இந்த வாழ்வென்பது – 22 (1)

அது வேனிற்காலம் மட்டுமல்ல, மல்லிகை மணம் வீசும் காலமும்தான். சூரியன் விரைவாகவே வெளிவந்திடும் காலமும் கூட. ஆனால், அந்தச் சூரியனுக்கும் முந்தி எழுந்து வேலைப் பார்க்க கிளம்பியிருந்தது ஒரு கூட்டம்.

ஒரு செடியில் மட்டுமே ஒன்றிலிருந்து மூன்று கிலோ வரை மல்லிகை மொட்டுக்கள் வைக்கும் காலம் அது என்பதால், பூக்களைப் பறிக்கச் சற்றுச் சமயம் எடுக்கும். ஆகையால், கூடுதலாகப் பூ பறிக்க ஆட்களை வர சொல்லியிருந்தான் தர்மதுரை. அவர்கள் அனைவரும் வரும் முன்பே எழுந்து தோட்டத்திற்குச் சென்றும் விட்டான்.

அவர்கள் முன்தினம் முக்கிய வேலையாக மதுரை சென்று திரும்பியிருந்தார்கள். அங்கே விமான நிலைய கஸ்டம்ஸில் பரிசோதனை, அது இதுவெனச் சமீபமாகக் கெடுபிடி அதிகமாக இருந்தது. ஒருமுறை பூக்கள் செல்ல வேண்டிய விமானத்தைத் தவற விட்டு அதைச் சென்னைக்கு அனுப்பி, அங்கிருந்து துபாய்க்கு அனுப்பியிருந்தார்கள். அதனால் போக்குவரத்துச் செலவு அதிகரித்திருந்தது. அதெல்லாம் கையைக் கடிக்காத அளவுக்குச் சமாளித்து விடலாம். ஆனால், குறித்த நேரத்திற்குள் பூக்கள் செல்லாதது அவர்களுக்குப் பெரும் தலைவலியாகப் போனது. இன்னொரு முறை சோதனை என்ற பெயரில் அட்டைப் பெட்டிகளைப் பிரித்து அவை மல்லிகை தானா என்று பரிசோதித்துப் பார்த்திருந்தார்கள். அவர்கள் மிக நேர்த்தியாகப் பொதிந்து வைத்திருந்ததினால் பூக்கள் சேதமாகாமல் தப்பித்தது.

லோகேஷ்வரன் விரைவாக விமான நிலையம் சென்று, மீண்டும் பூக்களை அழகாகப் பொதிந்து பத்திரமாக அடுத்த விமானத்தில் ஏற்றி பெரும் பொருட்செலவை தவிர்த்திருந்தார். அவர்கள் இந்தத் தொழிலுக்குப் புதிதல்ல. விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கும் அவர்களை நன்றாகத் தெரியும். அவர்களின் நிறுவன பெயரில் தினம் பூக்கள் ஏற்றுமதியாகிறதே.

ஆனாலும், இது போன்ற பரிசோதனைகளும் அவ்வப்போது நடப்பதுதான். அது சுங்கத்துறையின் வாடிக்கை, அவர்களின் நடைமுறை. சமீபகாலமாக ஏதேதோ கடத்தல் அதிகரித்திருக்க, அதனால் அனைவரும் சோதனைக்குள்ளானார்கள். நேர்மையற்ற சிலரால் பலருக்கு அது சோதனைக் காலம்.

இது குறித்துப் பேச அதிகாரிகள் அழைத்திருந்ததால் தர்மாவும், தேனுவும் விமான நிலையம் சென்று பின்மாலை பொழுதில்தான் வீடு திரும்பியிருந்தார்கள். இங்கும் அவர்களுக்கான வேலை காத்திருந்ததில் வீடு வர முன்னிரவாகிப் போனது.

தொடர் பயணம் மற்றும் வேலையின் அசதியில் அசந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தேன்மொழி. அவளும் அதிகாலையில் எழுந்து கொள்ளும் வழக்கத்திற்குத் தற்போது வந்திருந்தாள். எனினும் இன்று அவளை எழுப்ப மனம் வராமல் தர்மா மட்டும் பூந்தோட்டத்திற்குச் சென்றிருந்தான்.

