இந்த வாழ்வென்பது – 14 (2)

தர்மதுரையைக் கண்டதும் அவன் கண்கள் கூர்மையடைந்தது, “நல்லாருக்கீங்களா மச்சான்?” என்று அவனிடம் இயல்பாக நலம் விசாரித்தான் தர்மதுரை.

“ம்ம், நல்லாருக்கேன். நீயெப்படி இருக்க?” என்ற சுதாகரன் குரலில் இருந்த தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.

தர்மதுரையின் பதிலை எதிர்பார்க்காமல், “அம்மா உன்னைய தேடுறாங்க, வா” என்று தங்கையின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

சடக்கென அவர்கள் முன்னே வந்து நின்று, “பாப்பா..” என்று கை நீட்டினான் தர்மதுரை. தேன்மொழி அவன் வேகத்தில் மிரண்டு, அவனை முறைத்து, குழந்தையை நீட்டினாள்.

அரைத் தூக்கத்தில் இருந்த குழந்தை சிணுங்கவும், “அண்ணிகிட்ட நானே குடுத்துடுறேன்” என்றாள்.

“ம்ம்” என்று அழுத்தமான பார்வையுடன் அவளையே பார்த்திருந்தவனின் பக்கத்தில் வந்து நின்றாள் வீணா.

அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு அங்கிருந்து அண்ணனுடன் நகர்ந்து விட்டாள் தேன்மொழி.

“என்ன வீணா?” என்று எரிச்சலுடன் அவன் கேட்க, “உன்னய காணோம்னு அம்மா தேடுச்சு மாமா” என்றாள்.

“அத்த தேடுச்சா? இல்ல நீ தேடுறியா?” அவன் கேள்வி மிக அமைதியாக வந்தாலும் அதில் மறைந்திருந்த கோபத்தை எதிரில் நின்றவளால் துல்லியமாக உணர முடிந்தது.

“உன்னைய அம்மாதான் கூட்டிட்டு வரச் சொல்லுச்சு. சாப்பிட போகலாம்னு அன்பு அண்ணியும் சொன்னாங்க. அதுக்காகதான் தேடி வந்தேன். இல்லனா நான் ஏன் வரப் போறேன்” என்று முகத்தைத் திருப்பினாள் அத்தை மகள்.

“எனக்கொன்னும் உன்னைய கட்டிக்கணும்னு ஆசையில்ல. அம்மாதான் போட்டு என் ஜீவனை வாங்குது. அதுக்காகதான் சரின்னு சொன்னேன். நீ யார் மேலயும் ஆசைப்பட்டா அவங்களயே கட்டிக்கோ மாமா. நான்லா குறுக்க வர மாட்டேன்” என்று அவனைப் பார்த்துச் சொன்னவள், கண்களைச் சுழற்றி தேன்மொழியைத் தேடி தொட்டு, திரும்பி மீண்டும் மாமனை பார்த்தாள்.

அவனுள் சட்டென மணியடிக்க, “ஏய், நீயேன் அந்தப் புள்ளைய பாக்கற? சும்மாவே அவ அண்ணனுக்கும் எனக்கும் ஆவாது. இதுல நீ வேற எத்தையாவது கிளப்பி விடாத ஆத்தா. அவ அண்ணனுங்க பழைய கடுப்பை எல்லாம் மனசுல வச்சுட்டு என் எலும்பை எண்ணிட போறானுங்க” என்றான் பயந்தவன் போல, “வா உள்ள போவோம்” என்று அவளுடன் நடந்தான்.

“ஏன் அவங்க அண்ணா கூட என்னா பிரச்சினை?”

“அதுவொரு பத்து வருஷத்துக்கு முந்தின கதை. அத்த விடு. நீ சொல்லு. அப்போ ஶ்ரீவில்லிபுத்தூர் மாப்ள ஓகே போல உனக்கு..” அவன் கேள்வியில் அவள் முகத்தில் புன்னகையும், வெட்கமும் பரவ, “அட லூசு அத்த. இது தெரியாம பொண்ண இங்க கூட்டிட்டு வந்திருக்கு பாரு” என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தான்.

