இந்த வாழ்வென்பது – 21 (1)

தலைவனின் கைக்குள் அடங்கி நின்றாள் தலைவி.

“ஏ சிலுப்பி, நாலு தெருத் தள்ளிதான் இருக்கப் போற. தினம் ஆபீஸ்ல பார்த்துக்கப் போறோம்னு நீ தானே சொன்ன? அப்புறம் ஏன் இப்படி ஃபீல் பண்ற?” அவளின் முதுகை வருடிக் கொண்டே கேட்டான்.

“தேன்..னு” என்று அழுத்தி உச்சரித்தான்.

“உங்க அத்த மக வீணா மாசமா இருக்காளாம்”

“நல்லது, அதுக்கு நாம என்ன பண்ணணும்னு சொல்ற”

“அவங்களை ஆடிக்கு பிரிக்க மாட்டாங்களாம்”

“அதுக்காக?” கண்ணைச் சுருக்கி புருவங்களை உயர்த்தினான். தலையைச் சற்றே திருப்பி அவனைப் பார்த்தவள், மீண்டும் அவன் மார்பில் புதைந்துக் கொண்டாள்.

“என்ன தேன்னு?” பதிலே சொல்லாமல் மேலும் அவனை இறுக்கினாள். அவளுக்குப் பிரிவு என்றாலே பதறி விடும். அது சிறியதோ, பெரியதோ, அருகிலா, தூரத்திலா என்பதெல்லாம் கணக்கில்லை. தனக்கு நெருக்கமான எந்தவொரு உறவையும் அவளால் மனமுவந்து பிரிய முடியாது.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எத்தனை பிரிவுகளைச் சந்தித்திருக்கிறாள். எல்லாமே ஏற்றுக் கொள்ள முடியாத நிரந்தரப் பிரிவுகள். அந்த வயதில் எப்படியோ தாங்கி, புதிய இடத்தில் தளிர்த்து வளர்ந்தும் விட்டாள்.

இன்றைக்கு உயிரும், மெய்யும் உருகி உளமார நேசிப்பவனைப் பிரிய மனமில்லாமல் தவித்தாள் பூவை.

“தேன்..னு..”

“போங்க”

“நமக்கு இப்பத்தான் கல்யாணமாகியிருக்கு சிலுப்பி. உனக்கு 22 வயசுதான் ஆகுது. இப்போ என்ன அவசரம் நமக்கு? நாம் பொறுமையா புள்ள பெத்துக்கலாம். சரியா?”

“ம்ம்”

“டெய்லி தோட்டத்து ஆஃபீஸ்ல மீட் பண்ண போறோம். நமக்கு அங்கேயே வீடும் இருக்கு. அங்கன யாரு வந்து நம்மள கண்காணிக்கப் போறாங்க? மாமன் மல்லிகைய அங்க வச்சு சூடிக்கறேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

“ச்சீ. ஆசதான் போங்க.” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள்.

“நீ தானேடி ஃபீல் பண்ண?”

“நான் ஒன்னும் அதுக்காக ஃபீல் பண்ணல”

“ஆனா, நான் அதுக்காகத்தான் டி ஃபீல் பண்ணேன்” என்றான் மோகன புன்னகையுடன்.

“அப்போ பொண்டாட்டிய பிரியறோம்னு”

“மொத இப்படிப் பிரிவு கிரிவுன்னு பேசுறத நிப்பாட்டு தேனு. அப்புறம் நான் உன்னைய உங்க வீட்டுக்கே அனுப்பாம இங்கேயே வச்சுப்பேன்” என்றான் குரலை உயர்த்தி, திட்டவட்டமாக. ஒரு நொடி அப்படிச் செய்து விடேன் என்று சொல்லியே விட்டிருப்பாள். ஆனால், பெரியவர்களை யோசித்து மௌனமாக இருந்தாள்.

