இந்த வாழ்வென்பது – 22 (2)

அவரவர் வாழ்வு அவரவருக்கானது என்பதில் தெளிவாக இருந்தான் தர்மதுரை.

“தொர மறந்துட்டான் போலத் தேனு. இன்னைக்குச் சாந்தரமா அன்பும் மாப்ளயும் வர்றேன்னு சொன்னாங்க..அப்போ ரோஜாவ விட்டுட்டு போகட்டும்” என்றார் திலகவதி.

“இங்க விட்டுட்டு போறாங்களா? அண்ணிக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்காமா?” என்று அவள் கேட்கவும், திலகவதி வேகமாக ஆமென்று தலையசைத்தார்.

ஒரு மணி நேரத்தில் சுந்தரராஜன், தர்மதுரை இருவரும் வீடு வந்தார்கள்.

பூந்தோட்ட வேலை என்றாலும் பூ போன்ற வேலை அல்ல. வியர்த்து விறுவிறுத்து வந்திருந்தான் தலைவன்.

அறையில் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து பாடிக் கொண்டே தலையில் பூச்சூடி கொண்டிருந்தாள் தேன்மொழி.

“மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன். மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன். என்னவோ ஆசைகள்” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்க, படுக்கையறை கதவைத் திறந்து உள்ளே வந்தவன், கதவடைத்து ஓர் நொடி அதன் மேலேயே சாய்ந்து நின்று மனைவியை ரசித்தான்.

“மாலை சூடி” என்று அவள் உச்சரிக்கையில் பட்டென்று அவளைப் பிடித்துத் திருப்பினான். அவன் இழுத்த வேகத்தில் மனைவியின் கரம் அவன் கழுத்தில் மாலையாகி இருந்தது.

அவன் தோட்டத்து மல்லிகையைப் போலப் பளிச்சென்று மலர்ந்திருந்த மனைவியை மோகம் அப்பிய விழிகளுடன் விழுங்கினான்.

அவன் மார்பில் முகம் பதித்து ஆழ மூச்சிழுத்தவள், “ம்ஹூம்” என்று முகம் சுளித்தாள். மல்லிகை, முல்லை, பிச்சி எனப் பூக்களின் நறுமணத்தோடு அவனது வியர்வை மணமும் சேர்ந்து வர, “போய்க் குளிச்சுட்டு வாங்க” என்றாள்.

“என் மேலருந்து கைய எடுத்துட்டு அத சொல்லுடி சிலுப்பி. இப்படி மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கமா கட்டிட்டுப் போகச் சொன்னீன்னா, எப்படிப் போக?” என்று அவளை மேலும் நெருக்கி, கண்ணோடு கண் பதித்து வினவினான்.

சட்டென வெட்கத்தில் அவள் விழிகள் தாழ்ந்து மீண்டும் அவனை நோக்கியது.

“ஹாஹா. சிலுப்பி, என்னா?” என்றான் அடர்ந்த குரலில்.

மன்னவன் பேரை சொல்ல அவசியமில்லாமல், அவனே மல்லிகையைச் சூடிக் கொண்டான்.

“தள்ளி போங்க தர்மா” என்றவளின் மறுப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல ஒப்புதலாகிப் போனது. மோக மயக்கத்தில் மஞ்சம் தேடி, மல்லிகையை மாலையாகச் சூடிக் கொண்டான் தலைவன்.

இப்போது அவள் மீது அவன் வாசம் வீசியது.

தலையணை மீது முகம் பதித்து மெல்ல உறக்கத்தில் அமிழத் தொடங்கியவளை, “தேன்னு, வேலை இருக்கு. எழுந்திரு” என்று அதட்டினான். அதற்கு நேர்மாறாக அவன் கரம் அவளின் கெண்டைக் காலில் இருந்த தழும்பை வருடிக் கொடுத்தது.

“ப்ச்” என்று அலுப்பும், சலிப்புமாகக் கண்களை இறுக மூடினாள்.

“சிலுப்பி, முக்கியமான வேலை இருக்குன்னு சொல்றேன் இல்ல?”

சட்டெனப் புரண்டு படுத்து, பட்டெனக் கண் திறந்து, “முக்கியமான வேலை இருக்கிறவர் பாக்குற வேலையா இது?” என்று கோபமும் சிணுங்கலுமாகக் கேட்டாள்.

தலைவன் கண்களில் கொள்ளை சிரிப்பு. உதட்டில் அதைப் படர விடாமல், பார்வையால் அவளை விழுங்கினான். பட்டென்று போர்வையை எடுத்து போர்த்தி, “கண்ணை நோண்டிருவேன்” என்றவளின் காலை அவன் பிடிக்கவும், “ஆத்தாடி ஆள விடுங்க சாமி” என்று வேகமாக எழுந்து ஓடி, குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

மறுகணம் தலைவனின் சத்தமான சிரிப்பு அறையை நிறைத்தது.

காலை உணவை உண்டதும் இருவரும் ஒன்றாகத் தோட்டத்து அலுவலகத்திற்குச் சென்றார்கள்.

“அன்பு அண்ணி நேத்து ரோஜாவ நம்ம கூட அனுப்பறேன்னு சொன்னாங்களாம்.” அவள் கேட்கவும், “ம்ம்” என்றான் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன்.

“அப்புறம் ஏன் நீங்க கூட்டிட்டு வரல?”

“ரோஜா அவ அம்மாப்பா கூட வளர்றதுதான் சரி. அக்காதான் அறிவில்லாம நம்மகிட்ட கொண்டு வந்து விடுறான்னா. நீயும் புரியாம பேசாத தேன்னு.” என்றான் குரலை உயர்த்தி. இல்லை, அவளுக்கு நன்றாகப் புரிந்தது. பெற்றோரை பிரிவதன் வலி அவளை விட யாருக்கு புரியும்? ஆனால், ரோஜாவை கையில் அள்ளி கொஞ்சும் போது அவள் உணரும் அந்த உணர்வு. ரோஜா அவள் காலை சுற்றி வருகையில், அத்தை என்று அழைக்கையில், மழலையில் ஏதேதோ மிழற்றுகையில் கிடைக்கும் அந்த ஆனந்தம். ம்ம், ஒரு பெருமூச்சுடன் மௌனமாய்க் கணவனைப் பின் தொடர்ந்தாள்.

பதினொரு மணி வாக்கில் திலகவதி அழைக்கும் வரைக்கும் தேன்மொழி அலுவலகப் பணியில் மூழ்கி போய் இருந்தாள்.

“அம்மா உன்ன வீட்டுக்கு வரச் சொல்றாங்க, கிளம்பு தேன்னு” அவனது அறைக்குள் தலை நுழைத்து சொல்லி விட்டு, மீண்டும் அவன் பணிகளில் மூழ்கிப் போனான் தர்மதுரை. அன்று அக்காவையும் வீடு வர வேண்டாமென்று சொல்லி விட்டான். அதற்கேற்ப அவர்களுக்கு முக்கிய வேலையும் மதுரையில் இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top