அண்ணன் தம்பியுடன் பந்தியில் அமர்ந்திருந்த தேன்மொழி பார்த்தது, அந்தச் சிரிப்பைதான்.

பட்டென்று முறைப்புடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பத்து வருட பழக்கமாக.

*****

அன்று வீட்டில் காலை நேர பரபரப்புடன் இருந்தார் திலகவதி. அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து தோட்டத்திற்குச் சென்று விட்டிருந்தார்கள் அப்பாவும், பிள்ளைகளும்.

அப்போதே பூப்பறிக்கத் தொடங்கினால்தான் நண்பகல் மதுரையில் இருந்து துபாய்ச் செல்லும் விமானத்தில் பூக்களை நேரத்திற்கு அனுப்ப முடியும்.

மூன்றரை மணிக்கெல்லாம் பூ பறிக்கத் தோட்டத்திற்கு ஆள் வந்து விடுவார்கள். அதற்கு முன்பே வீட்டினர் சென்று விடுவார்கள். அந்நேரம் பெரியவர்களின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமல் பெரும்பாலும் தர்மதுரைதான் செல்வான்.

வேலையாள்களுக்கு முன்னே வீட்டு ஆட்கள் சென்றால் தானே வேலையும் விரைவாக நடக்கும்.

முன்பு பூ பறித்து மார்கெட் அனுப்பினால் வேலை முடிந்தது. இப்போது அப்படியில்லை. அதைத் தொடுத்து சரமாக்கி, அளவாக நறுக்கி அட்டைப் பெட்டிகளில் அடைக்க வேண்டும். அது போல உதிரி பூக்கள் தனி. சாமந்தி, பன்னீர் ரோஜா எனப் பூஜை பூக்கள் தனியாக வைக்க வேண்டும்.

மேலும், சிறியதில் இருந்து பெரியது வரை பூஜைக்கான மாலைகள் தொடுத்து, அதை அதற்குரிய பெட்டிகளில் பொதிந்து வைக்க வேண்டும்.

பூஜைக்கு ஏற்ற மாலை கட்டவே தனியாக நேரம் பிடிக்கும். அந்த வேலைகள் செய்ய மாலை கட்டத் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் தோட்டத்தை ஒட்டிய காலி இடத்தில் இதற்கெனக் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கட்டிடத்தை ஆரம்பத்திலேயே கட்டி விட்டான். எல்லாவற்றுக்கும் தனித்தனியாக வசதிகள் செய்தும் விட்டான். மல்லிகை, முல்லை பூக்கள் தொடுக்கப் பெண்களும், மாலை கட்ட ஆண்களும் எட்டு மணி போல வேலைக்கு வந்து விடுவார்கள்.

பூ பறிக்க வரும் ஆட்களே பூ தொடுக்கும் வேலையையும் சேர்த்துச் செய்வார்கள்.

சிலருக்கு நேரக் கணக்கில் கூலி பேசியிருக்கிறான்.‌ பலருக்கு மாத சம்பளம். அதனால் பணிக்கு ஆட்கள் தட்டுப்பாடு வந்ததில்லை.

திலகவதி ஆறு மணி போலச் சென்று வீட்டினருக்கு மட்டும் காலை காஃபி கொடுத்து விட்டு வந்தார்.

வேலை செய்பவர்களுக்கு அங்கேயே சூடாகப் போட்டு கொடுத்து விடுவார்கள். வீட்டினருக்கு அவர் கையால் செய்தால்தான் திலகவதிக்கு திருப்தி. மகன் எத்தனை முறை வேண்டாமெனக் கண்டித்தாலும் அவர் கேட்பதாக இல்லை.

