சிசர் எங்கருக்கு? பாதிக் கட் பண்ணித் தாங்க போதும்” என்று கணவனிடம் நீட்டினாள்.
“அப்படியே மொத்த பூவையும் தலையில வைய்யி. எம் பேரன் பொண்டாட்டி கண்ணுக்கே தெரியாத மாரி நூறு பூ வச்சுட்டு போனா நல்லாவா இருக்கும்?” என்று சடைத்தவர், “பூவுக்குக் கணக்கு பாக்குற வீடுல்ல இது. கஞ்சப்பிசுநாரித்தனம் பண்ணாம பூவ..” என்றவரின் நக்கல் பேச்சு, “அப்பத்தா” என்று பேரன் முறைக்கவும் பாதியில் நின்று போனது.
“தேனு, மாடிக்கு துணி காயப் போட போனேன்.” என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்தார் திலகவதி.
“நாங்க இப்பத்தான் வந்தோம்த்தே. நான் காஃபி போடவா? நீங்க குடிச்சுட்டீங்களா?” என்று அவரிடம் கேட்டாள்.
“காலையில தோட்டத்துக்குக் குடுத்து விடும் போது கொஞ்சமா குடிச்சேன். இன்னொருக்கா குடிச்சா நல்லாதான் இருக்கும்” என்று அவர் சொல்லவும் எழுந்து சமையல் அறை சென்றாள். அங்கே பாலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் வைத்து விட்டு திரும்பி வந்தாள்.
அந்நேரம் அறைக்குள்ளிருந்து ரோஜா அழும் சத்தம் கேட்கவும் உள்ளே சென்றார் திலகவதி.
தேன்மொழி நேராக அப்பத்தாவிடம் சென்று, “இந்தா பாரு அம்மாச்சி. நீ பெரும பீத்துற பூந்தோட்டமே என் புருஷனுதுதான். எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்காக ஒரு கூடை பூவ கொண்டு வந்து எங்க வீட்ல கொட்டிட்டு போனாரு உன் பேரன். நீ சொன்னதுக்காக ஒன்னும் நான் பூ வைக்கல. அவருக்காக வைச்சேன். புரிஞ்சுதா?” என்று அவரைப் போலவே ராகம் இழுத்தாள்.
“அடியாத்தே” என்று அதிர்ந்து அவளைப் பார்த்து முழித்தவர், திரும்பி பேரனை பார்க்க, அவனோ அவர்கள் பேச்சே காதில் விழாதது போல அலைபேசியில் மூழ்கியிருந்தான்.
“யோவ் தர்மா, அம்மாச்சி கூப்பிடுது கேட்கலையா?”
“ஏ, யாத்தாடி. என் பேரன பேர் சொல்லிக் கூப்பிடுறாளே. நேத்து வந்த கழுத உனக்கு எம்புட்டு ஏத்தம் இருக்கணும்”
“இந்தா அம்மாச்சி. இப்போ எதுக்குக் கத்துற நீ?”
“என் பேரனை, ராசாவை பேர் சொல்லி கூப்பிடுவியா நீ?”
“யோவ் மாமா, உங்கப்பத்தாவ என்னான்னு கேளு” என்று கள்ளச் சிரிப்புடன் பின்னால் திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“ஆத்தாடி, அப்படியே மாத்திப் புட்டாளே”
“நீதான் அம்மாச்சி, மாத்தி மாத்தி பேசுற. நான் மாமான்னு ஆசையா கூப்பிட்டா. நீ தர்மான்னு கூப்பிட்டேன்னு நாலு ஊருக்கு கேட்கற மாதிரி கத்துற”
“உன்னைய பேரன் பேர சொல்லாதன்னு சொல்றேன்னு இல்ல” என்று அவர் அதட்ட, “ஏன் சொன்னா என்னவாம்?” என்று ஒன்றுமே தெரியாதது போல ஆச்சரியமாக வினவினாள்.
“அங்காரு. அங்கருக்க ஃபோட்டோ பாரு. அதேன் ராசாவோட அப்புச்சி” என்று கை நீட்டினார்.
“எனக்குத் தெரியுமே. இந்த வீட்டுக்கு வந்த மொத நாளே தாத்தாவ வணங்கினேனே” என்றவள், “ஓ, அப்படியா சங்கதி?” என்று அவரின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தாள்.
“எத்தா திலகா, நான் போய்க் கோழிக்கு இரை அள்ளி போட்டுட்டு வாரேன்” என்று சொன்னவர், அவரால் முடிந்த மட்டும் வேகமாக எழுந்து விசுக்விசுக்கென்று நடந்து பின்கட்டுக்குச் சென்றிருந்தார்.
“இனிமே தர்மான்னு உன் பேரன் பேர் சொல்ல மாட்டேன் அம்மாச்சியேய்ய்” என்று கத்தினாள் தேன்மொழி.
“அடங்கு டி” அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட, சிரித்தபடியே சொன்னான் தர்மதுரை.
