பட்டால் தீட்டிய பாதி ஓவியம் போலக் களைந்து கலையாகக் கணவனின் கண்களுக்குத் தெரிந்தாள்.
பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை மையலாக நோக்கியது மங்கையின் விழிகள்.
அதில் ஈர்க்கப்பட்டவன், “மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும். மங்கை கொஞ்சம் சாய்ந்தால் என் மார்பில் தாங்க வேண்டும்” என்று விசிலடித்துப் பாடினான்.
“வேணாம் தர்மா. ரொம்பக் கஷ்டப்பட்டுப் புதுப் பட்டை கட்டிட்டு இருக்கேன். கலைச்சு விடாதீங்க” என்று கணவனின் கண்களைக் கண்ணாடியில் கண்டு எச்சரித்தாள்.
“ரொம்பக் கஷ்டப்பட்டுலாம் நீ கட்ட வேணாம்னுதான், ஹெல்ப் பண்றேன்” அவள் கழுத்தில் முத்தமிட்டு, காதை உரசிச் சொன்னான்.
“தர்மா தள்ளி போங்க”
“இவ்வளோ தள்ளி வந்தா போதுமா?” என்று நெருக்கத்தை அதிகரித்துக் கேட்டான். மூச்சுக் காற்று முட்டிக் கொள்ளும் நெருக்கத்தில் நின்றிருந்தார்கள்.
“சேலை கசங்குது தர்மா”
“என் மனசு கசங்குதுடி சிலுப்பி. அது கண்ணுக்கு தெரியலையா உனக்கு? என்னைய விடச் சேலை முக்கியமா போச்சா உனக்கு?” என்று கேட்டவன், ஒரே இழுப்பில் சேலைக்கு விடுதலை கொடுத்திருந்தான்.
“ம்ம்” என்று கோபமாக ஆரம்பித்தவளின் பேச்சும், கோபமும் கணத்தில் காணாமல் போனது.
“ம்ம்” எனும் காதல் மந்திரம் அறையை நிறைத்தது.
“அச்சோ லேட்டாகிடுச்சு” என்று அரக்கபரக்க புதுப்பட்டை சுற்றினாள்.
“புடவை கட்ட நான் ஹெல்ப் பண்றேன் உனக்கு” என்று மயக்கத்தில் உளறியவன், அவன் கிளம்பியதும் அறையில் இருந்து வெளியேறி விட்டான்.
திட்டமிட்டதை விட ஒரு மணி நேரம் தாமதமாக மதுரை சென்றார்கள்.
அவர்களுடன் ஜெயபாலன், அன்பழகன் இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.
மதுரை சென்றதும் காரை நேராக அவர்களின் பேக்கிங் ஹவுஸுக்கு விட்டான் தர்மதுரை.
அங்கே அவனும் தேன்மொழியும் மட்டும் இறங்கினார்கள். கார் சாவியை ஜெயபாலனிடம் கொடுத்தவன், “கார நீங்க ஓட்டிட்டு வாங்க மச்சா. நாங்க வண்டியில வர்றோம்” என்றான்.
அங்குக் கம்பீரமாக நின்ற புல்லட்டை கண்டதும், “வாவ் மாமா, இந்த வண்டிய எப்போ வாங்குனீங்க? செம்மயா இருக்கு” என்று வியப்புடன் கேட்டான் அன்பழகன்.
சட்டெனக் காரில் இருந்து கீழிறங்கி வந்து வண்டியை தொட்டுப் பார்த்து ஆராய்ந்தான்.
“ஒரு ரவுண்டு போய்ட்டு வா அன்பு” என்று சாவியை அவனிடம் நீட்டினான்.
தம்பி தயங்கி அக்காவைப் பார்க்க, “நானும் வர்றேன் அன்பு” என்று சாவியை அவள் வாங்கினாள்.
அன்பழகன் முகம் பிரகாசமாக அந்த வண்டியை ஆக்கிரமித்தான். அந்தச் சாலையின் இறுதியை தொட்டு திரும்பி வந்தார்கள்.
“செம்ம ஸ்மூத்தாகப் போகுது மாமா” வண்டியை லேசாக முறுக்கி சிரிப்புடன் சொன்னான் அன்பழகன். தேன்மொழி, தம்பியின் முகத்தைப் பார்த்ததும் வண்டியில் இருந்து இறங்கவேயில்லை.