ஆடி பிரிவு அவள் பயந்த அளவுக்கு அப்படியொன்றும் மோசமில்லை. காரணம் அவள்தான் தினமும் அவனைச் சந்தித்தாளே.

அவனை மட்டுமல்ல மொத்த மாமியார் குடும்பத்தையும்தான். அப்பத்தாவை தவிர்த்து. அதிசயமாக அவரையும் கூடக் கோவில், தோட்டம் என வாரத்துக்கு ஒரு முறை காணவே செய்தாள்.

அவர்களுக்குத் திருமணம் முடிவான சிறிது நாட்களிலேயே தோட்டத்தின் அலுவலகப் பொறுப்பை, திருமணத்திற்குப் பிறகு தேன்மொழி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தெளிவாகத் தர்மதுரை சொல்லி விட்டான்.

அதன்படி திருமணம் முடிந்த முதல் வாரத்திலேயே அவளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டான்.

அவனே அருகில் அமர்ந்து பணிகளைச் சிரத்தையாக அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். அவர்கள் பூக்களை ஏற்றுமதி செய்வதால் தினமும் கஸ்டம்ஸ் விதிமுறைகள் படி பாரங்கள் பூர்த்திச் செய்து அனுப்ப வேண்டும். அதுதான் நாள் தவறாமல் நடைபெறும் நடைமுறை. அதில்லாமல் பூக்களை விமானத்தில் ஏற்ற மாட்டார்கள். சில சமயங்களில் பூக்கள்தான் அனுப்புகிறார்களா என்று சோதனை வேறு செய்வார்கள்.

அவர்கள் தொழிலில் அது மிக முக்கியமான வேலை. சிறு தவறும் அதில் நேர்ந்து விடக் கூடாது. அப்படித் தவறினால் பூக்கள் விமானம் ஏறாது. அவர்களுக்கு அது நட்டம் மட்டுமல்ல. பெயரும் கெட்டு விடும். அதனால் மிகக் கவனமாக இருப்பார்கள். முன்பு அந்த வேலையை மட்டும் யாரிடமும் கொடுக்காமல் தர்மதுரையே செய்தான்.

அன்புக்கரசி, லோகேஸ்வரன் இருவருக்கும் வேலை தெரியும் என்றாலும் கூட அது எப்போதும் தர்மதுரையின் துறைதான்.

இப்பொழுது மனைவியிடம் அதை ஒப்படைத்து விட்டு மற்ற முக்கிய வேலைகளை அவன் பார்க்கிறான். ஆக, தலைவி ஆடி மாசம் முழுவதும் அலுவல் பார்க்க வரும் போதெல்லாம் தலைவனைதான் பார்த்தாள்.

சின்னச் சின்னச் செல்ல சீண்டல்கள், தித்தித்த திருட்டு முத்தங்கள், ஏதேதோ காரணங்கள் காட்டி வார்த்தைகளால் பேசிக் கொண்டாலும், அவ்வப்போது பிரியம் பேசிடும் விழி மொழிகளில் கல்யாணத்திற்குப் பிறகு காதலிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு ஆடி மாதம் அவசரமாக ஓடி முடிந்திருந்தது.

அடுத்த மாதமே சுதாகரனின் திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கியது பொற்கொடி குடும்பம்.

மூன்றாம் மாதம் விமரிசையாகச் சுதாகரன் ரம்யா திருமணம் நடந்தேறியது.

சுதாகரன் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஜெயபாலன் சென்னையில் வேலையை ராஜினாமா செய்து விட்டு திண்டுக்கல் வந்து விட்டான். கல்லூரி சேரும் போதே அண்ணனும் தம்பியும் திட்டமிட்டபடி, அவனும் தொழிலில் இணைந்து கொண்டான்.

அவர்களின் மாமா மகன் சரவணக்குமாருக்குச் சென்னையில் வேலை கிடைக்கவும் இப்போது அன்பழகனுடன் அவன் வசிக்கிறான்.

