இந்த வாழ்வென்பது – 2 (2)

அவளை எழுப்பி, முகம் கழுவ செய்து கஞ்சியைக் குடிக்கச் செய்தார் பொற்கொடி.

காலையில் இட்லி உண்ண கொடுத்து வேண்டவே வேண்டாம் என்று விட்டாள். ஆக, இப்போது கஞ்சி கொடுக்க, அது கொஞ்சம் உள்ளிறங்கியது.

சாப்பிட்டதும் மீண்டும் படுக்கப் போனவளை, தடுத்து அம்மாவிடம் கொண்டு விட்டார் அவர்.

முத்தம்மா, “தேனு, அம்மாச்சி கிட்ட வா தாயி” என்று அவளை இழுத்து, தலை வாரி விட்டு, வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்நேரம் பொற்கொடியை தேடி வந்தார்கள் அவரின் புதல்வர்கள் இருவரும்.

“ம்மா, அன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு கேட்டீங்க இல்ல?” என்று சுதாகர் கேட்க, பொற்கொடி கை வேலையை உதறி விட்டு, “ஆமா டா, என்ன நடந்துச்சு? தேனு ஏதாவது சொன்னாளா? அவளை மிஸ் எதுவும் சொல்லிட்டாங்களாடா தம்பி” என்று மகனிடம் விசாரித்தார்.

“இல்லம்மா, தேனுவை மிஸ்லாம் எதுவும் சொல்லலியாம். நம்ம ஊர்ல இருந்து தேனு கிளாஸ்ல படிக்கிற புள்ளைங்ககிட்ட கேட்டோம். தேனுகிட்ட மிஸ் நல்லாதான் பேசினாங்கன்னு சொல்றாங்க” என்றான்.

“அப்படியா?”

“இல்லம்மா. டேய், என்ன நடந்ததுன்னு ஒழுங்கா சொல்லுடா..” என்று எட்டி அண்ணனை அடித்த ஜெயபாலன், சட்டென அம்மாவை நெருங்கி நின்றான்.

சுதாகரன் தம்பியை அடிக்கப் பாய, அவனைத் தடுத்து பிடித்து, சின்னவனைப் பார்த்தார் பொற்கொடி.

“சரி, நீ சொல்லு. அன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சாம்? பாப்பாவை கூடப் படிக்கிற யாரும் அடிச்சு கிடிச்சு பிடுச்சுடுச்சுகளா?”

“இல்லம்மா, மிஸ்ஸு இதுக்கு முன்னாடி நீ எந்த ஸ்கூல்ல படிச்சன்னுதான் தேனுக்கிட்ட கேட்டாங்களாம்.”

“ஓ..”

“அதுக்கு என் ப்ரெண்ட் திலீப் தங்கச்சி இல்லம்மா? அந்தப் புள்ள.. தேனு அம்மாப்பா செத்துட்டாங்க. அதான் அவ நம்ம வீட்டுக்கு வந்துட்டான்னு சொல்லி இருக்கா மா” என்றான் ஜெயபாலன் கோபமாக.

“ஐயோ..” என்றார் பொற்கொடி சத்தமாக.

மகன்கள் இருவரிடமும் பேசி அவர்களை விளையாட அனுப்பி வைத்தார். ஆனால், விவரம் தெரியும் வயதில் இருந்த இருவரும் நேராகச் சென்று திலீப்பிடம் சண்டையிட்டு திரும்பினார்கள்.

“எங்க தேனுவை பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு உன் தங்கச்சிகிட்ட சொல்லி வைடா.” என்று மிரட்டி இருந்தார்கள். ஆனால், அந்த ஊரே தேன்மொழியைப் பாவமாகப் பார்த்ததை அவர்கள் அறியவில்லை அப்பொழுது. அப்படியே தெரிந்தாலும் எத்தனை பேரை போய் அவர்களால் மிரட்ட முடியும்?

ஊரில் இப்படிப் பேச்செல்லாம் சாதாரணம் என்று சிறுவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பொற்கொடிக்குப் புரிந்தது. ஊர் வாயை மூட முடியாது என்பதால் மகளைச் சமாதானப்படுத்த அவளைத் தேடிச் சென்றார்.

