பொற்கொடிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் சொன்னதை உள்வாங்கிக் கொள்ளவே அவருக்குச் சிறிது நேரம் எடுத்தது.
“நாங்க வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்” முத்தம்மாதான் அவர்களிடம் பேசினார்.
அன்று மாலை கந்தன், கருப்பண்ணசாமி இருவரும் விரைவாக வீடு வந்தார்கள். அவர்களிடம் செய்தி பகிரப்பட்டது.
அந்த ஊரில் தர்மதுரை குடும்பத்திற்கென்று ஒரு நல்ல பெயர் நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. அதைப் பூ ஏற்றுமதி மூலம் இன்னுமே உயர்த்தியிருந்தான் அவன்.
அவன் ஒருவனது உயர்வால் அந்த ஊரில் எத்தனை குடும்பங்களுக்கு நிரந்தர வேலை கிடைத்திருக்கிறது. ஊரில் படிப்பு முடித்த பல இளவட்டங்களும் அவனிடம்தான் பணிபுரிகிறார்கள். அவனைப் பார்த்து பலரும் நம்பிக்கையாக விவசாயத்தில் இறங்கி லாபம் பார்க்கிறார்கள்.
தர்மதுரை வீட்டு மனிதர்களெல்லாம் மிக நல்லவிதம் என்று யாரும் அவர்களுக்குச் சான்று தரத் தேவையில்லை. ஏனென்றால் அது தேன்மொழி குடும்பத்திற்கு நன்றாகத் தெரியும்.
மற்றவர் பேசும் முன், “அந்தக் குடும்பத்துக்கு நம்ம பேத்திய கண்ண மூடிட்டு கட்டிக் குடுக்கலாம்” என்று தன் முடிவைச் சொன்னார் கருப்பண்ணசாமி. முத்தம்மாவிற்கும் கணவரின் கருத்துதான்.
ஆசையாக, பாசமாக வளர்த்த பேத்தியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து பிரிய வேண்டுமா என்று பரிதவித்து நின்றவர், உள்ளூரிலேயே ஒரு நல்ல வரன் வந்தால் மறுப்பாரா என்ன? அதிலும் திலகவதி குடும்பம். குணக்கேடு இல்லாத நல்ல குடும்பம்.
ஆகையால், “என்ன யோசிக்கிற கொடி? இந்த மாரி ஒரு வரன நாமளே தேடினாலும் தேனுக்குக் கொண்டு வர முடியாது.” என்றார்.
கந்தனை பொறுத்தவரை மகளை விரும்பி மணக்க கேட்கிறார்கள் என்பதே போதுமானதாக இருந்தது. முன்பு தங்கை கொண்டு வந்த வரனுக்கும், அவரின் காரணம் அதுவாகத் தானிருந்தது.
தன் பொண்ணை விரும்பி மணப்பவன், நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஆனால், முன்பு வந்த வரனை மறைமுகமாக மறுத்து விட்டாளே மகள்.
“எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசையாருக்கு. ஒரு வருஷம் வேலைக்குப் போய்ட்டுக் கல்யாணம் பண்ணிக்கறேனே” என்றிருந்தாள்.
அன்று மகளின் முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.
அவள் அதைச் சொல்லி சில நாட்களே ஆகியிருக்க, இப்போது தர்மதுரை குடும்பம் பெண் கேட்டு வந்ததை எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தார்கள். அந்நேரம் அவளே வீடு வந்து விட்டாள்.
பொற்கொடி மறுப்பாகக் கண் காட்டவும் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.
அது எவ்வளவு நேரத்திற்கு? சற்று நேரத்தில் அவர்களின் பேச்சிலிருந்தே விஷயத்தைக் கிரகித்துக் கொண்டாள் அவள்.
தேன்மொழிக்கு இப்போது தர்மதுரையின் பார்வை மாற்றத்திற்கான காரணம் புரிந்தது. அவனையே சுற்றி வந்தது அவள் சிந்தனை.
ஒரு வருடமாவது வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்றவளை வீட்டில் விட்டுவிட்டுச் சென்னை சென்று விட்டார்கள் அவளின் அண்ணன்கள்.
“இப்பதானே எக்ஸாம் எழுதின? கொஞ்ச நாளைக்கு வீட்ல ரெஸ்ட் எடு. ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சென்னைக்கு வா, பொறுமையா வேலை தேடலாம்” என்று சொன்னான் ஜெயபாலன்.
“தேனு எதுக்குடா சென்னைக்கு வரணும்? இங்கேயே நம்ம கூடப் பிஸ்னஸ் பார்க்கட்டும்” என்றான் சுதாகரன்.