அண்ணனுக்குத் திருமணமானதில் இருந்து ஜெயபாலன் அப்படியொரு பொறுப்பு. கடையை விட்டு எங்கும் நகர்வதில்லை. அண்ணன் விரும்பிய நாள்களில் எல்லாம் அவனுக்கு விடுமுறை கொடுத்து வேலையைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மிகவும் பொறுப்புதான், பாசம்தான்.

“என்னண்ணே இப்படி மாறிட்டே” என்று அன்பு ஆச்சர்யமாக அவனிடம் கேட்க, “டேய் அன்பே, உன்னைய விட எங்கண்ணே மேலதான்டா எனக்குப் பாசம் அதிகம்” என்றான் தீவிரமாக.

“ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சிக்கிட்டேன்” என்று அன்பு சோகம் போலப் பாட, “உன் கண்மணி பொறுமையா வருவா. அவளைப் பார்த்து அப்புறமா பாட்டு பாடுவ. இப்ப வேலையைப் பாருடா டேய்” என்று அவனை அதட்டினான்.

“இன்னும் என் கண்மணியே என்கிட்ட வர்ற வழிய காணோம்னு நானே ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். இதுல நீ வேற ஊடையில வராத டா. உனக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு”

“அண்ணா” என்று கடுப்பானான் அன்பழகன்.

“இன்னைக்கு நான் அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணாதான், நாளைக்கு எனக்குக் கல்யாணமானதும் அண்ணே எனக்கு ஹெல்ப் பண்ணும்”

“அடப்பாவி அண்ணா, உன்னைய போய் நல்லவன்னு நெனச்சுட்டேனே”

“அது உன் தப்பு டா அன்பே” என்று தம்பியின் தோளில் கைப் போட்டு கழுத்தை சுற்றிப் பிடித்தான்.

“விடே” என்று கத்தினான் அன்பு. அவன் தீபாவளிக்காக ஊருக்கு வந்திருந்தான்.

அது தேன்மொழி தர்மதுரை, சுதாகரன் ரம்யா என இரண்டு ஜோடிகளுக்கும் தலை தீபாவளி ஆகிற்றே.

முன்தினம் அக்கா, மாமாவுடன் சிறப்பாகப் புத்தாடை, விருந்து, பட்டாசு எனப் பட்டாசாகத் தீபாவளியை கொண்டாடியிருந்தான்.

சுதாகரன் தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு மதுரை சென்றிருந்ததால், இன்று சின்ன அண்ணனுடன் கடைக்கு வந்திருந்தான்.

மறுநாள் அவர்கள் அனைவருக்கும் மாமா மணிவண்ணன் வீட்டில் விருந்து. அதுதான் தேன்மொழியின் வாடிக்கை. விருந்து, மறுவீடு, தலைதீபாவளி என அனைத்திற்கும் முதலில் பெரியம்மா வீடு செல்பவள் அதற்கடுத்து மாமா வீட்டுக்கும் சென்று விடுவாள். ஏனோ அவளுக்கு அங்குச் செல்கையில் ஒரு நிறைவு தானாகவே வந்திடும்.

அது அவளின் அப்பா, அம்மா வாழ்ந்த வீடு என்பதினால் இருக்கலாம். அப்பத்தா வாழ்ந்த வீடு. அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் தான் நிரம்ப மகிழ்ச்சியாக இருப்பதை அவர்கள் காண்பார்கள் என்ற பிரம்மை அவளுக்கு. மேலும் மணிவண்ணன் மாமாவும் பாசக்காரர்தான்.

அன்று தர்மதுரைக்குக் கூடுதல் வேலை. தீபாவளி பூஜைக்காக மும்பையில் இருந்து மதுரை மல்லிகை முன்பதிவு செய்திருந்தார்கள். வழக்கமாக அனுப்பும் பூக்களுடன் அதையும் தனியாக அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு முன்காலைப் பொழுதில் வீடு வந்தான்.

