இந்த வாழ்வென்பது – 2 (1)

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள், நாள்களைத் தொட்டு துரத்திய வேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஓடி மறைந்திருந்தது.

காலை ஒன்பது மணி என்றது கடிகாரம். பொற்கொடி சூடான குருணை கஞ்சி கிண்ணத்துடன் சமையல் அறையில் இருந்து வெளிவந்து, படுக்கையறையை நோக்கி நடந்தார்.

“தேனு, ராசாத்தி. எழுந்திரும்மா. இந்தா இந்தக் கஞ்சியைக் குடி” என்று மெல்ல மகளை எழுப்பினார். பட்டெனக் கண் விழித்து, சடக்கென்று எழுந்து அமர்ந்த தேன்மொழி முழுதாக உறக்கம் தெளியா விழிகளுடன் பெரியம்மாவை ஏறிட்டாள்.

அவள் எழுந்து அமர்ந்த வேகமும், பார்த்தப் பார்வையும் பொற்கொடிக்கு வருத்தத்தை அளித்தது. ஆனாலும், என்ன செய்ய? அவளிடம் நிரம்ப அன்பாகத்தான் இருக்கிறார். வெறுமனே பார்வைக்கோ பெயருக்கோ அல்ல. உள்ளார்ந்த அன்புடன்தான் அவளை நடத்துகிறார். ஆனாலும், சட்டென வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் சிறுமியை அப்படி எதிர்வினையாற்ற வைக்கிறது என்பது அவருக்குப் புரிந்ததால் இப்போதும் பெருமூச்சுடன் அவளை நெருங்கி அமர்ந்து புன்னகைத்தார்.

“தேனு, எழுந்து மூஞ்சி கழுவிட்டு வா ராசாத்தி. கொஞ்சமா கஞ்சி குடிப்ப. அப்போதான் காய்ச்சல் சரியா போவும்..” கையில் இருந்த கஞ்சிக் கிண்ணத்தைக் கீழே வைத்து விட்டு, தேன்மொழியின் முகவாயை பற்றி அவர் சொல்ல, சரியென்று தலையசைத்தாள்.

கடந்த நான்கு நாள்களாக அவளுக்கு நல்ல காய்ச்சல். இரண்டாம் நாளே டவுனுக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காண்பித்து மருந்து வாங்கி வந்து விட்டார்கள். சாதாரணக் காய்ச்சல்தான், மூன்று நாள்களில் சரியாகும், கவலைப்பட வேண்டியதில்லை என்றார் மருத்துவர். ஆனால், நான்காவது நாளாகக் காய்ச்சல் நீட்டிக்கப் பொற்கொடிக்கும், கந்தனுக்கும் கவலையாகிப் போனது.

தேன்மொழி அங்கு வந்ததில் இருந்து சரியாக உண்பதில்லை. முன்பு போல யாரிடமும் கலகலவென்று பேசுவதில்லை. எந்நேரமும் அமைதியாக அமர்ந்து விடுகிறாள். வீட்டை விட்டு வெளியில் செல்வதே இல்லை.

கந்தன், பொற்கொடி இருவரும் அவளிடம் பேசினாலும், ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்வதோடு முடிந்தது. பொற்கொடிதான் வற்புறுத்தி அவளை உணவு உண்ணச் செய்தார். இரவில் அவளுடனே படுத்தும் கொண்டார்.

அண்ணன்கள் இருவரும் பள்ளி முடிந்து வந்ததும் அவளுடன் அதிக நேரம் செலவிட்டனர். அவர்களிடமும் அதிகம் ஒட்டவில்லை அவள். அந்த ஊரில், அவர்கள் தெருவில், சொந்தத்தில் இருந்த அவள் வயது பிள்ளைகளை அழைத்து வந்தாலும், விளையாட்டிலும் நாட்டம் காட்டவில்லை அவள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல, அவர்கள் சொன்னதை அச்சுப் பிசகாமல் செய்து விட்டு மௌனமாய் அமர்ந்துக் கொண்டாள்.

அவர்கள் ஊரில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் பள்ளியில் அவளைச் சேர்த்து விட்டார்கள். பிள்ளையை அலைய வைக்க விரும்பாமல் கந்தன் மட்டும் சென்று, அவள் ஊரில் முன்பு படித்த பள்ளியில் இருந்து டிசி வாங்கி வந்து, இங்குள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று, அவள் படித்துக் கொண்டிருந்த வகுப்பில் சேர்த்து விட்டார்.

