அப்பொழுது தம்பியை தேடி மாடிக்கு வந்த அன்புக்கரசி கண்டது அந்தக் காட்சியைதான். அவளையும் தொற்றிக் கொண்டது அந்தச் சிரிப்பு. மனம் குளிர தம்பியை ஆதூரமாகப் பார்த்தாள்.
அவனது விழியீர்ப்பு விசையின் விளைவாக லேசாகத் தலையைத் திருப்பிய தேன்மொழியின் கண்ணிலும் அக்காட்சி விழ, சிரிப்பில் பிரிய போன இதழ்களை இழுத்துப் பிடித்துக் கொண்டு தோழியிடம் பேசினாள்.
“நீ இங்கனயே நின்னு அந்தப் புள்ளயவே பார்த்திட்டு இருன்னு சொல்ல எனக்கும் ஆசதான் டா. ஆனா, உங்க மாமா கால் பண்ணி கத்துறார். இப்ப கிளம்புனாதான் சரியா இருக்கும். போவோமா டா?” என்று கேட்டாள் அன்புக்கரசி.
“அம்மாப்பா பேசிட்டு சொல்லட்டும் டா. நான் உடனே வந்துடுறேன் என்னா?”
“ம்ம் செரிக்கா”
“அதுவரைக்கும் அந்தப் புள்ளய வம்பிழுக்காம இருடா”
“நான் எப்போக்கா அவள வம்பிழுத்தேன்?”
“இல்லடா, சும்மா சொல்லி வைக்கறேன்” என்றாள் சிரிப்புடன்.
“அந்தப் புள்ள பேச்சுக்கே நான் போகல போதுமா?” என்றான் வீம்பாக. ஆனால், அவன் கண்களில் கூத்தாடிய குறும்பு வேறு செய்தி சொன்னது.
அடுத்த அரை மணி நேரத்தில் மதுரையை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் காரில் ஏதேதோ பாடல்கள் ஒலிக்க, அவன் உதடுகள் நிறுத்தாமல், “செம்பருத்தி பூவே.. உள்ளம் அள்ளி போனாய்..” என்று தொடர்ச்சியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அதைக் குறுநகையுடன் கவனித்தாள் அக்கா.
திலகவதிக்கு ஆர்வ மிகுதியில் ஒரே பரபரப்பு. அவரால் ஓரிடத்தில் நிதானித்து நிற்க முடியவில்லை. மகள் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் அவளை அலைபேசியில் அழைத்து, “தம்பி நெசமாதான் சொல்றானா அன்பு? அவன் தேன்மொழியை விரும்பறானா? எப்போல இருந்துன்னு உன்கிட்ட எதுவும் சொன்னானா?” என்று தோண்டி துருவி கொண்டிருந்தார்.
“அவங்க வீட்ல சரின்னு சொல்லுவாங்க தானே? தேனு வேலைக்குப் போகணும்னு சொல்றா. அவங்களும் உள்ளூர்ல பொண்ணு குடுக்க மாட்டோம்னுலாம் சொல்ல மாட்டாங்க இல்ல அன்பு?”
“ஏன் மா, இப்படிப் போட்டு மண்டையை உடைச்சுக்கற? நீ அப்பா வந்ததும் பேசிட்டு சொல்லு. நேரா அவங்க வீட்டுக்கே போய்ப் பேசினா தெரியப் போகுது என்னா சொல்லுவாங்கன்னு” என்று அம்மாவை சமாதானப்படுத்தி அலைபேசியை வைத்தாள் அன்புக்கரசி.
அவ்வளவு நேரமும் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பத்தாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
இரவு கணவர் வீடு வரவும் விஷயத்தை அவரிடம் சொல்லி விட்டார் திலகவதி.
சுந்தரராஜன் எப்போதும் மனைவி மக்கள் விருப்பத்துக்கு எதிராக நிற்பது கிடையாது. அதிலும் வாழ்க்கை முழுமைக்குமான திருமணத்தில் மகனின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்பாரா என்ன?
“நீ அவங்க வீட்ல பேசு திலகா. என்னைக்குப் பொண்ணு கேட்டு வரட்டும்னு கேளு. இப்போ பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற எண்ணம் இருக்கா என்னானு விசாரிச்சுட்டு, அப்புறமா பேசு. நம்ம புள்ள ஆசைப்படுறான், கல்யாணத்தை உடனே வைக்கணும்னு கட்டாயம் இல்லன்னு சொல்லு. இப்போ பேசி, பூ வச்சுப் பரிசம் போட்டுட்டு பொறுமையா அவங்க சொல்ற தேதில கல்யாணத்தை வச்சுக்க நமக்குச் சம்மதம்னு சொல்லு” என்றார் முடிவாக.