“தேன்னு”

“இங்க இருக்கேங்க” உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“மரியாத தெரியாத கழுத. பேரன் கூப்பிட்டா என்னான்னு ஓடி வந்து கேட்குறாளா பாரு” என்று நொடித்தார் அப்பத்தா.

தர்மதுரை அவர்களின் பஞ்சாயத்துக்குப் போவதே கிடையாது. ஆக, அப்பத்தா பேச்சை காதில் வாங்காமல், அம்மா நீட்டிய மோரை குடித்து விட்டு அறைக்குச் சென்றான்.

“யாருக்கு? எனக்கு மரியாத தெரியாதா? நீங்க கூப்பிட்டதும் அப்படியே ஓடி வந்து நின்னாதான் மரியாத இருக்குன்னு ஒத்துக்குவீங்களா அம்மாச்சி?”

“மதுரக்காரிக்கு இருக்க வாய்யி”

“நான் மதுரக்காரின்னா? நீ மட்டும் திண்டுக்கல்காரியா? நீயும் இந்த ஊருக்கு வாக்கப்பட்டுத் தானே வந்த? நானாவது சின்னப் புள்ளயிலருந்து இந்த ஊர்ல இருக்கேன். நீதேன்” என்று அவள் பேசிக் கொண்டே போக,

“எத்தா திலகா. உன் மருவள அடக்கி வையி சொல்லிட்டேன்” என்று திலகவதியிடம் புகார் படித்தார் அப்பத்தா.

“ஏ அம்மாச்சி, கள்ளாட்டம் ஆடாத. என்கிட்ட பேசிட்டு இருக்கையில அதென்ன என் அத்தைக்கிட்ட புகார் படிக்கிற”

“ஆத்தாடி இவகிட்ட மனுஷி பேசுவாளா”

“இப்பதான் மரியாத தெரியாதுன்னு சொன்ன? இப்போ மனுஷி பேசுவாளான்னு சொல்ற? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அம்மாச்சி. உன்னைய கேட்க ஆளில்லன்னா?” என்றவள், “யோவ் தர்மா” என்று மாமனை அழைத்தாள்.

அந்நேரம் அறை கதவை அவன் திறக்க, “சேலை கட்டிட்டு இருக்கேன். நீங்க கூப்பிட்டதும் இப்படியேவா ஓடி வர?” என்று அவள் கேட்கவும், “அடியேய், அடங்கு டி” என்று அவளின் வாயை மூடினான்.

ஆனால், அவள் சொன்னது அப்பத்தாவிற்கு நன்றாகக் கேட்டிருந்தது.

“ஆத்தாடி, சீல கட்டுறான்னு தெரியாம பேசிட்டேனே” என்று புலம்பினார். பின்னே வெளியே வந்தால் அதற்கும் சேர்த்து வைத்து அவரிடம் வம்பு பேசுவாளே பேரன் பொண்டாட்டி என்ற பயம்தான்.

திலகவதி கூடத்தில் கால் நீட்டி அமர்ந்து மதிய சமையலுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு உரித்துக் கொண்டிருந்தவர், அவர்களின் வம்பு வழக்கை பார்த்து புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.

சில உறவுகள் அடித்தாலும், பிடித்தாலும் அழகுதான்.

“வாய் ரொம்ப நீளுது உனக்கு” அவளின் வாயை பொத்தி கடிந்து கொண்டான். அவனது உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டாள்.

“ரொம்பவா?” என்று கேட்டு மீண்டும் முத்தமிட்டாள்.

கண்ணாடி முன் நின்று பட்டு சேலை அணிந்துக் கொண்டிருந்தாள். பாதியில் உள்ளே வந்திருந்தவன் பார்வை இப்போதுதான் அவள் மேல் சரியாகப் பதிந்தது.

error: Content is protected !!
Scroll to Top