“தோட்டத்துல ஒரு வாக் போகலாமா?”
“இப்பவா?” என்று தயக்கமாகக் கேட்டாலும் அவனோடு நடந்தாள். முன்காலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருக்க, சூரியனும் உக்கிரத்திற்கு வந்திருந்தான்.
கனகாம்பரம், மரிக்கொழுந்து, மருகு ஆகியவைகளை எடைப் போட்டு மூட்டைகளில் அடைத்துக் கொண்டிருந்தார்கள்.
“அது மார்க்கெட் போகுது”
“ம்ம்”
“இப்படி வா” தோட்டத்தில் உலா போகலாம் என்றவன், அந்தக் கட்டிடத்தைச் சுற்றிக் கொண்டு பின்பக்கமாக அழைத்துச் சென்றான்.
“காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா? கண்கள் இல்லாமே ஒரு காட்சி தோன்றுமா?” என்ற பாடல் காற்றில் கலந்திருந்தது.
அவன் பார்வை ரசனையாக அவள் மேல் பதிய, “பாட்டு போட்டது நீங்க தானே?” என்று கேட்டாள்.
“ச்சே ச்சே இல்லம்மான்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். என் கலெக்சன்தான். ஆனா நீ வர்றேன்னு எதுவும் தனியா செலக்ட் பண்ணி பாட்டு போடல நான். எப்பவும் போலப் பாட்டு ஓடிட்டு இருக்கு” என்றவனை நம்பாத பார்வை பார்த்து திரும்பியவளின் கண் முன்னே அழகான அடக்கமான வீடொன்று நின்றிருந்தது.
“இதுவும் ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி கட்டினதுதான். சில நேரம் அப்பாவுக்கோ எனக்கோ தோட்டத்துல நிறைய வேலையிருந்தா நைட் இங்கேயே தங்கிடுவோம். எல்லாத்துக்கும் வீட்டுக்கு வந்துட்டு இருக்க முடியாது இல்ல? அதுக்காகக் கட்டினது. உள்ள வா” என்று கதவை திறந்து விட்டான். அதுவொரு ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீடு. மிகக் கச்சிதமான அளவில் நின்றது.
அவள் காலை உள்ளே எடுத்து வைக்கும் போதே, “மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும். மங்கை கொஞ்சம் சாய்ந்தால் என் மார்பில் தாங்க வேண்டும்” என்ற வரிகள் காற்றில் கலந்து அவர்களின் காதில் விழ, அந்த வரிகளை மிக இயல்பாக முணுமுணுத்தவன், அவளின் முறைப்பில்தான் என்ன பாடினோம் என்பதையே உணர்ந்தான்.
“ஹேய் சிலுப்பி, அது பாட்டுடி. அதுக்குமா என்னைய முறைக்கிற?” என்றவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
பாடலின் அடுத்தடுத்த வரிகள் ஏடாகூடமாக வர சிரிப்புடன் முணுமுணுத்தான்.
“உனக்குப் பூ நல்லா கட்டத் தெரியும் போலயே?” அவளின் நீள பின்னலை பார்வையால் வருடியபடி கேட்டான்.
“ம்ம், தெரியும்”
“மாமன் குடுத்த பூவை ஆசையா கட்டி வச்சுகிட்ட, சரி. மாமன கட்டிக்கச் சம்மதமான்னு சொல்லவே இல்லையே?” என்று அவன் கேட்கவும், கிளுக்கி சிரித்து விட்டாள்.
“அன்னைக்கு எங்கிட்ட வேற ஏதோ சொன்னீங்களே?”
“ம்ம், உனக்கு என்னைய பிடிக்கும்னு. ம்ஹூம், பிடிச்சுருக்குன்னு தெரியும். ஆனாலும் நீ சொல்லி அதைக் கேட்டா ஒரு கிக் தானே?” என்று கண் சிமிட்டி, அவளை நெருங்கி நின்றான்.
