அவள் என்ன தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்தாள். அடுத்த முறை அந்தத் தவறை செய்யக் கூடாதென உறுதியாக மனத்தில் பதிய வைத்தாள்.
மதிய உணவிற்கு மனைவியை அழைத்துக் கொண்டு மாமியார் வீடு சென்றான்.
“தேனு..” என்றழைத்த முத்தம்மா, “வாங்க தம்பி” என்று பேத்தியின் கணவனை முதலில் வரவேற்றார்.
பெரியம்மாவிற்குக் காலையிலேயே வீடு வருகிறேன் என்று செய்தி சொல்லி விட்டாள் தேன்மொழி. ஆக, சமையல் மணம் வீடே மணத்துக் கிடந்தது.
“வாங்க மாப்ள” மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்திருந்த கந்தன், கருப்பண்ணசாமியும் அவனைத்தான் முதலில் விசாரித்தார்கள். ஆனால், பெண்களின் கவனமெல்லாம் அவள் மீதுதான்.
“என்னடா ராசாத்தி. என்னமோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னியாம்?” முத்தம்மா ஆவலாகக் கேட்க, அவர் அவளிடம் எதிர்பார்க்கும் செய்தி அல்ல அது என்று சொல்வதற்கே அவளுக்கு நா வரவில்லை.
“ஜெயா அண்ணா இல்ல அம்மாச்சி..” என்று அவள் ஆரம்பிக்க, “ம்ம் அவனுக்கென்ன?” என்று கேட்டவர் தளர்ந்து அமர்ந்தார். அவரை அப்படிப் பார்க்க அவளுக்கும் வருத்தமாகத் தானிருந்தது.
“ஏ மாப்ள.. இந்த மாவு, மசாலா பொடி இதெல்லாம் அரைச்சு வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாதா? நம்மகிட்டதான் மெசின் இருக்குல்ல? சுளுவா செஞ்சுடலாம் இல்ல? அங்க ஃபாரின்ல இந்த மெசின்லாம் இருக்காதுல்ல? அதான் சொன்னேன். நாம அரைச்சு அனுப்புனா, நல்லா போகும் தானே?” என்று அவரின் எண்ணத்தை யோசனையாகக் கந்தன் பகிர, “ஐடியா இருக்கு மாமா. இப்ப ஆரம்பிச்ச முருங்கை எக்ஸ்போர்ட் நல்லா போகுது. அடுத்து பொடி, பருப்பு, பயறுன்னு இறங்கலாம்னு இருக்கேன் மாமா. உங்க மகதான் வேணாம்னு சொல்லிட்டு இருக்கா. பூ அனுப்பறதை சரியா செய்வோம்னு சொல்றா..” என்று அவன் சொல்லவும், “அதுவும் சரித்தேன்” என்று மகள் பக்கம் சாய்ந்தார் கந்தன்.
“உங்கண்ணே என்ன பண்ணான்? நேத்து அவன் மீன் குழம்பு கொண்டுட்டு வரும் போதே நெனைச்சேன்..” என்று சொல்லிக் கொண்டே பொற்கொடி வர, “அண்ணா ஒன்னும் பண்ணல பெரிம்மா” என்றாள் சிரிப்புடன்.
“இல்லல்ல என்னமோ பண்ணியிருக்கியான். என்ன பண்ணான்னு சொல்லு ராசாத்தி..” முத்தம்மா கேட்க, “மொத சோத்த போடும்மா புள்ளைங்களுக்கு” என்றார் கருப்பண்ணசாமி.
அவர்களுக்காக நாட்டுக் கோழி அடித்திருந்தார்கள்.
உணவு முடித்ததும், “ஜெயாண்ணா பத்மாவ விரும்புதும்மா” பீடிகையின்றிப் பட்டென்று போட்டுடைத்தாள்.
“நிஜமாவா? அந்த அமுக்குனி பய மத்தக் கதையெல்லாம் நல்லா பேசுவான். இத பத்தி மூச்சு விடலயே எங்ககிட்ட?” என்று முத்தம்மா பரபரக்க, “நாம கேட்டா பொண்ணு குடுக்குமா உங்கத்தே?” என்று யோசனையும், கவலையுமாகக் கேட்டார் பொற்கொடி.
“மாமா சரின்னு சொல்லுவார்த்தே.” என்றாள்.
“உங்கத்தய நினைச்சாதான்..” என்று பொற்கொடி புலம்பிக் கொண்டிருக்கையில், “என்னா இன்னைக்கு நம்ம வீட்ல நாட்டுக் கோழி குழம்பா? மாப்ள விருந்து போல?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஜெயபாலன்.
