுக்கல் போகணும், வேலை கெடக்கு” என்றான் தர்மா.

“என்ன தம்பி இப்பத்தான் வந்தீங்க. அதுக்குள்ள கிளம்பறோங்கறீங்க. மொத உக்காருங்க, உங்க மருமகளைக் கையில வாங்குங்க” என்றார். பட்டெனப் பதில் சொல்லப் போன நாவை அடக்கினான்.

“இருக்கட்டும்மா” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

அவன் மனைவியைப் பிள்ளையைத் தூக்க விடவில்லை அந்தப் பெரிய மனுஷி. எதற்காக? அவரின் காரணம் என்னவாக இருந்தாலும், அது அவனுக்கும் தானே பொருந்தும்? அவளுக்கு மட்டுமா பிள்ளை இல்லை? அவர்களுக்குத் தானே பிள்ளை இல்லை?

அண்ணன் மகளை எத்தனை ஆவலாகப் பார்க்க வந்தாள் மனைவி. ஆனால், ச்சே என்ன மனிதர்கள்.

“போகலாம்க்கா” என்றான் முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல்.

தேனு, தர்மா முகத்தைப் பார்த்த அன்பு, எதுவுமே கேட்கவில்லை.

மூவரும் அமைதியாக வெளியில் வந்தார்கள்.

தர்மா மனைவியின் கையை விடவேயில்லை. காரை நெருங்கியதும் அவளுக்காக முன் பக்க கதவை திறந்து விட்டான்.

சில கணங்கள் அவள் முகத்தைக் கூர்ந்தவன், பின்னால் திரும்பி, “ஏறுக்கா உன்ன பேக்கிங் ஹவுஸ்ல விட்டுட்டு போறேன்” என்றான்.

அன்புவின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டு அவர்களைச் சங்கடப்படுத்தாமல் அமைதியாகக் காரில் ஏறினாள்.

அவர்கள் மதுரை அலுவலகத்தை அடைந்ததும், அக்காவுடன் அவன் மட்டுமே உள்ளே சென்றான்.

கடந்த நான்கு நாள்களாக அவர்களின் வேலையையும் சேர்த்து லோகேஷ்வரன்தான் பார்க்கிறான். தேன்மொழி கணினியில் பார்க்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் பார்த்து விடுவாள். அதை விமானத்தில் சரியாக அனுப்ப வேண்டிய பணிகளை லோகேஷ்வரன் தனியாகச் செய்திருந்தான்.

சென்னையின் புதிய அலுவலகம் தொடர்பான பேச்சுகள் குறித்து அவனிடம் பேச வேண்டியிருந்தது. ஆனால், “நான் திண்டுக்கல் போய்ட்டு போன் பண்றேன் மாமா” என்று அவரிடம் சொல்லி விட்டு, அக்காவிடம் தலையசைத்து விட்டு வெளியேறியிருந்தான்.

அவன் காரை இயக்கி நகர்த்த மதுரையைத் தாண்டும் வரை கண் மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள் தேன்மொழி.

கியரில் இருந்த தர்மாவின் கரம், மனைவியின் கரத்தையும் சேர்த்தே இறுக பற்றியிருந்தது. தேன்மொழியிடம் அசைவேயில்லை. அப்படி இறுகி போய் அமர்ந்திருந்தாள்‌.

எங்கே வாயைத் திறந்தால் வெடித்துக் கதறி அழுது விடுவோமோ என்ற பயத்தில் உதடுகளை அழுந்த மூடி அமர்ந்திருந்தாள்.

தர்மா வண்டியை நேராக அவர்களின் தோட்டத்து வீட்டிற்கு விட்டான்.

“பாப்பாக்கு இங்கிருந்தே ட்ரெஸ் வாங்கிட்டு போகலாங்க. இங்க பாருங்க, எத்தனை கடைங்க இருக்குன்னு. டிஸ்ப்ளேல இருக்க டிரஸ் பார்க்கவே அவ்ளோ அழகா இருக்கு. வண்டியை நிறுத்துங்க வாங்குவோம்”

“மதுரையில இல்லாத கடையா தேன்னு”

“அங்க போய் வாங்க நேரம் இருக்காதுங்க. இங்கருந்தே வாங்கிட்டுப் போயிடலாம். பாப்பாவ பார்க்கும் போது வெறுங்கையோடவா போறது?”