“என்னனு சொல்லணும்?” அவனிடம் இருந்து கொஞ்சம் நகர்ந்து நின்று கேட்டாள். அவள் கொஞ்சமாக உண்டாக்கிய இடைவெளியை கணத்தில் தாண்டி, இன்னும் நெருக்கமாக அவளை நெருங்கி, “நீ எதுவும் சொல்ல வேணாம். கட்டிக்கிட்டா போதும்” என்று கிசுகிசுத்தான்.
அவள் சூடியிருந்த மல்லிகையின் மணத்தை மூச்சுக் காற்றில் நுகரும் நெருக்கத்தில் நின்றிருந்தான்.
“தர்மா, தள்ளி நில்லுங்க” அந்தத் தர்மா என்ற அழைப்பிலேயே விழுந்து விட்டான் தலைவன்.
“என்னைய என்ன சொல்லி கூப்பிட்ட? இன்னொருக்கா கூப்பிடு”
“தர்..மா., தள்ளி போங்க.”
அப்போதுதான் வேண்டுமென்றே இடைவெளியின்றி நெருங்கி நின்றான்.
“கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கொரு கிஸ் கூடக் குடுக்கலன்னா என் கட்ட வேகாது” என்று உன்மத்தத்துடன் உளறினான். அவள் பதறி பட்டெனக் கை உயர்த்தி அவன் வாயில் அடித்தாள். அடித்த கரத்தை அணைத்துப் பிடித்து, உதட்டை மென்மையாக அந்த உள்ளங்கையில் ஒற்றியெடுத்தான்.
உதட்டில் அழுத்திய கரத்தை தன் கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டு, இடையோடு அணைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“தர்மா” அவளின் மறுகரம் அவன் மார்பில் பதிய, தன் மறுக்கரத்தால் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான். அவள் உச்சரித்த அவன் பெயர், அவன் உதட்டில் உரசியது.
கணத்தில் அவளின் இதழ்கள் அவன் வசமாகியிருந்தது. இடையில் இருந்த அவன் கரம் அழுத்தம் கொடுத்து அணைத்தது. பூவை மெல்ல மலர்ந்து, மொத்தமாய் அவன் வசமாகி மயங்கி நின்றாள்.
இருவரும் ஒரே மூச்சுக் காற்றைச் சுவாசிக்க, அவனை நிறைத்தது மல்லிகையை மீறிய அவள் வாசம். அவளுக்கு இதழ் முத்தத்தின் வழியே தன் இதயத்தைக் கடத்தினான்.
பனியில் நனைந்த மலராக உடல் சிலிர்த்தாள் பூவை. உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்குப் பரவிய சில்லிப்பில், சிலிர்ப்பில், “தர்மா” என்று காதலாய் அவன் இதழ்களுக்குள் உச்சரித்தாள். மீண்டும் மீண்டும் அவள் இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டு, கண் மூடி இறுக அணைத்துக் கொண்டான்.
அவன் அணைப்பில் ஒன்றினாள் தேன்மொழி. மனத்துக்கு மிக நெருக்கமான உறவை சேர்ந்த ஆசுவாசம் அவள் நெஞ்சத்தை நிறைத்தது.
அன்றைக்கு அவன்தான் அவளை வீட்டில் கொண்டு போய் விட்டான், அவர்களின் திருமணம் வரை அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது சமயம் வாய்க்கையில் இயல்பாக இரண்டு நிமிடங்களேனும் சந்தித்தான். அவனது வேலைக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலைபேசியில் பேசினான்.
இரவில் நிலவை துணையாக வைத்து இருவரும் உள்ளம் பகிர்ந்தார்கள். திருமண நாள் நெருங்க மனத்தளவில் அதீத நெருக்கமாகி இருந்தனர். அவர்கள் இன்னும் நெருக்கமான பந்தத்தில் இணையும் நாளும் வந்தது.
