இந்த வாழ்வென்பது – 18 (1)

தேன்மொழியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பூந்தோட்டங்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து விரிந்திருந்தது.

அவர்களின் கைத் தொடும் தூரத்தில் இருந்த மல்லிகை தோட்டத்தில் முந்தைய இரவு பறிக்கத் தவறிய மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

மெல்ல கண்களைச் சுழற்றி பக்கவாட்டில் பார்வையைப் பதித்தாள்.

“இப்போதான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு” என்று மந்தகாசப் புன்னகையுடன் அவளின் நீள கூந்தலில் நிறைந்திருந்த பூவையும், அது அவளுக்குத் தந்திருந்த ப்ரத்யேக அழகையும் ரசித்துச் சொன்னான் தர்மதுரை.

“இருக்கும், இருக்கும்” என்றாள் உதடு சுழித்து.

அவள் முதுகுக்குப் பின்னால் கரம் கொடுத்து அவளைத் தொடாமல் உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்தக் கட்டிடத்தின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. ஒரு கல்யாண மண்டபம் போல நீண்டிருந்தது கூடம். அதில் தனித்தனி பிரிவுகள், தடுப்புகள் இல்லாமல் இருந்தது. அக்கட்டிடம் முழுவதும் குளிர் சாதனம் செய்யப்பட்டிருந்தது, உள்ளே நுழைந்ததும் சில்லென்று உணர முடிந்தது. குப்பென்று நாசியை நிறைத்தது கலவையான பூக்களின் நறுமணம். அதில் பிரதானமாக இருந்தது மல்லி, முல்லையின் மணமே.

அங்கே பணியாளர் பொழுது போக்கிற்காக இடைவிடாமல் இன்னிசை ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு பக்கத்தில் பெண்கள் வரிசையாக அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள். மறுபக்கத்தில் ஆண்கள் நின்றும், உயரமான மர இருக்கைகளில் அமர்ந்தும் மாலை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

சிறியதும், பெரியதுமான பூஜைக்கு ஏற்ற மாலைகள் தொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரின் தலை முடியும் உறையுள் அடக்கப்பட்டிருந்தது.

சிலர் காலிலும் கூட உறை அணிந்திருந்தார்கள். பூவில் முடியோ தூசோ விழுந்து விடக் கூடாது என்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என்று அவளுக்குப் புரிந்தது.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் தானும் ஒன்றை அணிந்து கொண்டு, ஜெயபாலன் கையிலும் ஒன்றைக் கொடுத்தான். தேன்மொழி மட்டுமே விதிவிலக்கு. அவளின் இறுக்கமான பின்னலை ஓர் பார்வை பார்த்து விட்டு அமைதியாக உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த பலருக்கும் அவர்களைத் தெரியும். ஆனாலும், பொதுவாக அவர்களை அறிமுகம் செய்தான் தர்மதுரை.

சற்று நேரம் கை வேலையை விட்டுவிட்டு அவளை ஆர்வமாகப் பார்த்தார்கள். அவர்களுக்குள் கிசுகிசுத்து சிரித்தார்கள்.‌ வயதில் மூத்தவர்கள் அவனைக் கேலி செய்யவும் தவறவில்லை.

அதைச் சிரிப்புடன் கடந்து, அவர்களை ஓவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்றான்.

பூ பறித்து வந்தது முதல் அதைத் தரம் பிரித்துத் தண்ணிரில் நனைத்தெடுத்து, பூ தொடுக்க அனுப்புவது, தொடுத்த பூவை சரம் சரமாகச் சரியான அளவில் கத்தரித்து அட்டைப் பெட்டிகளில் பொதிந்து வைப்பது பின் அவற்றை விமானத்தில் பாதுகாப்பாக அனுப்பும் வகையில் அடைத்து வைப்பது வரை அனைத்தையும் விளக்கிக் காண்பித்தான்.

அங்கிருந்து மாலை கட்டும் பகுதிக்குச் சென்றான்.

ஒருவர் பாதி மாலையில் ஏதோ வேலையாகச் சென்றிருக்க, அதை மிக லாகவமாகக் கட்டியபடியே அந்தப் பகுதி ஆட்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

அவன் கை நகரும் வேகத்தை, அவன் பூக்களை எடுக்கும் நளினத்தை, அதை மாலையாக்கும் நேர்த்தியை பேச்சின்றி ரசித்துப் பார்த்திருந்தாள். அவளின் ரசனையை ரசித்தது அவன் கண்கள்.

பத்து நிமிடத்தில் அந்த மாலையைத் தொடுத்து முடித்தே அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்ததாக அவனது சிறிய அலுவலகப் பகுதிக்குச் சென்றார்கள். அங்கேயும் பில்லிங், கஸ்டம்ஸ் பணிகள் இன்னும் இதர அலுவலகப் பணிகளை மேற்கொள்ள நான்கு பேர் இருந்தார்கள். அவனுக்கென்று சிறியதாகத் தனியறை தனியாக இருந்தது.

“உக்காருங்க மச்சான். டீ சொல்லியிருக்கேன் இப்போ வந்திடும்” என்று இருவருக்கும் இருக்கையை இழுத்துப் போட்டான்.

தேன்மொழி அண்ணன் பக்கத்தில் அமரப் போக, அவளைப் பார்த்துக் கண்ணை உருட்டினான்.

