இந்த வாழ்வென்பது – 23 (1)

தேன்மொழி தன் ஸ்கூட்டியில் வீடு வந்தாள்.

“வா தேனு, வேலையா இருந்தியா? தொல்ல பண்ணிட்டேனா?” திலகவதி கேட்க,

“இல்லத்த. கொஞ்சம் வேலை இருந்துச்சு அத முடிச்சு குடுத்துட்டுதான் கிளம்பி வந்தேன். இல்லனா, உங்க மகன் சாமியாடிற மாட்டாரு” என்று அவள் கேலி சிரிப்புடன் சொல்ல, “பின்ன செல்லம் கொஞ்சுவானா உன்ன?” என்று முறைப்புடன் கேட்ட அப்பத்தா, தேன்மொழியின் பார்வையில், “ஆத்தி இவகிட்ட போய் வாயக் குடுத்துட்டேனே” என்று சத்தமாகவே புலம்பினார்.

“அந்தப் பயம் இருக்கட்டும்”

“ஆமா, உனக்குத்தேன் பயந்து கெடக்கேன் நானு” என்று இருவரும் வம்பு வளர்க்க, “தேனு” என்ற ஒற்றை அழைப்பில் இருவரையும் வாய் மூட செய்தார் திலகவதி.

“சொல்லுங்கத்தே”

“என்னத்தா, என்னா” என்று மீண்டும் அப்பத்தா ஆரம்பிக்க, அங்கே கூடையில் இருந்த தூக்குவாளியை எடுத்து திறந்து மருமகளின் முன் வைத்தார் திலகவதி.

“ஐயோ உயிரோட துள்ளுதுத்தே மீனு” தேன்மொழி ஆச்சரியத்துடன் சொல்லவும், ஆவலுடன் எட்டிப் பார்த்த அப்பத்தா,

“அயிர மீனா? பேரனுக்கு ரொம்பப் பிடிக்குமே. குழம்பு இவளா வைக்கப் போறா? ம்க்கும், எனக்கு வேணாம்த்தா” என்று ராகம் போட்ட அப்பத்தாவை திரும்பி முறைத்தாள் தேன்மொழி.

“உனக்கு இன்னைக்குச் சுடுகஞ்சிதான் அம்மாச்சி” என்று உதடு சுழித்துச் சொன்னவள், “நீங்க வாங்கத்தே. நாம அயிர மீன் குழம்பு வைப்போம்” என்று எழுந்துக் கொண்டாள்.

“பிச்சிப்பூ, மரிக்கொழுந்து, கோழிக் கொண்டைலாம் மார்க்கெட்டுக்கு கொண்டுட்டு போன உங்க மாமா திரும்பி வரையில உயிரோட விராலையும், அயிரை மீனையும் வாங்கிட்டு வந்தாரு. அத்தைக்கும், தொரைக்கும் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்திருப்பாரு. அன்புக்கும் பிடிக்கும். ம்ம், எங்க? மதுரைக்குக் குடுத்துவுடக்குள்ள” என்று பேசிக் கொண்டே திலகவதி மருமகளை வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அயிரை, விரால் மீனை சுத்தம் செய்வது தொடங்கிக் குழம்பு வைப்பது வரை, திலகவதி பக்கத்தில் நின்று சொல்லச் சொல்ல அனைத்தையும் அவள்தான் செய்தாள். அயிரை மீன் குழம்பு வைத்து இறக்கியிருக்க, விரால் மீன் வறுவலுக்கு மசாலா போட்டு ஊறிக் கொண்டிருந்தது.

என்னவோ அதிசயமாக அன்று பார்த்து மதியமே தங்கையைக் காண அவள் வீடு வந்திருந்தான் ஜெயபாலன்.

தேன்மொழி துப்பட்டாவில் கை துடைத்தபடி, “வாண்ணா..” என்றாள்.

“வாப்பே” என்றார் பவுணு அம்மாள் வரவேற்பாக.

“வந்துட்டேன் அம்மாச்சி. என்னா நம்ம வீட்டுக் கொழம்பு வாசம் தெரு வரைக்கும் மணக்குது. மீன் குழம்பா?” என்று வாசம் பிடித்துக் கேட்டவனைச் சிரிப்புடன் பார்த்த திலகவதி, ஆமென்று தலையசைத்து, “வாங்க, சாப்பிடுங்க மருமகனே” என்றார்.

ஒரு நொடி சரியெனச் சொல்லப் போனவன், “இருக்கட்டும்த்தே. தேனுவ பார்க்க தோட்டத்துக்குப் போனேன். மாப்ள அவ வீட்ல இருக்கான்னு சொல்லவும் இங்க வந்தேன்த்தே” என்றான். அண்ணன் உணவை மறுக்கிறான். அவளைத் தேடி பேச வந்திருக்கிறான், விஷயம் பெரிதுதான் போல என்று விளங்கியது தேன்மொழிக்கு.

“முதல்ல உக்காருண்ணா” என்றவள், அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.

“இந்தப் பத்மா இல்ல தேனு” கணத்தில் கட்டுச் சோறை கூடத்தில் வைத்தே பிரித்து விட்டான் ஜெயபாலன்.