முத்தம்மாவுடன் தோட்டத்தில் கீரைப் பறித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“தேனு.. உடம்பு முடியாத நேரத்துல வெயில்ல நிக்காத ராசாத்தி. வீட்டுக்குள்ளாற போவோம் வா” என்று அவர் அழைக்க, கீரை பறிப்பதை நிறுத்தி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

“இங்கன நிழலா தானே இருக்கு செத்த நேரம் நின்னுட்டு வரோம் இருத்தா” என்று முத்தம்மா மகளிடம் சொல்ல, அம்மாவிடம் கண்களால் செய்தி சொன்னார் பொற்கொடி. அது புரிந்து அவரும்,“தேனு, கீர போதும்த்தா. வா, வீட்டுக்குள்ள போவோம்” என்று தேன்மொழியின் கைப் பிடித்து, திரும்பி நடந்தார்.

அவர் கையைப் பிடித்ததும் தேன்மொழியின் கையிலும், சட்டையைப் பையாக்கி வைத்திருந்ததிலும் இருந்த கீரை கீழே சிதறிட, “இருங்க அம்மாச்சி, கீர கீழ விழுந்துடுச்சு” என்று குனிந்து தரையில் கிடந்த கீரையைக் கவனமாக எடுத்தாள்.

“அக்கா.. தேனு… அக்கா..” என்று கூவிய குரலில் பட்டென்று நிமிர்ந்து, “அ..ன்..பு” என்று கத்தினாள் தேன்மொழி.

“அ…க்…கா” என்று பதிலுக்கு ஒலித்த மழலை மாறாத குரலுக்குச் சொந்தக்காரன் மறுகணமே புள்ளி மானாய் துள்ளி அவளிடம் ஓடி வந்தான்.

இரு கரத்தாலும் தேன்மொழியின் கால்களை இறுக கட்டிக் கொண்டு, அண்ணாந்து அவளைப் பார்த்து, பால் பற்கள் மொத்தத்தையும் காட்டிச் சிரித்தான்.

“அன்பு..” குனிந்து தம்பியை அள்ளி அணைத்தவள் கேவி கேவி அழுதாள்.

“அ…க்..கா..” அழுகையில் உதடு பிதுங்கியது அவனுக்கும். யாரோ ஓங்கி அடித்தது போலக் கண்ணீர் கொட்டியது.

“தேனு.. ராசாத்தி..” என்று பேத்தியை தேடி பெரியநாச்சியும் அங்கு வந்து விட்டார்.

“புள்ள அக்காவ தேடி தவிச்சி போய்ட்டான். அவ இங்க வந்ததுல இருந்து அவளைக் கேட்டு கேட்டு ஒரே அழுகை. ராவெல்லாம் அக்கா வேணும்னு கரையறான். அழுது, அடம் பண்ணிட்டு பள்ளிக்கோடமும் போகல. எங்க கூடக் காட்டுக்கு வந்துட்டு கத்தி, காச்சலை இழுத்து விட்டுக்கிட்டியான்.” என்று பேரனை காட்டி சொன்னவர் கண்களில் கண்ணீர் சரம் கொட்டியது.

“நான் என்னா செய்வேன். புள்ளைங்க நல்லா இருக்கணும்னு தானே நினைக்கேன். என் நினைப்பு தப்பா..” என்று அவர் புலம்ப, முத்தம்மா அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.

அதுவரை தெளிவில்லாத முகத்துடன் இருந்த தேன்மொழி, தம்பியை பார்த்ததும் சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.

அன்பு ஏதோ சொல்வதும், அதற்கு அவள் பதில் சொல்வதும், இருவரும் சேர்ந்து சிரிப்பதையும் காணவே அத்துணை அழகாக இருந்தது.

பெரியவர்கள் அவர்களைப் பார்த்தபடியே தங்கள் பேச்சில் மூழ்கினார்கள்.

பிள்ளைகளின் மாமா மணிவண்ணனும் வந்திருக்க, இருவரையும் அவர் பார்த்துக் கொண்டார்.

வீட்டுக்கு உறவினர் வந்திருப்பது அறிந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சுதாகரன், ஜெயபாலன் வீடு வந்தார்கள்.

அன்பழகனை பார்த்ததும் கொஞ்சி அவனிடம் பேச, அவனுக்கு அக்காவை தவிர யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை.

“அண்ணா உனக்குப் பேட், பால் தர்றேன் வாடா” என்று சுதாகரன் ஆசை காட்டி அழைக்க, “வேணாம்” என்று முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு மறுத்து விட்டான்.

“சரி, அண்ணா கிட்ட வாடா”

“நா வல்ல.. விடே.. அக்காகிட்டதான் இருப்பேன்” என்று கத்தியவன், தேன்மொழியின் கையை இறுக பற்றிக் கொண்டான்.

