தர்மதுரை தன் துள்ளலான நடையுடன் சாலையோரமாக நின்றிருந்த வண்டியை ஆக்கிரமித்தான்.
தேன்மொழி அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே வேரோடியது போல நின்றிருந்தாள்.
அதைக் கண்டதும் வண்டியில் இருந்து இறங்கி வேக எட்டுக்கள் வைத்து அவளிடம் வந்தான்.
இப்பொழுது மந்தகாசமாய் அவன் உதட்டில் அரும்பாகியது புன்னகை. அவளைக் கண்களால் களாவடிய சிரிப்பு, காதலாய் காந்தமாய் அவளை ஈர்த்தது.
‘என்ன?’ என்பது போல அவள் பார்க்க, மெதுவாக அவள் உயரத்திற்குக் குனிந்து, அவள் முன் முகம் நீட்டினான்.
தேன்மொழி தடுமாறி தலையைப் பின்னுக்கு இழுத்து, “என்ன பண்றீங்க?” என்றாள் மருண்ட விழிகளுடன்.
“திருநீறு பூசி விடு” என்று தலை சாய்த்தான்.
வேட்டியை நன்றாகக் கீழிறக்கி, இரு கைகளையும் பின்னே கட்டி பவ்யமாக, தோரணையுடன் அவள் முன் நின்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
விழிகளை மெல்ல நாலா பக்கமும் சுழற்றி அவள் தடுமாற, பூக்களோடு சேர்த்து அவள் சுமந்திருந்த சிறிய கூடையில் இருந்து அவனே கோவில் பிரசாதத்தை எடுத்தான். என்ன செய்கிறான் என்று அவள் உணரும் முன்னே தன் வலக்கரத்தை முன்னே கொண்டு வந்து அவளின் வலக் கரத்தை மிக இயல்பாக பற்றி இரண்டு விரல்களில் திருநீறு எடுத்து, அவள் விரலாலேயே அவன் நெற்றியில் பூசிக் கொண்டான்.
“என்ன பண்றீங்க? யாராவது பார்க்கப் போறாங்க”
“பார்த்திட்டு போறாங்க. என்ன இப்போ? ரெண்டு மாசம் கழிச்சு இதே இடத்துல வச்சு நீ எனக்கு ஊட்டி விட்டா கூட ஒருத்தனும் கேள்வி கேட்க முடியாது”
“ஆசதான். இன்னும் எங்க வீட்ல..” என்று கோபமாக அவள் ஆரம்பிக்க, “உனக்குச் சம்மதம் இல்லாம இப்படி என் முன்னாடி நிக்க மாட்ட என் சிலுப்பி. நான் குடுத்த பூவையும் வாங்கியிருக்க மாட்ட. எனக்குத் தெரியாதா? மாமனை கட்டிக்கச் சம்மதம்னுதான் மல்லிப்பூ மலர்ந்து நிக்குதுன்னு இந்த மாமனுக்குப் புரியாதா?” வேண்டுமென்றே சீண்டினான். அதில் உண்மையும் இருக்க, வெட்கத்தில் மேலும் மலர்ந்தது மல்லிகை. ஆனாலும், வெளியில் முறைப்புதான் பதிலாக வந்தது.
கோவிலில் வைத்து அவளுக்கும் உண்மையைத் தவிர வேறு பேச விருப்பமில்லை. ஆக, “என் தம்பியும், அண்ணனுங்களும் உங்களுக்கு ஓகே சொன்னாதான்..” என்றவளை இப்போது அவன் பார்வையால் சுட்டான்.
“அடியே, சிலுப்பி. நான் உன்னைய கட்டிக்கப் போறேனா இல்ல உன் அண்ணே, தம்பிய கட்டிக்கப் போறேனா?”
அவன் கேள்விக்கு, “ம்ம்..” என்று உதடு சுழித்து முகம் திருப்பினாள்.
“அப்போ என்னைய கட்டிக்க உனக்குச் சம்மதம்னு சொல்ற. அப்படித்தானே?”
“ஆ.. நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று கண்ணை விரித்தவளை கண்டு புன்னகையுடன் கண் சிமிட்டினான்.