புதிய பள்ளி, புதுச் சூழல், புதிய நட்புகள் என நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தேன்மொழியின் முகத்தில் பெரிய மாற்றம் வரவில்லை. அதற்காக அழுது வடியவில்லை அவள். எதற்கும் அடம் பிடிக்கவுமில்லை. அமைதியாக, மிக மிக அமைதியாக இருந்தாள். அதுதான் பெரியவர்களைப் பயமுறுத்தியது.

அந்த அமைதியும், அழுத்தமும் அவளை இப்படிக் காய்ச்சலில் தள்ளியதோ என்று கூடப் பயந்தார் பொற்கொடி.

அவள் அங்கு வந்த இரண்டாம் நாளே கணவரிடம் இதைச் சொல்லி புலம்பி இருந்தார் அவர்.

“மாமா, இந்தத் தேனு குட்டி இப்படி இருக்கிறத பாத்தா எனக்குப் பயந்து வருது. நாள் முழுக்க ஒன்னும் பேசாம, மூனு நேரமும் குடுக்கறதை கொரிச்சிட்டு, ஒழுங்கா சாப்பிடாம, இவ இம்புட்டு அமைதியா இருக்கிறதை பார்த்தா.. எனக்குப் பதறுது மாமா..” என்றார் கண்ணீருடன்.

“என்ன கொடி பண்றது, பச்ச புள்ள தான? இத்தனை நாள் கூடவே இருந்த அம்மாப்பாவை தேடும் இல்ல அதுக்கும்? பாவம், நம்மளை மாதிரி மனசுல இருக்கறதை வெளில சொல்லத் தெரியாம, மனசுக்குள்ளே போட்டு அழுத்திக்கிட்டு கிடக்குது புள்ள. நாமதான் அவளைப் பார்த்துக்கணும்”

“நானும் என்னெல்லாமோ பண்ணிப் பார்த்துட்டேங்க. எதுக்கும் மசிய மாட்டேங்கறா. வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானே நமக்கும் தெரியும். அழுது, அடம் பிடிச்சா கூடச் சமாளிச்சுடலாம் போல. இப்படி அமுக்குணியா இருக்கப் புள்ளையை வச்சுட்டு என்னங்க பண்றது?” என்றார் வருத்தத்துடன்.

கந்தன் தீவிர சிந்தனையுடன் கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

“ஏன் மாமா, எனக்கொரு யோசனை வருது. அது சரி வருமான்னு நீங்க சொல்லுங்களேன்”

“என்ன யோசனை கொடி?”

“பேசாம இவ தம்பியையும் போய் நாம் கூட்டிட்டு வந்துடுவோமா? அன்பழகனையும் நாம வளர்க்கறோம்னு கேட்டா உங்க ஆத்தா சரின்னு சொல்லுமா?” என்று அவர் தயக்கத்துடன் கேட்க, கந்தன் மனைவியைக் கூர்ந்து கவனித்தார்.

“நமக்கு இப்போ என்ன குறையப் போகுது? கூட ஒரு புள்ளையைச் சேர்த்து வளர்த்துட்டு போவோம். நம்மாள முடியும் தானே?”

“முடியுந்தான். அந்த அன்பு பய அம்புட்டு அழுக அழுதத பார்த்ததுல இருந்து எனக்கும் மனசு கேட்கல கொடி. பொழுதன்னைக்கும் இதே யோசனையாகத்தான் இருக்கு. ஆனா, எங்க ஆத்தா அவனை விடாதுன்னு எனக்குத் தோனுது”

“ஏன் மாமா அப்படிச் சொல்றீங்க? முதல்ல அவங்ககிட்ட கேட்டு பாருங்க. நீங்க பேச்சையே ஆரம்பிக்காம, உங்க ஆத்தா விடாதுன்னு சொன்னா எப்படி?”

“எங்காத்தாவை பத்தி உனக்குத் தெரியாதா கொடி? அது அந்த அன்பு பய மேல கொள்ளப் பாசம் வச்சிருக்கு. எங்கப்பா தவறினதும் பிறந்தான் இல்ல? அது அவனை விட்டு இருக்காது.”

“அதுக்காக.. என்னங்க நீங்க.. இந்தத் தேனு குட்டியை தனியா பாக்கவே சங்கடமா இருக்குங்க. அவ கூடத் தம்பி இருந்தா, புள்ள சரியாகிடுவா பாருங்க”

“எங்காத்தா இங்க வராது கொடி. அது வராதப்போ அன்புவை மட்டும் எப்படி அனுப்பும்? அதுதான் அன்னைக்கே தெளிவா முடிவு பண்ணி சொல்லிடுச்சே” என்றார் சற்றே கோபமாக.

