தீபன் ஓடிச் சென்று மாமனின் அறைக் கதவை தட்டி, “மாமா..” என்று கத்த, தர்மதுரை அறைக் கதவை திறந்து மருமகனை கையில் தூக்கி அங்கிருந்த சோஃபாவில் பூ மூட்டையைப் போடுவதைப் போலப் போட்டான்.
தீபன் சத்தமாகச் சிரிக்க, அதைப் பார்த்ததும் மாமனிடம் தளிர் நடை போட்டு ஓடி வந்தாள் ரோஜா. அவள் உயரத்திற்குக் குனிந்து ஒற்றைக் கையால் அவளை அள்ளி தோளில் போட்டுக் கொண்டான்.
“தோட்டத்துக்குப் போக நேரமாகலயா ராசா? சாப்பிடுங்க” என்று அப்பத்தா சொல்ல, “நீ சாப்பிட்டியா அப்பத்தா?” என்று கேட்டான்.
“இப்பத்தேன் உளுந்தங்களி சாப்ட்டேன். நீ சாப்புடுய்யா” என்றார்.
திலகவதி சூடாகக் காலை உணவை எடுத்து வர, அவரிடம் இருந்து அதை வாங்கி வைத்தாள் அன்புக்கரசி.
ரோஜாவை மடியில் வைத்தபடியே சாப்பிட அமர்ந்தான். அன்று காலை உணவே அன்புக்கரசிக்குப் பிடித்ததாக இருந்தது.
இட்லி, கட்லா மீன் குழம்பு, முட்டை தோசை, கருப்பட்டி பணியாரம், உளுந்தங்களி என்று மகளுக்கும், பேரனுக்கும் பிடித்ததாகச் செய்திருந்தார் திலகவதி.
இட்லி மீன் குழம்பு அவன் தட்டிலிருக்க, ரோஜாவுக்கு உளுந்தங்களியை இரண்டு விரலால் வழித்து ஊட்டி விட்டபடியே சாப்பிட்டான்.
“உங்கப்பாவுக்குச் சாப்பாடு கட்டித் தர்றேன். கையோட எடுத்துட்டு போய்டு தொர”
“வேணாம்மா. நான் போய்ட்டு அப்பாவை வீட்டுக்கு சாப்பிட அனுப்பி வைக்கிறேன்.”
“சரிப்பா.. நீ இன்னொரு இட்லி போட்டுக்கோ”
“போதும்மா” என்று அவன் எழுந்து கொள்ளப் போக அவன் தட்டில் முட்டை தோசையை வைத்தாள் அன்புக்கரசி. அதில் பாதியை பிய்த்து அவள் தட்டில் வைத்தான். மிச்சத்தைத் தீபனுக்கு ஊட்டி விட்டான்.
“ஏத்தா, திலகா. உன் நாத்தனா போன் பண்ணாளா?” என்று அப்பத்தா கேட்க, “நேத்துச் சாயந்தரம் பேசினதுதான் த்தே. என்னா விஷயம்? போன் போட்டு தரவா, மககிட்ட பேசுறீங்களா?” என்று பதில் சொன்னபடியே அலைபேசியைத் தேடினார்.
“இல்லல்ல போன்லாம் போட வேணாம். நாளைக்குக் காளி மக காது குத்து இருக்குல்ல? அதுக்கு வர்றேன்னு சொன்னாளே, எந்தப் பஸ்ஸுக்கு வர்றான்னு தெரியுமா?”
“எங்கிட்ட ஒன்னும் சொல்லலியேத்த. பத்து மணிக்கா வருவாங்களா இருக்கும்”
“சிவகாசிலருந்து வரணும் இல்ல..” என்று அவர் இழுக்க, “அத்த எப்போ வருதுன்னு கேட்காம வேறென்ன முக்கியமான விஷயம் பேசுனீங்க?” என்று கேட்டான் துரை. அதற்காகவே காத்திருந்தது போலப் பளிச்சென்று சிரித்தார் பவுனு அம்மாள். அவர் தலை தும்பையாய் வெளுத்திருந்தது. ஆனால், பற்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அடிக்கடி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்வதால் பார்வையும் பளிச்தான்.