அவரின் முடிவில் குடும்பமே மகிழ, அப்பத்தாவுக்கு அத்தனை உடன்பாடில்லை.
“அந்தப் புள்ளையா?” என்று கேட்டு முகம் சுளித்தார்.
“என் பேரனுக்கு என்ன குறைன்னு அந்தப் புள்ளய கட்டணும்னு எல்லாம் சேர்ந்து திட்டம் போடுறீங்க?” என்று கோபமாகக் கேட்டார்.
“அந்தப் புள்ளைக்கு மட்டும் என்னா குறையாம் அத்தே?”
“ஹா..ங்” என்று ராகம் இழுத்து, “அப்பன் ஆத்தா இல்லாதவள போய் என் பேரனுக்குக் கட்டுவீங்களா? நல்லா இருக்கே கதை” என்று நொடித்தார்.
“என்னா ஆத்தா இப்படிப் பேசுற?” என்று சுந்தரராஜன் அம்மாவை கடிய, “அப்பன் ஆத்தாலாம் இருக்காங்க அவளுக்கு..” என்று பட்டென்று பதில் கொடுத்தார் திலகவதி.
“யாரு அவள எடுத்து வளர்த்தவங்கள சொல்றியா? அவங்க எத்தனை நாளைக்கு இவள பார்ப்பாங்க? அவளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சு கழிச்சு விடத் தானே பார்ப்பாங்க? அப்பன் ஆத்தா இருந்தா போய் நிக்கலாம். அதுக்கு நாதியில்லாதவள..”
“ஆத்தா..”
“நான் நெசத்த தானேயா சொல்றேன். என் மேல ஏன் கோபப்படுற? இவள பொண்ணடுத்தா நம்ம சொந்தக்காரன் எல்லாம் இதைத்தான் கேட்பான். என் பேரனுக்கு என்னா குறை? ராசாவாட்டம் இருக்கான். வெளிநாட்டுக்கு பூ அனுப்பறான். உங்க தங்கச்சி மவள கட்ட விருப்பம் இல்லன்னா விடு. வெளில நல்ல எடமா பார்ப்போம். தொரைக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கறோம்னு ஊருக்குள்ள தெரிஞ்சா போட்டி போட்டுட்டு பொண்ணு கொடுப்பானுங்க. நீயென்னனா..” என்று சடைத்துக் கொண்டார்.
“அந்தப் புள்ளையும் நல்லா வசதிதான். நக நட்டு, நில புலம்னு அது பேர்லயும் நிறையா இருக்கு அத்த”
“அதை வச்சுட்டு என்னா பண்ண? அப்பன் ஆத்தா இல்லயில்ல?” என்று அதிலேயே அடமாக நின்றார் அப்பத்தா.
தர்மதுரை வீடு நுழைகையில் அவன் காதில் அந்தப் பேச்சுதான் விழுந்தது.
“அப்பத்தா.. என்னா பேசுற?” குரலில் கோபம் கொப்பளிக்கக் கடுமையாகக் கேட்டான்.
அவனிடமும் அதையேதான் சொன்னார் அவர்.
“விடு தம்பி. அப்பத்தா கிட்ட நான் பேசிக்கறேன். நீ போய்ச் சாப்பிடு, போ” என்று மகனை சரிக்கட்டி உள்ளே அனுப்பினார் சுந்தரராஜன்.
“உங்க அப்பத்தா கெடக்கு. என்னத்தயாவது வீம்புக்கு பேசும். உங்கப்பா சரின்னு சொல்லிட்டார். அம்மா பார்த்துக்கறேன், விடுடா” என்ற அம்மாவின் வார்த்தைகள் அவன் மனத்தில் கொந்தளித்த புயலை அடக்கியது.
திலகவதிக்கு தேன்மொழியைப் பிடிக்கும். சிலர் மேல் இயல்பாகவே ஒரு பிரியம் வரும் அல்லவா? அது போல.
அவள் மேல் அளவு கடந்த பிரியம் உண்டுதான். அவளைப் பார்த்தாலே சிரித்துப் பேசுவார். ஆனால், ஒருநாளும் அவளைத் தன் மருமகளாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருந்ததில்லை, வந்ததுமில்லை. ஆனால், இன்றைக்கு மகன் அதைச் சொன்ன பிறகு, அந்த எண்ணம் மட்டுமே அவர் மனத்தில் நீங்காதிருந்தது.
