இந்த வாழ்வென்பது – 24 (1)

அந்தப் பொன்மாலைப் பொழுதில் கோடையைக் குளிர்விக்கும் விதமாகக் குளிர்காற்று வீசியது. சூரியன் தன் தகிப்பை குறைத்திருக்க, வானம் வண்ணம் கலைந்து கருமேகங்களால் சூழ்ந்திருந்தது. மழை வரும் அறிகுறியாகக் காற்றில் மெல்லிய மண் வாசம். அதுவரை அலுவலகக் கட்டிடத்தில் பதற்றத்துடன் அமர்ந்திருந்த தர்மா, சற்றே ஓய்வெடுக்க வெளியில் வந்தான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருந்த தோட்டத்து மலர் செடிகள் காற்றோடு இசைந்து ஆடியது.

அவன் ஆழ்ந்த மூச்சுகள் எடுத்துப் பச்சை பசேலென இருந்த பூந்தோட்டத்தைப் பார்த்திருந்தான். கடந்த சில நாட்களாக அவனுக்கு மிகுந்த வேலைப் பளு.

சென்னையில் அவர்கள் நிறுவன அலுவலகம் ஒன்றையும், அத்துடன் பேக்கிங் ஹவுஸும் திறக்கும் எண்ணத்தில் இருந்தான். கிட்டத்தட்ட அனைத்தும் முடிவான நிலை. ஆனால், விமான நிலையத்துக்கு அருகில் அவர்கள் தேடிய இடம் கிடைக்கவில்லை. திண்டுக்கல், மதுரையில் இருந்து சென்னை தூரம் என்பதாலேயே சென்னையைத் தேர்ந்தெடுத்தான். இப்போது அங்கும் ஊருக்குள்ளேயே சில மணி நேரங்கள் பயணிக்க வேண்டும் என்றால், அது சரி வராது.

ஒரு மாத கால அலைச்சலுக்குப் பிறகு, இன்றைக்குதான் விமான நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் தொழிலுக்குத் தகுந்த வகையில் இடம் கிடைத்திருந்தது. மறுவாரம் சென்னைக்கு நேரில் சென்று இடத்தைப் பார்த்து, முன்தொகை கொடுத்து முடிக்க வேண்டும்.

இன்றுவரை அவர்களுக்குத் தேவையான ரோஜாக்கள் மாலை, பூங்கொத்து என எல்லாவற்றுக்கும் கொடைக்கானலில் இருந்து வாங்குகிறார்கள். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் பக்கம் என்பதால் அது எளிதாக இருந்தது. இப்பொழுது இவர்களின் தொழில் விரிவடைய அங்கிருந்து வாங்கும் ரோஜாக்கள் போதவில்லை.

தர்மாவின் தோட்டத்தில் பன்னீர் ரோஜா, மூக்குத்தி ரோஜா போன்ற வகைகள் மட்டும் வரும். மற்றவை வெளியில் இருந்துதான் வாங்க வேண்டும். தற்போது தேவைக்கு மைசூரில் இருந்து வாங்குகிறார்கள். அது நேரடியாக இரவோடு இரவாக மதுரைக்கு வந்து விடுகிறது. மதுரையைக் காட்டிலும் சென்னை என்றால் மைசூருக்கு பக்கமே என்று யோசித்தான். பூக்களும் இன்னும் சில நாள்கள் வாடாமல் இருக்கும் என்பது அவன் எண்ணம்.

தேன்மொழி, அன்பு, லோகேஷ்வரன் அனைவரும் அதை ஆதரித்தனர்.

இன்று நாள் முழுக்கச் சென்னை அலுவலக இடம் தொடர்பான அழைப்புகள் வந்து கொண்டேயிருந்தது அவனுக்கு. அத்துடன் எப்போதும் இருக்கும் வேலைகள் வேறு. கூடுதலாக இரண்டு மிக முக்கியமான ஆர்டர்கள் அன்று இருந்தது. இரண்டுமே திரை பிரபலங்களின் திருமணத்திற்கான பூக்கள்.

தமிழகத் திரை நட்சத்திரத்திற்கு மல்லிகை கொஞ்சமாகவும், பிச்சிப்பூ அதிகமாகவும் கேட்டிருந்தார்கள். மணப்பெண் சிகை அலங்காரத்திற்குப் பிச்சிப்பூ தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

மற்றொன்று மும்பை பிரபலத்திற்கானது. அவர்கள் கேட்டிருந்தது முழுக்க முழுக்க மதுரை மல்லிகை. கல்யாண மாலைத் தொடங்கி, மணமேடை அலங்காரம் வரைக்கும் மல்லிகைதான். ஆக, அளவில் அதிகமாகக் கேட்டிருந்தார்கள். மலர்கள் அனுப்ப வேண்டியது மட்டுமே இவர்கள் வேலை. அதை மாலையாகத் தொடுப்பதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முன் கூட்டியே தெரிவித்திருந்தார்கள்.

தர்மாவிற்கு இது புதிதல்ல. அவர்கள் வழக்கமாக அனுப்புவதுதான். ஆனாலும், சற்றே கூடுதல் கவனம் செலுத்தினான். மதுரை அலுவலகத்தினருடன் தொடர்ந்து பேசி நிலவரத்தை தெரிந்து கொண்டான். இரண்டு ஆர்டர்களும் தனித்தனியாக அட்டைப் பெட்டிகளில் பொதிந்து, பத்திரமாக விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டது.

