இந்த வாழ்வென்பது – 13 (2)

அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது.

“வாசல்ல யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குல்ல தேனு?”

“அது பாட்டுச் சத்தம் பெரிம்மா”

“இல்லத்தா, யாரோ என்னைய கூப்பிடுறாங்க”

“ஏலே சுதா, ஜெயா.. வாசல்ல யாருன்னு பாருங்கடா..” என்று அவர் கத்த, மகன்களுக்கு அவர் குரல் கேட்கவில்லை போலும்.

“இருங்க பெரிம்மா, நான் போய்ப் பாக்கறேன்” என்று வீட்டின் வலப் பக்கமாக நடந்து வாசலுக்கு விரைந்தாள். அவளை இடித்துக் கொண்டு அவளுக்கு முன்னே ஓடியது ஆட்டுக்குட்டி, “அந்தக் குட்டிய புடி தேனு” பொற்கொடி பின்னால் இருந்து கத்தினார்.

அவள் கைகளுக்குள் சிக்காமல் முன்னால் ஓடியது குட்டி.

“வெளில ஓடிராத..” என்று சிரிப்புடன் அதட்டியவள், அதற்கு முன்னே நடந்து வீட்டின் மதில் கதவு திறந்தாள்.

“மல்லிக மொட்டு மனச தொட்டு

இழுக்குதடி மானே…” பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

தேன்மொழி சிரிப்பில் விரிந்திருந்த இதழ்களுடன், கேட்டை திறந்து யாரென்று பார்த்தாள்.

எதிரே வண்டியில் அமர்ந்தபடி கண்ணைச் சுருக்கி அவளைப் பார்த்தவனைக் கண்டதும் அவளின் சிரிப்பு மறைய, சட்டென முகத்தை ஒடித்துத் திருப்பி, வலப் பக்கமாகப் பார்த்து, மெதுவாகத் திரும்பி என்னவென்று அவனைப் பார்த்தாள்.

“தேனு.. ஏ தேன்மொழி..” உள்ளிருந்து ஜெயபாலன் அவளை அழைத்தான்.

“சிலுப்பி” மீசை மறைத்த புன்னகையுடன் முணுமுணுத்தான் தர்மதுரை. அது அவளுக்குக் கேட்கவில்லை.

அவன் என்றைக்கு அவள் அண்ணன் சுதாகரனை அடித்தானோ, அப்போதிருந்து அவனைப் பார்த்தாலே கழுத்தை ஒடித்து முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

அவனும் பதிலுக்கு முறைப்புடன் சென்று விடுவான்.

கடந்த நான்கு வருடங்களாக அவளை அதிகம் பார்க்கவில்லை அவன். பண்டிகை, திருவிழா என்று அவள் ஊருக்கு வரும் போது அவ்வப்போது தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறான். இன்றுதான் இவ்வளவு பக்கத்தில் பார்க்கிறான்.

அவன் கண்கள் மெல்ல அவள் முகத்துக்கு உயர்ந்தது.

சில வருடங்களுக்கு முன் அவன் பார்த்த சின்னப் பெண்ணில்லை அவள் என்றது அந்த அழகிய முகம்.

“ம்க்கும்..” என்று தொண்டையைச் செருமினாள்.

காகிதப் பையில் இருந்த குட்டி மல்லிகை பந்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்காமல் மெல்ல தயங்கி அவன் முகம் பார்த்தாள்.

“என்ன? எதுக்காகப் பூ குடுக்கறீங்க?” அவள் கேட்காத கேள்வியைச் சுருங்கிய அவள் புருவங்களும், கண்களும் கேட்டது.

“அத்த பூ கேட்டாங்களாம், எங்கம்மா குடுக்கச் சொன்னாங்க” என்றான். மெதுவாக முன்னே வந்தாள். அவள் வீட்டுச் சுவரில் சாய்ந்து நின்று அவன் அக்கா அன்புக்கரசி ஒரு காதை பொத்திக் கொண்டு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து விட்டுத்தான் பூவை வாங்கினாள்.

“வளையல் மெட்டு வயச தொட்டு

வளைக்குதடி மீனே..” பாடல் ஒலிக்க, பூவை வாங்கிய பூவையின் வளைக் கரத்தை பார்த்தான்.

“மானே மருதாணி பூசவா

தேனே அடையாளம் போடவா..” பாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

“இருங்க, காசு எடுத்துட்டு வர்றேன். எம்புட்டு?” என்று விரிந்த கைகளில் பசுமையாகக் கண்ணைப் பறித்தது மருதாணி கோலம்.

“ம்ம்ம்” என்று கோபமாக இழுத்தவன், “என்னய பார்த்தா பூக்காரன் மாதிரி இருக்கா உனக்கு?” என்று புருவங்கள் நெரிய கேட்டான்.

“பூந்தோட்டக்காரர் தானே நீங்க?” என்று முணுமுணுத்தாள்.

“என்னாது?” என்று அதட்டியவன், “பூவுக்குக் காச உங்கத்த கிட்ட குடுத்துடு” என்றான்.

“ம்ம்” என்று அவள் உள்ளே செல்லப் போக, “தேன்மொழி..” என்றழைத்தான்.

எலுமிச்சை மஞ்சளில் நீல நிற கரை வைத்த பட்டு உடுத்தியிருந்தாள். அதற்குப் பொருத்தமாக மஞ்சளும் நீளமும் கலந்த கண்ணாடி வளையல்கள். கழுத்தில் காதில் பொன்நகை என மிதமான அலங்காரத்தில் வந்து நின்றவளின் நீள கூந்தலில் பூ மட்டுமே இல்லாமல் இருந்தது.

அவள் லேசாகத் தலையை மட்டும் திருப்ப, “அது மதுர மல்லிதேன்” என்றான் சிரிக்காமல். அதைக் கேட்டதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. இதழ்கள் மெலிதான புன்னகையில் பிரிய, உதடு கடித்துச் சிரிப்பை விழுங்கி அவனை முறைத்து விட்டு சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்தபடியே, “ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி… கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி..” என்ற சத்தமாகப் பாடினான் தர்மதுரை. பாடலின் அடுத்தடுத்த வரிகள் ஏடாகூடமாக வர சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்து தலையசைத்து விட்டு திரும்பி அக்காவைப் பார்த்தான்.

error: Content is protected !!
Scroll to Top