அங்கே சென்னையில் இன்னமும் துள்ளி கொண்டிருந்தான் ஜெயபாலன்.
“அவனுக்கு அப்பவே கை நீளம். உன்னையவே அடிச்சான்..”
“டேய் கிறுக்கா, நம்ம ஊருக்கு திருவிழாக்கு வந்த அவங்கக்காவ நான் கிண்டல் பண்ணி பாட்டு பாடினா, அவன் பார்த்திட்டு சும்மா இருப்பானா? அதான் எனக்கு ரெண்டு அறையைக் குடுத்தான்” என்று சுதாகரன் சொல்லவும், “என்னாதே..” என்று அதிர்ந்து அண்ணனை பார்த்தான் ஜெயபாலன்.
“என்னடா சொல்ற?” இப்பொழுது மரியாதையும் தேய்ந்திருந்தது.
“தொர அக்காவ வம்பிழுத்தியா? அவங்க நம்மள விடப் பெரியவங்க டா”
“டேய், அவங்கள இல்லடா. நீ வேற. அது அவன் சித்தப்பா பொண்ணு. திருவிழாக்கு வந்தது. என்னையவே திரும்பி திரும்பி பார்த்துச்சு. நானும் ஆர்வக் கோளாறுல பேச்சு குடுத்து, பாடுனேன். கொய்யால என்னைய எங்கருந்து பார்த்தான்னு தெரியாது டா, வந்து சட்டையைப் பிடிச்சு அடி வெளுத்துட்டான்”
“பின்ன அவங்க அக்காவை வம்பிழுத்தா, உன்னைய மாப்ளன்னு கொஞ்சுவானா?” என்று ஜெயபாலன் கடுப்பாகக் கேட்க, “டேய் இவ்வளவு நேரம் எனக்குச் சப்போர்ட் பண்ண?” என்றான் அண்ணன் கடுப்பாக.
“அது அந்த வயசுல தெரியாம பண்ணதுடா”
“அன்னைக்குத் தேனு ஊடால வந்ததும் தானே உன்னைய அடிக்கிறத நிப்பாட்டுனான்?” ஞாபக அடுக்கில் தேடி அவன் கேட்க, “ம்ம்” என்றான் அண்ணன்.
தர்மதுரை அக்காவுக்கு ஒன்றென்றதும் ஓடி வந்தது போல அண்ணனை ஒருவன் அடிக்கிறான் என்று பார்த்ததும் பதறி ஓடி வந்திருந்தாள் தேன்மொழி.
இருவருக்கும் நடுவில் நின்று தர்மதுரையை அண்ணனை அடிக்க விடாமல் தடுத்ததும் அவள்தான். அந்தப் பிரச்சினை பெரிதாகாமல், பெரியவர்கள் வரை செல்லாமல் இருந்ததற்கும் அவள்தான் காரணம். ஊரார் யாரும் பார்த்து என்னவென்று விசாரித்துச் செய்தி பரவும் முன், அடித்துக் கொண்ட இருவரையும் பிரித்து விட்டிருந்தாள்.
அப்பொழுது தர்மதுரை அவளைப் பார்த்த பார்வையில் கோபம் கொப்பளித்தது. அப்படியே திரும்பி சுதாகரனை பார்த்திருந்தான் அவன். மேலே பிரச்சினை செய்யாமல் அவன் விலகிச் சென்றாலும், அந்தப் பார்வைதான் சுதாகரனை சுட்டது.
அதுவும் தன் தங்கையை ஓர் பார்வை பார்த்து விட்டு அவனைப் பார்த்திருந்தான்.
“இப்போ உன் தங்கச்சிய பார்த்து நான் பாட்டு பாடவா?” என்று கேள்வி கேட்ட அந்தப் பார்வை அவனை அதிகம் பாதித்தது. அதனாலேயே அவன் மேல் கோபம் வளர்த்துக் கொண்டான். அப்பொழுது கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தான். சென்னை கல்லூரி வாழ்க்கை பிறகு வேலை என நாள்கள் நகர்ந்திருக்க, வருடா வருடம் ஊர் சென்றாலும், தர்மதுரையை அங்கே பார்த்தாலும் பெரிதாகப் பேசிக் கொண்டதில்லை.
