இந்த வாழ்வென்பது – 17 (2)

அன்றைக்கு அம்மாச்சி, தாத்தா தொழில் முறை நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைக்கத் திண்டுக்கல் சென்றிருந்தார்கள்.

அன்பழகன் மாமா வீட்டிற்கு வீரனூர் சென்றிருந்தான். சுதாகரன் கடைக் கட்டிடம் எந்த அளவிற்கு வந்திருக்கிறது எனக் காணச் சென்றிருந்தான்.

பெரியம்மாவும், ஜெயபாலனும் மட்டுமே வீட்டில் இருந்தனர். தேன்மொழியும் வீட்டில் மேல் வேலைகள் எல்லாம் செய்து முடித்திருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து மதிய சமையலை ஆரம்பித்தாள் போதும். அதனால், பின் கட்டுக்குச் சென்றாள். சிறிது நேரம் ஆட்டுக் குட்டியை கொஞ்சி, கன்று குட்டியிடம் பேச்சுக் கொடுத்தால் மனம் இயல்பாகி விடும் என்று தோன்றவும் அங்கே சென்றாள்.

முன்தினம் பாத்திரக் கடை, வீட்டு உபயோக பொருட்கள் கடைக்குச் சென்று வந்த அலுப்பே ஜெயபாலனுக்கு இன்னமும் தீரவில்லை. காலை உணவை முடித்த பின்பு கூடத்துச் சோஃபாவில் சரிந்து உறங்கியிருந்தவனை எழுப்பி, திண்டுக்கல்லில் இருக்கும் அவர்கள் கடை அரவை இயந்திரத்தில் ஏதோ பழுது, அதைச் சரி பார்க்க ஆள் வருகிறார்கள் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் பொற்கொடி.

“செவ்வந்தி.. ஏய்.. முட்டாத..” மூன்று மாத கன்று குட்டியான செவ்வந்தி, அவளை முகர்ந்து பார்த்து உரசி நின்றது. வாழைப் பழத்தை தோல் நீக்கி அதற்குக் கொடுத்தவள், “உனக்குத் தோலும் பிடிக்கும்ல” எனக் கேட்டு அதையும் நீட்டினாள். அவசரமாக வாங்கி மெதுவாக அசைப் போட்டு தின்று அவளைச் செல்லமாக முட்டியது கன்று.

“சேட்டையைப் பாத்தியா” என்று அதன் தலையைத் தடவினாள்.

“தேனு, எங்கருக்க?”

“இதோ வந்துட்டேன் பெரிம்மா”

“பொன்னாத்தா வீடு வரைக்கும் போய்ட்டு வர்றியா தேனு? அம்மா கிரைண்டர் போட்டுட்டேன். இட்லிக்கு மாவு ஓடிட்டு இருக்கு. நான் பாதில விட்டுட்டு போக முடியாதுன்னு உன்னைய சொல்றேன்”

“என்னனு சொல்லுங்க பெரிம்மா”

“வேற ஒன்னும் இல்ல. ஒரு வருஷத்துக்கு முன்னாடி பொன்னாத்தா கை மாத்தா காசு வாங்குச்சு. அத தர்றேன் வான்னு இப்போ போன் பண்ணி சொல்லுது. நீ போய் வாங்கிட்டு வந்துடுறியா?” என்று கேட்டார்.

“சரி பெரிம்மா” என்றவள், முகம் திருத்தி தலையைச் சீராக்கிச் சென்றாள்.

அவளுக்குப் பரிசம் போட்ட நாளில் இருந்து தினமும் வீடு தேடி பூ வந்து விடும். மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ சில தினங்கள் கதம்பம் என மாப்பிள்ளை வீட்டு ஆட்களே யாரேனும் ஒருவர் வந்து கொடுத்துச் செல்வார்கள். இன்று அவர்களுக்கு ஏதோ முக்கிய வேலை போலும். பூ இன்னும் பூவையின் வீடு தேடி வரவில்லை.

பொன்னாத்தா வீடு சென்று பணத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது சடக்கென்று அவள் அருகில் வந்து நின்றது இரு சக்கர வாகனமொன்று.

சற்றே மிரண்டு திரும்பியவள் முன் தர்மதுரை நின்றிருந்தான்.

“எம் மல்லி ஏன் இப்படி வெயில்ல வாடுது?” அவளிடம் சீண்டலாக விசாரித்தான். அவளைப் பக்கத்தில் பார்த்து பல நாட்கள் ஆகியிருக்க, அவள் முகத்தில் இருந்து விலகவில்லை அவன் கண்கள். அந்தக் கண்கள் அவளுக்குக் குறுகுறுப்பூட்டியது. ஓரே ஊரில் இருந்தாலும் அப்படியொன்றும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை அவர்களுக்கு. இருவரிடமும் அடுத்தவரின் அலைபேசி எண் இருக்கிறது. ஆனாலும், பேசிக் கொள்ளவில்லை அவர்கள்.

