இந்த வாழ்வென்பது – 14 (1)

அன்புக்கரசி அலைபேசி முடித்துத் திரும்புகையில் தேன்மொழி ஒரு கையில் ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

“என்னக்கா போவோமா?”

என்று கேட்ட தம்பி துரையை உற்றுப் பார்த்தாள். உதட்டில் பூத்த முறுவலுடன் பாடிக் கொண்டே தலையாட்டி கொண்டிருந்தான்.

“ம்ம், போலாம் டா.” என்று வண்டியில் ஏறியவள், “இப்ப பூ வாங்கிட்டுப் போறது, கொடி அத்த மக தேன்மொழி தானே?” என்று கேட்டாள்.

“ம்ம், அந்தப் புள்ளதான்”

“அவள பார்த்து ரொம்ப நாளாச்சு டா. நல்லா வளர்ந்திட்டா இல்ல? சேலையில பாக்க சட்டுனு எனக்கு ஆள் அடையாளமே தெரியல.” என்றாள். வண்டியை இயக்கிக் கொண்டிருந்தவன் அதை ஆமோதித்து மெல்ல தலையசைத்தான்.

“அவகிட்ட பேசணும்னு நெனச்சுட்டே வந்தேன் டா. அதுக்குள்ள உள்ள போய்ட்டா..”

“…”

“அவளும் உன்னய மாரியே கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டுத் திரியறாளாம். காலையிலயே யாரோ அம்மாகிட்ட கதை சொல்லிட்டு இருந்தாங்க” வண்டியின் இடப் பக்கக் கண்ணாடியில் அக்காவை பார்த்து முறைத்தான் துரை.

அந்தச் செய்தி அம்மா சொல்லக் கேட்டு அவனுக்கும் தெரியும்தான். ஆனாலும், அந்தக் கதை நமக்கெதற்கு என்பது போல, “அந்தப் புள்ள ஏன் வேணாம்னு சொல்லுச்சோ, அதுக்குத்தேன் தெரியும். நீ பேசாம வாக்கா” என்று கடுப்படித்தான்.

“இல்லடா, வெளிநாட்டு மாப்ளனு சொன்னாங்க..”

“அ..க்கா..”

“சரிடா. நான் ஒன்னும் சொல்லல” என்று கத்தினாள்.

அதற்குள் பூந்தோட்டத்தை நெருங்கியிருந்தார்கள். அதன் பின்னர் எங்கே ஊர் கதை பேச, வேலையில் மூழ்கிப் போனார்கள்.

மறுநாளும் அழகிய நல்லூர் கிராமம் அலங்கரித்து நின்றது.

இன்று ஐய்யனார் மகன் வயிற்று பேத்திக்கு காது குத்து. ஊரில் முக்கால் வாசி பேர் சொந்தம்தான். இல்லையென்றாலும் ஒருமுறை வைத்துச் சொந்தம் கொண்டாடி கொள்வார்கள். கிராமங்களில் அதுதான் வழமை.

காலை பதினொரு மணிக்கெல்லாம் ஊரே உறவுகளால் சூழ்ந்திருந்தது.

பொற்கொடி வீடும் உறவினர்களால் கலகலத்துக் கொண்டிருந்தது.

“தேனு, இந்தா நேத்து வாங்குன நெக்லஸ். இந்தச் சேலைக்கு இது பொருத்தமா இருக்கும். இத்த போட்டுட்டு வா” என்று ஐந்து பவுனில் மலர்களும் கொடியுமாக வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய நெக்லஸை பொற்கொடி நீட்ட, “அச்சோ, புதுசா? வேணாம் பெரிம்மா. இன்னொரு நாள் போடுறேன்” என்று மறுத்தாள் தேன்மொழி.

“இதுக்கு இன்னொரு நல்ல நாள் பார்க்கணுமாக்கும்? நகைய நீ போட தானே வாங்கினது? சும்மா பூட்டி வைக்கவா வாங்குனோம்? நீ திரும்பு. நான் போட்டு விடுறேன்” என்று தலை பின்னிக் கொண்டிருந்தவளைத் திருப்பி, அந்த நெக்லஸை போட்டு விட்டு அழகுப் பார்த்தார்.

“நல்லாருக்கு தேனு.” என்று சிலாகித்துச் சிரித்து அவளின் கன்னம் தட்டினார்.

“இப்படித் திரும்பி உக்காரு, நான் பின்னி விடுறேன்” என்று அவளைப் படுக்கையில் அமர்த்தி அவரே தலையும் பின்னி விட்டார். அவள் அணிந்திருந்த நெக்லஸுக்குப் பொருத்தமாக வாங்கியிருந்த கம்மல், ஒரு ஜோடி வளையல்கள் என அனைத்தையும் எடுத்து வந்து போட்டு விட்டார் பொற்கொடி.