அக்கா கையால்தான் சோறூட்டிக் கொண்டான். தேன்மொழியும் அன்றுதான் வயிறு நிறையச் சாப்பிட்டாள்.

மதிய உணவிற்குப் பின் மணிவண்ணன் மட்டும் வீரனூர் சென்றார். பெரியநாச்சி, அன்பழகன் இருவரும் அந்த வார இறுதி இரண்டு நாள்களும் அங்குதான் இருந்தார்கள். அடுத்து வந்த வாரங்களும் அதுவே தொடர்ந்தது.

அதனால் பிள்ளைகள் இருவரும் பிரிவினால் வாடாமல் சிறிது தேறினார்கள்.

இப்படியே மூன்று மாதங்கள் கடந்திருந்தது.

அந்த வார இறுதிக்கு வீடு வந்த மணிவண்ணன், தேன்மொழிக்காகப் பட்டு, பாவாடை சட்டை தைத்து எடுத்து வந்திருந்தார்.

“பாவாடை சட்டை பிடிச்சிருக்கா தேனு?” என்று அவளிடம் ஆவலாக அவர் கேட்க, “இது அம்மா சேலை..” என்று சின்னச் சிரிப்புடன் சொன்னாள் அவள்.

உடையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

அந்தப் பட்டுப் பாவாடை சட்டையைத் தங்கை மீனாட்சியின் பட்டுச் சேலையில்தான் தைத்திருந்தார் மணிவண்ணன்.

தங்கையின் புடைவைகளை மனைவியிடம் உடுத்தி கொள்ளச் சொல்லி கொடுக்க ஏனோ அவருக்கு மனம் வரவில்லை. ஆகையால், அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அமர்ந்து அதில் தங்கை மகளுக்காக உடை தைத்திருந்தார். அதைச் சிறுமி கண்டு கொள்ளவும், “உங்கம்மா சேலைதான் டா தேனு” என்று ஆதூரத்துடன் அவளின் தலைக் கோதி சொன்னார்.

அன்று வெள்ளிக்கிழமை. அப்போதுதான் பள்ளிச் சென்று திரும்பியிருந்தாள் தேன்மொழி. காலையில் தலைக் குளித்துச் சென்றவள், இன்னமும் பளிச்சென்றுதான் இருந்தாள்.

முத்தம்மா பேத்திக்கு தலை வாரி இரட்டை பின்னலிட்டு, பட்டுப் பாவாடை சட்டையை அணிந்து வரச் சொன்னார்.

“நீங்க பேசிட்டு இருங்கத்த. நான் குளக்கரையில இருக்கக் கங்கையம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்துடுறேன்” என்று பெரியநாச்சியிடம், பொற்கொடி சொல்ல, பெரியவரால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்பதால், “சரித்தா போய்ட்டு வாங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

சுதாகரன், ஜெயபாலன் இருவரும் சைக்கிளை எடுக்க, அக்கா, தம்பி இருவரும் அண்ணன்களின் சைக்கிளில் அமர்ந்து கொண்டு, ஐந்து நிமிட பயணத் தூரத்தில் அவர்களுக்குள் கதை பேசிக் கொண்டு வந்தார்கள்.

பொற்கொடி பிள்ளைகளின் பேச்சை கேட்டபடி பின்னால் வந்தார்.

ஊர் எல்லையில் இருந்த குளக்கரையில் அமைந்திருந்தது அந்த அழகிய கங்கையம்மன் கோவில். பச்சை பட்டில் வசீகரித்தாள் அம்மன். வேப்ப மர நிழலில் வீற்றிருந்தவளின் முகமும் குளிர்ந்திருந்தது.

கோவிலை நெருங்கியதும், “சைக்கிளை ஓரமா விட்டுட்டு வாங்கடா” என்று மகன்களை அதட்டிய பொற்கொடி, தேன்மொழியைப் பிடிக்க, அக்காவின் கையைப் பிடித்தபடி பின் தொடர்ந்தான் அன்பழகன்.

“எய்யா ராசா, தொரை. போதும்யா பூ பறிச்சது. சீக்கிரம் மேலேறி வாப்பா சாமி கும்பிட்டு வீட்டுக்கு போகணும் இல்ல தம்பி. வாப்பா..” என்று அம்மன் இருந்த மேட்டில் நின்று, குளத்தைப் பார்த்துச் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் பெண்ணொருவர். அந்தக் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள் தேன்மொழி.

அவசரமாக அவள் கண்கள் ஆச்சரியமாக விரிந்தது. அந்தக் குளத்தின் நடுவே இருந்த அல்லி, செந்தாமரை மொட்டுக்களை இடுப்பளவு நீரில் நின்று பறித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

“இரும்மா வர்றேன்” என்று எரிச்சலுடன் பதிலுக்குக் கத்தினான் அவன்.