இப்படிப் பிள்ளைகளைத் தனித்தனியாகப் பிரித்து அழைத்து வந்ததில் அவருக்கு மிகுந்த மனவருத்தம். அதை அதிகரித்தது தேன்மொழியின் நடவடிக்கை. ஓவ்வொரு முறை அவளைப் பார்க்கும் போதும் ஏதோ குற்றம் செய்த குறுகுறுப்பு அவரிடம்.

தன் தம்பி இருந்திருந்தால் அவன் பிள்ளைகளை இப்படிப் பிரிய விட்டிருப்பானா? சேகரன் எத்தனை பாசக்காரன். தனக்கு ஒன்று நேர்ந்திருந்தால் தன் பிள்ளைகளை இப்படிப் பிரித்திருப்பானா? நிச்சயம் செய்திருக்க மாட்டான் என்று யோசித்து யோசித்து மனக் கலக்கத்தை அதிகரித்துக் கொண்டார்.

“ஏங்க, ஒரு தரம் அத்தைகிட்ட கேட்டுதான் பார்ப்போமே. மொதல்ல அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம். புள்ளைங்க ரெண்டும் சேர்ந்து வளர்ந்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்க தானே?” என்று பொற்கொடி சொல்ல, கந்தன் தலை தானாக ஆடியது.

சில நாள்களாக அவரின் மனத்தில் இருப்பதைத் தற்போது மனைவியும் சொல்ல, அது குறித்துப் பெரியநாச்சியிடம் பேசுவது என்று உடனடியாக முடிவே செய்து விட்டார் அவர்.

அவர்களின் முடிவை பொற்கொடியின் பெற்றோரிடம்தான் முதலில் தெரியப்படுத்தினார்கள்.

முத்தம்மா, கருப்பண்ணசாமி தம்பதி அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

அவர்களுக்குப் பூங்கொடி, பொற்கொடி என இரண்டு பெண் பிள்ளைகள். ஆண் வாரிசு ஆசை அவர்களுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும், அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றுவது போலப் பேரப் பிள்ளைகள் நால்வரும் ஆண் குழந்தைகளாகப் பிறக்க, இப்போது அவர்களுக்குப் பெண் குழந்தை ஆசை அதிகமாகிப் போனது.

அதனால்தான் தேன்மொழியை ஆசையுடன் இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டார்கள்.

அன்பழகன் வந்தாலும் அவனையும் சேர்த்து வளர்க்க, அவர்களுக்கு வலுவும், வசதியும் இருந்ததால் மகள், மருமகன் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை அவர்கள். மேலும், தேன்மொழி இங்கே மகிழ்ச்சியாக வளர வேண்டும். பிள்ளைகளைப் பிரிப்பது பாவம் எனப் பல காரணங்கள்.

கருப்பண்ணசாமிக்கு அவரின் அப்பா காலத்தில் ஆரம்பித்த கலர் கம்பெனிதான் வருமானத்திற்கான முதல் தொழில். கலர் என்றால் கிராமங்களில் கிடைக்கும் குளிர்பானம். சோடா, பன்னீர் சோடா, ஜிஞ்சர், லெமன், ஆரஞ்சு கலர் எனப் பலவித குளிர்பானங்கள் தயாரிக்கும் சிறிய தொழில் அவரது. காலங்கள் மாற, கணினி வளர்ச்சி வந்த பின்பு கொஞ்சம் அவரின் தொழிலில் தடுமாற்றம் இருந்ததுதான். ஆனால், கிராமங்களில் இப்போதும் அவரது பானங்களுக்கு மதிப்பிருக்கத்தான் செய்தது. காலத்துக்கு ஏற்றார் போல அவரும் ரோஸ் மில்க், ரஸ்னா, பாதாம் பால், மசாலா மோர் என முன்னேறி விட்டார். ஆகையால், மதிப்பான வருவாய் அதிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

அது போக அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார். அதிலிருந்தும் ஆண்டுக்குக் கணிசமான தொகை வருகிறது.

மூத்த மகள் பூங்கொடியை மணமுடித்துக் கொடுத்ததும், தனக்குப் பின் தொழிலை யார் பார்ப்பார்கள் என்ற வருத்தம் அவருக்கிருந்தது. அதனால் இளைய மகள் பொற்கொடிக்குக் கந்தனை பேசி முடிக்கையில் தயக்கத்துடன்தான் அவரிடம், தங்களுடன் வந்து விட முடியுமா என்று கேட்டார். முதலில் முடியவே முடியாது என்று மறுத்த கந்தன், சில வருட போக்குவரத்தில் மனம் மாறியிருந்தார்.

பொற்கொடி தலைப் பிரசவத்திற்குப் பிறந்த வீடு வந்தவர் திரும்பி புகுந்த வீடு செல்லவேயில்லை.