“ஏன் டா, அந்தப் பத்மாவ விரும்புறியாம் நெசமாவா?” என்று முத்தம்மா அவனிடம் கேட்க, “அட எட்டப்பி” என்று தங்கையை முறைத்தான் அவன்.
“ஏன் மாப்ள, என் மாமியா வீட்டுக்கு என் கூடப் பேச வர்றேன்னு சொல்லிட்டு, இப்படி உங்க மாமியார் வீட்ல என்னைய போட்டுக் கொடுத்துட்டீங்களே. இது நியாயமா? தர்மமா? தர்மா செய்யுற காரியமா இது?” என்று தலைவனின் பக்கம் திரும்பினான்.
“எனக்கெதுவும் தெரியாது மச்சா. நான் என் பொண்டாட்டிய அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.அம்புட்டுதேன்” என்றான் தர்மா, அசட்டையாகத் தோள் குலுக்கி.
“ஐயோ பாவம். ஏழு கடல், ஏழு மல தாண்டி வந்துருப்பீங்க இல்ல. எம்புட்டு தூரம்…” என்று ஜெயபாலன் சொல்ல, “ஏலே மொத நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுடா” என்று அவனைப் பிடித்தார் முத்தம்மா.
“நீ மொத சோத்த போட்டு கோழி குழம்ப ஊத்து அம்மாச்சி. அப்புறமா கதை கேட்ப..” என்று காலை மடித்து அமர்ந்தான்.
உண்டு முடித்ததும், மாமா வீட்டில் முதலில் நான் பேசுகிறேன். பிறகு பெரியவர்கள் பேசுங்கள் என்று அவன் சொன்னதை அவன் வீட்டு பெரியவர்களும் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரு வாரம் ஓடி மறைந்திருக்க, தர்மாவும், தேனுவும் சென்னை சென்றார்கள். அங்கே புதிதாகத் திறக்கவிருக்கும் புதிய அலுவலகத்திற்கான கட்டிடத்தை நேரில் பார்த்து முடிவு செய்ய மேற்கொண்ட பயணம் அது.
கூடுதலாக அன்பழகனையும் பார்க்கச் சென்றார்கள்.
அந்த அலுவலகக் கட்டிடம் அவர்களின் எதிர்பார்ப்பை எழுபத்தைந்து சதம் பூர்த்திச் செய்யவும், தர்மாவுக்குத் திருப்திதான். அதனால் உடனடியாக மனைவியின் கையால் முன்தொகை கொடுத்து விட்டான்.
அத்தோடு அவர்களின் மற்ற அலுவல் ரீதியான பணிகளையும் பார்த்து, மாலையில் அன்பழகன், சரவணகுமார் இருவருடனும் நேரம் செலவழித்தார்கள். நான்கு நாள் பயணமாகத் திட்டமிட்டு வந்திருந்தார்கள். முதல் நாளே இருவருக்கும் வீட்டில் இருந்து மகிழ்வான செய்தி அவசர அழைப்பாக வந்திருந்தது.
சுதாகரனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறதென. பெரியம்மா, அண்ணன் என மாறி மாறி அவளை அழைத்துச் சந்தோஷச் செய்தியை பகிர்ந்தார்கள்.
லோகேஷ்வரன் தர்மாவை அழைத்துத் தகவல் சொல்லியிருந்தான். சுதாகரன் மனைவி லோகேஷ்வரனின் சொந்த அத்தை மகள் அல்லவா?.
அந்தச் செய்தி வந்ததில் இருந்து தேன்மொழிக்குச் சென்னையில் இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா மதுரை செல்வோம், அண்ணன் மகளைப் பார்ப்போம் என்று பரபரத்துக் கொண்டிருந்தாள்.
“இந்தச் சுதாண்ணாகிட்ட பாப்பாவ வீடியோ கால்ல காட்ட சொன்னா, அது அம்மா திட்டுவாங்கன்னு சொல்லிடுச்சு ” என்று அவள் கணவனிடம் புலம்ப, “வீடியோல பார்த்தா சரியா தெரியாது தேன்னு, நேர்ல பார்த்தாதான் அழகு டி சிலுப்பி” என்றான் அவன்.
மூன்றாம் நாள் வேலை முடியவும், “அக்கா இன்னொரு தரம் உன்னய பார்க்க வர்றேன் அன்பு..” என்று தம்பியிடம் விடை பெற்றுக் கொண்டாள்.
