இந்த வாழ்வென்பது – 23 (2)

அன்பு கல்லூரி முடித்து மாதங்களாகிறது. ஆனாலும் சென்னையில்தான் வசிக்கிறான்.

தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான படிப்பில், பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறான்.

இந்த ஆண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டதும், தேர்வெழுதும் திட்டம் அவனுக்கு. அதற்கு ஒட்டு மொத்த குடும்பமும் ஆதரவாக இருந்தது.

ஆக, தம்பியும் கை விட்டதால் தங்கையைத் தேடி வந்து விட்டான் ஜெயபாலன்.

அப்பா, தாத்தாவிடம் இது குறித்துப் பேச அவனுக்குத் தயக்கம். அம்மா, அம்மாச்சியிடம் சொன்னால் வரிசை தட்டை தூக்கிக் கொண்டு நேரடியாகப் பெண் கேட்டு பத்மா வீட்டுக்கே சென்றிடுவார்கள் என்று பயம். அவ்வளவுதான். பத்மா அவனைப் பார்வையாலேயே பஸ்ப்பமாக்கி விடுவாள்.

சரி அண்ணன் இருக்கத் தம்பிக்கு என்ன கவலை என்று சுதாகரனிடம் செல்லலாம் என்றால், அவன் தம்பியை மறந்து முழுதாக இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போகிறது.

அவன் மனைவி ரம்யா ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்துத் தாய் வீடு சென்றதில் இருந்து, அவனும் மதுரை திண்டுக்கல் சாலையை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அதை விட்டால் தொழில், வண்டிகள், கடை, அதன் விரிவாக்கம், திண்டுக்கல்லில் இன்னொரு கடை திறப்பது, வீட்டு நிலவரம் என அவன் கவனம் எல்லாம் அவற்றில்தான் இருக்கும். அதில் சற்றே மனசுணக்கம் தம்பிக்கு.

“என்னையலாம் உனக்குக் கண்ணு தெரியாதுண்ணே இப்போ. என் பத்மா வரட்டும். உனக்கு இருக்கு. நானும் மதுரைக்கும் திண்டுக்கலுக்கும் வண்டி சர்வீஸ் விடுறேனா இல்லையா பாரு?” என்று அண்ணனிடம் கோபித்துக் கொண்டான்.

“நான் பத்மாகிட்ட பேசவாண்ணா?” தேன்மொழி கேட்கவும், தன் சிந்தனைகளில் இருந்து கலைந்து மறுப்பாகத் தலையசைத்தான்.

“நிர்மலா அத்த கிட்ட பேசவா?” அந்தக் கேள்விக்கு லேசாகத் துளிர்த்த ஆசையுடன் சம்மதிக்கப் போனவன், “இல்ல தேனு. அத்த மாமா கிட்ட நானே பேசலாம்னு இருக்கேன்” என்றான் தீர்க்கமாக.

“எப்போ போறீங்கன்னு சொல்லுங்க மச்சா, நானும் தேன்னும் உங்களோட வர்றோம்” அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த தர்மதுரை உறுதியாகச் சொன்னான். அவன் பின்னாலேயே சுந்தரராஜனும் வீடு வந்தார்.

ஜெயபாலன் முகம் சட்டெனத் தெளிவாகியது.

“கையில என்னா கவர் மாப்ள? சரக்கா?” மேடை ரகசியம் போலக் கேட்டு, தங்கையை அதிர்ச்சியாகப் பார்த்து, “மாப்ள குடிப்பாரா?” என்று கேட்டான்.

“நீ சொல்லவே இல்ல?” என்று முணுமுணுத்து அவளை முறைத்தான். அதற்குக் காரணம் தர்மாவின் கையில் இருந்த துபாய் டியூட்டி ஃப்ரீ பையும், அதில் இருந்த மது புட்டிகளும்தான்.

“அண்ணா அது பெர்ஃப்யூமர்ஸ் ஆல்கஹால் ண்ணா” என்றாள் சிரிப்பை அடக்கி.

“அப்படின்னா?”

“பெர்ஃப்யூம் பண்ண யூஸ் பண்ற ஆல்கஹால். அது இங்க கிடைக்காதுன்னா துபாய்ல இருந்து வர வச்சிருக்கார்”

“ஓ” என்று புன்னகையுடன் திரும்பி தர்மாவைப் பார்த்தான்.

“என் மேல அம்புட்டு நம்பிக்கை. ம்ம்” என்று அவனை முறைத்துப் போனான் தலைவன்.

அந்நேரம், “தேனு எல்லாத்துக்கும் சோத்த போடுத்தா” என்றார் அப்பத்தா.

ஆளுக்கு முதலாக எழுந்து சென்று கை கழுவி வந்தான் ஜெயபாலன். அவனது கவலை தீர்ந்ததும் பசித்து விட்டது போலும்.