அவனது அப்புச்சி பெயர் தருமன். அதையே பேரனுக்குத் தர்மதுரையாக வைத்திருந்தார்கள். அதனால்தான் வீட்டினர் அனைவரும் அவனைத் துரை என அழைப்பது. ஆனால், மனைவி வந்து அதை அப்படியே மாற்றி விட்டாள்.
“சரிங்க தர்மரே” கண்களைச் சுழற்றி யாரும் இல்லையென்று ஊர்திஜம் செய்தவள், அவன் மீசையைப் பிடித்திழுத்து, முறுக்கி விட்டு சமையல் அறைக்குள் ஓடி மறைந்தாள்.
அவள் காஃபி கலந்து எடுத்து வருகையில் குளித்து, உடை மாற்றி, ரோஜாவை கையில் தூக்கிக் கொண்டு வந்தார் திலகவதி.
“ரோஜா குட்டி படுக்கைய ஈரம் பண்ணிட்டு ஒரே அழுக, அதான் குளிக்க ஊத்திட்டேன்” என்றார்.
அவருக்குக் காஃபி கொடுத்தவள், ரோஜாவை ஆசையாகக் கையில் வாங்கிக் கொண்டாள்.
அலுவலக அழைப்புகளுக்குப் பதில் சொல்லியபடி அவன் காஃபி அருந்த, அவன் பக்கத்தில் அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“அம்மாச்சிக்கு காபி குடுக்கவா அத்த?”
“அவங்க காலைல ஒரு நேரம்தான் காப்பிக் குடிப்பாங்க தேனு” என்றவர், “இப்ப சத்து மாவு கஞ்சி குடிப்பாங்க. இரு செஞ்சு தரேன். அவங்களுக்குக் குடுத்திட்டு ரோஜா குட்டிக்கும் ஊட்டி விட்டுடலாம்” என்றார்.
“நானும் வர்றேன்த்த” என்றவள், குழந்தையைக் கணவனிடம் கொடுத்து விட்டு அத்தையுடன் சமையல் அறை சென்றாள்.
அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த நெருங்கிய உறவுகளெல்லாம் முன்தினம்தான் கிளம்பியிருந்தார்கள். அதனால் இப்போது வீடு இயல்புக்குத் திரும்பியிருந்தது.
லோகேஷ்வரன் மதுரை சென்றிருக்க மூத்த மகனை கணவனுடன் அனுப்பிய அன்புக்கரசி, ரோஜாவுடன் அம்மா வீட்டில் ஒத்தாசையாக இருந்தாள். இன்றும் ஆறு மணிக்கு அவள்தான் தோட்டத்து மேற்பார்வைக்கு அப்பாவுடன் சென்றிருந்தாள்.
“சத்து மாவு கஞ்சிக்குச் சீனியா கருப்பட்டியா அத்த? எது போடணும்?” அடுப்பில் இருந்த கஞ்சியைக் கட்டி தட்டாமல் கிண்டிக் கொண்டே சந்தேகம் கேட்டாள்.
“அத்தைக்கு உப்பு போட்டு குடுக்கணும், கஞ்சி ஆறினதும் மோர் விட்டு கலந்து குடுக்கணும். ரோஜா குட்டிக்கு கருப்பட்டி போடணும்.” என்றார். அவர் சொன்னபடியே செய்தாள் தேன்மொழி. இதிலெல்லாம் சொதப்ப மாட்டாள். பொதுவாக இந்தக் குழம்பு வகைகள், கறி வகைகள் என்றால்தான் திணறுவாள்.
“அம்மாச்சி” என்று அவருக்கான கஞ்சியைப் பதமாக ஆற்றி மோர் கலந்து அவரிடம் நீட்டினாள்.
“என்னது இது வாய்ல வைக்க விளங்கல. உப்பே போடலயா” வேண்டுமென்றே சீண்டினார்.
“ம்ம், வயசான காலத்துல உங்களுக்குக் கோபம் கம்மியா வரணும்னுதான் உப்பு போடல” என்று பதில் கொடுத்தாள் பேரன் பொண்டாட்டி.
“நீ கஞ்சி குடி ரோஜா குட்டி. அத்த செஞ்சது நல்லாருக்கா?” என்று அவள் கேட்க, இனிப்பின் சுவை பிடித்திருக்க, குழந்தையும் சப்பு கொட்டி ஆவென்று வாய்த் திறந்தது. சிரித்தபடியே குழந்தைக்கு ஊட்டி முடித்தாள்.
அவர்கள் காலை உணவை முடித்து வேலையைக் கவனிக்கத் தோட்டம் சென்றார்கள்.
தர்மதுரை, அவளையும் உடன் அழைத்துச் சென்றான். அவர்கள் போனதும் சுந்தரராஜன், அன்புக்கரசி வீடு திரும்பினார்கள். அன்றைய நாளின் பெரும் பொழுது அவர்களுக்கு வேலையிலேயே கழிந்திருந்தது.
மறுநாள் அவர்களை மறுவீடு அழைத்துச் செல்ல வருவதாகப் பொற்கொடி சொல்லியிருந்தார். அதன்படியே பொற்கொடி, கந்தன், சுதாகரன் மூவரும் காலையிலேயே அவள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.