அவன் இயல்பாகப் பேசினாலும் எதிர்கொள்ள முடியாமல் நகர்ந்து விடுவான்.
அது ரெண்டும் கெட்டான் வயதில் தெரியாமல் செய்த தவறு. நிச்சயமாகத் தவறென உணர்ந்திருந்தான்.
“தேனு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளாம். நீ மரியாதையா ஊருக்குப் போனதும் மாப்ள கிட்ட மன்னிப்பு கேளுண்ணா” என்ற தம்பியை சிரிப்புடன் பார்த்தான் சுதாகரன்.
“சரிடா. செய்றேன்” என்றான் சிரிப்புடன்.
அன்பழகன் இவர்கள் வாக்குவாதத்தைக் கேட்டபடி சிரிப்புடன் அமர்ந்திருந்தான். ஆக, அக்காவின் கணவனாக வரப் போகிறவன் நல்லவன் என்பதில் பெருமகிழ்ச்சி அவனுக்கு.
தேன்மொழி எப்போதோ அவனிடம் பேசி விட்டாள். அக்காவிற்குச் சம்மதம் எனும் போது அவனுக்கும் நூறு சதம் சம்மதமே.
உடனடியாகத் தர்மதுரையைப் பற்றிக் கேட்டும், விசாரித்தும் தெரிந்து கொண்டான். அவனது புகைப்படம் கூட அவன் வசம் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் அக்காவிற்கு மிகப் பொருத்தம் என்று தோன்றியது. புன்னகைத்துக் கொண்டான்.
புதன் மாலை பெண் கேட்டிருந்தார்கள். வெள்ளி மாலைதான் தேன்மொழி, தர்மதுரை சந்திந்து கொண்டது.
இவர்கள் இருவரும் இங்கே கோவிலில் பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கே யதேச்சையாக இவர்கள் வீட்டை கடந்து சென்ற திலகவதியை பார்த்து பேசினார் முத்தம்மா. அவரிடம் வழியில் நின்று பேச விரும்பாமல் வீட்டுக்குள் அழைத்தார்.
வெள்ளிக்கிழமை அதுவுமாக நல்ல செய்தியை பகிராமல் எப்படி இருப்பது? அதனால் அப்போதே அவரிடம் சம்மதம் என்று சொல்லி விட்டார்கள்.
அவ்வளவுதான். திலகவதி வீடு பரபரத்தது. அன்புக்கரசி அவசரமாகக் கிளம்பி திண்டுக்கல் வந்தாள்.
பூ வைத்துப் பரிசம் போடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். அதற்காக உடனடியாக நாளும் குறித்து விட்டார்கள். அதன் பிறகுதான் ஜாதகம் பொருத்தம் எல்லாம் பார்த்தார்கள்.
நிறைவான பொருத்தம் என்று சிலாகித்தார் ஜாதகம் பார்த்தவர். அதற்கு மேல் என்ன எதிர்பார்ப்பார்கள்?
அப்பத்தாதான் எதிலும் ஆர்வம் காட்டாமல் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தார்.
“பேரன் புள்ளைங்கள பார்க்கற பாக்கியம் இருக்கு உங்களுக்கு. அதுவும் கொள்ளு பேரன நீங்கதான் வளர்ப்பீங்க” என்று ஜாதகம் கணித்துச் சொன்னவர் சொல்ல, அப்பத்தா முகத்தில் கூடப் புன்சிரிப்பு வந்தது. சற்றே மலை இறங்கினார் என்று சொல்லலாம். ஆனாலும், தன் வீம்பை விட்டு கொடுக்கவில்லை.
என் பேத்தியை கட்டல என்ற புலம்பலையும் விடவில்லை.