“சரி, உன் வழிக்கே வருவோம். உன் பாச மலருங்க சரின்னு சொல்லிட்டா.. மல்லிகை மாமன் மார்பில் சேர..”
கண்ணில் கூத்தாடிய குறும்புடன் ரகசியக் குரலில் பேசியவனைப் பார்த்து அவள் விழிகள் அதிர்ச்சியில் மொத்தமாக விரிந்தது.
“கோவில்ல வச்சு எப்படிப் பேசுறீங்க?”
“தப்புதான். இனிமே தனியா வேற எடத்துல பேசிப்போம். என்னா?” என்றான் உதடு வளைத்து.
அவன் மார்பில் கை வைத்துப் பின்னால் தள்ளி விட்டாள். அவள் கைப் பதித்த இடத்தில் தன் கை வைத்து அழுத்தினான்.
“அன்னைக்கு எங்க அண்ணனை எதுக்கு அடிச்சீங்க?”
“ம்ம், மல்லில ரோஜா முள்ள போடுறாளே..” என்று புலம்பினான்.
அவன் சொன்னது கேட்காமல், “என்ன?” என்று கேட்டாள்.
“சிலுப்பிச் சீனையே மாத்தாத..” என்று சலித்தவன், “இத்தன வருஷமா என்னைய முறைச்சுட்டு திரிஞ்சியே, ஒரு நாளாவது நான் ஏன் அடிச்சேன்னு உங்கண்ணனை கேட்டியா?” என்று கேட்டான்.
“நீ கேட்டிருக்க மாட்ட. உனக்கு அண்ணே மேல அம்புட்டுப் பாசம். ம்ம், இருக்கட்டும், இருக்கட்டும். உங்கண்ணனும் காரணம் சொல்லல இல்ல? அப்போ அத அத்தோட விட்டுடணும். புரிஞ்சுதா?” என்று சிறு பிள்ளைக்கு விளக்கிச் சொல்வது போலக் கேட்டான். கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு முந்தைய நிகழ்வு.
அன்று அவனது கோபத்தில் நியாயமிருந்தது. ஆனால், அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது.
அதனால், “உன் அண்ணனுங்க ரெண்டு பேரும் கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிப்பானுங்க. நீ கவலைப்படாம வேலைய பாரு” என்று அவள் கன்னத்தில் தட்டினான்.
“வர்றியா வீட்ல ட்ராப் பண்றேன்? சரி முறைக்காத” என்றவன் கண்கள் சிரிக்க, அவள் இதழ்கள் லேசாகப் பிரிந்து பின் இறுகியது.
தேன்மொழிக்கு வீடு வந்த பின்பும் படபடப்பு குறையவில்லை.
வீட்டுப் பெரியவர்களிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
அவளுக்கு நினைவு தெரிந்து, அவள் வாழ்வில் எத்தனையோ இழப்புகள் நேர்ந்திருந்தாலும், அது அவளை அதிகமாகத் தாக்காத வண்ணம் எப்போதும் பாசமான உறவுகள் அவளுக்குப் பாதுகாப்பாக நின்றிருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக நேசத்தின் சுவையை அறிகிறாள்.
தன்னை விரும்பி மணக்க கேட்டது மட்டுமில்லாது, தன்னிடமே நேசத்தை வெளிப்படுத்தியவனின் மேல் பூங்கொடியாய் படரத் தொடங்கியது பூவையின் மனம்.
தர்மதுரை, “மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ..” என்ற பாடலை விசிலடித்தபடி வீட்டினுள் நுழைந்தான்.
“தொர தம்பி..”
“என்னம்மா..”
“ஏய்யா ராசா..”
“என்ன அப்பத்தா..?”
“அத்த கொஞ்சம் பேசாம இருங்க. வெள்ளிக்கிழம அதுவுமா ஏதாவது சொன்னீங்க, எனக்குப் பொல்லா கோபம் வரும்” என்ற மருமகளைக் கண்களால் எரித்து, தன் முகத்தைத் தோளில் இடித்துத் திருப்பிக் கொண்டார் பவுணு அம்மாள்.
“என்ன அப்பத்தா உன் பிரச்சினை?” பேரன் கோபமாகத்தான் கேட்டான்.