“நம்ம பிஸ்னஸ்ல எப்பவும் தேனுவும் ஒரு பார்ட்னர்தான்” என்ற ஜெயபாலன், “அவ வெளில வேலை பார்க்க ஆசைப்படுறாண்ணே. ஒரு எக்ஸ்பீரியன்ஸ்காக. போகட்டும் விடு.” என்றான்.
“ம்ம்..” என்று சுதாகரன் யோசிக்க, “முதல்ல நீ கடையைச் செட் பண்ணு. அப்புறமா நாங்க வந்து சேர்ந்துக்கறோம்” என்றான்.
“என்னடா சேர்ந்துக்கறோம்னு சொல்லி உன்னையும் கூட்டு சேர்த்துக்கற? நான் மட்டும் எப்படி டா தனியா கடைய செட் பண்ணுவேன். ஒழுங்கா நீயும் வந்து சேரு. இதென்ன நாம இன்னைக்கு நேத்து போட்ட பிளானா டா? உன்னைய சென்னை படிக்க வர சொன்னதே இதுக்காகத் தானே?”
“புரியாம பேசாதண்ணா. நீயே இன்னும் வேலைய விடல. கடை இங்க ஆரம்பிக்கல. மொத நீ கோடு போடுண்ணே. நான் வந்து ரோடு போடுறேன். நீ ஆஃபிஸ்ல நோட்டீஸ் பீரியட் முடிஞ்சு ஒரு மாசத்துல ஊருக்கு வந்துடுவ. உன் கூட நானும் வந்துட்டா, தேனு, அன்பு கூடச் சென்னையில யார் இருப்பா? அம்மாச்சி, தாத்தாவ இனிமேலும் அங்க தனியா இருந்து கஷ்டப்படச் சொல்றியா?” என்று கேட்டான்.
அவன் சொல்வது அனைவருக்கும் சரியென்று பட்டது.
அன்பழகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் நானும் சென்னையில் இருக்கிறேன் என்று அவன் சொன்னதற்கு ஒருமனதாகச் சம்மதம் சொன்னார்கள்.
சுதாகரனுக்கு இன்னும் ஒரு மாத காலம் வேலை பார்க்க வேண்டியிருந்தது. ஆக, ஞாயிறு இரவே மூவரும் சென்னை சென்று விட்டார்கள்.
புதன் இரவு மகன்கள் இருவரும் வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு அவர்களை அலைபேசியில் அழைத்து, தர்மதுரை குடும்பம் தேன்மொழியைப் பெண் கேட்டு வந்ததைப் பற்றிச் சொன்னார் பொற்கொடி.
அதற்குத்தான், “அவனா? அவன் அண்ணனை அடிச்சவனாச்சே?” என்று எகிறியிருந்தான் ஜெயபாலன்.
“இது எப்போடா நடந்தது? என்னா பிரச்சினை?” என்று பொற்கொடி பதறி கேட்க, “ம்மா, அது நான் ஊருல இருக்கும் போது நடந்தது மா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி. சும்மா சின்னச் சண்டை. அவன் அதைப் போய்ப் பெருசா சொல்றான்” என்று தம்பியை முறைத்து, அம்மாவை சமாளித்துப் பதில் சொன்னான் சுதாகரன்.
“அடிக்கிற அளவுக்குப் போய் இருக்குன்னா? என்னடா பிரச்சினை? நீ அந்தத் தம்பி மேல கை வச்சியா?”
“ம்மா..”
“சரிடா.. இப்ப அவங்க வீட்டுக்கு என்ன பதில் சொல்லட்டும்?”
“எனக்கு ஓகே. தேனுவ கேட்டுட்டு நீங்க முடிவு பண்ணுங்க” என்றான் மூத்த அண்ணன்.
“ண்ணா.. அதெப்படி..” என்று ஜெயபாலன் துள்ள, “பேசாம இருடா. என்ன நடந்ததுன்னு தெரியாம..” என்று தம்பியை அடக்கினான் அண்ணன்.
“ஏலே, நல்ல விஷயம் பேசும் போது அபசகுணமா பேசாத டா கூறு கெட்டவனே” என்று சின்னப் பேரனை திட்டினார் முத்தம்மா.
“நான் முடிவு பண்ணிட்டேன். என் பேத்தியை அந்தப் பையனுக்குதான் குடுப்பேன். உங்க சண்டையை எல்லாம் ஒழுங்கா பேசி சரி பண்ணுங்க டா. நம்ம வீட்டு மாப்ளன்ற மரியாதையும், பயமும் இருக்கட்டும்” என்றார்.
“நாம ஊரெல்லாம் தேடினாலும் இப்படியொரு வரன் அமையாது. பேத்தி என் கண்ணு முன்னாடியே இருப்பா. உங்களுக்கு என்னடா. சும்மா முறைச்சுட்டு திரிஞ்சீங்க அம்புட்டுதான் எனக்குப் பொல்லா கோபம் வரும்” என்றார் கண்டிப்பாக.