தலைவனிடம் அண்ணன் தம்பி சம்மதம் முக்கியம் என்று தலைவி சொல்லியிருக்க, தர்மதுரை மகா பிரபு சும்மா இருப்பாரா என்ன?
அந்த வார விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சுதாகரனிடம் அவனாகவே சென்று பேசினான்.
இம்முறை அவனைத் தவிர்க்காமல் நல்ல விதமாகப் பேசினான் சுதாகரன். அவனிடம் காதை சுற்றி வளைத்து மன்னிப்பு கூடக் கேட்டு விட்டான்.
அக்காவின் மேல் கொள்ளை அன்பு அவனுக்கு. அவளுக்கும் தம்பி அன்பு மீது அதே அளவு பாசமிருக்கிறது என அவனுக்குப் பல வருடங்களுக்கு முன்பே தெரியும்.
அவனிடம் கைக் கடிகாரம் வாங்குவது பற்றி அவள் பேசியது. அதற்காகக் காசு சேர்க்கத் தன் தோட்டத்தில் வேலைக்கு அவள் வந்தது என அனைத்தும் அவனுக்கு நினைவு வந்தது.
அதனால் அன்பழகனிடம் பேசினான். அன்புக்கு அடிமையாகாதவர் உண்டோ?
அன்புதான் அவர்களை இணைத்தது.
அண்ணன், தம்பி அனைவருக்கும் அவனைப் பிடித்து விட, தலைவனை முறைக்கத் தலைவிக்குக் காரணமில்லை, கோபமுமில்லை.
அப்படியாக அன்பு அக்காவும், அன்பு தம்பியும் அன்பால் ஒன்றிணைந்தார்கள்.
அன்றிலிருந்து பத்தாம் நாள் அழகிய நல்லூர் கிராமம் அலங்கரித்து நின்றது.
முன்தினம் மாலையே ஊருக்குள் ரேடியோ கட்டி காற்றில் இதமாகக் காதலை கலக்க விட்டார்கள்.
தேன்மொழி வீட்டு வாசலை அடைத்துப் பெரியதாகப் பந்தல் போட்டிருந்தார்கள். நெருங்கிய உறவுகள் எல்லாம் காலையிலேயே வந்து விட்டார்கள். ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டினருக்கும், உறவுகளுக்கும் தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
மேள தாளம் முழங்க ஆர்ப்பாட்டமாக அண்ணன், தம்பி முன் நின்று மாப்பிள்ளையை வரவேற்றார்கள்.
“செம்பருத்தி பூவு சித்திரத்தை போல அம்பலத்தில் ஆடுதிங்கே… சீமைத்தொரை போல மாமன் வர பார்த்து செம்பருத்தி பாடுதிங்கே..” என்று துரைக்குப் பொருத்தமாகப் பாடலை ஒலிக்க விட்டார்கள்.
தலைவிக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் கூடை நிறைய மதுரை மல்லியுடன் தோரணையாக வந்திறங்கினான் தலைவன்.
மெல்ல முன்னே வந்து சபையில் இருந்த உறவுகளைக் குனிந்து வணங்கியவள் கண்கள் தலைவன் மேல் பதிந்து விலகியது.
கண நேரத்தில் கண் சிமிட்டி அவளைச் சிவக்க வைத்தான்.
பச்சை நிற பட்டுப் புடைவை, பதினைந்து பவுன் நகை, ஒரு பந்து மல்லிகைப்பூ என அனைத்தையும் அக்கா அன்புக்கரசி கையால் அம்மா, அப்பா, அப்பத்தா ஆசியுடன் கொடுத்துப் பரிசம் போட்டான் அவளை மணக்க போகும் மாமன்.
அவன் விடைபெறும் நேரமும் முறைத்து திரும்பினாள் தேன்மொழி.
அதைக் கண்டு, “சிலுப்பி” என்று செல்லமாக முணுமுணுத்துச் சென்றான் தர்மதுரை.