“எனக்கும் பாப்பா பார்க்கணும்க்கா. நீ அங்க போயிட்டு வீடியோ கால் பண்ணு” என்றான் தம்பியும் ஆசையாக.
“சரிடா” என்றாள். அன்றிரவே அவர்கள் காரில் மதுரை திரும்பினார்கள்.
அன்புக்கரசி வீட்டில் குளித்து, காலை உணவு முடித்து, பத்து மணிக்கெல்லாம் மருத்துவமனை சென்றார்கள். அவர்களோடு அன்புக்கரசியும் வந்தாள்.
“செகண்ட் ஃப்ளோர்ல 219 ரூம் தேனு” அன்பு சொல்ல, “சரிங்கண்ணி, லிப்ட் எங்க?” என்று தேடியவள், அங்கிருந்த படிகளைப் பார்த்ததும், அதை நோக்கி நடந்தாள்.
அந்நேரம் அன்புக்கரசிக்கு லோகேஷ்வரன் அழைக்க, அந்த அலுவலகரீதியான அழைப்பை தர்மா வாங்கிப் பேசினான். அக்காவும், தம்பியும் அங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க, “நான் ரூமுக்கு போகவா?” என்று செய்கையில் கணவனிடம் கேட்டாள்.
“நீ போ தேனு. நாங்க பின்னாடி வர்றோம்” என்றாள் அன்பு.
தேன்மொழி ஆவலும் ஆசையுமாகத் தாவி படியேறி, இரண்டாம் தளம் சென்று, அறையைத் தேடி அதற்குள் நுழைந்தாள்.
அவளின் அண்ணி ரம்யா நல்ல உறக்கத்தில் இருக்க, குழந்தையை மடியில் போட்டு ஆட்டியபடி அமர்ந்திருந்தார் ரம்யாவின் அம்மா கீதாராணி.
அறைக்குள் நுழைந்த தேன்மொழியைத் தலை நிமிர்த்திப் பார்த்தவர், அவளை வாவென்று அழைக்கவில்லை. அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் தேன்மொழியும் இல்லை.
“அத்த, எப்படியிருக்கீங்க?” என்று அவரிடம் இயல்பாக நலம் விசாரித்தவள், “பாப்பாவ குடுங்கத்தே” என்று ஆசையாகக் கை நீட்டினாள். அவள் பேச்சே காதில் விழாதது போல அமர்ந்திருந்தார் அவர்.
ஒருவேளை தான் பேசியது அவருக்குக் கேட்கவில்லையோ என்று குழம்பி போனாள் தேன்மொழி.
“அத்த..” என்று மீண்டும் அழைத்து, புன்னகைத்து, குழந்தையைப் பார்த்து, அதைக் கையில் ஏந்த ஆவலாகக் கை நீட்டினாள்.
அவளை அலட்சியமாக விழி உயர்த்திப் பார்த்தவர், “குழந்தை தூங்குறா..” என்றார் பட்டென. பார்த்தா தெரியல உனக்கு? என்ற தொனி அதிலிருக்க, அதிர்ந்து அவரைப் பார்த்தாள்.
அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மெல்ல திரும்பி ரம்யாவை பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவள்.
தேன்மொழியைக் கொஞ்சமும் மதிக்காமல், ‘உக்காரு மா’ என்று கூடச் சொல்லாமல் கீதாராணி அமர்ந்திருக்க, அவளுக்குச் சங்கடமாகப் போனது.
குழந்தையைப் பார்ப்பதும், அறையை வெரிப்பதுமாக நின்றிருந்தாள். அப்படியே திரும்பி கணவனிடம் சென்று விடலாம் என்றால் அவன் கேள்வி கேட்பானே.
அந்தப் புறக்கணிப்பு அவமானப்பட்ட உணர்வையும், வலியையும் தர, அசையாமல் பரிதவித்த பார்வையுடன் அப்படியே ஆணியடித்தது போல நின்றிருந்தாள்.
தர்மா அறைக்குள் நுழையும் போது தேன்மொழியை அப்படித்தான் பார்த்தான். திருவிழா கூட்டத்தில் தாயை தொலைத்த குழந்தையைப் போலக் கையைப் பிசைந்து கொண்டு அவள் நின்றிருந்த காட்சி அவன் மனத்தைப் பிசைந்தது.
“தேன்னு” என்று அவளை நெருங்கினான். சட்டென, “மாமா” என்று அவனை ஒட்டி நின்றாள்.
“வாங்க தம்பி.. வாம்மா அன்பு..” என்று வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றார் கீதாராணி.