சூடான தேநீருடன் அவள் அறைக்குள் நுழையும் போது கையில் இருந்த கர்ப்ப பரிசோதனை கருவியை வெரித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தர்மதுரை. அவளுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது.
தர்மதுரையின் கோபமெல்லாம் மனைவியின் முகம் காணும் வரைக்கும்தான்.
“என்னடி இது? மாசாமாசம் செக் பண்ணாதன்னு சொன்னா கேட்க மாட்டியா நீ? எனக்குத் தெரியாம இதெப்போ வாங்கின?” அவன் குரலை உயர்த்தவில்லை. அதட்டவில்லை. கத்தவில்லை. ஆனாலும், அவள் முகம் வாடி விட்டது.
அவனை நெருங்கி தேநீரை நீட்டினாள். அதை வாங்கியவன் கண்கள் அவள் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தது. அதில் நன்றாக அழுத தடம் தெரிந்தது. இமைகள் லேசாக வீங்கியிருக்க, கண்களில் செவ்வரியோடிருந்தது.
“கேட்கறேன்ல தேன்னு, பதில் சொல்லு” மௌனத்தையே பதிலாகத் தந்தாள்.
அச்சமயம் அவனுக்கு அலுவலகம் தொடர்பான குளறுபடிகள் அனைத்தும் மறந்து போனது. இப்போது பிரதானமாகப் பிள்ளையே நின்றது.
அவன் முகத்தை ஏறிட்ட அவள் விழிகளில் வைரமாய்க் கண்ணீர்த் துளி மின்ன, அவனது கோபமெல்லாம் அதில் கரைந்து போனது.
மென்மையாக அவள் கரம் பற்றித் தன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவன் அமர்த்திய வேகத்தில் அவன் கழுத்தில் கரம் கோர்த்து முகம் புதைத்துக் கொண்டாள்.
“தேன்னு..” ம்ஹூம், பதிலே வரவில்லை. அவளுக்கு அழுகைதான் வந்தது. அவன் கழுத்தில் ஈரமாய்க் கண்ணீர்த் தடம். தலைவனும் தவித்தான். மனைவியைச் சமாளிக்கும் வழி தெரியவில்லை அவனுக்கு. சமாதானப்படுத்தும் வார்த்தைகளும் சிக்கவில்லை.
“நமக்கு எல்லாமே நார்மலா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க இல்லடி. நம்மள வெயிட் பண்ண சொன்னாங்க தானே? பொறுமையா இரேன்டி”
“இன்னும் எவ்வளவு நாளைக்குத் தர்மா?” விசும்பியபடியே கேட்டாள். அவள் கண் கலங்க, அவனுக்கு மனம் கலங்கியது.
தேநீரை மறந்து தேனுவை இறுக அணைத்துக் கொண்டான். மெல்ல அவள் முதுகை ஆறுதலாக நீவிக் கொடுத்தான்.
“அழாத டி, பிளீஸ்” கெஞ்சலாகச் சொன்னான். அதில் அவளின் அழுகை இன்னமுமே கூடியது.
“நமக்கு இப்பத்தானே டி கல்யாணமாச்சு. வெயிட் பண்ணுவோம் தேன்னு.” என்றான் அவள் முகத்தைப் பிடிவாதமாக நிமிர்த்தி. சரசரவென வழிந்த கண்ணீர் கன்னம் தொட, அவனை ஏறிட்டாள். அவன் நெஞ்சில் பாரம் ஏறியது.
“நமக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷமாச்சு தர்மா”
“ரெண்டே ரெண்டு வருஷம்தான் ஆகியிருக்கு டி என் சிலுப்பிச் செல்லம். இன்னும் நீ என்னையவே கொஞ்சி முடிக்கல. நானும் உன்னைய..”
“ப்ச், போங்க” என்றாள் கேவலுடன். அவனது எந்தச் சமாதானமும் அன்றைக்கு வேலை செய்யவில்லை. ஏனென்று அவனுக்கும் புரியவில்லை.
“இங்க பாருடி, என்னைய பாரு. இப்படி அழாத. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. என்னாச்சு திடீர்னு. ம்ம் என்னடி..”
