அப்பத்தாதான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சம் விளையாட்டு போலப் பேசினாலும், அது குத்தல் பேச்சுதான். பெரியவர் பேச்சு என அதைப் பெரிதுப்படுத்தாமல் கேலி போலக் கடந்து விட்டார் பொற்கொடி.
சுதாகரன்தான் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். எல்லாம் சிரித்த முகமாகத் தங்கையைக் காணும் வரைதான். அதன் பின்னர் அவனுமே இயல்பாகி விட்டான்.
அவர்களை முறையாக மறுவீடு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே தர்மதுரைக்கு மாப்பிள்ளை கவனிப்புப் பலமாக இருந்தது. தேன்மொழிக்கு அம்மா வீடு ஆசுவாசத்தை அளித்தது. பேத்தியை பல நாள் பிரிந்தது போலப் பாசமாக அவள் கன்னம் வருடி முத்தம் வைத்தார் முத்தம்மா.
முதல் நாள் விருந்துண்டு குடும்பத்தினருடன் சிரித்துப் பேசிய தர்மதுரை, மறுநாள் வழக்கம் போல வேலையைக் கவனிக்கத் தோட்டத்திற்குச் சென்று மதியத்திற்கு மேல்தான் வீடு வந்தான். மனைவி முறைத்தாள், அதைச் சமாளிக்கும் வழிகள் அவனுக்கு இப்பொழுது தெரிந்திருந்தது.
மூன்றாம் நாள் மதியம் புகுந்த வீடு திரும்பினார்கள்.
அப்பத்தா எந்த வகையிலும் குறை சொல்ல முடியாதபடி, ஊரே வியக்கும் வண்ணம் தேன்மொழிக்கு சிறப்பாகச் சீர் செய்தார்கள் அவள் குடும்பத்தினர்.
மச்சான்கள் மூவருக்கும் புதுத் துணியோடு தங்க மோதிரம் வைத்துக் கொடுத்தான் தர்மதுரை.
அதில் அன்பழகனுக்கு மட்டும் பிரத்யேகமாக டாட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய கைக் கடிகாரம் ஒன்றும் சேர்த்துக் கொடுத்தான்.
“வாட்ச் ரொம்ப அழகாருக்கு மாமா. எனக்கு வாட்ச் பிடிக்கும்னு அக்கா சொன்னாளா?” என்று மகிழ்ச்சியும், ஆச்சரியமுமாக அவனிடம் கேட்டான் அன்பழகன்.
‘உனக்கு வாட்ச் எப்போ வாங்கினார்னு கூட எனக்குத் தெரியாது அன்பு’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டு கணவனை விழிகள் வியப்பில் விரிய பார்த்தாள்.
“ம்ம், உங்கக்காதான் சொன்னா” என்றான் புன்னகையுடன். அவனிடம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் எப்படிச் செல்கிறது, நாளை என்னவாக விரும்புகிறான்? தேர்வு எழுதி தேர்வானால் எந்தத் துறை கிடைக்கும்? எதைத் தேர்வு செய்யப் போகிறான் என்பதெல்லாம் குறித்துக் கேட்டறிந்தான். அவனுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைக் கொடுத்தான்.
ஜெயபாலன் கேலி செய்வது போல இம்முறை அக்காவை பிரிய அழவில்லை அன்பு. ஆனாலும், பிரிவின் வேதனையுடன் கண்கள் கலங்க புன்னகைத்தே விடை பெற்றான்.
மூன்றாம் வாரம் சென்னை விமான நிலைய கஸ்டம்ஸில் முக்கியமான வேலையிருக்கிறது என்று மனைவியுடன் சென்னை சென்றான் தர்மதுரை. அந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டது. மேலும் இரு நாட்கள் சென்னையில் இருந்தார்கள். அன்பழகன், ஜெயபாலனுடன் படம் பார்த்து, ஷாப்பிங் செய்து, ஊர் சுற்றி பின் திண்டுக்கல் திரும்பினார்கள்.