அவனது இருக்கையைக் கண் காட்டினான். அது புரியாமல் அவள் முழிக்க, “மாப்ள உன்னய ஓனர் சீட்ல உக்கார சொல்றார் தேனு” என்றான் ஜெயபாலன் அறையைப் பார்வையால் அலசியபடி, அவர்களைப் பார்க்காமல்.

பட்டென்று அண்ணன் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் தேன்மொழி. தர்மதுரை மகா பிரபுவின் முறைப்பை கண்ட பிறகும் சட்டை செய்யவில்லை அவள்.

“துபாய்க்கு மட்டுமா பூ எக்ஸ்போர்ட் பண்றீங்க மாப்ள?” என்று ஜெயபாலன் கேட்க, “ஆரம்பத்துல துபாய்க்கு மட்டும்தான் அனுப்புனோம். துபாய், சார்ஜா, அபுதாபின்னு அங்கயே இருக்க ஏழு எமிரேட்ஸ்க்கும் சேர்த்து அனுப்பிட்டு இருந்தோம். அப்புறம் அவங்களே ஒமான், மஸ்கட்னு அவங்களுக்குப் பக்கத்து நாடுகளுக்கும் அனுப்பச் சொல்லி கேட்டாங்க. அதுனால அங்கயும் அனுப்ப ஆரம்பிச்சோம். இப்ப அதைத் தாண்டி யூஎஸ், லண்டன்னு போய்ட்டு இருக்கு” என்றான்.

ஜெயபாலன் மெச்சுதலாகத் தலையசைத்துப் புன்னகைத்தான். மேலும் தொழில் குறித்தே பேசினார்கள். தேன்மொழியும் அவர்களின் பேச்சில் இணைந்துக் கொண்டாள்.

அந்நேரம் ஒரு பணியாளர் வந்து அவர்களுக்குத் தேநீர் கொடுத்துச் சென்றார்.

“டீ எடுத்துக்கோங்க மச்சான்” என்று ஜெயபாலனுக்கு எடுத்து நீட்டினான். அதை வாங்கியவன் அலைபேசியைப் பார்த்து, “அண்ணே கால் பண்ணுது. பேசிட்டு வர்றேன்” என்று வெளியே சென்றான்.

“அப்புறம், சொல்லுங்க” என்று நமுட்டு சிரிப்புடன் தர்மதுரை ஆரம்பிக்க, முறைத்தாள் அவள்.

அவள் எதிர்பாரா நேரம் அவளைக் கைப் பிடித்து எழுப்பி ஒரு சுழற்று சுழற்றி அவனது இருக்கையில் அமர செய்தான்.

“என்ன பண்றீங்க?” என்று அவள் தடுமாறி நிமிர்ந்து அவனை முறைக்க, அதைத் தன் அலைபேசியில் படம் பிடித்திருந்தான். மேலும் அவளைச் சங்கடப்படுத்தாமல் இருவருக்குமான தேநீரை கையில் எடுத்தபடி அறை வாயிலை நோக்கி நடந்தான்.

“வா, நீ பார்க்க வேண்டிய எடம் இன்னும் நிறைய இருக்கு” என்று அவளை வெளியே கூட்டிச் சென்றான்.

அவன் நீட்டிய தேநீர் கோப்பையை வாங்கி அருந்தியபடி அவனோடு நடந்தாள்.

அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்து பக்கத்துக் கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான். அது முன்னதை விட அளவில் சிறியதாக இருந்தது.

அங்கும் பெண்கள் அமர்ந்து முருங்கை கீரையை ஆய்ந்து கொண்டிருக்க, அதை ஆச்சரியமாகப் பார்த்தாள் தேன்மொழி.

“முருங்கைக் கீரை மறுநாளே வாடிடுமே? இதெப்படி பாரின் அனுப்பறீங்க?”

“துபாய் ஃப்ளைட் அஞ்சு மணி நேரம் தானே? அதுனால கொஞ்சம் உதிர்ந்தாலும் ஓரளவு அவங்களுக்கு ஃப்ரெஷ்ஷா போய்ச் சேர்ந்திடும்.” என்றவன், “முருங்கை கீரை பொடிக்குதான் அதிக டிமாண்ட். அதுனால நிழல்ல காய வச்சு ஒரு கம்பெனிக்கு குடுக்கறோம். அவங்க பொடி பண்ணி சேல் பண்ணிக்கறாங்க” என்று விளக்கினான்.

“ஓ, ஓகே. இதெல்லாம் எப்போ ஸ்டார்ட் பண்ணீங்க?”

“நான் காலேஜ் முடிச்சு வந்ததும், ஒரு நாலு வருஷம் இருக்கும்” என்றான்.

அங்கே முருங்கைக் கீரை மட்டுமல்லாது, பூ, காய், முற்றிய விதை என அனைத்தையும் தனித்தனி பகுதிகளில் உலர வைத்திருந்தார்கள். மற்றொரு பக்கம் செம்பருத்தி, துளசி, ஆவாரை, சங்குப்பூ என மருத்துவக் குணம் வாய்ந்த பூக்களும் உலர வைக்கப்பட்டிருந்தது.

அவனது தொழில், “பூந்தோட்டம்” என்ற அளவில் மட்டுமே அவளுக்குத் தெரியும். இங்கு வந்து நேரில் கண்ட பிறகு பிரமிப்புடன் அவனைப் பார்த்தாள்.

இருவரும் பேசிக் கொண்டே வெளியில் வந்தார்கள்.

ஜெயபாலன் பூக்கள் பகுதியில் நின்று அலைபேசி கொண்டிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top