இப்பொழுது காலை உணவு தயாரிப்பில் மூழ்கியிருந்தார்.

“எத்தா திலகா..” என்று பவுணு அம்மாள் குரல் கொடுக்க, “இந்தா வர்றேன்த்தே” என்று அவருக்கான காலை கஞ்சியைக் கொண்டு போய்க் கொடுத்தார்.

“தோட்டத்துக்குச் சாப்பாடு எடுத்துட்டு போக ஆள் எப்போ வருது?” என்று சாப்பிட்டபடியே அவர் கேட்க, “உங்க பிள்ளையும், பேத்தியும் அவங்களே வீட்டுக்கு வந்து சாப்பிடுறேன்னாங்க. இந்தத் தொர பையன் ஒன்னும் சொல்லலத்த” என்றவர், திரும்பி சென்று சமையலில் மூழ்கினார்.

பேரன், பேத்தி இருவரும் உறக்கம் கலைந்து எழுந்து வர, அவர்களையும் சேர்த்து கவனித்தார்.

இரண்டு மணி நேரம் கழிய அக்காவும், தம்பியும் மட்டும் வீடு வந்தார்கள்.

ஏதோ தொழில் பற்றிய பேச்சில் மும்முரமாக இருந்தார்கள்.

இடையே தர்மதுரை, மாமனுக்கு அழைத்து மதுரை பூ நிலவரம் அறிந்து கொண்டான்.

அந்நேரம் வாசலில் சத்தம் கேட்க, வீட்டு வேலைகள் முடித்திருந்த திலகவதி என்னவென்று பார்க்கச் சென்றார்.

“மருமகளே மல்லிப் பூ இருக்கா?” என்று கேட்டார் வந்தவர்.

அவர்கள் பூக்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தாலும் உள்ளூரில் கேட்பவர்களுக்கு இல்லை என்று ஒருநாளும் சொன்னதே இல்லை. ஆகையால் எப்போதும் வீட்டில் கொஞ்சமாவது பூ இருக்கும். இல்லையென்றால் தோட்டத்தில் இருந்து வர வைத்து கொடுத்து விடுவார்கள்.

“இந்தா மகன் இப்பத்தான் பறிச்ச பூவ கொண்டு வந்தான். இருங்க எடுத்துட்டு வர்றேன்” என்ற திலகா, அவர் கேட்ட அளவு பூவை கொண்டு போய்க் கொடுத்தார்.

“டீ சாப்பிடுங்க அத்தே” என்று வந்தவரை உபசரிக்கவும் மறக்கவில்லை. வீட்டினுள் எட்டிப் பார்த்து, “அன்பு, டீ போடும்மா” என்றார்.

“எதுக்கு வேணாம். இப்பதான் வீட்ல காப்பிக் குடிச்சேன்”

“இருக்கட்டும். மக இப்போ டீ போட்டுடுவா. நீங்க உக்காருங்க”

“சரி. அப்புறம் உன் நாத்தனா வந்தா போல. உன் மவனுக்கு அவ பொண்ண குடுக்காளாமா?”

“இல்லத்த. எங்களுக்கு ஆசதான். பிள்ளைங்க ரெண்டும் விருப்பம் இருக்க மாதிரி காட்டல. அதான் யோசிக்கறோம்” என்று திலகா சொல்ல, பேத்தி பற்றிய பேச்சு என்றதும் வேகமாக எழுந்து வெளியே போனார் பவுணு அம்மாள்.

உடனே மகள் பெருமை, பேத்தி பெருமை என ஆரம்பித்து விட்டார். அப்படியே ஊரின் இளம்பெண்கள், ஆண்கள் எனப் பேச்சு சுற்றி வந்தது.

“இதென்ன அந்தக் காலமா? இப்ப உள்ள புள்ளைங்க வேலைக்குப் போய்ட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேன்ல்ல சொல்லுதுங்க, கண்டிஷனா” என்றவர், “நம்ம கொடி மக இல்ல?” என்று கேட்டார்.

