அன்புக்கரசியின் கேள்விக்கு, “தேன்மொழி கண்டிப்பா சம்மதம் சொல்லுவா கா” என்று தர்மதுரையை உறுதியாகச் சொல்ல விடாமல் தடுத்தது தேன்மொழியின் முறைப்பு.
திடீரென்று இவன் தன்னைப் பார்க்கும் பார்வையில் ஏதோ மாற்றம் இருக்கிறதோ? என்று பெண்மைக்கே உரிய விழிப்பு வர, தேன்மொழியின் முறைப்பின் அளவு கூடிப் போனது. அவனைக் கண்டு முன்னைக் காட்டிலும் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
தேன்மொழியைத் தம்பி விரும்புகிறான் என்று தெரிந்த பின் அன்புக்கரசி அவளை அப்படியே போக விட்டு விடுவாளா என்ன?
“வா, தேன்மொழி. என்ன இந்தப் பக்கம்? எங்க வீட்டுக்குத் தானா?” என்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவளிடம் கேட்டாள்.
“இல்ல அண்ணி, என் ப்ரெண்ட்ட பார்க்கப் போறேன். கீதாஞ்சலி வீடு இங்க தானே இருக்கு?” என்று கேட்டாள்.
“கீதாஞ்சலியா? கண்ணன் மாமா மகளா?”
“ஆமா அண்ணி”
“அந்தா எதுத்தாப்ல ஆறாவதா இருக்க வீடு” என்று அவளுக்குக் கைக் காட்டிய அன்புக்கரசி, படபடவெனக் கீழே இறங்கி சென்றாள்.
“இவ்வளோ தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி? வீட்டுக்குள்ள வா, டீ குடிச்சுட்டு போவ”
“இல்ல இருக்கட்டும் அண்ணி. எனக்காக ப்ரெண்ட் வெயிட் பண்ணிட்டு இருப்பா.” என்றாள் சாலையில் நின்றே.
மாடிப் படியின் தொடக்கத்தில் நின்று முன்னே சாய்ந்திருந்தவனின் கண்கள் மொத்தமாகப் பெண் மேல் சாய்ந்திருந்தது. அதை அவளும் உணர்ந்திட உள்ளத்தில் ஓர் அசௌகரியஉணர்வு சூழ்ந்தது. விழிகளை அவன் பக்கமே திருப்பாமல் சிலை போல நின்றிருந்தவளை வருடியது அவன் பார்வை.
இப்பொழுது அவன் பூ கொடுக்கும் அவசியமின்றி நீள கூந்தலின் இரு புறமும் சீராகத் தொங்கியது நெருங்கத் தொடுத்த மல்லிகைச் சரம். அந்தப் பூவும் காலையிலேயே அவள் வீட்டுக்கு கொடுத்தனுப்பியதும் திலகவதிதான். அதையும் அவன் தானே கொண்டு போய்க் கொடுத்தான்.
“நீ ஒன்னும் எனக்குப் பூ குடுக்க வேணாம். நான் ஏற்கனவே பூ வச்சுருக்கேன்” என்பது போல அவள் தலையைச் சிலுப்ப, அவன் கண்களில் ரசனை கூடியது.
இத்தனை நாள் என் கண்ணில் விழாமல், என் கவனத்தைச் சிதறடிக்காமல் எங்கிருந்தாள் இவள்? என்ற யோசனை அவனுள் ஓட அப்படியே அசையாமல் நின்றிருந்தான்.
“தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி. அம்மாச்சி சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அதான். கண்டிப்பா நான் இன்னொரு நாள் வர்றேன்” என்று கண்களைச் சுருக்கி கெஞ்சலாகச் சொன்ன கண்களில் கட்டுண்டிருந்தான்.
அவளைப் பார்க்கப் பார்க்க அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது. குப்பென்று மல்லிகை மணம் நெஞ்சமெங்கும் நிறைந்தது போன்ற பிரம்மை. அவளைப் பார்வையால் பின் தொடராமல் இருக்க முடியவில்லை அவனால். இந்த உணர்வு அவனுக்குப் புதிது. ஆனால், நிரம்பவும் பிடித்தது.
“என்ன இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வர மாட்டேங்கற தேன்மொழி?” என்று கோபித்த அன்பு, “அம்மா, இங்க வந்து பாரு, யார் வந்திருக்காங்கன்னு..” என்று உள்ளே பார்த்துச் சத்தமாகக் குரல் கொடுக்க, சட்டென எட்டி அவளின் கைப் பிடித்தாள் தேன்மொழி.