தேன்மொழி சூடாக விரால் மீனை பொரிக்க, திலகவதி உணவை பரிமாறினார்.

“அடடா, என்னா டேஸ்ட். அயிரை மீன் குழம்பு, அயிரை மீன் குழம்புதான்” என்று உணவை ரசித்து உண்டு சிலாகித்தான் ஜெயபாலன்.

“சாப்பிடுண்ணா” சிரிப்புடன் அவன் முன் பொரித்த மீனை வைத்தாள்.

“கடல் மீனு எம்புட்டு இருந்தாலும், விரால் அயிரை முன்னாடி ஒன்னும் நிக்க முடியாது. அம்புட்டு ருசி.” ரசித்து ருசித்து உண்டவனுக்குப் பிரியமாகப் பரிமாறினார் திலகவதி.

சுந்தரராஜன் முதல் கவளம் சோற்றை உண்டதும், ம்ம் என்றார் பாராட்டாக.

தலைவன், தலைவியை நிமிர்ந்து பார்த்து விட்டு, “நீயும் உக்காரு தேன்னு” என்றிருந்தான், அவ்வளவுதான் அவன் பாராட்டு.

அப்பத்தாவிற்குதான் யார் சமைத்தது என்று தெரியுமே. எப்போதும் அளவாக உண்பவர் அன்று ஒரு கை கூடுதலாக உண்டாலும், பேரன் பொண்டாட்டி பக்கமே திரும்பவில்லையே.

“அயிர மீன் குழம்பு வைக்க அத்தைகிட்ட கத்துக்கோ தேனு.” என்று ஜெயபாலன் தீவிரமாகச் சொல்ல, “கொழம்ப அவதேன் வச்சா” என்று பேரன் பொண்டாட்டியை விட்டுக் கொடுக்காமல் பேசியது சாட்சாத் அப்பத்தாவேதான்.

“ஆஹா, தேறிட்ட தேனு” என்று அண்ணன் பாராட்ட, தலைவன் திரும்பி அவனை முறைத்தான்.

“அப்போ பத்மாவும் சமையல்ல தேறிடுவா இல்ல தேனு?” என்று கவலையுடன் கேட்டவனைக் கிண்டலாகப் பார்த்தான் தலைவன்.

“தேன்னு அன்புக்கு போன் போடு சொல்றேன்” என்று தர்மதுரை சொல்லவும், “மாப்ள இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கோபப்படுறீங்க?” என்று பம்மினான் ஜெயபாலன்.

தேன்மொழி சிரிக்க, வீட்டின் அனைவரையும் தொற்றியது அந்தச் சிரிப்பு.

ஜெயபாலனிடம் அம்மா வீட்டுக்கும் குழம்பு வறுவல் கொடுத்து விட்டாள் தேன்மொழி. அதுதான் வழக்கம். அங்கும் விசேஷமான சமையல் என்றால் கண்டிப்பாக அவளுக்குக் கொடுத்து விடுவார்கள்.

மதிய உணவுக்குப் பின்னான ஓய்வுக்குப் பின் தோட்டம் சென்றார்கள். மிக முக்கியமான ஆர்டர் ஒன்றில் கவனமாக இருந்தார்கள்.

தேன்மொழி தன் வேலையை முடித்ததும் கணினி முன் அமர்ந்து ஏதோ கணக்கிட்டு கொண்டிருந்தாள். அவள் மனத்தில் மெலிதாகச் சந்தேகம் துளிர் விடவும் கணவனிடம் சொல்லி விட்டு வீடு வந்து விட்டாள்.

விறுவிறுவென்று அவர்களின் அறைக்குச் சென்று குளியல் அறைக்குள் நுழைந்தாள். அங்கே பத்திரமாக யார் கண்ணிலும் படாத வண்ணம் வைத்திருந்த கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை எடுத்துப் பார்த்தாள். பரிசோதித்தாள்.

அவளுக்கு இரண்டு ஆண்டுகளாக வரும் அதே முடிவுதான் வந்தது.

ஒற்றைக் கோடு. அதைக் கண்டதும் உள்ளம் உடைந்து போனது.

அந்தக் கருவியையே வெரித்து வெரித்துப் பார்த்தாள். ஐந்து, பத்து, பதினைந்து நிமிடங்கள் கடந்தனவே தவிர முடிவில் மாற்றமில்லை. இரட்டை கோடு வரவில்லை.

ஒருவித வெறுமையும் வேதனையும் சூழ்ந்து அவளைத் தாக்க, எதற்கும் அழுது பழக்கம் இல்லாதவளுக்கு அழுகை வந்தது. அடிவயிறை அழுந்த பற்றிக் கொண்டு குளியலறை தரையில் அமர்ந்து சத்தமில்லாமல் அழுது தீர்த்தாள்.