“நாள் தள்ளிப் போச்சுன்னு நினைச்சு செக் பண்ணேன் தர்மா.” அதைச் சொல்லும் போதே அவள் குரல் உடைய, உதடு அழுகையில் பிதுங்க, முகம் கோணியது.
“நான்தான் தப்பா கணக்குப் பண்ணிட்டேன் போலங்க. நாளெல்லாம் தள்ளி போகல. இந்த மாசம் பீரியட்ஸ் வர இன்னும் நாள் இருக்கு. நான்தான் கவனிக்கல போல.”
“…..”
“இந்த நாள் தள்ளி போறதுலாம் என்னன்னே எனக்குத் தெரியாம போய்டுமா தர்மா?”
“ப்ச், தேன்னு. என்னடி..” என்று அதட்டினான். மனைவியின் கண்களில் தெரிந்த பரிதவிப்பு அவனைப் பதறச் செய்தது. இன்றைக்கு அலுவலில் அவள் சொதப்பியதின் காரணமும் விளங்கியது. இதனால்தான் அவனுக்காகக் கூடக் காத்திருக்காமல் வீடு திரும்பியிருக்கிறாள். இப்படி மனம் உடைந்து கண்ணீரில் கரைபவளிடம் எங்கிருந்து கோபப்பட? ஒரு பெருமூச்சுடன், மனைவியை அணைத்து அவள் பார்வை பதிந்திருந்த திசையில் அவனும் பார்த்தான்.
அந்தப் படுக்கையறையின் ஒரு பக்க சுவரில் மிகப் பெரியதாகச் சட்டமிடப்பட்டு அலங்கரித்திருந்தது அவர்களின் திருமணப் புகைப்படம். அது தவிர வேறெந்த அலங்காரமும் அந்த அறைக்குள் இல்லை. தேவைப்படவும் இல்லை என்பது அவன் கருத்து. வேறெதையும் அவள் அனுமதித்ததும் இல்லை.
அந்தப் புகைப்படத்தில் இருந்த இருவரின் முகத்திலும் மெல்லிய வெட்கம் கலந்த புன்னகை மலர்ந்திருந்தது.
“அதான் கல்யாணமாகிடுச்சுல்ல, ரொம்ப யோசிக்காம பொண்டாட்டி தோள்ல கைப் போட்டு நில்லுங்க மாப்ள”
“ஆமா, இனி எவன் கேள்வி கேட்கப் போறான் உங்கள? கூச்சப்படாம ஒட்டி நில்லுங்க” புகைப்படக்காரர் கூட அமைதியாகத்தான் இருந்தார். ஆனால், சுற்றி நின்ற உறவுகள் அப்படிக் கேலி செய்தார்கள். அதில் தயங்கி தேன்மொழி சற்று தள்ளியே நிற்க, அந்த இடைவெளியை அவன்தான் நிரப்பினான். ஒரே எட்டில் அவளை இடித்து அணைத்து நெருங்கி நின்றான். அரங்கத்தில் அப்படியொரு சிரிப்பலை.
தேன்மொழி அவனை முறைத்துப் பின் வெட்கத்துடன் தலை தாழ்த்தி, நிமிர்ந்து புகைப்படத்திற்கு முகம் காண்பித்திருந்தாள். அவளின் வெட்கம் அதில் துல்லியமாகப் பதிவாகியிருந்தது.
திருமணமான புதிதில், இரவும் நிலவும் சட்டமிடப்பட்டிருந்த அழகிய ஓவியத்தை அறைச் சுவரில் மாட்டப் போனவனைத் தடுத்திருந்தாள்.
“நம்ம ஃபோட்டோக்கு மட்டும்தான் நம்ம ரூம்ல இடமிருக்கு. இதை ஹால்ல மாட்டுங்க தர்மா”
“ம்ஹூம், ஏன்?”
“ம்ம்..” என்றாள் அழுத்தமாக.
“இனி நம்ம குட்டீஸ் வந்ததும், அவங்களோட சேர்ந்து நாம எடுக்குற ஃபோட்டோஸ் மாட்டலாம். என்ன மாமா?”