அவனும் வாடிக்கையாளரிடம் பூக்கள் அனுப்பியாகிற்று என்று சொல்லி விட்டான். ஆனால், கடைசி நேரத்தில்தான் கவனித்தான். அதுவும் தற்செயலாக எதையோ பார்க்கையில் கவனித்தான். ஒருவேளை அவன் கவனிக்காமல் போய் இருந்தால், அவ்வளவுதான். தொலைந்தான். பாதிப்பை அவனால் யோசிக்கவே முடியவில்லை. பின்னே பிரபலங்களின் திருமணம் ஆகிற்றே.

தேன்மொழி கஸ்டம் பாரத்தை மாற்றிப் பூர்த்திச் செய்து கணினியில் பதிந்திருந்தாள்.

சென்னை செல்ல வேண்டியது மும்பைக்கும், மும்பை செல்ல வேண்டியது சென்னைக்கும் மாறியிருந்தது. சிறிய கவனபிசகுதான். ஆனால், அது எத்தனை குளறுபடிகளையும், குழப்பங்களையும் விளைவித்திருக்கும். அதனால் நேரவிருந்த இழப்பு. அவனால் யோசிக்கவே முடியவில்லை.

சட்டெனத் துளிர்த்த கோபத்துடன் மனைவியை அழைக்கப் போனவன், அதை விடுத்து முதலில் வேலையைச் சரியாக முடித்தான்.

இரண்டு விமானங்களுக்கும் பத்து நிமிட கால இடைவெளிதான். அதைத் தவற விட்டால் அடுத்தடுத்து மதுரையில் இருந்து விமானங்களும் கிடையாது.

அவசர அவசரமாக அவனுக்குத் தெரிந்த, பழக்கமான, வழக்கமாக மதுரை விமான நிலையத்தில் இருக்கும் சுங்க அதிகாரியை அழைத்து நடந்த தவறை சொல்லி, மீண்டும் பாரத்தைச் சரியாக நிரப்பி என அவனது வேலை நீண்டு கொண்டே போனது. ஆனால், குறித்த நேரத்திற்குள் சரியாக முடித்துப் பூக்களை விமானம் ஏற்றி விட்டான். அவனது உடலில் அதிகரித்திருந்த அட்ரலின் சுரப்பை சற்றே மட்டுப்படுத்தியது குளிர்ந்த காற்று.

மனம் லேசாகச் சமன்படவும் மனைவியை அழைத்தான். அழைப்பை ஏற்கவில்லை அவள். ஏனோ ஒருவித எரிச்சலும் கோபமும் அவனுக்கு வந்தது. தேன்மொழியின்‌ வேலையில் இதுவரை தவறு நேர்ந்ததே இல்லை. இன்றைக்கும் அவன் கேட்கையில் வேலையை முடித்து விட்டேன் என்று சொல்லி வீடு சென்றிருந்தாள். ஆனால், வேலை எங்கே சரியாக நடந்தது?

மறுநாளுக்கான வேலைகளைக் குறித்து விட்டு, மீண்டும் மனைவியை அழைத்தான். இம்முறையும் அழைப்பை ஏற்கவில்லை அவள்.

அவனது பதற்றம் எல்லாம் கோபமாக மாறியிருந்தது. உடனே வீடு திரும்பியவன் அந்தக் கோபத்தை மனைவியின் மேல் காண்பித்திட கூடாதென்றுதான் நேராக அறைக்குள் சென்றது.

அங்கும் குளியல் அறைக்குள் நுழைந்தவன் கண்களில் முதலில் அதுதான் பட வேண்டுமா? கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவி. அதிலும் ஒற்றைக் கோடுடன், “தேன்னு” என்றழைத்த அவன் குரலே அவனுக்கு அந்நியமாக ஒலித்தது.

மனைவின் குழந்தை ஆசையும், அதற்காக அவள் எடுத்துக் கொள்ளும் மனஅழுத்தமும் சமீபமாக அவனுக்கு மிகுந்த மனஅழுத்ததைத் தரும் போலிருந்தது.

“தேன்னு” என்றான் அழுத்தமாக.

“வர்றேங்க” என்றவள், வரவில்லை.

“பேரன் கூப்பிடுறது உன் காதுல விழலையாத்தா. கொஞ்சமாவது பயம் இருக்கான்னு பாரு” என்று அப்பத்தா சொல்ல, “அதெல்லாம் நல்லா என் காதுல விழுந்துச்சு. நான் போவேன், இரு அம்மாச்சி. மொத நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு.” என்று அவருடன் மல்லுக்கட்டினாள்.

“என்னா கேட்டவ?”

“நான் உனக்கு ஆவாத மருமக தானே? உனக்கு என்னைய பிடிக்காது தானே?”

“ம்க்கும்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் பவுணு அம்மாள்.

“தேனு, தொரைக்கு டீ போட்டு எடுத்துட்டு போ.” பூ தொடுத்துக் கொண்டிருந்த திலகவதி சொல்லவும், எழுந்து சமையல் அறைச் சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top