முன்தினம் மதுரையில் வாங்கிய மல்லிகை குளிர்சாதனப் பெட்டியில் இருக்க, அதையும் எடுத்துப் பின்னலில் அழகாக வைத்து விட்டார். அவளின் நீள முடிக்கு அந்த ஐநூறு பூ போதவில்லை. ஆனாலும், பார்க்க அழகாகவே இருந்தது.

“ம்ம், எப்பவும் மவளுக்கு மட்டும் கவனிப்புப் பலம்தான்” என்று அதைக் கண்டு ஜெயபாலன் புலம்பிக் கொண்டே வெளியில் வர, “அப்புறம் உனக்கும் நக போட்டு அலங்காரம் பண்ண சொல்றியா மாப்ள?” என்று கேலி பேசியது மச்சான் முறையொன்று. அதைக் கேட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த உறவுகள் சத்தமாகச் சிரிக்க, “ஏன்டா, நேத்து வாங்குன புதுச் சங்கிலிய உன் கழுத்துல போட்டுட்டுப் பேச்சை பாரு. எப்பப்பாரு என் பேத்தியையே கண்ணு வைக்காத டா” என்று அவனை முறைத்தார் முத்தம்மா.

“சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் மொத உன் காலடி மண்ணெடுத்து என் பேத்திக்கு சுத்தி போடணும் டா”

“எல்லாம் என் நேரம் அம்மாச்சி, நீ பேசு. எனக்கு ஒத்த பவுனுல தங்கக் கம்பியாட்டும் ஒரு சங்கிலிய எடுத்துக் குடுத்துட்டுப் பேச்சா பேசுற நீ? உன் பேத்திக்கு நேத்து எத்தன பவுன் எடுத்துக் கொடுத்த நீ? அத சொல்லு மொத”

“அட போடா. வந்துட்டான் எங்கிட்ட கணக்கு கேட்க. அவளுக்குத்தான் நெக்லஸும், வளையலும் வாங்க முடியும். பின்ன உனக்கா வாங்க முடியும்?”

“ஏன், எனக்குக் காப்பு வாங்குனா நான் போட்டுக்க மாட்டேனா?”

“அதான் நீ சம்பாதிக்கற இல்ல. காப்பு என்ன கழுத என்னத்தையும் வாங்கிப் போட்டுக்கோ டா. யார் உன்னைய வேணாங்கறா..”

“ம்ம், இந்த வீட்ல நம்மள மதிக்க ஆளே இல்லடா அன்பே..” என்று தம்பியின் தோளில் கைப் போட்டான்.

“உனக்குன்னு சொல்லுண்ணே. என்னைய ஏன் கூட்டு சேர்க்கற?” என்றான் அன்பு நமுட்டு சிரிப்புடன்.

“நேத்து அம்மா எனக்குச் செயின் வாங்கிக் குடுத்துச்சா? அம்மாச்சி கைச் செயின் வாங்கிக் குடுத்துச்சு. அப்புறம் மாமா மோதிரம் வாங்கித் தந்தாரு. இந்தா நீயே பார்த்துக்கோ” என்று கழுத்து, கை, விரல் அசைத்து பளபளத்த பவுனை காண்பித்து, பார்த்துக்கோ என்று கேலி கலந்த பெருமையுடன் அன்பு சொல்ல, “ஏன் டா நேத்து நானும் அங்க தானே டா இருந்தேன். அப்படியே எனக்குத் தெரியாது பாரு. போடா அங்கிட்டு” என்று அவன் முகத்தைத் தள்ளி விட்டான்.

“வாய் அடிக்காம வாடா. நேரமாகுது” என்று முத்தம்மா முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

தேன்மொழி பொற்கொடி, கந்தன், சுதாகரனுடன் விஷேச வீடு சென்றாள். பத்து நிமிட நடை தூரம்தான். இடையில் சந்திக்கும் உறவினர்களை எல்லாம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டே நடந்தார்கள்.

அங்குச் சென்றதும் சுதாகரன் தன் பால்ய நண்பர்களைப் பார்த்ததும் அவர்களோடு சென்று விட்டான்.

“என்ன மாமா, நத்தத்துல கட வைக்க எடம் பார்க்கறீங்களாம். என் பங்காளி சொல்லிட்டு இருந்தான். நானும் இதே தொழில்ல தானே மாமா இருக்கேன். என் நினைப்பு வரலயா உங்களுக்கு? முன்ன நத்தம் டவுனுல வீட்டு மெனை நான் தானே பார்த்து முடிச்சுக் குடுத்தேன் உங்களுக்கு.” என்ற கேள்வியுடன் கந்தனை நிறுத்தினான் ஒருத்தன். மனைவி, மகளைத் திரும்பிப் பார்த்து விட்டு அவனோடு பேசிக் கொண்டே நடந்தார் அவர்.

