இந்த வாழ்வென்பது – 13 (1)

“சங்கீதம் பாட்டிலா.. நீ பேசும் பேச்சிலா..” ஊரில் ஒலித்த பாடலுடன் இணைந்து அன்பழகனும் பாடிக் கொண்டிருக்க, “டேய் அன்பே, யார் பேசுறது உனக்குப் பாடுறது போலக் கேட்குது? என்னடா எங்களுக்குத் தெரியாம எங்கடா விழுந்த?” என்று கேலியை தீவிரமாகக் கேட்டான் ஜெயபாலன்.

அவனைக் கழுத்தோடு சேர்த்தணைத்து, குனிந்து முகத்தைப் பார்த்து, “பொண்ணு யாருடா? உன் கூடப் படிக்கிற புள்ளையா?” என்று ரகசியமாகக் கேட்க, “ப்ச், என்னய விடுண்ணா” என்று திமிறினான் அன்பழகன்.

“கத்திரிக்கா முத்தினா கடத்தெருவுக்கு வரப் போகுது.. என்னண்ணா?” என்று அலைபேசியில் மூழ்கியிருந்த சுதாகரனிடம் கேட்டான்.

“ப்ச், என்னைய விடே..”

“அதெல்லாம் விட முடியாது டா அன்பே. இங்க பாருடா, உனக்கு முன்னாடி சீனியர் மூனு பேர் நாங்க வரிசைல நின்னுட்டு இருக்கோம். மொத தேனுக்கு அப்புறம் அண்ணுக்கு. அதுக்கு அப்புறமாதான் எனக்கே பார்ப்பாங்க. இதுக்கு நடுல நீ போட்டிக்கு வராத டா. வெயிட் பண்ணு. எனக்கு முடிஞ்சுதான் உனக்கு. அது வரைக்கும் எவ பேச்சும் சங்கீதமா கேட்க கூடாது டா தம்பே. தப்பு. என்னா?” என்று தலையை அசைத்து அசைத்து கிண்டலாகச் சிரித்தபடியே ஜெயபாலன் கேட்க, நங்கென்று அவன் மண்டையில் முட்டி, அவனிடம் இருந்து தப்பித்தான் அன்பழகன்.

“டேய்.. என்ன கேட்டாலும் இல்லன்னு பதில் வரலயேடா. அப்போ பேச்சு சங்கீதமானது நெசம்தானா..”

“அண்ணா..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்திய அன்பழகனின் முகத்தில் படர்ந்த கோபத்தையும், வெட்கத்தையும் கண்டு சிரிப்பை அடக்கினான் அண்ணங்காரன்.

“விடுடா அவன. சின்னப் பையன் கிட்ட போய் என்ன விளையாட்டு..” என்று தம்பியை கண்டித்தான் சுதாகரன்.

“பாத்தியா டா, அண்ணனும் அதேதான் சொல்லுது” விடாமல் அவன் வம்பிழுக்க, “அ..க்கா” என்று கத்தினான் அன்பழகன்.

“இந்தா வர்றேன் அன்பு” என்று பதிலுக்குச் சமையல் அறையில் இருந்து கத்திய தேன்மொழி, இரண்டு நிமிடத்தில் காலை உணவை எடுத்து வந்து கூடத்தில் வைத்தாள்.

“என்னாது அது? ஒரு வாசமும் வரல?” ஜெயபாலன் கேட்க, “இட்லி, சாம்பார்” என்றாள் தேன்மொழி.

“எம்மா, எங்கருக்கம்மா.. ஏ அம்மாச்சி.. வா இங்க.. உன் பேத்தி பண்ற கொடுமைய என்னானு கேளு” என்று கத்தினான்.

“சென்னையிலதான் வாரத்துல நாலு நாள் இட்லி, தோசன்னு இத்தயே போட்டு கொல்றீங்கன்னு பார்த்தா.. இங்க வந்தும் இதே தானா? எம்மா..”

“ஏலே, ஏன் டா இப்படிக் கத்துற?” கொல்லையில் இருந்து எட்டிப் பார்த்துக் கேட்டார் முத்தம்மா.

“நீ மொத இங்க வா அம்மாச்சியேய்..”

“என்னடா வேணும் உனக்கு..”