“வந்துட்டாரு பூந்தோட்ட ஓனரு” என்று முணுமுணுத்தாள்.

“சொல்றத சத்தமா சொல்லுடி சிலுப்பி”

“சொல்ல முடியாது” என்றவள், “வேலைய பார்த்திட்டு போவாரா” என்று முணுமுணுக்க, அத்தனை அருகில் நின்றவனுக்கு அது நன்றாகக் கேட்டிருந்தது.

“அடிங்க. ஏய், என்னா சொன்ன?” என்றான் நாக்கை மடித்து மிரட்டலாக. வண்டியை அவளுக்கு மிக அருகில் வந்து நிறுத்தினான்.

“ஆத்தாடி” என்று நகரப் போனவள் பாதம் சாலையை விட்டு மண் தரையில் இறங்கப் போக, எட்டி அவளை இடையில் கைக் கோர்த்துப் பிடித்தான். படபடக்கும் விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.

“இந்தா பூ, வாங்கிக்க. இன்னைக்கு லேட்டாகிச்சு” என்று வலக்கரத்தில் ஒரு பந்து கட்டிய மல்லிகை பூவை வண்டிப் பையில் இருந்து எடுத்து நீட்டினான்.

“மொத என் இடுப்புல இருந்து கைய எடுங்க”

“நீ பூவ வாங்குடி சிலுப்பி” அவளின் உடலில் ஓடிய சிலிர்ப்பை உணர்ந்தபடியே சொன்னான்.

“அச்சோ ரோட்ல நிக்கறோம், கைய எடுங்க”

“இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணத்தை வச்சுட்டு எதுக்கு இப்படிப் பதறுற?” சாவகாசமாக அவள் முகம் பார்த்து கேட்டான். அவனது நெருக்கம் தந்த கூச்சத்தை மீறிய படபடப்பு அவளிடம்.

“கைய எடுங்க பிளீஸ்” என்றாள், அவன் கண்களை ஏறிட்டு.

“சரி, சாரி” என்று அவன் கையை எடுத்த மறுகணம், “வர்றேன்” என்று சொல்லி, விறுவிறுவென்று வீடு நோக்கி நடந்து விட்டாள்.

“பூ வாங்கிட்டு போ சிலுப்பி” என்ற அவன் குரல் கேட்டும் நிற்கவில்லை அவள்.

வீடு வந்து, பணத்தைப் பெரியம்மாவிடம் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று அமர்ந்தாள். அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பதா, வேண்டாமா என்று அவள் பூவா தலையா போட்டுக் கொண்டிருக்க, அரை மணி நேரத்தில் பூவோடு அவள் வீடு வந்து விட்டான் தலைவன்.

“வாங்க மாப்ள” என்று பொற்கொடி இனிய பதற்றத்துடன் அவனை வரவேற்க, “பூ குடுத்துட்டு போலாம்னு வந்தேன்த்த” என்ற கரகரத்த அடர்ந்த குரல் அறைக்குள் இருந்தவளை சொடுக்கி வெளியே வரச் செய்தது.

“தேனு, இங்க வாடா” என்று பெரியம்மா அழைக்கையிலேயே விரிந்த விழிகளுடன் கூடத்திற்கு வந்தாள்.

அவள் கையை அழுத்திப் பிடித்துப் பூவை கொடுத்தான்.

“உனக்குப் பூ கட்டத் தெரியும் தானே? கட்டி வச்சுக்கோ. மறக்காம ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வைக்கிற? ம்ம்?” என்று அவளுக்கு மட்டுமான குரலில் சொன்னவன், மறுபேச்சுப் பேசாமல் வெளியேறி விட்டான்.

“ஒரு காப்பிக் கூடக் குடிக்காம போய்ட்டாரே மாப்ள” என்று பொற்கொடி சொல்லிக் கொண்டிருக்கப் பூவில் பதிந்திருந்த பார்வையுடன் நின்றிருந்தாள் பாவை.

அவன் வீடு சென்று சேரும் போது, அவனுக்கு முன்னே அங்குச் செய்தி சென்றிருந்தது.

“டேய் தொர, என்னடா பண்ணிட்டு வந்திருக்க?” அன்புக்கரசி அடக்க முடியாத சிரிப்புடன் தம்பியின் தோளில் அடித்துக் கேட்க, “என்னா பண்ணேன்? என் வருங்காலத்துக்குப் பூ குடுத்துட்டு வந்தேன்.” என்றான் உதட்டில் நெளிந்த புன்னகையுடன்.

அக்காவை தாண்டிக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, “அதுக்குன்னு ஒரு அளவில்லையா டா?” என்று கேட்டாள் அன்பு. அப்படியே நின்ற இடத்தில் இருந்து திரும்பி, “என்னக்கா?” என்றான்.