அதைச் செயலாற்றி முடிக்கும் வரை அவரால் ஓய்ந்து அமர முடியாது என்பது நிச்சயம்.
மறுநாள் அப்பத்தாவிடம் பொறுமையாகப் பேரனின் விருப்பத்தை எடுத்துச் சொன்னார் திலகவதி.
“நான் பிடித்த முயலுக்கு நான்கரை கால்” என்று தவ்வி கொண்டிருந்தார் அவர்.
அவருக்குத் தன் பேத்தியை வேண்டாம் என்று சொன்ன கோபம். வீணாவும் மாமனை மணக்க விரும்பவில்லை என்று எடுத்துச் சொன்னாலும் அதைக் காதில் எடுத்துக் கொள்வதாக இல்லை அவர்.
“நான் இதுக்குச் சம்மதிக்க மாட்டேன். என் பேச்சை மீறி பொண்ணு கேட்டு போய்டுவீங்களா நீங்க?” என்றார் கோபமாக. அவரையும் மீறி போகத்தான் செய்தார்கள்.
அங்கேயேயும் ஒருத்தன் முட்டுக் கட்டையுடன் அமர்ந்திருந்தானே.
ஜெயபாலன் எனும் நந்தி.
“தர்மதுரையா? அவன் அண்ணனையே அடிச்சவன் இல்ல? அவனுக்குக் கை நீளமாச்சே? கோபம் வேற சுள்ளுனு வருமே?” என்று பெரிய கட்டையைத் தூக்கி தர்மதுரை மகா பிரபுவின் குறுக்கே போட்டான்.
தேன்மொழி ஊரில் இருந்தால் வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் குளக்கரை கங்கையம்மன் கோவிலுக்குச் சென்று விடுவாள்.
அன்று பொற்கொடிக்கு வீட்டில் வேலையிருந்தது. அவளைத் தனியாக அனுப்ப அவர் யோசிக்க, தோழி கீதாஞ்சலியுடன் கோவிலுக்கு வந்திருந்தாள் அவள்.
முன்மாலை பொழுது. அரை மணி நேரம் நிதானமாக அம்மனை வணங்கி, சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கோவிலுக்கு ஆட்கள் வரத் தொடங்கவும் வீட்டுக்கு செல்ல எழுந்தாள்.
அங்கிருந்து வெளியில் வந்து தற்செயலாகத் திரும்பி குளத்தைப் பார்த்தவள் கண்கள் மெல்ல மெல்ல அதிர்ச்சியில் நந்தியா வட்டையாக விரிந்தது.
குளத்தின் ஓரமாக ஆழம் தொடங்கும் இடத்தில் கும்பலாக இருந்த அல்லி, செந்தாமரை மொட்டுக்களைத் தண்ணீரில் இறங்கி மடித்துக் கட்டிய வேட்டியுடன் பறித்துக் கொண்டிருந்தான் தர்மதுரை.
அவள் விழிகள் பூவில் அமர்ந்த வண்டாக அசையாமல் அவனையே பார்த்திருக்க, ஈரம் சொட்ட சொட்ட மேலெழுந்து வந்தான்.
இப்போது அவன் கண்கள் நேரடியாக அவள் கண்களைச் சந்தித்தது. பட்டென்று இமை தாழ்த்தி நகரப் போனாள்.
“ம்ம், ஹ்ம்ம்.. நீ பேசிட்டு பொறுமையா வா தேனு. நான் வீட்டுக்கு போறேன்” என்று சிரிப்புடன் கிண்டலாகச் சொன்ன கீதாஞ்சலி, “ஏய் நில்லுப்பா” என்று தேன்மொழி கத்தியதை பொருட்படுத்தாமல் இறங்கி சென்றிருந்தாள்.
கிராமத்து காற்றுக்கும் ஊர் நடப்பு தெரிந்து விடும் எனும் போது தேன்மொழியின் தோழிக்கு விஷயம் தெரியாமல் இருக்குமா?
தர்மதுரை வீடு அவளைப் பெண் கேட்டது தேன்மொழிக்கும் தெரியும். ஆனால், அவள் வீட்டினர் இன்னும் சம்மதிக்கவில்லையே. இப்பொழுது இவனை எப்படி எதிர்கொள்ள? என்ன பேசுவான்? என்ற எண்ணத்துடன் அவள் பார்த்திருக்க, அவளைப் போல எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளை நெருங்கினான் அவன்.