“வாய்க்கு விளங்காத சம்பார வச்சுருக்கா உன் பேத்தி. பேரன்ங்க வந்திருக்கோம்னு ஒரு நாட்டுக் கோழிய பிடிச்சு அடிச்சா என்னா நீ? எனக்குக் காலச் சாப்பாடே வேணாம். நான் மதுர போய் மாமா வீட்ல சாப்பிட்டுக்கறேன்”

“மதியம் உங்க மாமா வீட்டுக்கு போறீங்கன்னுதான்டா இப்ப இட்லி, சாம்பார் வைக்கச் சொன்னேன். இங்க கறி தின்னுட்டு போனா அங்க போய் ஒழுங்கா சாப்பிட மாட்டீங்கன்னுதேன்..”

“அந்தக் கவலையெல்லாம் உனக்கு எதுக்கு அம்மாச்சி. கறி திங்க கசக்குதா?” என்று கடுப்படித்தான்.

“பேசாம உக்காந்து சாப்பிடுடா.” என்று சுதாகரன் தம்பியை அதட்டினான்.

“அய்யய்யோ இவனோட எப்பா.. கண்ண கட்டுது எனக்கு. நாளைக்கு இவனுக்கு வரப் போறவ, இவனுக்கு வடிச்சு கொட்ட முடியலன்னு எங்களைப் பேச போறா.. பார்த்துட்டே இரு” என்று முத்தம்மா புலம்ப, கொல்லென்று சிரித்தார்கள் மற்றவர்கள்.

“நல்லா சமைக்கத் தெரியாதவள கட்டவே மாட்டேன் நான்..” என்று இப்போதே திட்டவட்டமாகச் சொல்லி விட்டான் ஜெயபாலன்.

“மதுர மீனாட்சிய கும்பிட கறி தின்னுட்டு போவியா டா? அதுக்குத்தேன் சாம்பார் வச்சது, பேசாம சாப்பிடு” என்றார் கண்டிப்பாக.

தேன்மொழி அனைவருக்கும் தட்டு வைத்து காலை உணவைப் பரிமாறினாள்.

“அம்மாச்சி, நீங்களும் வாங்க.”

“இல்ல ராசாத்தி. தாத்தா கலரு கம்பெனிக்கு போய் இருக்கார் இல்ல? அவர் வரட்டும், நா அப்புறமேட்டு சாப்பிடுறேன்”

“தாத்தா வந்ததும் சாப்பிடுவார். நீங்க வாங்க, சூடா சாப்பிட்டு மாத்ர போடுங்க”

“ஆமா, சூடா சாப்பிடு அம்மாச்சி. இல்லனா இந்தச் சாம்பார வாய்ல வைக்க முடியாது” என்று ஜெயபாலன் சொல்லவும், எட்டி அவன் தட்டை பிடித்திழுத்தான் அன்பு.

தேன்மொழி அவனைக் கண்டிப்புடன் பார்த்து, தட்டை அண்ணன் முன் வைத்து இட்லியை பரிமாறினாள்.

இட்லி, கார பணியாரம், சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி என அனைத்திலும் கொஞ்சமாக வைத்தாள்.

அன்று அவர்கள் அனைவரும் மதுரை செல்வதால் தேன்மொழி உடை மாற்றிக் கிளம்ப உள்ளே சென்றாள்.

மற்ற அனைவரும் அமைதியாக உண்ண, ஜெயபாலனின் சலம்பல் மட்டும் குறையவில்லை.

“என்னா அம்மாச்சி பேத்தி வளர்த்திருக்க நீ. வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியல உன் பேத்திக்கு. என்னத்த சமைக்கச் சொல்லிக் கொடுத்தியோ போ. சென்னைல இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்து அடுப்படியை அத்தன உருட்டு உருட்டி கூட இன்னும் உன் பேத்தி ஒழுங்கா சமைக்கக் கத்துக்கல..” என்று சலம்பினான். அன்பழகன் எட்டி அண்ணனின் இடையில் குத்தினான்.

“ஆமாடா நீயும் வயித்துல அடி..”

“ஏய் தேனு..” என்று கத்தி தங்கையை அழைத்தான்.

“இதென்னா சட்னி? இதுக்கு ஏதாவது பேர் வச்சியா இல்லையா? அம்மாச்சி சும்மா அம்மியில அரைச்சு ஒரு சட்னி வைக்கும் பாரு. அப்படி இருக்கும் சள்ளு சுள்ளுன்னு.. சும்மா நாலைஞ்சு இட்லி என்ன.. கணக்கே இல்லாம உள்ள போகும். நீ வச்சுருக்கப் பாரு சட்னின்னு அதுல உப்பேயில்ல..” என்று கத்தினான்.

“அந்தச் சட்னி அரைச்சது நான்தான் டா..” என்று முத்தம்மா சொல்லவும், அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே.

அன்பழகன் என்ன, சுதாகரன் கூட வெடித்துச் சிரித்து விட்டான்.