“தேனுக்குத் தான பூ குடுத்துட்டு வந்திருக்கான். அதுக்கேன் அவன பேசுற அன்பு?” என்று கேட்டார் திலகவதி.

“ம்மா, ஒரு கூடை மல்லிப்பூவ வீடேறி போய் அவ கையில குடுத்துட்டு வந்திருக்கான்ம்மா உன் மவன்” என்றாள் சிரிப்புடன். திலகவதியின் கண்கள் அதிர்ந்து விரிய, அவருமே சிரித்து விட்டார்.

“அவ தலையில ரெண்டு கண்ணி பூ கூட இல்ல. நான் பூ குடுத்தா ரோட்ல வச்சு குடுத்தேன்னு முறைச்சுட்டு வாங்காம போய்ட்டா. அதேன் வீடு தேடி போய்க் குடுத்துட்டு வந்தேன்” என்றவன், அறைக்குள் சென்று மறைந்தான்.

“சரித்தான்” என்று திலகவதி சொல்ல, சத்தமாகச் சிரித்தாள் அன்புக்கரசி.

“ஹான், செரித்தென்” என்று ராகம் இழுத்த அப்பத்தா, ஏதோ எடக்கு மடக்கான பழமொழியை எடுத்து விடப் போனார்.

“வேணா அப்பத்தா. சும்மாரு. அவனே கோபத்துல இருக்கான். ஏதாவது பேசிட போறான்” என்று அன்பு சொல்லவும், தாடையைத் தோளில் இடித்துக் கொண்டார்.

“என் பேத்தி..” என்று அவர் ஆரம்பிக்க, “உன் பேத்தி இப்போ வேற வீட்டுக்குப் போகப் போறா. அவளுக்கும் ஶ்ரீவில்லிபுத்தூர்காரங்க பரிசம் போட்டு போயாச்சு. நீ எதையாவது பேசி யார் காதுலயாவது விழுந்தா வீண் வம்பு. அப்புறம் நீ பெத்த மகராசி வந்து உன் குடுமியை பிடிக்கப் போகுது” என்று கண்டிப்பாகச் சொன்னாள் அன்பு. அப்படியும் அமைதியாகவில்லை அவர்.

“என் பேரன் பவுசுக்கு எப்பேர்ப்பட்ட..” என்று புலம்பலை ஆரம்பித்து விட்டார்.

“போயும் போயும் ஆத்தா அப்பன் இல்லாதவள போய் நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வர போறீங்க” சமீபமாக அவரின் புலம்பல் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதால், திலகவதி ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

“பேசாம இரு அப்பத்தா. உன் பேரன் காதுல விழுந்தா..”

“அவென் காதுல விழணும்னு தானே பேசறேன்? என் பேரன் வெளிநாட்டுக்கு பூ அனுப்பறான். அவனுக்குப் போய் ஒன்னுமில்லாதவள..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன், “ஏ அப்பத்தா” என்று வந்து நின்றான் தர்மதுரை.

“ராசா”

“நீ பீத்துறியே பெரும, பேரன் பெரும. வெளிநாட்டுக்கு பூ அனுப்பற பெரும. அந்த வெளிநாட்டுக்கு பூ அனுப்பற ஐடியா எனக்கு யார் குடுத்தது தெரியுமா? ஹான்..”

“யா…ரு?”

“இன்னைக்கு நான் இப்படி வளர்ந்து நிக்கறேன். நம்ம பூத்தொழில் வெளிநாட்டுக்கு போற அளவுக்கு வந்திருக்குன்னா, எதுனாலன்னு நினைச்ச? வித்து அவ போட்டது. அவ சொன்ன ஒரு வார்த்ததான், இத செஞ்சு பார்த்தா என்னான்ற எண்ணத்த எனக்குக் குடுத்துச்சு” என்று படபடவென்று பேசிய பேரனை திடுக்கிடலுடன் பார்த்தார் அப்பத்தா.

“என்னடா சொல்ற தொர? இதெல்லாம் எப்படா நடந்தது? நீ காலேஜ் படிக்கும் போதேவா டா? என்கிட்ட சொல்லவேயில்லயே?” அன்பு ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக வினவ, “க்கா” என்று பல்லைக் கடித்தான்.

“மெட்ராஸ்ல பிஸினஸ் ஐடியா குடுக்கறதுக்குலாம் காசு வாங்குறானுங்க. தெரியுமா? அப்படிப் பார்த்தா நாம அவளுக்கு ஒரு பெரிய அமௌன்ட் குடுக்கணும்” என்று அவன் சொல்லவும், “ஆத்தே, என்ன ராசா சொல்ற?” என்று வாயில் கை வைத்தார் அப்பத்தா.