ஐந்தரை மணி போல எழுந்து தயாராகி அவள் வெளியே வர, வீடு அவளுக்கு முன்னே எழுந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

“எத்தா திலகா, காப்பிக் கொண்டாமா.” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்த பவுனு அம்மாள், “உன் மருமவளுக்கு இப்பத்தேன் விடிஞ்சுருக்கு” என்று தேன்மொழியைப் பார்த்துச் சொல்லி கழுத்தை ஒடித்தார்.

“பாத்து அம்மாச்சி, ரொம்பத்தான் கழுத்தை ஒடிக்குற. சுளுக்கிக்கப் போவுது”

“ம்ம், ஹ்ம்ம். இப்பத்தேன் உனக்கு விடிஞ்சு வெள்ளைக் கோழி கூவுச்சாக்கும்”

“கோழி எங்க அம்மாச்சி கூவுச்சி? நீதேன் கூவிட்டு கிடக்க. காலைல என் தர்மாவ காணோம்னு நானே தவிச்சுப் போய்க் கிடக்கேன். ஊடையில நீ வேற”

“ரொம்பத்தான் சலிச்சுக்கறா மருதக்காரி” நமுட்டு சிரிப்புடன் சொன்னவரை முறைத்தவள், தானும் அவரைப் பார்த்து கழுத்தை ஒடித்து விட்டு சமையல் அறையில் இருந்த திலகவதியிடம் சென்றாள்.

“அத்த, நான் காபி போடவா?”

“வா தேனு. ஏன் வெள்ளெனா எந்திரிச்சுட்ட? நேத்து முழுக்க அம்புட்டு வேலை உங்களுக்கு. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் இல்ல?” என்று கேட்டார் திலகவதி.

“முழிப்பு வந்துருச்சுத்தே. நீங்க தள்ளுங்க, நான் காப்பிப் போடுறேன்” என்றவள், பால் இருந்த அடுப்பு தீயை கூட்டி வைத்தாள்.

“காலைலக்கு என்னத்தே செய்யணும்?”

“இடியாப்பம் பிழிஞ்சு தேங்காய்ப்பால் எடுப்போமா? உங்க மாமாக்கும் அம்மாச்சிக்கும் அதுபோதும். தொரைக்குப் பூரி போடலாமா?”

“இல்லத்தே, பூரி வேணாம். தக்காளி குருமா செஞ்சுடுறேன். மாவு இருக்குல்ல தோச ஊத்திக்கலாம்.”

“ம்ம், சரித்தேன். அதையே இடியாப்பத்துக்கும் ஊத்திப்பாங்க” என்றவரின் கையில் நுரைக்க ஆற்றிய காப்பியை கொடுத்தாள் தேன்மொழி.

தனக்கும், அம்மாச்சிக்கும் எடுத்துச் சென்றவள் அவருக்கானதை கொடுத்து விட்டு அவருக்கருகில் கால் நீட்டி அமர்ந்து விட்டாள். அவரைப் போலவே.

“கொமரிக்கு கொழுப்ப பாரு. கெழவி மாதிரி கால் நீட்டி உக்கார்ந்திருக்கறத”

“ஏ அம்மாச்சி, அப்போ எப்பவும் கால் நீட்டி உக்கார்ந்திருக்க உனக்கு..” என்று அவள் முடிக்காமல் இழுக்க,

“அடிய்யே, எனக்குக் கொழுப்புன்னு சொல்லுவியா நீ?” என்று கண்ணை உருட்டினார் அப்பத்தா.

“நான் எங்க சொன்னேன்? நீதான் சொன்ன” என்று நாக்கை துருத்தினாள்.

“இந்தாடி” என்று அப்பத்தா கையை வீச,

“யோவ் தர்மா” என்றாள் தேன்மொழி, சத்தமாக.

“ராசா” என்று அப்பத்தா பதறி திரும்ப, படக்கென்று சிரிப்புடன் எழுந்து உள்ளே ஓடி விட்டாள் அவள்.