“அவங்க வீட்டுக்கு வந்ததும் வாங்கிட்டுப் போய்க் குடுக்கலாம் தேன்னு”

“ஏன் இங்கருந்து வாங்கிட்டு போனா, என்னவாம்?” என்று எத்தனை ஆவலாக அவனிடம் சண்டையிட்டிருந்தாள். ஒருவேளை குழந்தைக்கு அவள் உடைகள் எடுத்துப் போய்க் கொடுத்து, அதைக் கீதாராணி வாங்க மறுத்திருந்தால், இன்னுமே உடைந்திருப்பாள் அவன் மனைவி.

கார் தோட்டத்துப் பக்கம் திரும்புவதைப் பார்த்ததும், “வீட்டுக்குப் போகலாம் மாமா” என்றாள் தேன்மொழி.

“இன்னைக்குத் தோட்டத்து வீட்ல இருக்கலாம்”

“இல்ல, வேணாம். எனக்குத் தனியா இருக்க வேணாம்” என்றாள் சிறுகுரலில்.

சட்டெனக் காரை வீடு நோக்கி திருப்பினான். அவர்களின் மனநிலையைப் போலவே வானமும் வண்ணமிழந்து காட்சியளித்தது. மெல்ல மழைக் காற்று மேனி தழுவி சென்றது.

“வாங்க” என்று அவர்கள் காரில் இருந்து இறங்கியதும் சொன்ன பவுணு அம்மாள், தேன்மொழி வீட்டுக்குள் வரவும், “என்னத்தா இப்பத்தேன் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?” என்று ஆரம்பித்தார். அவரைப் பார்த்துப் பெருமுயற்சி செய்து புன்னகைத்த தேன்மொழி, அப்படியே அவர்களின் அறையை நோக்கி நடந்தாள்.

தர்மா அவரிடம் கண் காட்ட, கண்ணைச் சுருக்கி பேரனை பார்த்தவர், தலையைப் பலமாக அசைத்து அவனுக்குப் பதில் மொழி சொன்னார்.

தர்மாவின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு உள்ளே போன தேன்மொழி, அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

“இந்தா அம்மாச்சி. உனக்குச் சேல வாங்கிட்டு வந்தேன். பார்த்து பிடிச்சுருக்கான்னு சொல்லு” என்று அவரிடம் பையைக் கொடுத்தாள்.

“ஆங் கொண்டா பார்ப்போம், அப்படியென்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு..” என்று அதை வாங்கியவர், “ஏத்தா திலகா. எங்கருக்க? புள்ளைக வந்துட்டாங்க பாரு. அவங்களுக்குச் சோத்த போடு” என்று குரல் கொடுத்தார்.

பேரன் பொண்டாட்டி வாங்கி வந்திருந்த நூல் சேலையை ஆவலாகப் பிரித்தவர், “மதிய சாப்பாடு சாப்பிட்டீங்களா இல்லையா? வழில எங்கனயாவது நிப்பாட்டி சாப்ட்டு வந்துருக்கலாம்ல? நான் சோறு போடவா?” என்று கேட்டார்.

“பசியில்ல அம்மாச்சி. நான் போய்ப் படுக்கறேன், டையர்ட்டா இருக்கு” என்று திரும்பி அறைக்குள் நுழைந்தாள்.

“சாப்ட்டு படுத்தா. வெறும் வயித்தோடயா படுப்ப?” என்று சத்தம் போட்ட அப்பத்தா, என்னாச்சு என்று பேரனை பார்த்தார்.

அவனோ அலைபேசியில் முக்கிய அழைப்பில் இருந்தான். அவன் பேசி முடிக்கையில் வீட்டுக்குள் வந்தார் திலகவதி.

“தொர, என்னப்பா போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? மழை வர்ற மாதிரி இருக்குன்னு மாடியில காஞ்சிட்டிருந்த துணிய எடுக்கப் போனேன். மதுரைல உங்க மருமகள பார்த்தீங்களா? குழந்தை எப்படி இருக்கா?” கையில் இருந்த துணியைச் சோஃபாவில் போட்டு உதறி மடித்தபடியே அவர் கேட்க, “ம்ம்” என்றான் மகன்.

“சோறு போடவாப்பா?”

“பசியில்லம்மா, நான் போய்க் கொஞ்ச நேரம் படுக்கறேன். நைட்லருந்து வண்டியோட்டிட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கு. ஒரு நாலு மணிக்கா எழுப்பி விடுங்க. தோட்டத்துக்குப் போகணும்”

“சாப்பிடாம தூங்காதீங்க ராசா” அப்பத்தா அக்கறையுடன் சொல்ல, “தூக்கமில்லாதது ஒருமாரி இருக்கு அப்பத்தா அதேன்” என்றான்.

