அந்தக் கேலி பேச்சு, அதுதான் அவனது இயல்பென்று இத்தனை வருடத்தில் அவளுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும், கோபம் துளிர்க்க அவனை முறைத்தாள்.
“ஒரு பேச்சுக்கு கூடப் பார்ட்னராக்குறேன்னு சொல்ல மாட்டேங்கறீயே”
“பார்ட்னராகி என்ன பண்ண போறீங்க?”
“உன்னைய பக்கத்துலருந்து பார்த்துட்டே இருப்பேன். அது போதாதா எனக்கு?”
“என்னது?” என்று அவள் அதிர, “ம்க்கும்” என்று தொண்டையைச் செருமினான்.
“ஆத்தி சத்தமா சொல்லிட்டேனா?” என்று சத்தமில்லாமல் அவன் முணுமுணுக்க, “என்ன பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு?” என்று அவனைச் சந்தேகப் பார்வை பார்த்து கேட்டாள் பத்மா.
அவன் மேல் ஈர்ப்போ, தனிப்பட்ட பிரியமோ, விருப்பமோ எதுவும் தோன்றவில்லை அவளுக்கு. ஆக, இயல்பாக இருந்தாள்.
அவளைப் பார்க்க பார்க்க அவனுக்குப் பிடித்தது. இன்று அவளைப் பிடித்ததால் பார்க்க வந்திருந்தான்.
“பார்ட்னர் என்றால் தொழில் தானா? வாழ்க்கையிலும் உன் பார்ட்னராக விருப்பம்” என்று சொல்லத் துடித்த நாவை பெரும்பாடுபட்டு அடக்கி வைத்தான்.
அங்கு நின்று அவர்களையே பார்த்திருந்த நிர்மலாவுக்கு ஜெயபாலன், மகளிடம் பேசுவது தவறாகத் தெரியவில்லை. ஆனால், அவன் பார்வை அவருக்குப் பிடிக்கவில்லை.
காதலை கண்கள் காட்டிக் கொடுத்து விடுமே.
“பத்மா, இங்க வா. சாப்பாடு எடுத்து வைக்கலாம்” என்று சுதாரிப்பாக மகளை உள்ளே அழைத்துக் கொண்டார்.
அவள் போன பின்னும் அப்படியே நின்றிருந்தான் ஜெயபாலன்.
தேன்மொழி அவன் பக்கத்தில் வரவும், “இந்தப் பத்மா பிசினஸ் வுமன் ஆனதும் இன்னும் அழகாகிட்டால்ல தேனு?” என்றான் தங்கையிடம்.
“அண்ணா”
“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு” என்றான் பளிச்சென்று.
“அத்த” என்று ஆரம்பித்தவள், ஆரம்பமே எதிர்மறையாக எதையும் சொல்லி விடக் கூடாதென்று, “எனக்கும் அவள ரொம்பப் பிடிக்கும்ண்ணா” என்றாள்.
“உனக்குப் பிடிக்கிறதும், எனக்குப் பிடிக்கிறதும் ஒன்னா? ஏன் மாப்ள, இவள வச்சு எப்படிச் சமாளிக்கறீங்க?” என்று தர்மதுரையிடம் சந்தேகம் கேட்டான்.
தலைவன் அவனை முறைக்க, “எல்லாம் ஒன்னுதான் பேசாம வாண்ணா” என்று ஜெயபாலனை உள்ளே இழுத்துச் சென்றான் அன்பழகன்.
“டேய் அன்பே”
“பேசாம வாண்ணா” என்று அண்ணனை இழுத்துப் போய்க் கூடத்தில் அமர்த்தினான்.
மணிவண்ணன், சரவணக்குமார் இருவரும் கரிசக்காட்டுக்குச் சென்றிருந்தவர்கள், கையில் வாழை இலையுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
அனைவருக்கும் உணவு பரிமாறினார் நிர்மலா.
மல்லி, மிளகாய், மொச்சை எனப் பயிர்களைப் பற்றி மணிவண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தான் தர்மா.
“என்னப்பா இதையும் வெளிநாட்டுக்கு அனுப்ப போறீங்களா?” என்று அவனிடம் கேட்டார் அவர்.
“ஹாஹா, டிமாண்ட் இருக்குதுதான் பெரியப்பா. அதுவும் ஆர்கானிக்னா இப்ப மதிப்பு அதிகம். நேரடியா விவசாயி கிட்ட இருந்து வருதுன்னு சொல்லி எவ்வளவு விலை வச்சாலும் வாங்குவாங்க”
“ஓ, அதேன் நம்ம பக்கத்து காட்டுக்காரரு கூடச் சொன்னாரு. இந்த முறை உளுந்து, மொச்சை, துவரைய ஆன்லைன் கம்பெனிக்காரன் கிட்டதான் மொத்தமா குடுத்தாராம். நல்ல விலைக்கு எடுத்தானுங்கன்னு சொன்னாப்ல. நீங்களும் செய்யலாம்” என்றார்.