தேன்மொழியும் தோழியைப் பின் தொடரப் போக, “தேன்மொழி” என்றழைத்த கரகரக் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
“என்ன?” கண்களை மட்டும் அவன் புறமாகத் திருப்பிக் கேட்டாள்.
“சாமி கும்பிட வந்தியா?”
“அப்புறம் சாப்பிடவா இங்க வருவாங்க?”
“ம்ம், இல்லத்தான். சிலருக்கு பூ குடுக்க வருவாங்க. சிலர் பூ வாங்க வருவாங்க” என்றான் கண்களில் ஒளிர்ந்த குறும்புடன். ஆனால், குரலில் ஒரு மாற்றமும் இல்லை.
“என்னாது?” என்று அவள் அதிர, அவன் கையில் இருந்த மொத்த பூக்களையும் அவளிடம் நீட்டினான்.
தேன்மொழி தயங்க, அவன் தயக்கமே இல்லாமல் அவள் கைப் பிடித்துப் பூக்களை அழுத்தி வைத்து, அவள் விரல்களால் பூக்களைப் பிடிக்கச் செய்தான்.
“என்ன பண்றீங்க?” கோபமாகப் பதறி முறைத்தாள்.
“முறை பொண்ணுக்கு மட்டுமா, முறைக்கற பொண்ணுக்கு கூடப் பூ குடுக்கலாம்”
“நான் முறைச்சேனா உங்கள?”
“அப்போ இல்லையா?” வேட்டியை முழுதாக இறக்கி விட்டு, அதன் நுனியை மட்டும் பிடித்து நின்று கேட்டான்.
அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவள், “இப்படித்தான் ஊர்ல எல்லாருக்கும் பூ குடுப்பீங்களா?” என்றாள் கோபமாக.
“ஊருக்கா? யாருக்கும் காசு வாங்காம நான் பூ குடுக்குறதில்ல. ஒருத்தியை தவிர..” என்றான், அவள் முகத்தில் இருந்து கண்களை விலக்காமல்.
“யார் அது? ஒருத்தி? நான் ஊருக்கு வந்துதுல இருந்து எனக்கும் பூ குடுக்கறீங்களே?”
“உன்னதான் பூவுக்குக் கணக்கு வச்சுக்கோ, நான் சேர்த்து வாங்கிக்கறேன்னு சொன்னேன்ல?” உதட்டில் கள்ளத்தனமாக வெளிப்பட்ட சிரிப்பை இரு விரல் கொண்டு மீசையை நீவி மறைத்தான்.
“நான் ஏன் கணக்கு வைக்கணும்? நீங்க ஒன்னும் எனக்குப் பூ குடுக்க வேணாம்”
“ம்ஹும், உனக்கு மட்டும்தான் பூ குடுப்பேன்.” என்றான் அழுத்தமாக.
“ஊருக்கே பூ சப்ளை பண்ணாலும் உன் ஒருத்திக்கு மட்டும்தான் ஆசையா பூ குடுத்திருக்கேன்.” என்று சொல்லி கண்ணால் அவள் கையைச் சுட்டிக் காட்டினான்.
“இனியும் பூ குடுப்பேன். நீ வேணாம்னுலாம் சொல்ல முடியாது”
“நீங்க குடுத்தா நான் வாங்கிடுவேனா?” என்றாள் முறைப்புடன். அவளையும் மீறி கண்களில் குழப்பம் சூழ, குரலில் தடுமாற்றம் தெரிந்தது.
“என் கையால பூ வச்சு விட உரிமைவுள்ளவளுக்கு மட்டுந்தானே நான் பூ குடுக்க முடியும்” என்று சொல்லி, அவள் கையில் கொத்தாகப் பிடித்திருந்த செந்தாமரை மொட்டுக்களை மென்மையாக வருடினான். அவள் கன்னத்தையே வருடுவது போல. அவன் கண்கள் அதைத்தான் செய்து கொண்டிருந்தது.
“நீங்க ஏன் எனக்கு..” கேள்வியைக் கேட்க முடியாமல் திணறினாள்.
“நான் மட்டும்தான் உரிமையா உனக்குப் பூ வைக்க முடியும். உங்க வீட்ல நாள் பார்த்துச் சொன்னதும் உனக்குப் பிடிச்ச மதுர மல்லியோட வர்றேன். அந்த நீள பின்னலை மறைச்சு பூ வச்சு விட… சிலுப்பி.. சரியா?” என்று கண் சிமிட்டி போனான்.
தேன்மொழி ஆவென்று அதிர்ச்சியுடன் அவனையே பார்த்து நின்றாள்.