“வாங்க வாங்க, வா கொடி. என்னா இப்பத்தான் வரியா? உள்ளூர்ல இருந்துட்டே இப்படி அசைஞ்சாடி வந்தா எப்படி?” என்று ஆளாளுக்கு விசாரிப்பும், கேள்வியையும் ஆரம்பிக்க, அவர்களுக்குச் சிரிப்புடன் பதில் சொல்லிக் கொண்டே உள்ளே போனார் பொற்கொடி.

தேன்மொழியின் பள்ளித் தோழி கீதாஞ்சலி வர, “நீங்க போங்க பெரிம்மா. நான் இவகிட்ட பேசிட்டு வர்றேன்” என்றாள்.

சரியெனத் தலையசைத்து உள்ளே சென்றார் பொற்கொடி.

“நீ சென்னை போனதும் என்னயல்லாம் மறந்திட்ட பார்த்தியா தேனு? ஊருக்கு வந்தா கூடப் பேசுறதேயில்ல. பெரியாளாகிட்ட நீ, போப்பா..” என்று தோழி கோபித்துக் கொள்ள, அவளைச் சமாதானம் செய்து, சரி கட்டி, பேசி சிரித்து எனப் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகி இருந்தது.

அப்போது கீதாஞ்சலியின் அண்ணன் வரவும், “ஏ மறக்காம வீட்டுக்கு வா தேனு” என்று சொல்லி, உள்ளே சென்றாள் அவள்.

“நாளைக்குக் கண்டிப்பா வர்றேன் கீதா” என்றவளும் உள்ளே செல்ல முனைய, அவள் சேலை கொலுசில் சிக்கிக் கொண்டது. மெதுவாகக் குனிந்து அதை எடுத்து விட்டு அவள் நகரப் போக, அவளுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றது ஒரு கார்.

அதில் இருந்து இறங்கிய அன்புக்கரசி, கதவை திறந்த வேகத்தில் தேன்மொழியை இடிக்கப் போக, “அச்சோ சாரி” என்று கதவைப் பிடித்தாள்.

“பரவால்லக்கா..”

“ஹேய், நானு உனக்கு அண்ணி..” என்று கண்ணை உருட்டினாள் அன்புக்கரசி. தேன்மொழி சிரிப்புடன், “செரிங்க அண்ணி” என்றாள்.

அன்புக்கரசி மகளுடன் கீழே இறங்கி நின்று தடுமாற, பட்டென்று கை நீட்டி அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் தேன்மொழி.

“பாப்பா பேரு என்ன அண்ணி?”

“ரோஜா”

“ரோஜாவா?”

“ம்ம், அவங்க மாமாதான் பேரு வச்சான்..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அண்ணி, இங்க வாங்க. உங்கள அம்மா கூப்பிடுறாங்க..” என்று கையசைத்து அன்புக்கரசியை அழைத்தாள் வீணா. அவர்களின் அத்தை கலையரசியின் மகள்.

“இந்தா வர்றேன்..” என்று பதில் குரல் கொடுத்த அன்புக்கரசி, “அழகிய நல்லூர்ல இருந்துட்டு தலையில இம்புட்டூன்டு பூ வச்சிருக்க. இரு, கார்ல பூ இருக்கு. நான் எடுத்து தர்றேன்” என்று திரும்பினாள்.

“இல்லண்ணி, இருக்கட்டும்”

“பூவ வேணாம்னு சொல்லக் கூடாது தேன்மொழி” என்றாள் கண்டிப்புடன்.

“அண்ணி..” வீணா மீண்டும் குரல் கொடுக்க, காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த தம்பியை திரும்பிப் பார்த்து, “டேய் தொர, தேன்மொழிக்கு மல்லிப்பூ எடுத்துக் குடு” என்று சொன்னாள். யாரிடமோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அக்காவின் குரலுக்குத் தலையாட்டினான் தம்பி.

“பாப்பாவ அவன் கிட்ட குடுத்துடு தேன்மொழி. என் கையில் இருந்தா ஆளாளுக்கு வாங்கிக் கொஞ்சுறேன்னு அவள ஒரு வழி பண்ணிடுவாங்க”

“சரிங்கண்ணி..” என்றாள். மறுகணம் அத்தை மகளிடம் சென்று விட்டாள் அன்புக்கரசி.