சுதாகரன் வேலையை விட்டுவிட்டு திண்டுக்கல் வந்து விட்டான். கடை வேலைகள் கிட்டத்தட்ட முடிந்திருந்தது. கடைக்குத் தேவையான வண்டிகள் முன்பதிவு செய்து விட்டான். கடைத் திறக்க நல்ல நாள் பார்த்துப் பத்திரிக்கை அடித்து வந்திருந்தது. ஊரெல்லாம் புதுக் கடை குறித்த விளம்பரங்கள் செய்திருந்தார்கள்.
அச்சமயம் பொற்கொடி மகளை வீட்டுக்கு அழைத்தார்.
தேன்மொழி கணவனுடன் சென்று வீட்டில் இறங்கினாள். அவளை விட்டுவிட்டு வேலை பார்க்க சென்று விட்டான் அவன்.
“என்னம்மா, ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க?”
“மொத உக்காரு ராசாத்தி. சாப்பிட்டியா நீ? காலையில நீ வருவன்னு உங்கம்மா சொன்னதும் கருப்பட்டி பணியாரம் செஞ்சேன். சாப்பிடுறியா?” என்று பேத்தியை கவனித்தார் முத்தம்மா.
“நான் சாப்பிட்டேன் அம்மாச்சி.” என்று அவள் சொன்னாலும், தட்டில் பணியாரம் எடுத்து வந்து அவள் கையில் திணித்து ஒன்றை ஊட்டியும் விட்டார்.
“நீங்க என்னனு சொல்லுங்கம்மா” பணியாரத்தை மென்றபடி கேட்டாள்.
“அது வந்து தேனு”
“அட நீட்டி முழக்காம சொல்லு கொடி” முத்தம்மா அதட்ட, “உன் நாத்தனா வீட்டுக்காரர் இருக்காருல்ல தேனு?” என்று ஆரம்பித்தார் பொற்கொடி.
“ம்ம், லோகேஷ் அண்ணா..”
“அவரோட அத்த குடும்பம்..”
“சுதா அண்ணாக்கு பொண்ணு குடுக்க ஆசைப்படுறாங்கன்னு சொன்னீங்களேம்மா”
“அதான் தேனு, நான் அப்பவே அவங்க கிட்ட சொல்லிட்டேன். உங்கண்ணா இப்ப கடை வேலையில மும்முரமா இருக்கான். அவன் கல்யாணத்துக்கு ஒரு வருஷமாவது ஆகும்ன்னு”
“இப்ப திரும்ப உங்ககிட்ட கல்யாண பேச்செடுத்தாங்களாம்மா?”
“ஆமா, தேனு. நேத்து திண்டுக்கல்ல அவங்கள பார்த்தோம். அவங்க பொண்ண வேற எடத்துல கேட்கறாங்களாம். ஆனா, அவங்களுக்கு நம்ம வீட்ல குடுக்கத்தான் விருப்பமாம்” என்றார். அந்தப் பெண்ணுக்குச் சுதாகரனை நிரம்பப் பிடித்திருக்கிறது என்று அன்புக்கரசி ஏற்கனவே அவளிடம் சொல்லியிருந்தாள். ஆக, அவர்கள் நெருக்குவதின் காரணம் அவளுக்குப் புரிந்தது.
“அண்ணா என்ன சொல்றான் மா?”
“அவன் பிடி குடுத்து பேச மாட்டேங்கறான் தேனு. அவங்க உன் நாத்தனா புகுந்த வீட்டுச் சொந்தம் வேற. அதான் உன்னைய எதுவும் சொல்லிடுவாங்களோன்னு எனக்குப் பயம்”
“அண்ணேங்கிட்ட நான் பேசுறேன் ம்மா” என்றவள், “அன்பு அண்ணி வீட்டு ஆளுங்கள அவங்க பார்த்துப்பாங்க” என்று புன்னகைத்தாள்.
“அண்ணனை விடுங்க. மொத உங்களுக்கு ஓகேவான்னு சொல்லுங்கம்மா”
“அவங்க பழக ரொம்ப நல்ல குடும்பமாதான் தெரியறாங்க. பொண்ணும் நல்லா லட்சணமா இருக்கா. உங்கண்ணே சரின்னு சொன்னா பார்க்கலாம்” என்றார் யோசனையுடன்.
