இந்த வாழ்வென்பது – 17 (1)

அவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் திருமணம் முடிவாகியிருந்தது. திருமணம் மாப்பிள்ளை வீட்டு நடைமுறை என்பதால் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று விட்டார் சுந்தரராஜன்.

அவர்களின் ஒரே மகனின் திருமணம், அங்கே எடுத்துச் செய்யப் போதுமான ஆட்களும் இருக்க எதற்கும் மலைக்கவில்லை அவர்கள்.

தேன்மொழி வீட்டிலும் ஆட்களுக்கா குறைவு?

அண்ணன்கள் இருவரும் வார இறுதிக்கு திண்டுக்கல் வந்து விட்டார்கள். ஜெயபாலன் அவ்வப்போது கூடுதலாக விடுமுறை எடுத்தும் வீடு வந்தான். கல்யாண வேலைகளைப் பார்த்தான்.

சுதாகரன் கல்யாண வேலைகளோடு கடை திறக்கும் வேலைகளையும் சேர்த்துச் செய்தான். கடைக்குப் பார்த்து வைத்திருந்த இடத்தை அண்ணன், தம்பி இருவரின் பெயரிலும் பதிவு செய்து, தேன்மொழி கையால் முதல் செங்கல் எடுத்துக் கொடுக்க, கடைக் கட்டும் வேலையும் ஆரம்பமாகியது.

அன்பழகனுக்கு அப்போது கல்லூரி விடுமுறைதான். ஆனால், அகாடெமி வகுப்புகளைத் தவற விடக் கூடாதென்று திரும்பச் சென்னை சென்றிருந்தான். இப்பொழுது அக்காவின் திருமணத்தை முன்னிட்டு அவனும் ஊர் வந்து விட்டான்.

அண்ணன், தம்பிகள் ஆளுக்கொரு வேலையை இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.

பத்திரிக்கை அடித்து வந்திருக்க, உறவுகளுக்குக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

முன்தினம் மதுரை சென்று தேன்மொழிக்கு தேவையான உடைகள் எடுத்து வந்திருந்தார்கள். இதுநாள் வரை கல்லூரிக்கு அணிந்த பழக்கமாகச் சுடிதார், டாப்ஸ், பேண்ட் என அணிவதுதான் அவளின் வழக்கம். ஊருக்கு வந்த பிறகு அடிக்கடி சேலை உடுத்துகிறாள். ஆனால், அவளிடம் இருப்பது மிகக் குறைந்த சேலைகளே. அதனால் திருமணத்திற்குப் பிறகு தினசரி முதல் விசேஷங்களுக்குக் கட்ட எனப் பல்வேறு வகையில் புடைவைகளைக் கடைக் கடையாக ஏறி அலசி எடுத்திருந்தார்கள்.

அதிலேயே ஒரு முழுநாள் ஓடியிருந்தது.

இன்று காலை மிகச் சோம்பலாக எழுந்து வந்தான் ஜெயபாலன்.

“ம்மா, காஃபி குடுமா” என்று கொட்டாவி விட்டபடியே கேட்டான்.

“இந்தா வர்றேன்ண்ணா” என்று தேன்மொழி குரல் கொடுக்க, “அவனுக்குக் காஃபி குடுக்காத ராசாத்தி” என்றார் முத்தம்மா.

“ஏன்டா பத்து மணியாச்சு, இப்ப எழுந்து வந்து காப்பிக் கேட்கற? போய்க் குளிச்சுட்டு வா. தோச ஊத்தித் தர்றேன்”

“ஏ அம்மாச்சி. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. அர டம்ளர் காப்பிக் குடு. அப்பத்தான் தூக்கம் கலையும்” ஆவென்று கொட்டாவி விட்டுச் சொன்னான்.

“ஏலே உந்தங்கச்சிக்குக் கல்யாணம். வீட்ல ஏகப்பட்ட வேலை கிடக்கு. பொறுப்பா எழுந்து உதவாம தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு இருக்க?”

“உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா அம்மாச்சி. நேத்து முழுக்கக் கடை கடையா என்னைய அலைய விட்டுட்டு இப்போ பேச்சா பேசுற”

“நாலு கடை ஏறியிறங்குனதுக்கு அழறான் பாரு. இன்னும் எத்தன வேல கிடக்கு, வாய் பேசாம எழுந்து போய்க் குளிச்சுட்டு வாடா” என்று அவனின் தோளில் தட்டினார்.