“சரிடி சிலுப்பி. நீ சொன்னா சரிதான்” என்றிருந்தான். அப்போதிருந்தே அவளுக்குக் குழந்தை ஆசை அதிகமாவே இருந்தது.
இப்போதும் ஆசையாகக் கனவு சுமந்த கண்களுடன் அவர்களது புகைப்படத்தைப் பார்த்திருந்தாள்.
அவர்களைப் போலவே, அவர்களின் சாயலில், அழகாக இரண்டு குழந்தைகள். பூக்குவியலாய், பூச்செண்டு போலக் கோலி குண்டு கண்களுடன், செப்பு வாய் மலர சிரித்தால், அவளது கற்பனை அவனுக்கும் வர மனைவியை இறுக அணைத்தான்.
“நெக்ஸ்ட் வீக் டாக்டர் பார்க்க போகலாம் தேன்னு” என்றான். அவளிடம் ஒப்புதலும் இல்லை. ஆர்ப்பாட்டமும் இல்லை. அமைதியாக அவனை இறுக அணைத்தாள். அதில் ஆறுதலை தாண்டிய உணர்விருந்தது.
எவ்வளவு நேரம்தான் அறைக்குள் இருப்பார்கள்.
“நான் போய் உங்களுக்கு டீ போட்டு எடுத்துட்டு வர்றேங்க” என்று எழுந்தவளை இழுத்துப் போய்க் குளியல் அறைக்குள் விட்டான். முகம் கழுவி தெளிவாக வெளியே சென்றாள்.
பெரியவர்களுடன் வசிக்கையில் எல்லாவற்றையும் நாம் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதில்லை. சிலவற்றை அவர்களே ஊகித்து விடுவார்கள்.
அகத்தை முகம் கண்ணாடியாகக் காட்டிக் கொடுத்து விடுமே.
தேன்மொழியைச் சிறுமியாகப் பார்த்த போது, “நீ நல்லா இருக்கணும்” என்று மனதார வாழ்த்திய திலகவதி, அவள் மருமகளானதும் மாறி விடப் போகிறாரா என்ன?
“கொஞ்ச நாளைக்குக் குழந்தை வேணாம்னு இருக்கீங்களா?” என்று மகள் அன்புவின் வழியாகத்தான் அவர்களிடம் அதையும் கேட்டறிந்தார்.
திருமணமாகி ஓராண்டு முடிந்ததும் தேன்மொழியின் வற்புறுத்தலின் பேரில் தர்மா அவளை மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். அங்கே அவர்கள் இருவருக்கும் பரிசோதனைகள் எடுக்கப்பட்டது.
முடிவுகள் அனைத்தும் நேர்மறைதான். எந்தக் குறையும் இல்லை. எவ்வித குறைபாடும் இல்லை. காத்திருங்கள் என்று புன்னகையுடன் நம்பிக்கை கொடுத்துச் சொல்லி அனுப்பி விட்டார் மருத்துவர்.
மருத்துவமனை செல்லும் முன் அத்தையிடம் தெரியப்படுத்தினாள். திலகவதி அவசரமாகப் பழனி முருகனுக்கு வேண்டுதல் வைத்தார்.
மருத்துவரை சந்தித்த பின்னும் அத்தையிடம் தெரியப்படுத்தினாள்.
“எனக்குத் தெரியும் தேனு. ஒன்னும் இருக்காதுன்னு. எல்லாம் காலா காலத்துல நல்லபடியா நடக்கும். நீ கவலைப்படாத..” என்று அவளிடம் சொன்னவர், விரைந்து பழனி முருகனிடம் வைத்திருந்த வேண்டுதலை நிறைவேற்றினார்.
அதன் பிறகு இன்றுவரை அவளிடம் வேறெந்த கேள்விகளும் கேட்டதில்லை அவர். அதுவே அவளுக்கு மேலும் அழுத்தத்தை அளித்தது.
“என்ன இல்லை எனக்கு? எதற்காகத் தவிக்கிறேன்?” என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். ஆனால், எல்லாமே இருந்தும் ஏதோ ஒரு குறை. யாரிடமும் சொல்லி புலம்பவும் முடியவில்லை. அதனால் தலைவனையே தஞ்சமடைந்திருந்தாள்.