“நீங்க கார்ல போங்க. நான் தம்பி கூட வர்றேன்” என்றாள்.
தலைவன் முகம் சுணங்கினாலும், சிரித்தபடி அவர்களுக்குத் தலையசைத்தான்.
“எப்பவும் உங்க கூடத் தானே வர்றேன். பிளீஸ்” என்று கெஞ்சியது அவள் விழிகள்.
“பார்த்து, பத்திரமா வாங்க. கவனம் அன்பு” என்று அவர்களிடம் சொல்லி விட்டுக் காரில் ஏறினான்.
“டேய் அன்பே, அக்காவை பார்த்ததும் அண்ணனை மறந்துட்ட பார்த்தியா?” என்று அவனை வம்புக்கிழுத்தான் ஜெயபாலன்.
“நான் யாரோ தானே?” என்று வசனம் பேசினான்.
“போண்ணா” என்று சொல்லி சிரிப்புடன் வண்டியை இயக்கினான் அன்பழகன்.
“நீங்க வாங்க மாப்ள. நாம போவோம்” என்று தர்மதுரையை அழைத்தான் ஜெயபாலன்.
ஆறு வயதில் தம்பியை பின்னே வைத்து சைக்கிள் ஓட்டியிருக்கிறாள் தேன்மொழி. இத்தனைக்கும் மெதுவாகத்தான் ஓட்டுவாள். அதற்கே அப்படி ஆர்ப்பாட்டம் செய்வான் அன்பு.
அவர்களைக் கடந்து பின் நோக்கி செல்லும் மரங்கள், மனிதர்கள் என ஒவ்வொன்றையும் காண்கையில் கத்தி குதூகளிப்பான்.
அவள் கல்லூரி படிக்கையில் வண்டி ஓட்டிப் பழகும் போது, “பார்த்துக்கா” என்று பதறுவான்.
இன்றைக்கு அவளைப் பின்னால் வைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்.
பழைய நினைவுகள் புன்னகையைத் தர, தம்பியுடன் பயணித்தாள்.
வீரனூரை தொட்டதும் பழைய நினைவுகள் மீண்டும் மனத்தை ஆக்கிரமித்தது.
மாமா வீட்டில் அவர்களுக்கு முன்னே வந்து காத்திருந்தார்கள் தர்மதுரை, ஜெயபாலன்.
எப்போதும் போல மாமா வீட்டில் கவனிப்புப் பலம்தான். அங்கும் விடுமுறைக்கு வீடு வந்திருந்தான் சரவணகுமார்.
பத்மபிரியா கல்லூரி முடித்து இப்பொழுது சொந்தமாகத் தொழில் செய்கிறாள்.
“ஃபேஷன் டிசைனிங்” முடித்திருக்கிறாள். அவளுக்கும் அப்பாவை போலத் தையல் தொழில் மேல் ஒரு தனி ஆர்வம் இருந்தது. ஆகையால் அந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்தாள். அந்தப் படிப்புப் பெயருக்குதான். எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே தையல் வகுப்புக்கு சென்று கற்று தேர்ந்திருந்தாள். அப்போதே அப்பாவிடம் கேட்டு, அவரது தையல் இயந்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தைத்துப் பழகினாள். பனிரெண்டாம் வகுப்புப் படிக்கையில் அம்மாவுக்கு ஜாக்கெட், அப்பா, அண்ணனுக்குச் சட்டை, காற்சட்டை என அனைத்தும் நேர்த்தியாகத் தைக்கும் அளவுக்குத் தேர்ந்திருந்தாள். கல்லூரி படிப்போடு சேர்த்து ஆரி வேலைப்பாடு, கண்ணாடி வேலைப்பாடு என ஒன்றையும் விடாமல் கற்று தேர்ந்திருந்தாள்.
அவள் கல்லூரி முடித்ததும் தன் கனவு தொழிலை தொடங்கி விட்டாள். அதற்கு முதலீடு அப்பா கொடுத்திருந்தார்.
பெண்களுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பகம் அது. அதில் பிரதானமாக ஜாக்கெட் தைத்தார்கள். இப்போதெல்லாம் புடைவையை விட ஜாக்கெட் தைக்கத் தானே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதிகச் செலவும் செய்கிறார்கள்.
அவளிடமும் அந்த வேலைதான் அதிகமாக வந்தது.