“சரிப்பா போய்ப் படு. தேனு எங்க? தூங்குறாளா?”

“ஆமாம்மா” என்றவன், அறைக்குச் சென்றான்.

அன்புக்கரசிக்கு அழைத்துத் தேனுவின் வேலையையும் சேர்த்துப் பார்க்கச் சொல்லியிருந்தான் தர்மா. என்ன நடந்ததென்று அப்போதும் அவளால் தம்பியிடம் கேட்க முடியாமல் போனது.

என்ன நடந்திருக்குமென்று அவள் ஊகித்தாளோ அதைக் கணவனிடம் சொல்லவும் அவளுக்கு நேரம் வாய்க்கவில்லை. தர்மா இல்லாததால் லோகேஷ்வரனின் வேலைப் பளு அதிகரித்திருந்தது.

அவனிடம் தனியாகப் பேச முடியாமல் யாரேனும் அவனோடு இருந்து கொண்டே இருந்தார்கள். அப்போதும் அவளின் பார்வையைக் கவனித்து, “என்ன அரசி?” என்று கேட்கவே செய்தான். ஆனால், அலுவலகத்தில் வைத்து அதைச் சொல்ல தயங்கி ஒன்றுமில்லை என்று விட்டாள்.

கீதாராணி அவனுக்கு அத்தையாகிற்றே. அவனுக்கு மிக முக்கியமான உறவு. அதனால் தயங்கினாள். ஆனால், அவளுக்குத் தம்பி தர்மதுரை அதிமுக்கியம். அதனால் நிச்சயமாக நடந்ததை அறியும் எண்ணத்துடன் இருந்தாள்.

மறுநாள் பின் மாலைப் பொழுதில் மனைவி, மகளைப் பார்க்க சுதாகரன் மருத்துவமனை வந்தான். மகள் பிறந்து ஐந்தாம் நாளான இன்று தாயையும், சேயையும் வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவனிடம் சொன்ன மாமனார், மச்சினனிடம் மறுத்து விட்டு, அவனே கிளம்பி வந்திருந்தான்.

முதல் மூன்று நாள்கள் அவனும் அங்குதான் இருந்தான். நேற்றுதான் கடையில் முக்கிய வேலையிருக்க, திண்டுக்கல் சென்றிருந்தான்.

மனைவியின் அறைக்குள் அவன் நுழையும் போது பிள்ளைக்குப் பசியமர்த்திக் கொண்டிருந்தாள் ரம்யா. அவள் மட்டுமே அறையில் இருந்தாள்.

“எங்க அத்த மாமாவ காணோம்?” அவன் கேட்க, “நான் பாப்பாவ பால் குடுக்கத் தூக்கவும் அப்பா வெளில போனார். அவரோட அம்மாவும் போயிட்டாங்க” என்றாள்.

“அப்போ நானும் வெளில போகவா?” அவன் கேட்ட தொனியில் அவள் முறைக்க, “என்னடி?” என்றான் சிரிப்புடன்.

“ப்ச், உக்காருங்க” என்று படுக்கையைக் காட்டினாள்.

“உனக்குக் குடிக்க ஜுஸ் எதுவும் வாங்கிட்டு வரவா?”

“ஜுஸா? வேணாம். அம்மா சளி பிடிக்கும்னு சொன்னாங்க”

“அப்போ சூடா பால் இல்லன்னா டீ வாங்கிட்டு வரவா? பால் ரஸ்க் தொட்டு சாப்பிடுவ?” என்றவன், தன் கையில் இருந்த பையைத் திறந்து பால் ரஸ்க்கை வெளியில் எடுத்து வைத்தான்.

“தேனு வாங்கிட்டு வந்தாளாம், அம்மாகிட்ட குடுத்திருப்பா போல. அம்மா குடுத்து விட்டாங்க” என்று அவன் சொல்கையில் அறைக்குள் வந்தார் கீதாராணி. மருமகனை பார்த்து தலையசைத்தார். தேன்மொழியின் பேரை கேட்டதும் அவர் முகம் மாறியது.

குழந்தை பசியாறி உறங்கத் தொடங்கியிருக்க, “இப்படிக் கொண்டா..” என்று குழந்தையை வாங்கித் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துத் தொட்டிலில் போட போனார்.