“கொடின்னா அதாரு?” என்று அப்பத்தா யோசிக்க, “கலரு கம்பெனிக்காரங்க பேத்தி” என்றார் திலகவதி.

“ஆங், அவளுக்கு ரெண்டும் ஆம்புள புள்ளய்ங்க தானே?”

“ஆமா. ஆனா, அவ கொழுந்தன் மவள சின்னதுல இருந்து வளர்க்கறா இல்ல?”

“அட ஆமா. அவளுக்கென்னா?” என்று அப்பத்தா கேட்க, திலகவதிக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை என்று சுருங்கிய அவரின் முகமே சொன்னது. ஆனால், கிராமத்தில் இது போன்ற பேச்சையெல்லாம் தவிர்க்கவே முடியாது. மேலும் இந்நேரம் மாமியாரை பாதிப் பேச்சில் கூப்பிட்டாலும் முறைப்பார். ஆக, அமைதியாக அமர்ந்திருந்தார்.

“அந்தப் புள்ளைய கல்யாணத்துல பார்த்துட்டு அவங்க அத்தக்காரி பங்காளி வீடு ஆசப்பட்டுப் பொண்ணு கேட்டு வந்தாங்களாம்..”

“ஹாங்.. அப்புறம்..”

“இந்தப் புள்ள இப்போ எனக்குக் கல்யாணம் வேணாம்னு சொல்லிடுச்சாம்.”

“ம்ஹூம்.. சரித்தேன்..” என்று ராகம் போட்டார் அப்பத்தா. அப்படியே அவர்களின் பேச்சு பொற்கொடி குடும்பத்தை அலசி ஆராய்ந்து காயப் போட்டது.

அத்தைக்காரி கூடுதலாக வரதட்சணை கேட்டது. அதனால் அண்ணன் தங்கைக்குள் மனச்சடவு என ஒன்றும் விட்டு வைக்கவில்லை.

“நம்ம ஊருக்குள்ள அவங்க தாத்தாக்கு கலர் கம்பெனி இருக்கு. அவங்கப்பனுக்கு மாவு திரிக்கிற மில்லே நாலஞ்சு இருக்குல்ல திண்டுக்கல்ல? அது போக நத்தம், திண்டுக்கல்ல எடம் வாங்கிப் போட்டுருக்காங்களாம். அவ அத்தக்காரிக்கு அண்ணன் வீட்ல எவ்வளவு சொத்து, எங்கன இருக்குன்னு தெரியாமயா இருக்கும். அதான் கேட்டிருக்கா. என்னதான் அவ சொந்த மக இல்லைனாலும் எடுத்து வளர்த்த கடமைக்கு இவங்களும் நிறையா செய்யணும் இல்ல?”

“ம்ம்ம்” என்ற மாமியாரை முறைத்தார் திலகவதி.

“ஆனா அந்தப் புள்ள அப்பன் ஆத்தாளுக்குச் சிரமம் குடுக்கக் கூடாதுன்னு வந்த வரனை வேணாம்னு சொல்லிடுச்சுன்னு பேசிக்கறாங்க. வெளிநாட்டு மாப்ளயாம்ல?” என்றார் கை வீசி ஆச்சரியத்துடன்.

அவர்கள் பேசிய அனைத்தும் வீட்டினுள் தெளிவாகக் கேட்டது. அன்புக்கரசி அவர்களுக்குத் தேநீர் கொண்டு போய்க் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள்.

தர்மதுரை ரோஜாக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.

திலகவதி உள்ளே வந்தவர், “அந்தப் பிள்ளைலாம் நல்லா இருக்க வேண்டிய புள்ள தெரியுமா.?” என்று தன் பிள்ளைகளிடம் மனத்தாங்கலுடன் சொன்னார்.