அதுநாள் வரை அவளைச் சிறு பிள்ளையாக நடத்தியவர்கள், அவளுக்குத் திருமணமானதும், குடும்ப விஷயத்தை அவளிடம் விவாதிக்கிறார்கள். அவளின் கருத்து கேட்டு அதற்கு முக்கியத்துவமும் தருகிறார்கள். சட்டெனத் தன் நிலை மாறியதில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
கணவன் மதிய உணவிற்கு வரும் போது அவனுடன் வீடு திரும்பி விட்டாள். அதுவரை அம்மா, அம்மாச்சி, தாத்தாவுடன் நேரம் செலவழித்திருந்தாள்.
“என்னாது அது? இத்துணூண்டு டிஃபன் பாக்ஸு. அதுல என்னத்த கொண்டுட்டு வந்திருக்கா உன் மருமக? இங்க எத்தன பேருக்கு அது காணும்?”
அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும், தேன்மொழியின் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்து, கச்சேரியை ஆரம்பித்தார் அப்பத்தா.
“கருப்பட்டி பணியாரம் அம்மாச்சி. சாப்பிடுறீங்களா?”
“ஆஹங், உன் வீட்டு பொருளு, எனக்கு வேணாம்” என்றார் வீம்புடன்.
“நான் இனிப்புலாம் சேர்த்துக்கறதில்ல” என்றார் பேரன் பார்க்கவும்.
“அப்படியா அம்மாச்சி. சரி விடுங்க. உங்க பங்கையும் சேர்த்து என் தர்மா திம்பார்” என்றாள் கணவனைப் பார்த்து.
“அடியே பேரன் பேர் சொல்லாதன்னு உனக்கு சொன்னேனா இல்லையா?”
“எப்போ சொன்னீங்க? எனக்கு மறந்து போச்சு” என்று அவரிடம் வம்பு பேசிக் கொண்டே சமையல் அறை சென்று பாத்திரத்தை வைத்தாள். திலகவதியிடம் பேசி விட்டு, இரண்டு சிறிய கிண்ணங்களில் பணியாரம் எடுத்து ஒன்றை அப்பத்தா அமர்ந்திருந்த சோஃபா முன்னிருந்த மேஜையில் வைத்து விட்டு, மற்றொன்றை கணவனுக்குக் கொண்டு போனாள்.
சட்டையைக் களைந்து வெறும் பனியனுடன் படுக்கையில் சரிந்திருந்தான்.
“அத்த எதுக்கு வரச் சொன்னாங்க?” அவன் கேட்கவும், வீட்டில் நடந்ததை ஒப்பித்தாள். அவனுக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
“சுதாகர் மச்சான் கிட்டயும், லோகேஷ் மாமா கிட்டயும் நான் பேசுறேன்” என்றான்.
“அண்ணாக்குப் பொண்ணைப் பிடிச்சுருக்கான்னு மொத தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா பேசுங்க”
“சரிங்க பொண்டாட்டி” என்றான் சிரிப்புடன்.
தலையணையை முதுகுக்கு அணைவாகக் கொடுத்து சரிந்து அமர்ந்தான்.
அவனிடம் பணியார கிண்ணத்தை நீட்டினாள். மறுப்பாகத் தலையசைத்தான்.
“அப்பத்தா, பேரன் ரெண்டு பேருக்கும் ரொம்பத்தான்” என்று உதடு சுழித்தவள், “நீங்க சாப்பிடாட்டி போங்க. நான் சாப்பிடுறேன்” என்று பணியாரத்தைப் பிய்த்து வாயில் இட்டாள்.
மறுகணம் கருப்பட்டி பணியாரத்தைத் தர்மா மென்று கொண்டிருந்தான்.
“நான் கொடுத்தப்ப வேணாம்னு சொல்லிட்டு இப்ப என்ன பண்றீங்க” என்று அவள் சிணுங்க, மீண்டும் அவளை இழுத்து, அழுத்தமாக இதழில் முத்தமிட்டான்.
“இப்படிச் சாப்பிடத்தான் பிடிக்குது, என்ன செய்ய?” என்று கண் சிமிட்டினான். அவன் கையில் கிண்ணத்தைத் திணித்து விட்டு வெளியேறினாள்.