நல்ல தையல்காரர் கிடைப்பது குதிரை கொம்பு அல்லவா? ஆக, அவளின் வேலை நேர்த்தியே அவளுக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்தது. அவளுடன் படித்த தோழிகள் இருவரையே பணிக்கு அமர்த்திக் கொண்டாள். இன்றைக்குத் தேன்மொழி வருவதால் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும் என்று அவள் அம்மாவின் கட்டளை. அதனால் தோழிகளிடம் கடையை விட்டுவிட்டு வீடு வந்திருந்தாள்.
“தேனு, சாப்பிடலாம் வாங்க” மாட்டுக் கொட்டகையில் நின்றிருந்தவர்களை அழைத்தார் நிர்மலா.
அங்கே பத்து மாடுகளுக்கு மேல் இருந்தது. ஆட்டுக் குட்டியை கண்டதும் அதைக் கையில் தூக்கி விட்டாள் தேன்மொழி.
“அப்படியே நில்லு தேனு, ஒரு ஃபோட்டோ எடுப்போம்” என்று பத்மா சொல்ல, குட்டியை கையில் அணைவாகப் பிடித்து நின்றாள் தேன்மொழி.
நிர்மலா கூப்பிட்டதும், “இதோ வர்றோம்த்தே” என்றாள் சத்தமாக. சமையல் வேலையை முடித்திருந்தவர், அப்படியே சுவரில் சாய்ந்து நின்று பிள்ளைகளைப் புன்னகையுடன் பார்த்திருந்தார்.
இரண்டு தாய்க் கோழிகள் குஞ்சுகளுடன் சுற்ற, அதனருகில் சென்றான் ஜெயபாலன்.
“டேய் அன்பே, உனக்கு ஞாபகம் இருக்கா? நான் இதுகிட்ட கொத்து வாங்கியிருக்கேன்” என்று ஜெயபாலன் சொல்ல, “அது இதில்ல, வேற கோழி” என்றாள் பத்மா, பின்னால் இருந்து.
“ஏன் அந்தக் கோழிக்கு என்னாச்சு?”
“ம்ம்” என்று முறைத்தவள், மறுவருஷமே நீங்க லீவ்வுக்கு வரும் போது கோழி குழம்பாகிடுச்சு” என்றாள்.
“எதே?”
“நீங்களும்தான் சாப்பிட்டீங்க”
“அதையேன் டா அன்பே இம்புட்டுக் கோபமா சொல்றா?” என்று திரும்பி அன்பிடம் கிசுகிசுத்து, “சாரி, எனக்குத் தெரியாதே. நீ வளர்த்த கோழியா பத்மா?” என்று அவளிடம் விசாரித்தான்.
“ஹ்ம்ம்” என்று அவள் சொல்ல, அன்பழகன் அக்கா, மாமா இணைந்து நின்றிருக்க, அவர்களைப் புகைப்படம் எடுக்கச் சென்றான்.
ஜெயபாலன் சற்றே நகர, “கோழி கிட்ட போகாதீங்க. இப்பவும் கொத்தும்” என்று எச்சரித்தாள் பத்மா.
“நான் எங்க அதுகிட்ட போனேன்?” என்று அவன் சொல்லும் போதே கோழி குஞ்சொன்று அவனருகில் வர, தாய்க் கோழி சிலிர்த்தது.
“ச்ச்சூ” என்று அதனைத் துரத்தி விட்டாள். ஜெயபாலன் பார்வை கோழிக் குஞ்சை வட்டமிடும் பருந்தாக, பத்மாவையே வட்டமிட்டது.
“அப்புறம் கடை எப்படிப் போகுது?”
“ம்ம், நல்லா போகுது” என்றாள்.
“என்ன நல்லா போகுதுன்னு டல்லா சொல்ற?” என்று கேட்டவன், “நான் பயங்கரமா போகுதுன்னுல கேள்விப்பட்டேன். எங்கம்மா, அம்மாச்சி, இந்தா நம்ம தேனு, எங்கண்ணின்னு எல்லாருமே உன் கஸ்டமர் தானே? எங்கம்மாவே மாசம் நாலு ஜாக்கெட் தைக்குது. ம்ம், எங்ககிட்ட ஒரு வண்டி வாங்கவே அழுறானுங்க. பேசாம உன் பிஸினஸ்ல பார்ட்னரா வந்துடவா?” என்று கேட்டான்.