தேன்மொழி சமையல் அறைக்குள் நுழைந்து கணவனுக்காகத் தேநீரை சூடுபடுத்த, “அத இப்படிக் கொண்டா தேனு. நான் குடிச்சுக்கறேன். நீ அவனுக்குப் புதுசா டீ போடு” என்றார் திலகவதி.
“சரிங்கத்த”
“மதியம் வச்ச மீன் கொழம்பு கொஞ்சம் இருக்கு. நைட்டுக்கு சோத்த வடிக்கவா தேனு?” என்று அவர் கேட்க,
“இட்லி ஊத்திப்போமாத்தே? மதியம் அரைச்ச மாவு இன்னும் புளிச்சுருக்காதா?” என்று கேட்டாள். இயல்பாக இருக்கப் பெரிதாக முயற்சித்தாள்.
“அதெல்லாம் மாவு லேசா பொங்குனா போதும், இட்லியே ஊத்திப்போம்”
“நானு நாளைக்கு எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டு வரவாத்தே?”
“இதென்ன கேள்வி? நல்லா போய்ட்டு வா.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஆமா, இந்தா எட்டி பார்த்தா தெரிய போவுது இவ பெரியாத்தா வூடு. அங்க போறதுக்குத்தேன் இத்தன அலப்பற” என்றார் அப்பத்தா.
“அப்படியே பாம்பு காது” தேன்மொழி சொல்ல, “திலகா, என்னா சொல்றா உன் மருமவ? ஒன்னும் கேக்கலயே?” என்று குரல் கொடுத்தார்.
“இப்போ மட்டும் கேட்காதே அம்மாச்சி உனக்கு?” என்று சூடான தேநீருடன் சூடாக அவர் முன் போய் நின்றாள்.
“பேரனுக்கு டீயா? போ சூடு ஆறும் மின்ன போய்க் குடுத்தா. போ” என்று அவளை விரட்டினார்.
“ம்க்கும்” என்று நொடித்து, உள்ளே போன வேகத்தில் வேலையாக இருந்த கணவனுக்குத் தேநீரை கொடுத்து விட்டு திரும்பி திலகவதியிடம் வந்தாள்.
“ஏன்த்தே மதியம் எங்கண்ணே வந்தான்ல்ல?”
“ஆமா, என்னவாம்? உன்கிட்டதான் என்னவோ பேசிட்டு இருந்தாப்ல.”
“எவளையோ விரும்புறான் போல அந்தப் பய. அந்தப் புள்ள வீட்ல பார்க்கற மாப்ளையதான் கட்டுவேன்னு சொல்லிப்புடுச்சு போல. அத நம்ம வீட்டு பெரிய மனுஷி, அவென் தங்கச்சி கிட்ட சொல்ல ஓடி வந்துட்டான்” என்று சங்கதியை புட்டு புட்டு வைத்தார் அப்பத்தா.
“ஏ அம்மாச்சி. நான் பெரிய மனுஷின்னு சொன்னேனா உங்கிட்ட..” என்று அவரிடம் எகிறிக் கொண்டு போனாள்.
“ஆங், இப்பத்தேன் உன் மூஞ்சி பாக்கறாப்ல இருக்கு. மதியத்தில் இருந்து அழுது வடிஞ்சிட்டு இல்ல இருந்தா” என்று முதல் வாக்கியத்தைச் சத்தமாகச் சொல்லி, இறுதியை முணுமுணுத்தார் அப்பத்தா.
“ஏன் என் மூஞ்சிக்கு என்ன கொறையாம்? உன் ராசாக்கு என்னைய விடப் பெரிய அழகியை பார்த்துக் கட்டியிருக்க வேண்டியது தானே நீயி? அப்படியென்ன குறையை என்கிட்ட கண்டுட்ட அம்மாச்சி? இரு உன் பேரனையே கூப்பிட்டு அத கேட்போம்” என்றவள், “யோவ் தர்மா..” என்று கணவனை அழைக்க, “அடியாத்தே, மருதக்காரிக்கு இருக்க வாய்யி. இவகிட்ட போய் வாயக் குடுத்தேன் பாரு நானு. என்னைய சொல்லணும்” என்று சடைத்துக் கொண்டார்.