தேன்மொழி குடும்பத்தில் அது முதல் திருமணம். தர்மதுரை குடும்பத்தினருக்கு ஒரே மகனின் திருமணம் என்பதால் இரண்டு குடும்பங்களும் ஊரைக் கூட்டி விமரிசையாக அவர்களின் திருமணத்தை நடத்தினார்கள்.
மிளகாய் பழ சிவப்பு சேலையின் உடலெங்கும் பூவும், கொடியுமாக அவளுக்காகவே பிரத்யேகமாக நெய்யப்பட்ட பொன் சரிகையோடிய காஞ்சிப் பட்டில், முழு அலங்காரத்துடன் அழகே உருவாக மணமேடையில் அமர்ந்திருந்தாள் தேன்மொழி. பட்டு வேட்டி சட்டையில் அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த தர்மதுரை மணமகனுக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தான்.
பெற்றோர், உற்றார், சுற்றம், நட்பு நிறைந்திருந்த சபையில் வைத்து அக்னி சாட்சியாக மந்திரங்கள் சொல்லி அவர்கள் அத்தனை பேரின் ஆசிர்வாதத்தோடு தேன்மொழியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் தர்மதுரை.
திருமண வரவேற்பு, அதன் பின்னான சடங்கு, சம்பிரதாயங்கள் என அனைத்தும் முடித்துத் தர்மதுரையின் வாழ்க்கைக்குள் மட்டுமல்ல வீட்டுக்குள்ளும் அடியெடுத்து வைத்தாள் தேன்மொழி.
திருமணம் முடிந்து சம்பிரதாயப்படி முதலில் அவள் வீட்டிற்குதான் சென்றார்கள். கடந்த இரண்டு நாள்களாக அண்ணன்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவர்களும் இப்போதும் அவளுடன் வீடு வந்திருந்தார்கள்.
அன்பழகன் அவளை ஐந்து வயதில் பிரிந்தது போலவே இன்றும் கண் கலங்கி நின்றான். ஆனால் அதற்கு நேர்மாறாக அவன் உதட்டில் உறைந்திருந்தது புன்னகை.
முதன் முறையாக ஏழு வயது தேன்மொழி இந்த வீட்டிற்கு வரும் போது தங்களின் மகள் பொற்கொடி கணவனோடு புகுந்த வீடு சென்றிருந்தால், தேன்மொழியும், அன்பழகனும் பிரிந்திருக்க நேர்ந்திருக்காதே என்ற குற்றவுணர்ச்சி முத்தம்மாவிற்கு இருந்தது. அது இன்று வரையிலும் அவர் மனத்தின் ஓரம் அரித்துக் கொண்டேயிருந்தது.
தேன்மொழியைத் தன் சொந்தப் பேத்தியாகத்தான் வளர்த்தார்.
இன்றைக்கு அவளுக்கு ஊரை அழைத்துப் பெரியநாச்சி, சேகரன் மீனாட்சி தம்பதி பெருமையும், அமைதியும் கொள்ளும் வகையில் நிறைவாக அவளின் திருமணத்தை நடத்தியதில் அவருக்கு மிகுந்த நிம்மதி.
தேன்மொழியின் அம்மா, அப்பத்தாவின் நகைகள் கிட்டத்தட்ட நாப்பது பவுன் நெருக்கி அவர்களிடம் இருந்தது. அதை மெருகேற்றி அப்படியே அவளுக்குக் கொடுத்து விட்டார்கள்.
பொற்கொடி கந்தன் தம்பதி அவளை என்றுமே வேறாகப் பார்த்ததில்லை. அவளுக்கென்று மொத்தமாக நூறு பவுன் நகை பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதில் முத்தம்மா கொடுத்த அவரின் பத்து பவுன் நகையும் அடக்கம்.
“என்னம்மா, உன் மகதான் தேனுவ வளர்த்த கடமைக்கு இப்படி ஓவரா ஆடுறான்னு பார்த்தா, நீயும் பேத்திக்கு உன் நகைய அப்படியே கணக்கு வழக்கில்லாம மொத்தமா தூக்கிக் குடுக்கற? அதுல எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் பங்கிருக்குமா” என்று அவரின் மூத்த மகள் பூங்கொடி, அவரிடம் சண்டைக்கு வந்து விட்டார்.