“அச்சச்சோ அண்ணி, அத்தயக் கூப்பிடாதீங்க. ரோஜாவ பார்க்கவாவது கண்டிப்பா நான் வருவேன்”
“ரோஜா குட்டி, இங்க வா தங்கம். உன்னைய அத்த கூப்பிடுறாங்க” மேலிருந்து மாமன் குரல் கொடுக்க, மயிலும் சடக்கெனத் திரும்பி மாமனை முறைத்தது.
“ஏ தேனு.. என்னடி இவ்வளவு நேரம்..” என்று கீதாஞ்சலி அவள் வீட்டு வாசலில் நின்று கத்த, “அதோ என் ஃப்ரெண்ட்டே கூப்பிட்டுட்டா அண்ணி. வரட்டா?” என்று ஓடி விடத் தாயாராக நின்றவளை தடுக்கவில்லை அன்புக்கரசி.
அவளுக்கும் தேன்மொழியைப் பிடித்திருந்தது.
அவள் இயல்பிலேயே கண்ணைத் துடைத்துப் பார்க்க வைக்கும் அழகிதான். இப்பொழுது அவளது பேச்சு, சிரிப்பும் மனத்தைக் கொள்ளைக் கொண்டது. ஆக, அன்பு தம்பியை திரும்பிப் பார்த்தாள்.
தெருவில் செல்லும் தேரை பார்ப்பது போலத் தன் மனங்கவர்ந்தவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“டேய் தொர..”
“என்னக்கா, எப்போ போய்ப் பொண்ணு கேட்கலாம்?”
“என்னடா இப்படிப் பறக்கற? அவ என்னன்னா உன்னைய திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்கறா. நம்ம வீட்டுக்குள்ளயும் வர மாட்டேங்கறா?”
“அதெல்லாம் முறையா வருவா, நம்ம வீட்டுக்கு..” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.
“என்ன தைரியத்துல இத சொல்ற நீ?”
“நீயும், அம்மாவும் இருக்கத் தைரியத்துலதான் கா” என்றான் மாறா புன்னகையுடன்.
“அதுசரி” என்று தம்பியை போலியாக முறைத்தாள்.
அந்நேரம் கையில் பேத்தியை சுமந்தபடி, “கூப்பிட்டியா அன்பு?” என்று வாசலில் நின்று கேட்டார் திலகவதி.
“ரொம்ப லேட்டா வந்து கேட்கறம்மா”
“என்னாடா லேட்டு? எதுக்குக் கூப்பிட்டன்னு சொல்லுடா. எனக்கு வேல கெடக்கு”
“ம்ம்மா, உள்ள வா. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று ஓடிப் போய் அம்மாவின் கைப் பிடித்து அவரிடம் ரகசியம் போலச் சொன்னாள் அன்புக்கரசி.
“என்னாது அன்பு?” என்று ஆர்வமாகக் கேட்டார் அம்மா.
“நம்ம தேன்மொழி இல்ல தேன்மொழி?”
“ஆமா அவளுக்கு என்ன?” அவளைப் பற்றிப் பேசும் போதே அவர் முகத்தில் கனிவு வந்திருந்தது.
“அவள துரைக்குக் கேட்போமா? கொடி அத்த வீடு, அவள நம்ம வீட்ல குடுப்பாங்களா?”
“நீ என்ன சொல்ற அன்பு?” அவர் காதில் சரியாக விழுந்தாலும், அதை மனத்தில் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல், திணறி கேள்விக் கேட்டார்.
“தேன்மொழியைத் தம்பிக்கு கேட்கலாம்னு சொல்றேன்ம்மா. உனக்குப் புரியலையா?”
“நம்ம தொரைக்கா?”
என்று மகனைப் பார்த்துக் கேட்டார். மெல்ல முன்னே வந்து அம்மாவின் கையில் இருந்த ரோஜாவை உருவி தோளில் போட்டுக் கொண்டான்.
“அப்புறம், உன் புள்ளைக்குத் தான்மா கேட்கலாமான்னு கேக்கறேன்.”
“அந்தப் புள்ளைய கட்டிக்க இவன் ஒத்துப்பானா?”
“அந்தப் புள்ளைய பொண்ணு கேளுன்னு எங்கிட்ட சொன்னதே இவன்தான் மா. உம்புள்ளதான்” என்றாள் சிரிப்புடன்.
“எந்தப் புள்ளைய பொண்ணு கேட்கணும்?” அதுவரை தொலைக்காட்சியில் கவனமாக இருந்த அப்பத்தா திரும்பி சந்தேகம் கேட்க, அவருக்குப் பதில் சொல்லும் நிலையில் யாரும் அங்கில்லை.
திலகவதி நம்ப இயலா அதிர்ச்சியுடன் மகனைப் பார்த்தார்.