அதற்கு மேல் தேன்மொழியை அதிகம் குறை கூறி பேசவில்லை அவர்.

வீட்டினரின் கோபத்தைத் தவிர்க்க மட்டுமல்ல, பேரன் விரும்பி மணக்கும் பெண் எனச் சற்றே இறங்கி வந்தார்.

மகன் சொன்னதையெல்லாம் திலகவதியும் கேட்டுக் கொண்டு தானிருந்தார். ஆனால், அது குறித்து மகனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அவர்.

தர்மதுரையின் அப்பத்தாவிற்குத் தன்னைப் பிடிக்காது என்ற செய்தி தேன்மொழியின் காதுக்கும் தோழி கீதாஞ்சலி வாயிலாகச் சென்று சேர்ந்திருந்தது. அதற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவள்.

“நீ உக்கார்ந்து பூவ கட்டு தேனு” என்று சொன்ன பொற்கொடியின் முகத்தில் பூரிப்பான புன்னகை.

“கொஞ்சத்தைக் கட்டி மொத தலையில வச்சுக்கோ” என்று சொல்லி சமையல் அறை சென்றார்.

அவளின் கையில் இருந்த சிறிய கூடையைச் சிரிப்பும், கோபமும், மலைப்புமாகப் பார்த்திருந்தாள்.

மல்லிகை, பன்னீர் ரோஜா, சிவப்பு மூக்குத்தி ரோஜா, மரிக்கொழுந்து என அதில் நிறைத்து வைத்திருந்தான் தலைவன்.

“திமிரை பாரு” என்று முணுமுணுத்துத் தரையில் அமர்ந்து பூத்தொடுக்கத் தொடங்கினாள்.

ஒரு மணி நேரம் கழித்து வீடு வந்தான் ஜெயபாலன். நேராகப் பொற்கொடியிடம் சென்று ஏதோ பேசினான்.

பின் தேன்மொழியிடம் வந்து, “எந்திரு தேனு, கொஞ்சம் வேலையிருக்கு. வெளில போய்ட்டு வரலாம்” என்றான்.

“இருண்ணா, பெரிம்மாகிட்ட கேட்டுட்டு வர்றேன்”

“உங்கம்மா கிட்ட நான் சொல்லிட்டேன். நீ, வா”

“பெரிம்மா”

“அண்ணங்கூடப் போய்ட்டு வாடா தேனு” என்று புடைவை முந்தானையில் கை துடைத்தபடி வெளியில் வந்தார்.

“சேலை கட்டி, தலையில பூ வச்சுட்டு போ” என்றார்.

“ஏன்? எங்க போறோம்?” என்ற கேள்வியை வார்த்தையாகக் கேட்காமல், இருவரையும் கண்ணால் கேள்வி கேட்டு நின்றாள். இருவரும் பதில் சொல்வது போலத் தெரியவில்லை.

அதனால் அவளாகவே சென்று ஊதா நிற சாப்ட் சில்க் சேலை அணிந்து வந்தாள்.

“இப்படி வா” என்று அதுவரை அவள் தொடுத்திருந்த பூ அனைத்தையும் அவள் பின்னலில் சூடி அனுப்பி வைத்தார் பொற்கொடி.

“அண்ணா” ஜெயபாலன் வண்டியில் ஏறிய பின் தேன்மொழி தயக்கமாக இழுக்க, “திண்டுக்கல் போறோம்” என்றான் அவன். ஆனால், ஊரின் எல்லையை நெருங்கியதும் வலப்புறமாகத் திரும்பி, அங்கிருந்த நீள இரும்பு உலோக கதவின் முன் சென்று நின்றது வண்டி.

“அன்பு மலர் ஏற்றுமதியகம்” என்ற பெரிய பெயர் பலகையைப் பார்த்ததும், எங்கு வந்திருக்கிறோம் என்பது அவளுக்குப் புரிந்து போனது.

“வாங்க மச்சான்” என்று வேக நடையுடன் வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றான் தர்மதுரை.

“இங்கன இவ்வளோ பெரிய பில்டிங் இருக்கா. வெளில இருந்து பார்க்க பெருசா தெரியல” என்று ஆச்சரியப்பட்டான் ஜெயபாலன்.

அவளுக்கு நெருக்கமாக நடந்தபடி, “உள்ள வந்து பாருங்க. வாங்க” என்றழைத்தான்.

ஜெயபாலன் முன்னே நடக்க, தலைவனின் கண்கள் தலைவியைத் தலை முதல் பாதம் வரை நிதானமாக வருடியது.

அவளின் நீண்ட பின்னலில் நிறைந்திருந்த மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா கலந்து கட்டிய சரத்தை கண்டதும்தான் தர்மதுரை மகாபிரபு மலையிறங்கினார்.

error: Content is protected !!
Scroll to Top