“ஐடியா இருக்கு மாமா. ஆனா, இது பெரிய வேலை. பொறுமயா செய்வோம்” என்றவன், “உங்க மருமக குடுத்த ஐடியால மருதாணி இலை கூட எக்ஸ்போர்ட் பண்றோம் இப்போ” என்றான் சிரிப்புடன்.
“பாருங்களேன்” என்று சிரித்தார் மணிவண்ணன்.
அவர்களுக்குப் பேச்சோடு உணவும் உள்ளே சென்று கொண்டிருந்தது.
“மட்டன் சுக்கா நல்லாருக்கு அத்த. எலும்பு குழம்பு எங்க அப்பத்தா வைக்கிற மாதிரியே இருக்கு” என்று உணவை ரசித்து, ருசித்துச் சிலாகித்தான் ஜெயபாலன். புன்னகையுடன் அவனுக்கு உணவை பரிமாறினார் நிர்மலா.
“இதெப்படி வைக்கணும்னு எனக்குச் சொல்லித் தாங்கத்தே” கணவனும் ரசித்து உண்பதைப் பார்த்து நிர்மலாவிடம் தேன்மொழி கேட்க, “பத்மாவ எழுதி தர சொல்றேன் தேனு. நீங்க இன்னொருக்கா வரும் போது வெள்ளென வந்து நான் செய்யும் போதே பார்த்தீன்னா அப்படியே செஞ்சுடலாம்” என்றார்.
“சொல்லிக் கொடுத்தா மட்டும் அப்படியே டேஸ்ட்டா செஞ்சுடுவ பாரு” என்று தங்கையைக் கலாய்த்தான் அண்ணன்.
தர்மதுரை திரும்பி அவனை முறைக்க, “மன்னிச்சுடுங்க மாப்ள” என்று முணுமுணுத்தவன், “நீங்க ரசம் ஊத்துங்க அத்த” என்றான்.
சோறையும், ரசத்தையும் பிசைந்து வாயில் வைத்தவனுக்கு இது ரசம் தானா என்ற சந்தேகம் வந்தது. அத்தை கையில் இருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.
“ரசம் இன்னும் கொஞ்சம் ஊத்தவா மருமகனே?” என்று கேட்டார் அவர்.
அது ரசம்தான் என்று உறுதியானதும் சுண்டிய அவன் முகம், அந்த மருமகன் என்ற அழைப்பில் கள்ளச் சிரிப்பை பூசிக் கொண்டது.
“ரசம் நல்லாருக்குத்தே” என்றான்.
“பத்மா வச்சது” என்றதும் அவன் முகம் போன போக்கு இருக்கிறதே.
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று அவனைப் பார்த்த அன்புவின் பார்வையே சொன்னது.
ஜெயபாலன் திரும்பி பத்மாவைப் பார்த்து புன்னகைத்து வைத்தான்.
ஒருவரின் சமையல் திறமையை அவர் ரசம் வைப்பதை வைத்தே சொல்லி விடலாம் என்பார் முத்தம்மா.
“நீயா பத்மா வச்ச? ரசம் சூப்பரா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஊத்துங்க” என்று வாங்கிச் சாப்பிட்ட அண்ணனை பார்த்துச் சிரிப்பை அடக்கிக் கொண்டான் அன்பழகன்.
திண்டுக்கல் திரும்பி வரும் போது ஜெயபாலன் கார் ஓட்ட, அன்பழகன் அவனை ஓட்டி தள்ளி விட்டான். பின்னே எத்தனை நாள் தேனுவை பேசியிருப்பான் அவன்.
“எல்லாம் கர்மா ண்ணா”
“ம்ம், எல்லாம் என் நேரம் டா அன்பே”
“நானும் அதைத்தான் சொல்றேன்” என்று சொல்லி சிரித்தான் அன்பழகன்.
இம்முறை மதுரை வரை கணவன், மனைவி இருவரும் லாங் ட்ரைவ் என்று பேர் சொல்லிக் கொண்டு வண்டியில் வந்தார்கள்.
வாழ்க்கை அதன் போக்கில் வேகமாக நகர, தர்மதுரையின் அத்தை மகள் வீணாவுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தி அதிகாலையில் வீடு வந்தது.