“உப்பு கம்மியா இருக்கு. போட்டுக்கோ” என்று சுதாகரன் நீட்ட, லேசாக உப்பை போட்டு கலந்து ருசி பார்த்தவன், “இப்போ ஓகே” என்றான்.

அவ்வளவு நேரமும் அக்காவை குறை சொன்னதற்கு அன்பழகன் அப்படியே விட்டு விடுவானா என்ன? அண்ணன் சாப்பிட்டு முடிக்கும் வரை கேலி செய்தே அவனுக்குப் புரையேற செய்து விட்டான்.

சுதாகரனுக்குச் சொந்த ஊரில் இரு சக்கர வாகனங்கள் விற்கும் கடை திறக்க வேண்டும் என்பது நெடுநாளைய கனவு. கல்லூரி படிக்கும் போதே அந்த ஆசை அவனுக்குத் துளிர் விட்டிருந்தது.

தம்பியை சென்னை படிக்க அழைத்துக் கொண்டது கூட அந்த ஆசையில்தான்.

இருவரின் படிப்பும் நாளைய தொழிலுக்கு உதவ வேண்டும் என்ற கணிப்பிலேயே அதற்கான துறையைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கான அனுபவத்தைப் பெறவே இத்தனை ஆண்டுகள் அவன் வேலை பார்த்தது. அனுபவம் மட்டுமல்லாது தேவையான தொகையையும் சம்பாதிக்கவுமே வேலைக்குச் சென்றது.

பெற்றோரிடம் கேட்கலாம்தான். அதைத்தான் செய்யப் போகிறான். ஆனால், அதற்கு முன் மகன் மேல் அவர்களுக்கும் ஒரு நம்பிக்கை வர வேண்டும் அல்லவா?

கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் திண்டுக்கல் நகரத்தின் மையத்தில், கடைக்கு எல்லா வகையிலும் பொருத்தமான இடம் தேடிக் கொண்டிருந்தான். இப்போதுதான் நத்தம் சாலையில் அவனுக்குப் பிடித்த விதமாக இடம் அமைந்திருக்கிறது.

அந்த இடத்திற்கு முன் தொகை கொடுக்க வேண்டும். பத்திர பதிவு செய்ய வேண்டும். கடையை அமைக்கத் தகுந்த ஆள் பார்க்க வேண்டும் எனப் பல்வேறு பணிகள் வரிசைக் கட்டி நிற்கிறது.

தொழிலை ஆரம்பிக்கும் முன் மதுரை மீனாட்சியைத் தரிசித்து விடுவோம் என்று குடும்பத்துடன் கிளம்பிக் கொண்டிருக்கிறான் அவன்.

கோவிலுக்குச் சென்று விட்டு அவன் பெற்றோரும், அம்மாச்சி, தாத்தாவும் உடனடியாக ஊர் திரும்பி விடுவார்கள்.

இவர்கள் நால்வர் மட்டும் மாமா வீட்டிற்குச் செல்வதாகத் திட்டம். அன்பழகன் சென்னையில் இருந்து நேராக இங்கு வந்திருந்தான். மேலும் அனைவருக்கும் மாமா குடும்பத்தினரை பார்க்கும் ஆவலில் செல்கிறார்கள்.

மருமக்கள் வருகிறார்கள் என்றால் அத்தை சும்மா இருப்பாரா? விருந்துதான். அது போலப் பொற்கொடி வேறு நகைக் கடைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தேன்மொழிக்கு நகை எடுக்க வேண்டும் என. அவளைப் பெண் கேட்டு வர ஆரம்பித்து விட்டார்கள். சரியான வரன் அமையும் முன்பு போதுமான நகைகள் வாங்கிச் சேர்த்திடும் பரபரப்பு அவருக்கு.

“தேனு, நீயும் வந்து சாப்பிடு ராசாத்தி..” முத்தம்மா குரல் கொடுக்க, “இதோ வர்றேன் அம்மாச்சி” என்றவள், ஐந்து நிமிடம் கழித்து வெளியில் வந்தாள்.

“நான் போய் அம்மாவ சாப்பிட கூட்டிட்டு வர்றேன்” என்று பொற்கொடியை தேடி போனாள்.

கொல்லையில் வேலையாக இருந்தார் அவர்.

“நீ போ தேனு. அம்மா இப்ப வந்துடுறேன்” என்று ஆடு, மாடு, கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தார்.

தேன்மொழியைக் கண்டதும் ஆட்டுக் குட்டியொன்று தாவி ஓடி வர, அதைத் தடவியபடி பெரியம்மாவிற்காகக் காத்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top