“நீ பரம்பர சொத்துலதான் உங்களுக்கெல்லாம் பங்கு கேட்க முடியும். உனக்கும் கல்யாணத்துக்கு நக போட்டிருக்கு. உன் பிள்ளைங்களுக்கும் குறை வைக்காம இதுவரைக்கும் எங்களால முடிஞ்சதை செஞ்சாச்சு. இது உங்கப்பா எனக்கு ஆசையா வாங்கிப் போட்ட நகைங்க. இதுல யாரும் பங்கு கேட்க முடியாது. என் விருப்பப்படி என்னமும் செய்வேன் நான். என் நகையெல்லாம் நானா பார்த்து உங்களுக்குக் குடுத்தாதான் உண்டு. இதுலலாம் பங்கு கேட்டு யாரும் வரக் கூடாது” என்று கண்டிப்பாக, தீர்மானமாகச் சொல்லி விட்டார்.
பூங்கொடிக்கு அம்மாவின் பேச்சு பிடிக்கவில்லை. ஆனாலும், கல்யாணத்தில் நல்லபடியாகக் குடும்பமாக வந்து கலந்து கொண்டார்.
மாமா மணிவண்ணன் தாய் மாமன் முறைக்கு எல்லாவற்றுக்கும் முன் நின்றதோடு மட்டுமல்லாமல், மருமகளுக்கு நிறைவாகச் சீரும் செய்திருந்தார்.
தேன்மொழியைப் பொற்கொடி பெற்றெடுக்கவில்லை. அதுமட்டும்தான் குறை. மற்றபடி அவளை இத்தனை ஆண்டுகளும் வளர்த்தது அவர் தானே. மகளின் திருமணத்தைக் கண் கலங்க மனம் நிறையக் கண்டு களித்தவர், இப்போது அவளின் பிரிவில் குளம் கட்டிய கண்களுடன் நின்றிருந்தார். இத்தனைக்கும் ஓரே ஊரில்தான் வசிக்கப் போகிறாள். ஆனாலும், இனிமேல் மகள் வேறு வீட்டுப் பெண் தானே.
“தேனு” என்றார் அவளின் தலைக்கோதி.
“ம்மா” என்ற அவளின் அழைப்பில், அவளை மணக் கோலத்தில் கட்டிக் கொண்டு அழுதே விட்டார்.
“ம்மா, அழாதீங்க” என்ற தேன்மொழியின் குரலும் விசும்பி உடைந்தது.
அவள் வாயிலிருந்து முதன் முறையாக அம்மா என்று அழைப்பு வருகிறது. பூரித்துப் போனார் பொற்கொடி.
“எப்போ சொல்ற கழுத, என் ராசாத்தி” என்று அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
அம்மாச்சி, தாத்தா அவர்களை ஆசீர்வதிக்க, அன்பழகன் கண் கலங்க மாமனை கட்டிக் கொண்டான்.
“எங்க தேனுனு கத்தி நான் அக்காகிட்ட போறேன். என்னைய விடேன்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன் டா அன்பே. நல்லவேள உன் மாமன கட்டிப் பிடிச்சதோட விட்டியே, தப்பிச்சார் மச்சான்” என்று ஜெயபாலன் அவனது இயல்பு மாறாமல் அன்பழகனை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் விரைப்பாகச் சுற்றும் சுதாகரன் கூட மச்சான் கையைப் பிடித்து, “பார்த்துக்கோங்க” என்றான்.
“ஏ தேனு, நம்ம மாமா மக இந்தப் பத்மா இருக்கால்ல? அவ என்னா திடீர்னு அழகாகிட்டா?” என்று தேன்மொழியிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தான் ஜெயபாலன்.