“தேனு, பணியாரம் நல்லாருக்குடா” என்ற திலகவதி, “இங்கன கிண்ணத்துல இருந்துச்சே எங்க காணோம்?” என்று கேட்க, “ம்ம், பூனை தின்றுக்கும் அத்த” என்று அப்பத்தாவைப் பார்த்து நமுட்டு சிரிப்புடன் சொன்னாள்.
“அடியே யார சொல்ற” என்று சண்டைக்குச் சீறிக் கொண்டு வந்தவர், அவள் பார்வையில் சட்டென்று சிரித்து விட்டார்.
மனைவியிடம் சொன்னபடி மச்சானிடம் பேசினான் தர்மதுரை. சுதாகரனுக்கும் பெண்ணைப் பிடித்திருக்கிறது எனத் தெரிந்ததும் தேன்மொழி வீட்டுப் பெரியவர்களிடம் தெரியப்படுத்தினான். அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
முதலில் கடைத் திறந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தான் சுதாகரன். அதனால் இரு வீட்டினரும் பொறுமை காத்தார்கள்.
கடைத் திறப்புக்கு அவர்களுக்குமே அழைப்புச் சென்றது. மிக நெருங்கிய உறவுகள் அனைவரும் வந்திருக்க, கோலாகலமாகக் கடைத் திறப்பு நடந்தேறியது.
தேன்மொழிதான் முதல் வண்டியை வாங்கினாள். அதை மனைவிக்காக வாங்கித் தந்திருந்தான் தர்மதுரை. அத்துடன் அவனுக்கும், அக்கா அன்புவுக்கும் சேர்த்து மொத்தம் மூன்று வண்டிகள் வாங்கினான்.
கடைத் திறப்பு விழா முடிந்த மறுவாரம் சுதாகரனுக்கு முறையாகப் பெண் பார்க்கச் சென்றார்கள்.
இரண்டு வாரங்களில் பூ வைத்துப் பரிசம் போட்டார்கள். திருமணத் தேதியை மட்டும் நான்கு மாதங்கள் கழித்து என முடிவெடுத்திருந்தார்கள்.
தேனு, தர்மா திருமணம் முடிந்து இரண்டாம் மாதத்தில் ஆடி மாதம் பிறந்திருந்தது. தேன்மொழியை ஆடிக்கு அழைக்க வந்து விட்டார்கள் அவள் குடும்பத்தினர். எல்லாம் இந்த அப்பத்தாவின் அலப்பறையால்தான். இல்லையென்றாலும் அவர்களை ஆடிக்குப் பிரித்துதான் வைத்திருப்பார்கள்.
அவர்களுக்குள் இப்போதுதான் இணக்கமும், புரிதலும், பிரியமும், நெருக்கமும் வளரத் தொடங்கியிருந்தது. இந்நேரம் மனைவியைப் பிரிவதா என வாடினான் தலைவன்.
“நாலு தெரு தள்ளி தானே இருக்கப் போறேன். ரொம்பச் சீன் போடாதீங்க. டெய்லி வேலைக்கு வரும் போது பார்த்துக்கத் தானே போறோம்? அப்புறம் என்ன?” அவனது அணைப்பில் நின்றிருந்தவள், அண்ணாந்து அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“அடியே, பச்ச புள்ள மாதிரி பேசாத. நான் எதுக்கு ஃபீல் பண்றேன்னு உனக்குப் புரியலயா?”
“ம்ம், புரிஞ்சுது. புரிஞ்சுது.” என்றவள், “பொண்ணு மாசமா இருந்தா ஆடியில பிரிச்சு வைக்க மாட்டாங்களாம். தெரியுமா?” என்று குறுநகையுடன் கேட்டாள்.
“அடிப்பாவி, சிலுப்பி. உன்னைய ஒரு மாசம் பிரிய கஷ்டப்பட்டுலாம் புள்ள பெத்துக்க முடியாது” என்றான் போலி கோபத்துடன்.
“நீ மொத என்னைய கொஞ்சி முடி. அப்புறமா பொறுமையா நம்ம புள்ளய கொஞ்சுவ” என்று மனைவியின் முகத்தைக் கையில் ஏந்திச் சொன்னவன், அவளைக் கொஞ்சத் தொடங்கினான்.