“வேடிக்கப் பார்க்காம வாங்கடா” என்று மகன்களைப் பொற்கொடி அழைக்க, அந்தப் பெண்மணி சட்டென அவர்களைத் திரும்பிப் பார்த்தார்.

“புள்ளைங்கள கோவிலுக்குக் கூட்டிட்டு வந்தீங்களா அண்ணி” என்று அவர் கேட்க, “ஆமாண்ணி.” என்று புன்னகைத்தார் பொற்கொடி.

“நானும் சாமி கும்பிடத்தான் வந்தேன். இந்தா என் புள்ள தொரை கூட. அவன் இங்க வந்ததும் குளத்துல தாமரையைப் பார்த்தவன்தான், ஓடிப் போய் உள்ள குதிச்சுட்டான், அவங்க அக்காளுக்குப் பிடிக்கும்னு பறிச்சுட்டு இருக்கான்” என்றவர், திரும்பி, “எய்யா ராசா, போதும் தம்பி.” என்று மகனைப் பார்த்து கத்தினார்.

“வர்றேன்ம்மா” என்று சலித்துக் கொண்டு மேலேறி வந்தான் பன்னிரெண்டு வயது தர்மதுரை.

அதற்குள் தேன்மொழியைப் பார்த்துச் சினேகமாகப் புன்னகைத்தவர், தன் கையில் இருந்த சிறிய கூடையில் இருந்து நீண்ட மல்லிகை சரத்தை வெளியில் எடுத்து, அவளிடம் கொடுத்தார்.

தேன்மொழி திரும்பி பொற்கொடியை பார்க்க, “பூவ வேணாம்னு சொல்லக் கூடாது தேனு. வாங்கிக்கோ” என்றார். அப்போதும் அவள் தயங்க, அந்தப் பெண்மணியே அவளை நெருங்கி, அந்த மல்லிகை சரத்தை இரண்டாக மடித்து அவள் கூந்தலில் கற்றை முடியெடுத்து அழகாக வைத்து விட்டார்.

“அழகா இருக்க” என்று அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார்.

அதுநாள் வரை அனைவரும் அவளைப் பாவமாக, பரிதாபமாகப் பார்த்துப் பேசி, பழகியிருக்க, முதல் முறையாக அவளை இயல்பாக நடத்திய அவரை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

“திலகா அண்ணி, நேரமாகுது. வாங்க, சாமியை கும்பிடுவோம்” என்று பொற்கொடி அவரை அழைக்க, உள்ளே செல்லத் திரும்பினார்கள்.

அந்நேரம் அவர்களை நெருங்கியிருந்தான் தர்மதுரை.

அவன் கையில் இருந்த தாமரையைத் தேன்மொழி ஓர் நொடி பார்த்து விட்டு திரும்ப, “அந்தப் புள்ளைக்கு ரெண்டு பூ குடுடா” என்று மகனிடம் சொன்னார் திலகவதி.

“ம்மா, இது அக்காக்கு” என்று அவன், தேன்மொழியை முறைத்துச் சொல்ல, “ஏலேய், கை நிறையப் பூ வச்சுட்டு, ஒத்த பூ குடுக்க மாட்டேன்னு சொல்ற. இப்படிக் கொண்டாடா” என்று அவர் எட்டி பூவை பறிக்கப் போக, சரியாக ஒரு தாமரை, அல்லியை எடுத்து தேன்மொழிக்குக் கொடுத்தான் அவன்.

அனைவரும் உள்ளே சென்று சாமி கும்பிட, திரும்பி திரும்பி தேன்மொழியை முறைத்தான்.

அவளோ பொறுப்பாகத் தம்பிக்கு திருநீறு வைத்து விட்டு, அவன் நாக்கை நீட்டவும் மீதி திருநீறை அவன் வாயில் இட்டு சிரித்தாள்.

அந்தச் செய்கை அவனுக்குத் தன் அக்காவை நினைவுப்படுத்தியது.

“அந்தப் பிள்ளைய முறைக்காத டா” என்று மகனின் தோளில் அடித்து, அவன் கவனத்தைச் சாமியிடம் திருப்பினார் திலகவதி.

“இந்தப் பிள்ளை நல்லா இருக்கணும்” என்று சாமியிடம் வேண்டுதலாகச் சொன்ன அம்மாவை, முறைப்புடன் பார்த்தான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top