“கிசும்பு கூடி போச்சு உனக்கு. எம் பேரன் வரட்டும், பேசிக்கிறேன்”

“கொழுப்பு கூடி போச்சு, குசும்பு கூடி போச்சுன்னு புகாரா படி அம்மாச்சி. எல்லாத்தையும் பொறுமயா லிஸ்ட் போட்டு வச்சுக்கோ. தர்மா வந்ததும் கொடுப்ப”

“பேரன பேர் சொல்லி பேசாதன்னு சொல்லிட்டேன் உன்னிய. மரியாத இல்லாம. பேரன் வரட்டும் பேசிக்கறேன்” என்று சொல்லி கோடாலி கொண்டையை உதறி அள்ளி முடிந்தார்.

“பேசிக்கோ அம்மாச்சி. அப்படியே உன் பேரனுக்குதான் நான் பயந்து போய்க் கிடக்கறேன் பாரு” என்று சமையல் அறை வாயிலில் நின்று வாயடித்துக் கொண்டிருந்தவள், “தேனு” என்று திலகவதி கண்டிப்பான குரலில் அழைக்கவும், உள்ளே ஓடி விட்டாள்.

காலை உணவு வேலைகளை முடித்ததும், “நான் போய் மாமாவுக்கு டிஃபன் கொடுத்துட்டு வரவாத்தே?” என்று வினவினாள்.

“இல்ல தேனு. உங்க மாமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணார். ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்றாங்களாம் அதுனால காலச் சாப்பாடு தோட்டத்துக்குக் குடுத்து விட வேணாம்னு சொன்னார்”

“ம்ம், சரிங்கத்த” என்றவள், அப்பத்தாவுக்குச் சூடாக உணவை பரிமாறினாள்.

“நேத்து நீங்க மதுர போய் இருந்தப்போ அன்பு போன் போட்டா” என்று திலகவதி சொல்ல,

தேன்மொழியை முந்திக் கொண்டு, “என்னா சொன்னா?” என்று கேட்டார் அப்பத்தா.

“அது உங்க பேத்தி ரோஜாவ அனுப்பறேன்னு சொன்னா” என்று இழுத்தவரின் பார்வையெல்லாம் மருமகளின் மீதுதான் பதிந்திருந்தது.

“நேத்து இவ போனவ பேத்தியை தூக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று அப்பத்தா தேன்மொழியை முறைக்க,

“அப்படியாத்த? நேத்து பாக்கும் போது எங்ககிட்ட ஒன்னுமே சொல்லலையே?” என்றாள் அவள்.

“தம்பிகிட்ட சொல்லி இருப்பா போல” என்றார் தயக்கத்துடன்.

“இவர் என்கிட்ட ஒன்னுமே சொல்லலையே. அன்பு அண்ணி எங்கிட்ட சொல்லியிருந்தா ரோஜா குட்டியை நான் தூக்கிட்டு வந்திருப்பேன் இல்லத்தே?” என்றாள் குரலில் பொங்கிய மகிழ்வுடன்.

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாத காலமாக ரோஜா மதுரை, திண்டுக்கல் என மாறி மாறி இருக்கிறாள்.

அன்புக்கரசிக்கு மகளை அம்மா வீட்டில் விட விருப்பம். ஆனால், ரோஜாவை கொஞ்சித் தீர்க்க தேன்மொழி ஆவலாக இருந்தாலும், அம்மாவிடம் இருந்து குழந்தையைப் பிரிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. அதிகபட்சம் இரண்டு நாள்கள், அதற்கு மேல் குழந்தையைத் திண்டுக்கல்லில் வைத்திருக்க மாட்டாள். கணவனிடம் சொல்லி அன்புக்கரசி வீட்டில் விட்டுவிடச் சொல்வாள். அவனுக்கும் அக்காவின் மனம் புரிகிறதுதான்.

தேன்மொழியின் குழந்தை ஆசை புரியாதவன் அல்லன் அவன். அதற்காக அக்கா குழந்தையை அவளிடம் இருந்து பிரிப்பதா? அதற்கு முதலில் அவன் மனைவியே ஒத்துக் கொள்ள மாட்டாள். அது அவன் அக்காவிற்குப் புரிந்தால் தானே?

ரோஜா வந்தால், அவர்கள் வாழ்வின் ஏக்கத்தைத் தீர்த்திட முடியுமா என்ன?

error: Content is protected !!
Scroll to Top