திலகவதி, சுந்தரராஜனுக்கு முன்னே கிளம்பி நின்ற அப்பத்தாவுடன் சிவகாசி சென்று அவர்களைப் பார்த்து விட்டு மாலை வீடு திரும்பினார்கள்.
“என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்லத்த? நானும் உங்களோட வந்திருப்பேன். எனக்குப் பாப்பாவ பாக்கணும் ஆசையா இருக்கு” என்றாள் தேன்மொழி ஆசையுடன்.
“அச்சோ காலைல கிளம்பற அவசரத்துல உன்கிட்ட கேட்க மறந்துட்டேன் தேனு. உனக்குத் தோட்டத்துல வேலையிருக்கும். தொர என்ன சொல்லுவானோன்னு” என்று அவர் இழுக்க, “அதெல்லாம் வேலைய அவர் பார்த்துப்பார். ஒன்னும் சொல்ல மாட்டார்” என்றாள்.
“இப்ப என்னா? பேத்தி வீட்டுக்கு வந்ததும் இன்னொருக்கா போய்ப் பார்ப்போம்” என்றார் அப்பத்தா.
“பேத்திங்கன்னு சொல்லு அம்மாச்சி. கொள்ளு பேத்தி, ம்ம்” என்றாள், கண் விரித்து.
“அவங்க வீட்டுக்கு வந்ததும் போய்ப் பார்த்திட்டு வருவோம் என்னா?” என்று கேட்டவருக்குத் தலையை ஆட்டி வைத்தாள். ஆனால், அவளுக்கு ஆர்வம் தாங்காமல் அன்றிரவே கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள்.
“வேலை இருக்கு தேன்னு” என்றான் அழுத்தமாக.
“பிளீஸ் தர்மா, பிளீஸ். கஸ்டம்ஸ் ஃபார்ம்ஸ் நான் ஆன்லைன்ல ஃபில் பண்ணி சப்மிட் பண்ணிடுறேன். இங்க மத்த வேலையை மாமா பார்த்துப்பாங்க. பிளீஸ்” என்று கெஞ்சினாள்.
அதற்கு மேல் எங்கே மறுக்கப் போகிறான்.
மூன்றாம் நாள் அதிகாலையில் சிவகாசி சென்றார்கள்.
மருத்துவமனை பணியாளர்கள் எத்தனை சொன்னாலும் எவரும் கேட்பதில்லை. வீணாவின் அறையில் உறவுகளின் கூட்டம் அப்பியிருந்தது.
இவர்கள் போனதும் நலம் விசாரித்து, பேசி, சிரித்து என நேரம் நீள, தேன்மொழி அவர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டு வீணாவிடம் சென்றாள்.
அவளிடம் இருந்து பொக்கிஷத்தைப் போலக் குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டாள்.
ரோஜா செண்டு போல இருந்தாள் பெண் குழந்தை.
அந்தக் குட்டி விரல்களை வருடினாள். லேசாகப் பிடித்துக் கொண்டது குழந்தை. தேன்மொழியின் முகம் அல்லியாய் மலர்ந்தது.
“அழகா இருக்கா பாப்பா” ஒற்றை விரலால் கன்னம் வருடி சொன்னவள், “நீங்க எப்படி இருக்கீங்க?” என்று தாமதமாகத்தான் தாயை நலம் விசாரித்தாள்.
“ம்ம் நல்லாருக்கேன்” என்றாள் வீணா புன்னகையுடன். தேன்மொழியின் பேச்சு முழுக்க முழுக்கக் குழந்தையைப் பற்றியதாகவே இருந்தது.
“நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நீங்க மாசமா இருக்கீங்களா?” வீணா கேட்க, தேன்மொழி விதிர்த்து திரும்பி கணவனைப் பார்த்தாள்.
அவள் கண்களில் தெரிந்த ஏக்கம் கணவனுக்குப் பெருமூச்சாக வெளிப்பட்டது.
“இல்ல, உங்க முகம் க்ளோ ஆகுது. அழகா இருக்கீங்க, அதான் கேட்டேன்” என்றாள் புன்னகையுடன். பதிலுக்குப் புன்னகைத்த தேன்மொழியின் முகத்தின் புன்னகை அகத்தில் இல்லை.
“எனக்கும் பாப்பா வேணும் தர்மா. நாம டாக்டர்கிட்ட போகலாமா?” வீடு வந்ததும் கணவனிடம் அதைத்தான் கேட்டாள்.
அவளை அணைத்து, “பைத்தியம் மாதிரி பேசாத. நமக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகுது. வெயிட் பண்ணுவோம்” என்றான் தர்மா.
“ம்ம்” என்று அவன் மார்பில் சாய்ந்தவளின் ஏக்கம் குறையவில்லை.