“நீ என்னண்ணா சொல்ற?” அவள் கண்ணைச் சுருக்கி சந்தேகமாகக் கேட்க, “இல்ல, முன்னாடி இம்புட்டு அழகா இருக்க மாட்டாளே. இப்போ பார்க்க.. இல்ல சும்மா சொன்னேன்” என்று பத்மாவை ஓரக் கண்ணால் பார்த்து, திரும்பி தங்கையை மலுப்பலாகப் பார்த்து சொல்லி மெல்ல அங்கிருந்து நழுவினான்.
மணமக்களுக்குக் கொஞ்சம் தனிமை கிடைத்ததும், “என்னடி சிலுப்பி, என்னா இங்க ஒரே பாச மலர் சீன் ஓடுது?” என்று மனைவியிடம் கேட்டு பதிலாக அவளின் முறைப்பை பெற்றான் தர்மதுரை.
“இப்போ நல்லா முறைச்சு முறைச்சு பாரு. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். ஆனா, நைட்டு..” என்று ஆரம்பித்தவன், அவளின் பார்வையில் அதைச் சொல்லி முடிக்காமல் சத்தமாகச் சிரித்தான்.
அவர்களைச் சுற்றி வீட்டினர் நடமாடி கொண்டிருக்க அவன் பேச்சுக்கு சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல், வெட்கத்தையும் சேர்த்து விழுங்கி, முழித்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்களாலேயே கட்டிக் கொண்டான் கணவன்.
அன்றே அவன் கைப் பிடித்து அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள்.
தர்மதுரை, தேன்மொழியைப் பல வருடங்கள் கழித்துப் பார்த்த முதல் கணம் அவன் உணர்ந்த பெயர் தெரியாத உணர்வை, அதன் பிறகு மெல்ல மெல்ல மலர் போல மொட்டு விட்டு வளர்ந்த அவள் மேலான ஈர்ப்பை, ரசிப்பை, அன்பை, காதலை ஒட்டு மொத்தமாக உரிமையுடன் அவளிடம் தெரியப்படுத்தினான்.
தன்னைச் சுற்றியிருந்த அனைவரையும், குறிப்பாகக் கணவனைப் பார்க்கும் போதெல்லாம் தேன்மொழிக்கு இந்த வாழ்வென்பது வரமாகத் தோன்றியது.
ஆயிற்று, அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று நாள்கள்.
நாலாம் நாள் அவனது வழக்கமாக அதிகாலை மூன்று மணிக்கே எழுந்திருந்தான் தர்மதுரை. அது அவளுக்கு நள்ளிரவு. ஆக, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
இன்ப அயர்ச்சி இன்னமும் விலகாமல் இருந்தவனுக்கும் படுக்கையை விட்டு நகர மனம் வரவில்லை.
அவன் அறையில் எப்போதுமே மலர்களின் வாசமிருக்கும். ஆனால், இப்போது நிறைந்திருந்தது அவள் மணம். உதடுகள் லேசாகப் பிரிந்திருக்கக் கன்னா பின்னாவென்று கலைந்திருந்தவளை மேலும் கலைத்துப் பார்த்து களைத்துப் போகும் ஆவல் அவனுள் பேரலையாக எழ, யோசிக்காமல் குனிந்து மென்மையாய் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ம்ம், தர்மா. தள்ளி போங்க” என்று தூக்கத்தில் சிணுங்கியவள், அதற்கு மாறாக அவன் கழுத்தில் பூ மாலையாகக் கரம் கோர்த்து அணைத்து இழுத்தாள்.
“அடியே சிலுப்பி, தள்ளி போகச் சொல்லிட்டு இப்படி இழுத்தா என்னா அர்த்தம்?” கரகரத்த அடர்ந்த குரலில் அவஸ்தையுடன் கேட்டான்.
“ம்ம்” என்று அவனையும் இழுத்துக் கொண்டு புரண்டாள் தலைவி. விரும்பியே சுகமாய் இழுபட்டான் தலைவன்.