“ரோஜா குட்டி, என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க? ரோஜாவா உங்க பேரு? அப்படியே ரோஜா மாதிரியேதான் இருக்கீங்க” என்று கொஞ்சி குழந்தையின் பட்டுக் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“ம்ம்..” என்றபடியே வந்து நின்றான் குழந்தையின் மாமன்.

அவனைக் கண்டதும்,

“அப்புறம் உங்க பூந்தோட்டக்கார மாமா பேர் வச்சா உனக்கு ரோஜான்னு பேர் வைக்காம வேறென்ன பேரு வைப்பாரு. நல்லவேள சாமந்தி, மரிக்கொழுந்துன்னு வைக்கலையேன்னு சந்தோஷப்பட்டுக்கோ ரோஜா குட்டி..” என்று கேலி செய்து, ஓரக் கண்ணால் அவனை முறைத்தாள்.

அவளைப் பதிலுக்கு முறைத்தவன், “இந்தா” என்று மல்லிகை பூவை நீட்டினான்.

வேண்டாம் என்று சொன்னால் ஏதாவது சொல்வான் என்று அவன் பார்வையே சொல்ல, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

இன்று மாம்பழ மஞ்சள் நிறத்தில், அரக்கு நிற கரை வைத்த பட்டுப் புடைவையில் இருந்தாள். அவளின் மாநிறத்திற்கு அத்தனை எடுப்பாக இருந்தது அந்தப் புடைவை.

“பூந்தோட்டம் வச்சுருக்கீங்கன்னு காமிக்க எப்பவும் கையில பூவோட இருப்பீங்களா?” என்று எடக்காகக் கேட்டாள்.

“ம்ம், என் அத்த மவளுக்குக் கொண்டுட்டு வந்தேன்”

“அப்ப அவங்களுக்கே குடுக்க வேண்டியதுதானே?”

“எங்கக்கா உனக்குத்தானே குடுக்கச் சொல்லுச்சு?” என்று புருவம் உயர்த்தினான். முன்தினம் போலவே இன்றும் வெண்ணிற வேட்டி சட்டையில்தான் இருந்தான். முன்னுச்சி முடி பறக்க, முறுக்கி விடப்பட்ட மீசையுடன் உயரமாகக் கம்பீரமாக நின்றிருந்தான்.

மெல்ல நீண்டு அவன் முன் விரிந்த அவளின் உள்ளங்கையையே இமைக்காமல் பார்த்தான். செம்பவள நிறத்தில் குட்டி குட்டியாகக் கொள்ளை நிலாக்களை உள்ளங்கையில் மருதாணியால் ஒட்டியிருந்தாள்.

அதைப் பார்த்தபடியே பூவைக் கொடுத்தான்.

“எம்புட்டு?”

“ம்ம், காசு.. கணக்குல வச்சுக்கோ. சேர்த்து வாங்கிக்கறேன்” என்றான், ஆளை அசரடிக்கும் பார்வையுடன்.

“ஹா, என்னாதே..” என்று அவள் சிலிர்த்துக் கொண்டு கேட்க, அதைக் கண்டு கொள்ளாமல், “ரோஜா குட்டி, மாமா கிட்ட வாங்கடி தங்கப்புள்ள” என்று அக்கா மகளை நோக்கி கை நீட்டினான். அவளோ தூக்க கலக்கத்தில் இருந்தாள். தேன்மொழியின் தோளில் தலைச் சாய்த்துக் கண் சுருக்கி மாமனை பார்த்தாள்.

“தூக்கம் வருதா செல்லக் குட்டி? உங்கம்மா கிட்ட போகணுமா?” என்று தேன்மொழி கேட்கவும் சிணுங்கியது குழந்தை.

“அத்த என்ன சொல்றாங்கடி தங்கம்?” மாமன் கேட்க, “ஹலோ என்னா..” என்று எகிறினாள் தேன்மொழி.

“அத்தைய அத்தன்னு சொல்லாம சித்தின்னா சொல்ல முடியும்? நீயென்ன முறையவே மாத்த சொல்லுவ போலயே? சென்னை போனதும் ஊரும் உறவும் மறந்து போச்சா?” என்ற அவன் கேள்விக்குக் கடுப்பாகி கழுத்தை ஒடித்து முகத்தைத் திருப்பிக் கொண்டு முன்னே நடந்து விட்டாள்.

“என் மருமகளை எங்கிட்ட குடுத்துட்டு போ” என்று இரண்டே எட்டில் அவள் முன் வந்து நின்றான். அந்நேரம் எங்கிருந்து வந்தான் என்று தெரியாது, “தேனு.. என்னாச்சு?” என்று அவர்களிடம் வந்தான் சுதாகரன்.

error: Content is protected !!
Scroll to Top