“தேனு, டீ போடவா?” திலகவதி இரண்டு முறை குரல் கொடுக்கவும், எதுவும் நடக்காதது போல முகம் கழுவி, உடை மாற்றி வெளியில் சென்றாள்.

அவள் கண்களில் இன்னமும் அழுகையின் தடம் தெரிந்தது. அதை வெளிக்காட்டி கொள்ளாமல் பேச்சில், சிரிப்பில் மறைக்கப் போராடினாள். வாய் விட்டு வெடித்து அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால், அப்படிக் கதறி அழுது விட முடியாதே. இந்தத் துக்கத்தைத் தனக்குள் அடக்கி, வெளியில் புன்னகையுடன் நடமாடுவது பெரும்பாடாக இருந்தது அவளுக்கு.

அப்பத்தா அவளைக் கண்டதும் வம்பிழுக்க, எங்கே வாயைத் திறந்தால் அழுது விடுவோமோ என்ற பயத்தில், “நான் டீ போடுறேன்த்த, நீங்க போய் உக்காருங்க” என்று தேநீர் தயாரிக்கும் வேலையில் இறங்கினாள்.

அத்துடன் பச்சை பயறு அவித்துத் தாளித்து, தட்டில் வைத்து கொடுத்து விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் மனத்தைச் சூழ்ந்தது வெறுமையும், ஏக்கமும்.

இந்த வாழ்வென்பது வேதனையானதாகத் தோன்றியது அக்கணம்.

“எத்தா திலகா, பேத்திக்குக் கொஞ்சம் மல்லிப்பூ இருந்தா குடு” என்று யாரோ கேட்பது அவள் காதில் விழுந்தது.

“வா ராக்கு. எங்க உன்னைய ஆளையே பார்க்க முடியல” என்று அவரிடம் விசாரித்தார் அப்பத்தா. இருவரும் ஒரே நேரத்தில் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவர்கள். அதனால் அடிக்கடி வாசலில் அமர்ந்து ஊர் நியாயம் பேசிக் கொள்வார்கள்.

இப்போதெல்லாம் ராக்கு அதிகம் வருவதில்லை. அதைக் குறிப்பிட்டு அப்பத்தா கேட்க, “பேத்திக்கு மவ பொறந்ததுல இருந்து எங்கிட்டும் போவ முடியலத்தா” என்று பெருமையாக அங்கலாய்த்தார் ராக்கு.

“சரி, சித்த நேரம் உக்காரு. உன்னைய பார்த்துக் கொள்ள நாளாச்சு”

“இன்னொரு நா வாரேன். நீ பேத்திக்கு பூவ குடு, உனக்கென்ன காலாட்டிட்டு பூவ கட்டிட்டு உக்காந்திருக்க. எனக்கு ஜோலி கெடக்குல்ல” கிழவிகளுக்குள் விளையாட்டுப் பேச்சுதான் அது. ஆனால், அது தேன்மொழி மனத்தைச் சுருக்கென்று தைத்தது.

இங்கும் சிறு குழந்தை இருந்தால், அப்பத்தா அதைத்தானே கவனித்திருப்பார்‌. சட்டென்று மேலெழுந்த கேவலை அடக்கிக் கொண்டாள்.

“தேனு, இந்தப் பூவை தலையில வச்சுக்கோ. இந்தா” திலகவதி அழைக்கவும், தண்ணீர் குடித்துத் தன்னைச் சீராக்கி வெளியில் சென்றாள்.

“என்னாவாம் உன் மருமவ மூஞ்சியே சரியில்ல? யாரு என்னா சொன்னா இவள?” என்று அப்பத்தா அக்கறையுடன் விசாரிக்க, “நான் உனக்கு ஆவாத பேரன் பொண்டாட்டி தானே அம்மாச்சி?” என்று அவரிடம் கேட்டாள் தேன்மொழி.

“என்னாத்தா?” என்று அவர் புரியாமல் முழிக்க, “உன் ராசாக்கு நான் பொருத்தம் இல்லாதவன்னு என்னய வேணாம்னு நீ சொன்ன தானே அம்மாச்சி?” என்று கேட்கையிலேயே அவள் குரல் கரகரக்க, “எந்தக் கதய எப்போ வந்து பேசுறா பாரு உன் மருமக” என்று திலகவதியிடம் பொருமினார் அப்பத்தா.

“தேனு” என்று திலகவதி அழைக்க, அந்நேரம் கோபமாக வீட்டுக்குள் நுழைந்தான் தர்மதுரை.

கூடத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மூவரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் நேராக அறைக்குள் சென்று மறைந்தான்.

இரண்டாம் நிமிடம், “தேன்னு” என்று அழுத்தமும், கோபமுமாக வந்த அவனது அழைப்பும் குரலும் மனைவிக்கு மட்டுமல்ல, வீட்டினர் அனைவருக்குமே புதிதுதான்.

error: Content is protected !!
Scroll to Top