“அக்கா என்ன சொல்றாடா தொர? தேனுவ விரும்பறியா நீ? அம்மாகிட்ட சொல்லவே இல்லையே தம்பி..”
“ம்மா, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நான் அந்தப் புள்ளைய பல வருஷம் கழிச்சு இப்பத்தான் பக்கத்துல பாக்கறேன்” என்றான், அவளைப் பற்றிப் பேசும் போதே துளிர் விட்ட வெட்கத்தை மறைத்து.
“டேய்.. என்னடா..” என்று சிரிப்புடன் அன்பு அவன் பக்கத்தில் செல்ல, “ப்ச், பேசாம இருக்கா” என்று முகம் திருப்பினான்.
“ஒன்னும் இல்லன்ற, அப்புறம் ஏன் டா பொண்ணு கேட்க சொன்ன? அந்தப் பிள்ளையெல்லாம் நல்லா இருக்க வேண்டிய பொண்ணு டா”
“ம்மா, உன் தேனுவ நான் நல்லா பார்த்துக்க மாட்டேனா?” என்று அந்த நல்லாவில் நன்றாக அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.
“நான் எங்கடா அப்படிச் சொன்னேன்? நான் ஒன்னும் உன்னைய குறை சொல்லல. நீதான் ஒன்னுமே இல்லன்னு சொல்லிட்டு பொண்ணு கேட்க சொல்ற? நான் போய் அவங்ககிட்ட என்னானு கேட்பேன்..”
“உங்க மகளை எங்க வீட்டுக்கு மருமகளா அனுப்புங்கன்னு போய் அவ வீட்ல கேளும்மா..” என்றவனைச் சந்தேகமாகப் பார்த்தார். அவருக்குத் தெரிந்து அவன் எந்தப் பெண்ணிடமும் பேசியதில்லை. எந்தப் பெண்ணிடமும் ஆர்வமும் காண்பித்ததில்லை.
அன்புக்கரசிக்கும் அதுவே கவலையளித்தது.
எந்தப் பெண்ணிடமும் தேவைக்கு அதிகமாகப் பேசியதில்லை அவன். காதல், கடலை, ஈர்ப்பு என எதுவும் நிகழ்ந்தது போலத் தெரியவில்லை. திருமணம் பற்றிய பேச்செடுத்தாலும் தட்டிக் கழிப்பவன் மனத்தில் என்ன இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் சமீப காலமாக இருந்தாள். இன்று அவனே தேன்மொழியைக் கைக் காட்டவும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“அதெப்படி டா திடீர்னு போய்க் கேட்க முடியும்? அதெல்லாம் சரி வராது. அவங்க வீட்ல இப்பத்தான் ஒரு வரனை வேணாம்னு சொல்லியிருக்காங்க. எங்கிட்டேயே அவங்கம்மா இப்போதைக்குப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற எண்ணமில்லைன்னு சொன்னாங்க. அது மட்டுமா, தேனுவும் வேலைக்குப் போகணும்னுல சொல்லியிருக்கா. அப்படி இருக்கும்போது..”
“என்னம்மா நீயே தட்டி பேசுற? தம்பி ஆசையா அவள கட்டிக்கறேன்னு சொன்னான் மா..”
“எனக்கும் ஆசதான் அன்பு.”
“அப்ப என் மகன் ஆசைப்படுறான்னு போய்ப் பொண்ணைக் கேளும்மா. இதெல்லாம் கூட நானே சொல்லணுமா?” என்று அலுத்துக் கொண்டான்.
மகனையே தீவிர யோசனையுடன் பார்த்திருந்தார் திலகவதி.
“எனக்குக் கூட இப்படியொரு யோசன வரலையேடா தொர? உனக்குப் பொண்ண நம்ம கண்ணு முன்னால வச்சுட்டு ஊரெல்லாம் தேட கிளம்பியிருக்கோம். என்னத்த சொல்ல..” என்று புலம்பி சிரித்தார். அவருக்கு இன்னமுமே ஆச்சரியம்தான்.
ஈரமாய் முதல் துளி மண்ணில் விழும் வரைதான் தயக்கமும், தடுமாற்றமும். அதன் பிறகு சட்டென அவருள் அந்த எண்ணம் துளிர் விட்டு, தளிர்த்து, கிளை பரப்பி, மரமாகி நின்றது.