அந்த வகையில் பெரியநாச்சிக்கு பெரிய மனம்தான். பெரிதான பிரச்சினைகளை உருவாக்காமல் மகனது விருப்பத்திற்கு வழி விட்டு, அவர்கள் நன்றாக வாழ வாழ்த்தினார்.

கந்தன் அங்கு வந்த பிறகு, அவரின் ஆலோசனையின் பேரில் டவுனில் இடம் வாங்கிப் போட்டுக் கடை கட்டி வாடகைக்கு விட்டார்கள். அதில் ஒரு கடையிலேயே அரவை இயந்திரம் அமைத்தார் அவர்.

அரிசி, கோதுமை மாவு, மிளகாய், மஞ்சள், தனியா பொடிகள், மசாலா பொடிகள் என அனைத்தும் அங்கு அரைத்துக் கொடுப்பார்கள். முன்னர்க் கந்தன் மட்டுமே நின்று அதைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டார். இப்போது வேலைக்கு ஆள் இருக்கிறார்கள். ஆனாலும், தினமும் காலை கலர் கம்பெனியில் இருப்பார். மாலை அரவை ஆலைக்குச் சென்று, இரவு கடையைப் பூட்டி விட்டே வீடு திரும்புவார்.

அவர்களுக்கு நிலையான வருமானம், நிம்மதியான வசதியைப் பெற்றுத் தந்திருந்தது.

பொற்கொடியின் பெற்றோர் அன்பழகனை அழைத்து வரச் சம்மதிக்கவும் தாமதிக்காமல் மறுநாளே கந்தன் அம்மா வீடு சென்றார்.

அவரின் முடிவை சொன்னதும் பெரியநாச்சி முடியவே முடியாது என்று முடித்து விட்டார். அவருக்கு வாழ்வில் ஒரு பிடிப்புத் தேவையாக இருந்தது. அதனால் பேரனை அவருடன் அனுப்ப மறுத்து விட்டார். கந்தன் எத்தனையோ பேசிப் பார்த்தும், போன காரியம் காயாகத்தான் முடிந்தது. அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வீடு வந்து விட்டார்.

“நாளைக்கே நமக்கு என்ன நடக்கும்னு தெரியாது ராசா. நான் உனக்குக் கூடுதல் சுமைய குடுக்க விரும்பல. பேரன் என் கூடவே இருக்கட்டும்” என்ற பெரியநாச்சியிடம் கோபமாகப் பேசி விட்டு வீடு திரும்பினார்.

அந்த வகையில் வெறும் கையுடன் திரும்பாமல் தம்பியும், அவன் மனைவியும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து வந்து சட்டமிட்டு வீட்டில் வைத்தார்.

தேன்மொழி அடிக்கடி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகப் புகைப்படம் எடுக்கக் கூட்டிச் செல்கையில், “பெரிம்மா, எனக்குத் தம்பி ஃபோட்டோ வேணும்.” என்றாள் சிறு குரலில்.

“என்ன ராசாத்தி. என்ன கேட்ட தேனு?” என்று பொற்கொடி கேட்க, “நம்ம வீட்ல நானும் அன்பும் இருக்க ஃபோட்டோ இருக்கு. அவனுக்குக் காது குத்தினப்போ எடுத்தது. அது வேணும் பெரிம்மா” என்றாள் விளக்கமாக.

“சரி தேனு. நாம இந்த ஞாயித்துக் கிழம ஊருக்குப் போய்த் தம்பியை பார்த்திட்டு அப்படியே அந்த ஃபோட்டோவை எடுத்துட்டு வருவோம். என்னா?” என்று அவளின் கன்னம் வருடி பொற்கொடி சொல்ல, தேன்மொழி மெலிதாகப் புன்னகைத்து, மலர்ந்த விழிகளுடன் சரியென்றாள்.

அன்று வீடு திரும்பிய பிறகு மலர்ந்த முகத்துடன் நன்றாகத்தான் இருந்தாள். மறுநாள் அண்ணன்களுடன் புதுப் பள்ளிக்கு ஆவலாகச் சென்றது போலத்தான் தெரிந்தது. ஆனால், அங்கு என்ன நடந்ததோ அன்று மாலை வீடு திரும்பியதில் இருந்து மீண்டும் தனக்குள் ஒடுங்கினாள்.

பள்ளியில் என்ன நடந்ததென்று பொற்கொடி எத்தனை விசாரித்தும் எதுவும் சொல்லவில்லை அவள். அன்றிரவு காய்ச்சலில் படுத்ததுதான் இப்போது வரை சுருண்டு கிடக்கிறாள்.

error: Content is protected !!
Scroll to Top