பெண்ணைப் பெற்றவர்கள் நல்ல வரன் தேட எத்தனை பாடுபட வேண்டும். எவ்வளவு தீர விசாரிக்க வேண்டும். இங்கே அவர்களுக்கு எல்லாமே சாதகமாக இருக்கையில் எதற்காக மறுக்கப் போகிறார்கள்.
மகளைத் திருமணம் செய்து கொடுத்தால், விருப்பட்ட நேரம் சென்று பார்க்கும் தூரத்தில் அவள் புகுந்த வீடு இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இங்கே எட்டி பார்த்து குரல் கொடுக்கும் தூரத்தில் இருக்க, எத்தனை மகிழ்வார்கள்.
அது போக வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் கொஞ்சம் அதிகமாகவே பெருமை பேசுவார்கள். இங்கே மாப்பிள்ளை வெளிநாட்டுக்கு நேரடியாகப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறான் என்பதில் இன்னும் நிறைவுதான்.
“ராசாத்தி என்ன சொல்லுவான்னு யோசிக்காதீங்க மாப்ள. புள்ள நம்ம கண்ணு முன்னாடி இருக்கும். அவங்க குடும்பமும் நமக்குத் தெரியாதவங்க இல்ல. யாரும் கை நீட்டி ஒரு குத்தமும் சொல்ல முடியாத குடும்பம். நீங்க மொத சரின்னு சொல்லுங்க. பேத்தி நல்லா இருக்கறதுதானே நமக்கு முக்கியம். நாம எடுத்து சொன்னா அவ கேட்டுப்பா” என்று முத்தம்மா சொல்ல, அதையே ஆமோதித்துப் பேசினார் பொற்கொடி.
“மணிவண்ணன் கிட்ட ஒரு வார்த்தை ஆலோசன பண்ணிட்டு மேற்கொண்டு நடக்க வேண்டியத பாருங்க” என்றார் கருப்பண்ணசாமி.
சரியென்று தலையசைத்த கந்தன் முதலில் மகளைதான் அழைத்தார்.
“தேனு, இங்க வாடா”
பெரியவர்கள் பேச்சில் மும்முரமாக இருக்கவும், தேன்மொழி அமைதியாக அங்கிருந்து நழுவி இரவு உணவு தயாரிப்பில் இறங்கினாள்.
“தேனு…”
“இதோ வந்துட்டேன் பெரிப்பா..” என்று அவர்கள் முன் வந்து நின்றாள்.
அவர்களின் பேச்சு அவள் காதிலும் தெளிவாகவே விழுந்திருந்தது. ஆனாலும், எல்லாவற்றையும் விளக்கி, அவளின் சம்மதத்தைக் கேட்டு நின்றார்கள் வீட்டினர்.
இதே ஊரில் இருக்கலாம். தன் குடும்பத்திற்கு நெருக்கமாக, மாமா வீடும் பக்கம்தான். இந்தத் திருமணத்தின் வழியாகத் தம்பியை விட்டுத் தூரமாக விலகி செல்ல நேராது என்ற மிக முக்கியமான காரணமும் சேர முழு மனத்துடன் சம்மதித்தாள் அவள்.
தன் முடிவை பெற்றோரிடம் ஒப்படைத்தாள். அதில் அவர்களுக்கு இன்னமும் அதிக மகிழ்ச்சி.
“ராசாத்தி நம்ம விருப்பம்னு சொல்லிட்டா இல்ல. அப்புறம் என்னப்பா, போய் அவ தாய் மாமன் கிட்ட பேசுங்க. நல்ல காரியத்தைத் தள்ளி போட கூடாது. சட்டுபுட்டுனு நாள் பார்க்கலாம்” என்று பரபரத்தார் முத்தம்மா.
மாமா மணிவண்ணன் குடும்பத்திடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க மறுநாளே மதுரை கிளம்பி சென்றார்கள்.
கந்தனுக்கு அந்தக் குடும்பத்தைப் பல வருடமாகத் தெரியும் என்று அவர்களைப் பற்றிச் சொல்லியதில் அவருக்கும் திருப்தி.
மதுரையில்தான் பெண் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவும், மணிவண்ணன் உடனடியாக அறிந்தவர் தெரிந்தவர்களை விசாரித்தார்.
அக்காவையும், மாமாவையும் தொழிலில் இணைத்துக் கொண்டது. மதுரையில் கிளைத் தொடங்கியது எனத் தர்மதுரையைப் பற்றிப் பெருமையாகப் பேசி, நற்சான்றிதழ் வழங்கினார்கள்.
ஆக, மணிவண்ணன், நிர்மலா இருவரும் முழுமனத்துடன் அந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தார்கள்.