அவர் முகத்தை ஒடித்துத் திருப்பிக் கொள்ள, “யோவ் தர்மா” என்றாள் தலை சாய்த்து, அறையை நோக்கி.
“இந்தாடி, ராசா பேர சொல்லாதன்னு உன்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா?” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் பக்கத்து அறை வாயிலில் நின்று தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாமனாரை பார்த்தாள் தேன்மொழி.
“நான் எங்க உன் ராசா பேர சொன்னேன் அம்மாச்சி. நான் அவர மாமான்னு கூப்பிட்டா, உன் காதுல தர்மான்னு விழுது போல. எப்பவும் தாத்தா நெனைப்புலயே இரு” என்றாள் கள்ளச் சிரிப்புடன்.
“ஆத்தே பேச்சையே மாத்திப்புட்டாளே..” என்று அங்கலாய்த்தவரின் முகத்தில் அழகாய் வெட்கம் படர, சத்தமாகச் சிரித்தாள் தேன்மொழி.
“தேனு, உங்கண்ணன் கத என்னா அதச் சொல்லு..” என்று திலகவதி கேட்க, எழுந்து அவரிடம் சென்றாள்.
“எங்க பத்மா இல்லத்தே?”
“யாரு, உன் தாய் மாமா மவளையா சொல்ற?”
“ஆமாத்தே. எங்கண்ணே அவள விரும்புது”
“பாரேன். உங்க மாமா அவனுக்குப் பொண்ண குடுப்பாரா?”
“எங்கத்தைக்கு விருப்பம் இல்ல போலத்தே.”
“அப்புறம்..”
“அண்ணா விஷயம் எங்கம்மாக்குத் தெரியாது. அதான் போய் ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துடலாம்னு..”
“ஏன் உங்கண்ணே சொல்லலையா?”
“இல்ல போலத்தே..”
“அதுசரி.” என்றவர், “ம்ம், இவளைத்தான் மா பிடிச்சுருக்குன்னு மொத அம்மாகிட்ட எங்க சொல்றானுங்க? கடைசியா இவளைத்தான் மா கட்டுவேன்னுல வந்து நிக்குறானுங்க, உன் புருஷனை மாதிரி..” என்று அவளைப் பார்த்துச் சொன்னார்.
“ஐயோ அத்த, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல. நாங்க ஒன்னும்…” என்று அவள் சொல்லும் போதே, “ஆங், கட்டுனா இவளைத்தான் கட்டுவேன்னு ராசா பிடிவாதமால்ல நின்னுச்சு..” பின்னால் இருந்து பின் பாட்டு படித்தார் அப்பத்தா.
“அம்மாச்சி..” என்று அவள் திரும்ப, “தேன்னு தண்ணி குடு” என்று அவளை அழைத்தான் தலைவன்.
மறுநாளே அலுவலகத்தில் வைத்து அவளின் தவறை சுட்டிக் காட்டினான் தர்மா.
“என்ன சொல்றீங்க? கஸ்டம் ஃபார்ம் மாத்தி ஃபில் பண்ணிட்டேனா? நானா?” அதிர்ச்சியுடன் வினவினாள்.
“ம்ம்” என்றான் கண்டிப்பு மிகுந்த பார்வையுடன்.
“எப்படி? சான்ஸ் இல்லையே?” என்று அதிர்ச்சியுடன் ஆராய்ந்தாள்.
“அது வெட்டிங் ஆர்டர் இல்ல?” என்றவளின் தொண்டை உலர்ந்து போனது.
“சாரி, சொதப்பிட்டேனா? இப்போ என்ன பண்றது?” அவள் பதற, முன்தினம் நடந்ததை நிதானமாக அவளுக்கு எடுத்துச் சொன்னான்.
“சாரி, சாரி. என் தப்புதான் தர்மா. இனிமே கவனமா இருப்பேன். பிளீஸ் சாரி” என்று அவள் மன்னிப்புடன் அவன் கைப் பிடிக்க, “இட்ஸ் ஓகே. விடுடி. இனிமே கவனமா இருப்போம்” என்றான் மீசை மறைத்த புன்னகையுடன்.