அப்பத்தா என்னவோ தொலைக்காட்சியில்தான் கவனமாக இருந்தார். அத்தையும் அடுப்படிக்கு சென்று விட்டார்.

ஆனாலும், “பத்மாக்கு என்னண்ணா?” என்று குரலை தழைத்து அவள் கேட்க, “அவ, அவங்கம்மா பார்த்திருக்க மாப்ளைக்குச் சரின்னு சொல்லப் போறாளாம்” என்றான் கோபமாக.

“அப்படியா? அவ என்கிட்ட எதுவும் சொல்லலையேண்ணா? அத்த கூடச் சொல்லலையே? அவளுக்கு மாப்ள பார்க்கறாங்களா என்ன?”

என்று கேட்டாள். சட்டெனத் தொற்றிக் கொண்ட பதற்றத்துடன்.

இந்த ஓராண்டில்தான் அவர்களின் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்.

ஜெயபாலன் எப்போதும் வெளிப்படையாகப் பேசும் வழக்கம் உள்ளவன். அவனது மனத்தை மறைத்து வைப்பதெல்லாம் அவனால் முடியவே முடியாத காரியம்.

தேனு தலை தீபாவளிக்கு மாமா வீடு சென்றிருக்கும் போது, பத்மாவிடம் தன் விருப்பத்தைக் கோடிட்டுக் காட்டியிருந்தான் அவன்.

மறுவாரமே மதுரை சென்று அவளிடம் நேரடியாக மணக்க விருப்பம் என்று சொல்லி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தான்.

பத்மா அத்தனை எளிதில் சம்மதித்து விடுவாளா என்ன? முதலில் அவன் மீது அவளுக்கு அப்படியொரு எண்ணம் இருந்தால் தானே?

ஜெயபாலன் குடும்பத்தின் மீது அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே துளி கோபம் இருக்கத்தான் செய்தது. அதற்குக் காரணம் தேன்மொழி, அன்பழகன் பிரிவு.

அக்காவை நினைத்து, அக்காவை கேட்டு, அக்கா வேண்டுமென்று எத்தனை நாள்கள் அடம் பிடித்து அழுதிருப்பான் அன்பழகன். அவனை விட ஒரு வயதே மூத்த பத்மாவிற்கும் அது புரியாத வயதுதான். அன்பு அழும் போதெல்லாம் அவளும் காரணம் தெரியாமலே அழுதிருக்கிறாள். காலப் போக்கில் காரணம் புரிந்து அவனைத் தேற்றியும் இருக்கிறாள்.

அப்போதெல்லாம் அம்மா, ஜெயபாலன் குடும்பத்தைச் சொல்லி சொல்லி, பெரிய நாச்சியிடம் வழக்காடுவது அவளுக்கு வருத்தம் தந்திருக்கிறது. காலங்கள் மாறுகையில் அனைத்தும் மாறி விட்டதுதான். ஆனால், மனம்? அதில் ஆழப் பதிந்தவை அத்தனை எளிதாக மறக்காதே.

கிட்டத்தட்ட ஆறு மாதம் அலைந்து தன் அன்பினை அவளுக்கு உணர்த்தினான் ஜெயபாலன். அதன் பிறகுதான் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

அண்ணனுக்குக் காதல் தூது சென்றது, அண்ணன் சார்பாகப் பத்மாவிடம் பேசியதெல்லாம் தம்பி அன்புதான்.

ஆரம்பம் தொட்டே அம்மா சம்மதித்தால் மட்டுமே திருமணம் என்பதில் தெளிவாக இருந்தாள் பத்மா. அதனால், அவனையும் தள்ளியே நிறுத்தியிருந்தாள்.

“நீ ஓகே சொல்லு பத்மா. அத்தையை நான் பார்த்துக்கறேன்” என்றிருந்தான். அத்தையின் பார்வையே சொல்லியது அவன் மேலான பிடித்தமின்மையை. அப்படியிருந்தும் நம்பிக்கையை விடவில்லை அவன். ஆனால், இன்று மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து அவனது ஒட்டு மொத்த நம்பிக்கையும், அது கூடவே அவன் மனத்தையும் உடைத்து விட்டார் நிர்மலா.

பத்மா குறுஞ்செய்தி அனுப்பவும், பதறியடித்து அவளை அலைபேசியில் அழைத்தான்.

“வேலையா இருக்கேன். வைங்க. அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் அவள்.

அடுத்து தன் அன்புவிற்கு அழைத்தான்.

“அன்பே, இந்த ஜென்மத்துல எனக்கு வாய்ச்ச அன்பே நீ மட்டும்தான் போலடா” எடுத்ததும் அவன் புலம்ப, “எனக்கு வாய்ச்ச அடிமைன்னு என்னைய சொல்றா மாதிரியே இருக்குண்ணா” என்று சிரிப்புடன் கோபமாகச் சொன்ன அன்பழகனும் படிப்பில் கவனமாக இருக்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.

error: Content is protected !!
Scroll to Top