“நீ மொத அப்பாகிட்ட பேசும்மா. அப்புறமா நல்ல நாள் பார்த்து அவங்க வீட்டுக்குப் போய்ப் பொண்ணு கேட்போம். நான் இப்போ மதுர போகல. தம்பிக்கு பொண்ணு கேட்டு உறுதி பண்ணிட்டு ஒரேடியா மதுரைக்குப் போய்க்கறேன்” என்று இப்போதே தம்பியின் கல்யாண வேலைகளைப் பார்ப்பதற்குத் தோதாகப் புடைவை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி நின்றாள் அன்புக்கரசி.
“ஏத்தா, எந்தப் பொண்ணைப் பத்தி பேசறீங்க?”
“பேரனுக்கா?”
“ஏன்? என் பேத்தியை கட்டலயா அவனுக்கு?”
“தேனுனா அதாரு? கலரு கம்பெனிக்காரவ எடுத்து வளர்க்கற பொண்ணா?” என்று அவர்களின் பேச்சின் நடுநடுவே கத்தி கத்திக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பத்தா.
“இரு அப்பத்தா, வர்றேன்” என்று அவரை அதட்டினாள் அன்புக்கரசி.
“ஏன் நாளைக்கே நல்ல நாள் இல்லையா?” என்று சுவரில் தொங்கிய நாட்காட்டியை பார்த்தபடி துரை கேட்க, அடக்க முடியாமல் சிரித்தாள் அக்கா.
“டேய், எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் செய்யக் கூடாது. நல்ல காரியம், பொறுமையாதான் செய்யணும். மொத அப்பா வரட்டும், அவர்கிட்ட பேசுவோம்.” என்றார் திலகவதி. அதைக் கண்டிப்பாகச் சொன்னாலும், அவர் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது.
“ம்ம்” என்ற துரை, “நீ வா ரோஜா குட்டி, மாமா உனக்கு அத்தயக் காட்டுறேன்” என்று குழந்தையுடன் மாடியை நோக்கி நடந்தான்.
“நீ இப்போ மதுரைக்குக் கிளம்பு அன்பு. அங்க மாப்ள தனியா இருக்கார். நான் அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன். அப்புறமா நீ கிளம்பி வா. நல்ல காரியத்த நிதானமா செய்யணும்ல”
“ம்ம், சரிம்மா” என்றாள்.
“டேய் தொர, ரோஜாவ தூக்கிட்டு கீழ வாடா. எங்களுக்கு நேரமாச்சு”
“இருக்கா, வர்றேன்” என்று பதிலுக்குக் கத்தியவன், எதிர் வரிசையில் இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சேலையும், முடியும் காற்றுக்குப் பறக்க, மலர்ந்த சிரிப்புடன் நின்றிருந்த மங்கையைக் கண்களின் வழியே மனத்திற்குக் கடத்தினான்.
அந்நேரம் யாரோ தன்னைப் பார்ப்பது போன்ற குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்த தேன்மொழியின் விழிகள் மெல்ல விரிந்து அவனைச் சந்தேகமாக, கோபமாகப் பார்த்தது.
ஆனாலும், பார்வையை மாற்றிக் கொள்ளவில்லையே அவன்.
“செம்பருத்தி பூவே… செம்பருத்தி பூவே…” கிராமத்துக் காற்றில் கலந்து ஒலித்தது பாடல். அவனுக்குக் காதல் கானமாகக் கேட்டது.
“செம்பருத்தி பூவே… உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா…” அவனது வலக் கரத்தில் குழந்தை இருக்க, இடக்கரத்தால் தலைக் கோதி கொண்டு அவளைப் பார்த்தான்.
“கண்கள் அறியாமல்.. கனவுக்குள் வந்தாய்.. மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா…” அவளுக்குக் கேட்காதென்று தெரிந்தும் சத்தமாகப் பாடினான்.
தன்னைப் பார்த்துதான் பாடுகிறான் என்பது தூரத்தில் நின்றிருந்தாலும் தேன்மொழிக்கு தெரியாதா என்ன? அவள் முகத்தை மட்டுமல்ல, மொத்தமாகத் திரும்பி அவனுக்கு முதுகு காண்பித்து நின்று விட்டாள். திடிரென்று இவனுக்கு என்னாவாகிற்று என்ற சிந்தனைதான் அவளுக்கு.
“அங்க அத்த நிக்கறாங்க பாரு தங்கப்புள்ள..” என்று மருமகளிடம் அவளைக் காட்டிச் சொன்னான். அவளும் மாமனுக்கு ஏற்ற மருமகளாக, “அத்த..” என்று மழலையில் அழுத்தமாக உச்சரித்தாள் ரோஜா. அவ்வளவுதான். மாமன் தலையைப் பின்னுக்கு இழுத்து வெடித்துச் சிரித்தான். குழந்தையும் அவனுடன் சேர்ந்து சத்தமாகச் சிரித்தாள்.