“இப்படிக் குடுங்கத்தே” ஆசையாக மகளை வாங்கி, கையில் வைத்துக் கொண்டான் சுதாகரன்.

“தேனு அண்ணி ரஸ்க் வாங்கிட்டு வந்தாங்களா? அவங்க எப்போ சென்னையில் இருந்து வந்தாங்க?” என்று ரம்யா கேட்க, “நேத்து வந்தா..” என்றவனின் பார்வையெல்லாம் மகளின் மீதுதான் பதிந்திருந்தது.

“நேத்தே வந்துட்டாங்களா? அப்புறம் ஏன் என்னைய வந்து பார்க்கல? பாப்பாவ வந்து பார்க்கல?” என்று மகள் கேட்கவும் அம்மாவின் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டுமென்று நினைக்க, அந்நேரம் ஒன்றுமே தோன்றவில்லை அவருக்கு.

“என்ன சொல்ற நீ? தேனுவும், மாப்ளயும் நேத்து உங்களை வந்து பார்த்திட்டுதான் ஊருக்கு வந்ததா அம்மா சொன்னாங்களே..” என்று அவனும் குழப்பத்துடன் கேட்டான்.

“அப்படியா இங்க வந்தாங்களா? நான் பார்க்கலையே. அதெப்படி வந்தவங்க என்னைய பார்க்காம போனாங்க?” என்று புருவம் சுருக்கினாள். கீதாராணி மகளைப் பார்த்துக் கண் காட்ட, அவளெங்கே அவரைப் பார்த்தாள்.

சுதாகரனின் புருவங்கள் யோசனையில் சுருங்க, அந்நேரம் அவனை அழைத்தான் ஜெயபாலன்.

“என்னடா, நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். என்னனு பட்டுனு சொல்லு”

“என்னண்ணே ஹாஸ்பிடல்ல காலாட்டிட்டு உக்காந்து என் மகளைப் பார்த்துக்கறதுக்கு இம்புட்டு அலுத்துக்கற? என்னைய பாரு, உன் வேலையும் சேர்த்து நான் பார்த்துட்டு இருக்கேன்”

என்று ஜெயபாலன் வழக்கம் போலத் தொடங்க, “டேய் என்னான்னு சொல்லுடா” என்று அதட்டினான் அண்ணன்.

“அண்ணியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா? வீட்டுக்கு போயாச்சா?”

“இன்னும் இல்லடா..” என்று அவன் சொல்ல, அவனது பேச்சுச் சத்தத்தில் உறக்கம் கலைய சிணுங்கினாள் அவன் மகள்.

“பாப்பா அழறா போல. அடேய் அறிவே இல்லாத அண்ணா. குழந்தை கிட்ட நின்னா போன் பேசுவா” என்று ஜெயபாலன் கடிய, மகளைத் தூக்கச் சொல்லி மனைவிக்குக் கண் காட்டினான்.

அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.

“நீ மொத எதுக்குப் போன் பண்ண? அதைச் சொல்லுடா?”

“நம்ம பத்மா இல்ல பத்மா..”

“ம்ம். நம்ம இல்லடா..” என்றான் அண்ணன் நமுட்டு சிரிப்புடன்.

“சரி, என் பத்மாதான். நா சொல்றதை கேளுண்ணே” என்றான் தைரியமாக.

“ம்ம், பத்மாக்கு என்ன?”

“அவகிட்ட அம்மா பிளவுஸ் தைக்கக் குடுத்திருக்காம். நேத்து தேனுகிட்ட சொல்லுச்சாம்.”

“தேனு வாங்கிட்டு வரலையா?”

“மறந்துட்டாளாம். நீ என்ன பண்றண்ணே. நீயும் மறந்துட்டு வந்துடுற. சரியா? நீ ஊருக்கு வந்ததும் நான் மதுரைக்கு வந்து வாங்கிட்டு வந்து அம்மாக்கு குடுத்துடுறேன். ஓகே?”

“வெவரம் டா நீ.”

“வேறென்ன பண்ண சொல்ற? உனக்கென்ன கட்டுனா உன்னையத்தான் கட்டுவேன்னு அண்ணி உன்னய கட்டிக்கிட்டாங்க. ம்ம். நான் இந்தப் பத்மாகிட்ட படுற பாடு..” என்று அவன் புலம்ப, “புலம்பாம போனை வைடா” என்று அழைப்பை சிரிப்புடன் துண்டித்தான் சுதாகரன்.

error: Content is protected !!
Scroll to Top