“அந்தப் புள்ள நல்லாருக்கணும். நிச்சயமா நல்லாருப்பா” என்று வேண்டுதலும் வைத்து, ஆருடமும் சொன்னார். அன்புக்கரசி மௌனமாகக் கேட்டு நின்றாள்.

“நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்ட என்னடா?” என்று தீபனை கேட்டான் தர்மதுரை.

“உன்னாலதான் டா அவன் இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகல. சாந்தரம் ஒழுங்கா எங்களைக் கூட்டிட்டு போய் மதுரல விடு. உங்க மாமா வேற எப்போ வர்றன்னு காலையில இருந்து ரெண்டு முறை என்னைய கேட்டுட்டார். அப்புறம் வேலைய அப்படியே போட்டுட்டு அவரே வந்துட போறார்” என்று அன்புக்கரசி சொல்லவும், “ரோஜா குட்டிய எங்கிட்ட விட்டுட்டு நீங்கலாம் மதுர போங்க” என்றான் மாமன்.

அன்புக்கரசியும் பிள்ளைகளும் அன்று மாலை மதுரை செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரம் தர்மதுரை மாடிப் படியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

“டேய், தொர..” அன்பு அழைக்க,

“இருக்கா வர்றேன்” என்று கை காண்பித்தான்.

பத்து நிமிடம் கழித்து, “தொர..” என்ற அழைப்பு மீண்டும் வர, “சொல்லுக்கா” என்றான் அப்படியே சுவரில் முன்புறமாகச் சாய்ந்து.

“இந்தா, இதுல உனக்கு எந்தப் பொண்ணு பிடிச்சுருக்குன்னு சொல்லு”

“ப்ச், யாரையும் பிடிக்கல” என்றான். அவன் அலைபேசியையும் வாங்கவில்லை. புகைப்படங்களையும் பார்க்கவில்லை.

“டேய் ஃபோட்டோ பார்க்காமலேயே பிடிக்கலன்னு சொல்ற? ஒழுங்கா பார்த்திட்டுப் பதில் சொல்லுடா” உடனே மெல்ல எட்டி பார்த்து, “ம்ஹூம்” என்று உதடு வளைத்து மறுத்தவன் பார்வை அவர்களின் தெருவில் பதிந்தது.

பாசி பச்சை நிற சில்க் காட்டன் சேலையில் பளிச்சென நடந்து வந்து கொண்டிருந்தாள் தேன்மொழி.

அவன் பார்வை அவள் மேல் அழுத்தமாகப் படிந்திருந்தது.

“உனக்கு வேற எப்படித் தான்டா பொண்ணு பாக்கறது? நீயே சொல்லு?” என்று கோபமாகக் கேட்ட அன்புக்கரசியின் பார்வை, தம்பியின் பார்வை சென்ற திசையில் சென்றது.

“இந்தப் பொண்ணு மாரி இருந்தா ஓகே வாடா?” என்று அவன் தோளில் தட்டி கேட்டாள்.

“இந்தப் பொண்ணே ஓகே” என்றான் மீசை மறைத்த புன்னகையுடன்.

“டேய் தொர..?”

“ம்ம், இந்தப் பொண்ண பிடிச்சுருக்குக்கா. இவள கட்டிக்கறேன்” என்றான். தேன்மொழியின் மீதிருந்து பார்வையை அகற்றாமல்.

சாலையில் பதிந்திருந்த அவள் கண்கள் சட்டெனச் சுழன்று மேலேறி இவனைப் பார்த்ததும், முறைத்து, கோபமாகத் திரும்பிக் கொண்டது.

அதைக் கண்டதும் அவன் உதட்டில் புன்னகை அரும்பாகியது.

“நாம கேட்டா அவங்க வீட்ல குடுப்பாங்களாடா? மொத இந்தப் பொண்ணு சம்மதிக்குமா?” என்று அவனிடம் சந்தேகம் கேட்டாள் அன்புக்கரசி.

error: Content is protected !!
Scroll to Top