“ஹா.. என் பேச்ச கேட்க இந்த வீட்ல யாரு இருக்கா? பேத்தியை கட்டலாம்னு நான் சொல்றது இங்க யாரு காதுல விழுது…”
“அப்பத்தா..” பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக அழைத்தான்.
“யத்தே, உங்க பேரனுக்குத் தேன்மொழியைதான் பிடிச்சுருக்குது. அவங்க வீட்ல பொண்ணும் கேட்டு அவங்க சரின்னும் சொல்லி, பரிசத்துக்கு நாள் பார்த்துட்டுருக்க நேரத்துல..”
“என்னம்மா சொல்ற?” ஆனந்த அதிர்ச்சியுடன் கேட்டான் தர்மதுரை.
சர்ரென்று கார் ஒன்று சத்தமாக அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்த அன்புக்கரசி முகத்தில் அப்படியொரு பூரிப்பு.
“தேன்மொழி வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க டா” என்று ஆனந்த கூச்சலிட்டாள்.
“நம்மள பொண்ணு பார்க்க வரச் சொல்லியிருக்காங்க டா”
“ஆமா, நாம அவள பார்த்ததில்ல பாரு” என்று நொடித்தார் அப்பத்தா.
“அப்பத்தா சொல்றதும் சரிதானே மா? நாம பொண்ண பார்த்ததில்லயா என்ன? நேரா பரிசம் போட்டுடலாம், என்ன சொல்றீங்க?” என்று கேட்டான் அவன்.
“டேய், பொறும டா” என்று தம்பியின் தோளில் அடித்தாள் அன்பு.
தர்மதுரை குடும்பமும், தேன்மொழியின் பெரியம்மா பொற்கொடியின் குடும்பமும் நெருங்கிய சொந்தமெல்லாம் கிடையாது. ஆனால், பல தலைமுறைகளாக இதே ஊரில்தான் வசிக்கிறார்கள். ஆக, இரண்டு குடும்பத்திற்கும் ஒருவரையொருவர் நன்றாகத் தெரியும். நல்ல பழக்கம் இருந்தது.
அங்காளி, பங்காளி முறையில் பெண்ணெடுத்தது, கொடுத்தது என்ற வகையில் உறவுமுறை நீடித்தது.
மற்றபடி தர்மதுரை, தேன்மொழிக்கு உரிமைப்பட்ட மாமன் முறையெல்லாம் வராது. ஆனால், கட்டும் முறை உள்ள மாமன் மகன்தான்.
அதனாலேயே துணிந்து பெண் கேட்டார்கள்.
அந்த வாரத் தொடக்கத்தில் மதுரை சென்ற அன்பு, புதன்கிழமை நல்ல நாளாக இருக்கவும் திண்டுக்கல் வந்து விட்டாள்.
அன்பு, திலகவதி இருவரும் ரோஜாவை தூக்கி கொண்டு பூ, பழத்துடன் நேராகத் தேன்மொழி வீடு சென்று பெண் கேட்டார்கள்.
ஒரே ஊரில் இருந்தாலும் அடிக்கடி வீடு சென்று கதை பேசுவதற்கு அங்கே யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனால் அதிசயமாக வீடு வந்தவர்களை வரவேற்று உபசரித்தார் பொற்கொடி.
அன்று பார்த்து மாமா வீட்டிற்குச் சென்றிருந்தாள் தேன்மொழி.
“தேனுவ பார்க்க வந்தோம்” என்று அவர்கள் சொல்லவும், “அவ மதுர வரைக்கும் போய் இருக்கா. அவங்க மாமா வீட்டுக்கு. சாயந்தரம் வந்துடுவா. என்னா விஷயம்னு சொல்லுங்க. மக வந்ததும் நானே உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்றார் பொற்கொடி.
அப்பொழுது அன்புக்கரசி எடுத்து வைத்த மல்லிகை பூப்பந்தை யோசனையாகப் பார்த்தார் பொற்கொடி.
“தேன்மொழியை எங்க மகனுக்குக் கேட்டு வந்திருக்கோம்” பளிச்சென்ற புன்னகையுடன் சொல்லி விட்டார் திலகவதி.