“ஐய்யோ, எனக்கு ஒரு காப்பிக்கு இந்த வீட்ல வழி இல்லையா?” என்று அவன் புலம்ப, மிதமான சூட்டில் இருந்த காஃபி கோப்பையை அவன் முன் நீட்டினாள் தேன்மொழி.

“தங்கச்சி என் தங்கச்சி, தங்கமான தங்கச்சி” என்று பாடிக் கொண்டே காஃபியை வாங்கி அருந்தினான். அதைக் கண்டு அன்பழகன் சிரிக்க, “ம்ம், உனக்கெல்லாம் பேரன் மேல பாசமே இல்ல. எனக்கொரு காலம் வரும், அப்போ உன்னைய கவனிச்சுக்கறேன்” என்று அம்மாச்சியிடம் கை வீசி சொல்லி விட்டு எழுந்து போனான். சற்று நேரத்தில் குளித்து வந்தான்.

“அம்மாச்சி, சாப்பிட என்ன இருக்கு? குளிச்சதும் வயிறு கபகபன்னு பசிக்குது”

“குழம்பு கொதிக்குது டா. உக்காரு, தோச ஊத்தி எடுத்தாறேன்”

“ஓகே” என்று கால் நீட்டி அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கினான்.

அருகிலேயே கந்தன் சோஃபாவில் அமர்ந்திருக்க அவரின் காலடியில் அமர்ந்து, பெரியப்பா சொல்லச் சொல்ல, பத்திரிக்கைகளில் பெயர் எழுதிக் கொண்டிருந்தான் அன்பழகன்.

“அம்மாச்சி” ஜெயபாலன் கத்த,

“வர்றேன் இருடா” என்று சொன்ன மறுநிமிடம் கையில் தட்டுடன் வெளியில் வந்தார் முத்தம்மா. அவரைப் பின் தொடர்ந்து இரண்டு கிண்ணங்களுடன் தேன்மொழியும் வந்தாள்.

தோசைக்குத் தொட்டுக் கொள்ளப் பருப்பு உருண்டை குழம்பும், காலையில் தோசைக்குச் செய்த புதினா சட்னியும் பரிமாறினாள்.

ஆளை கொல்லும் பசியில் இருந்தவன், ஆவலாக உண்டான். நான்கு வாய் உணவு உள்ளே சென்றதும் நிமிர்ந்து தங்கையைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“இதென்ன குழம்பு தேனு..”

“பருப்பு உருண்டை குழம்புண்ணா”

“இந்த உருண்டையை எதுல செஞ்ச?”

“டேய்” என்று முத்தம்மா அவனை அதட்ட, “உன் ட்ரெயினிங்கா அம்மாச்சி? சிறப்பு, சிறப்பு” என்றான் உணவை மென்றபடி.

“குழம்பு நல்லா இல்லையாண்ணா?” என்று தேன்மொழி கேட்கவும், சோகமாகச் சிரித்து வைத்தான்.

“இத பருப்பு உருண்டை குழம்புன்னு சொன்னா இந்த உருண்டையே நம்பாது தேனு”

“சின்னவனே” என்று இம்முறை அதட்டியது கந்தன்.

“என்னப்பா நீங்களும் அதட்டறீங்க. நான் ஒன்னும் உங்க பொண்ண நக்கல் பண்ணல. உண்மையைத்தான் சொன்னேன். வேணும்னா நீங்களே சாப்பிட்டு பாருங்க” என்று தட்டை நீட்டினான்.

“பேசாம சாப்பிடு தம்பி” என்றவர் சின்னச் சிரிப்புடன் வேலையில் மூழ்கிப் போனார். ஏனென்றால் அவருக்கும் மகளின் சமையல் திறமையைப் பற்றித் தெரியுமே. அவள் அதிகம் சொதப்புவது சமையல் ஒன்றில்தான். பெரியம்மா, அம்மாச்சி என இருவர் பயிற்சி கொடுத்தாலும் அவளுக்குச் சமையலின் நுணுக்கங்கள் அவ்வளவாகப் பிடிபடவில்லை. ம்ம், எல்லாருக்கும், எல்லாமும் கை வந்து விடுவதில்லையே என்று விட்டு விட்டார்கள். அவள் என்ன சமைத்தாலும் குறை கூறாமல் சாப்பிட்டு விடுவார்கள். அதற்காக அவள் சமையலை மிகவும் மோசம் என்று சொல்லி விட முடியாது. அதிசுவையான உணவை சமைக்கத் தெரியாது. அவ்வளவுதான்.

“இது சீர் லிஸ்ட் அன்பு. இதுல எதெது விட்டுப் போச்சுன்னு பார்த்துச் சொல்லு” என்று கந்தன் வேலையில் கவனமாக, அன்பழகன் கவனம் இன்னமும் அண்ணனின் மேல் தானிருந்தது. அண்ணனை கடுமையாக முறைத்தான்.

“டேய், அன்பே. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதாம்டா. போஜனம்னா அதென் சோறு, அது கிடைக்காதாம். நீ அநியாயத்துக்கு உங்க அக்காக்குச் சப்போர்ட் பண்ணாதடா. அப்புறம் அவ செய்ற சூப்பர் சாப்பாடு கூடச் சாப்பிட முடியாம போயிட போகுது” என்று கிண்டலாகச் சிரித்தபடியே சொன்னான்.

“அக்கா காலையில சூப்பரா தோச ஊத்தினா”

“இப்ப தோசய யாருடா குறை சொன்னா? வெறும் தோசய திங்க முடியுமா? அதுக்குத் தொட்டுக்க நல்லாருக்க வேணாமா?” என்று ஜெயபாலன் கேட்க, அன்பழகன் முறைக்க, தேன்மொழியின் முகம் கவலையில் வாடியது.

“குழம்பு நல்லா இல்லையாண்ணா?

அவளுக்குப் பதில் சொல்லாமல், “ஏ அம்மாச்சி, உன் பேத்திய வெளியூர்ல கட்டிக் கொடுத்தா கூடப் பரவால்ல. எப்பவாவது பாக்கும் போதுதான் திட்டுவானுங்க. இங்கன உள்ளூருக்குள்ளயே கட்டிக் குடுக்கறோமே, நாள பின்ன உன் பேத்தி சமையல் லட்சணம் தெரிஞ்சா, மாப்புள்ள வீடு மானாவாரியா நம்மள பேச மாட்டாங்களா?” என்று சந்தேகம் கேட்டான்.

“பச்ச புள்ளைக்கு என்னடா தெரியும்? அதெல்லாம் நான் திலகா கிட்ட சொல்லிட்டேன். அவ பார்த்துப்பா. இல்லனா நான் இங்கருந்து செஞ்சு கொண்டு போய்க் குடுப்பேன் டா. உனக்கென்னா கவல” என்று ஒரே போடாகப் போட்டார் முத்தம்மா.

“நீ இருக்க வரைக்கும் உன் பேத்திய ஒருத்தன் பேசிட முடியாது போ” என்றான் சிரிப்புடன்.

முத்தம்மா சிரிப்புடன் திரும்பிப் பேத்தியை பார்க்க, “இதெல்லாமா அத்த கிட்ட சொன்னீங்க அம்மாச்சி?” என்று சங்கடமாகக் கேட்டாள் தேன்மொழி.

“இல்ல ராசாத்தி. நீ இப்போ தானே படிப்ப முடிச்ச? அதான் நாங்க இன்னும் பேத்திய சமையக்கட்டு பக்கமே போக விடல. அங்க வந்து பொறுமையா கத்துப்பான்னு உங்கத்தகிட்ட சொல்லியிருக்கேன். அவ பார்த்துப்பா, நீ கவலைப்படாத” என்று அவளின் கன்னம் தட்டினார்.

அந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவளைப் பார்க்க ரோஜாவுடன் வந்தாள் அன்புக்கரசி. அவளிடம் நிதானமாகப் பேச்சுக் கொடுத்து, தர்மதுரைக்குப் பிடித்ததையெல்லாம் கேட்டறிந்து கொண்டாள். கொஞ்சம் சிரத்தை எடுத்து சமையலை கற்றறிந்தாள். இப்போது கொஞ்சம் தேறியிருந்தாள்.

திருமணம் முடிவானதில் இருந்து அவளைத் தனியாக எங்கேயும் வெளியே அனுப்புவதில்லை வீட்டினர். அவளுக்கு வீட்டிலேயே அடைந்து கிடப்பது கொஞ்சம் வெறுப்பாக இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top