“அதுவா ராசா..” என்று அவர் சிரிப்புடன் ஆரம்பிக்கவும் சுதாரித்தான் இளவட்டம்.
“என்னா அப்பத்தா..” என்று அவரைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்டான்.
“உங்கத்த மவள ஶ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து கேட்டு வந்தாங்களாம்.”
“அவ படிச்சுட்டுல்ல இருக்கா?.”
“அவ காலேஜ் முடிச்சு ஒரு வருஷம் ஆகுது டா” என்றாள் அன்புக்கரசி.
“அப்படியா? நான் இன்னும் காலேஜ் போறான்னு நினைச்சுட்டு இருக்கேன்.” என்றவன், “நீ சொல்லு அப்பத்தா, என்ன ஶ்ரீவில்லிப்புத்தூர் வரன பத்தி விசாரிக்கணுமா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் அவுகளே பார்த்துப்பாங்கய்யா” என்றவர் திரும்பி மருமகளைப் பார்க்க, திலகவதி கை வேலையாக இருக்கவும், “உங்கத்த பொண்ண வெளில கொடுக்க முன்னாடி, அண்ணே வீட்ல ஒரு வார்த்த சொல்லிடுவோம்னு நினைக்கா..” என்று தயக்கத்துடன் இழுத்தார்.
“ம்ம், நல்ல வரனா இருந்தா பேசி முடிக்க வேண்டியது தானே அப்பத்தா? பையன் குடும்பம் நமக்குத் தெரிஞ்சவங்களா?” என்று அவன் கேட்கவும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அவனைப் பார்த்தார் அப்பத்தா.
“ஏய்யா, உங்க அத்தைக்கு அவ மவள நம்ம வீட்ல குடுக்கணும்னு ஆச..”
“நம்ம வீட்லயா..”
“ஆமா ராசா. அண்ணே மகன் உரிமைப்பட்டவன் நீ இருக்கையில எப்படி வெளில குடுப்பா?”
“ஓ..”
“அன்புவத்தேன் அவ மவனுக்குக் குடுக்க மாட்டேனுட்டீங்க. இப்ப உறவு விட்டு போகாம பேத்தியை நம்ம வீட்டுக்குக் கொண்டு வரலாம் இல்லய்யா. நீ என்னா சொல்ற?” என்று அவனையே கூர்ந்து பார்த்தார்.
“நான் நேத்தே சொல்லணும்னு இருந்தேனப்பா. நீ அக்காவையும் புள்ளைகளையும் கூட்டிட்டு பத்து மணிக்கு மேல வரவும், சொல்ல மறந்து போனேன்” என்றார் திலகவதி.
“நீ அத்தக்கிட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் வரன விசாரிக்கச் சொல்லு அப்பத்தா” என்று தன் மறுப்பை மறைமுகமாகச் சொல்லி விட்டான்.
“என்ன ராசா இப்படிச் சொல்ற. உங்கத்த தா மவள நம்ம வீட்ல குடுக்கணும்னு நெம்ப ஆசையா இருக்கா..”
“நீ சும்மா இரு அப்பத்தா. அந்தப் பிள்ளையலாம் கட்ட முடியாது”
“ஏய்யா..” அப்பத்தா கொண்டையை அவிழ்த்து முடிந்தபடி கேட்க, “இப்ப எனக்குக் கல்யாணத்துக்கு என்னா அவசரம் அப்பத்தா?” என்று கடுப்புடன் கேட்டான்.
அப்பத்தா திரும்பி மருமகளைப் பார்க்க, “உங்கத்த நாளைக்கு மகளைக் கூட்டிட்டு வருதாம். அவள ஒருக்கா பார்த்திட்டு..” என்று திலகவதி முடிக்கும் முன்னே, “எம்மா, அவள நான் இதுக்கு முன்னால பார்த்ததேயில்ல பாரு. என் கண்ணு முன்னால வளர்ந்த புள்ள. அத போய்..” என்றவன், ரோஜாவை கையில் தூக்கிக் கொண்டு போய்க் கையைக் கழுவினான்.
“இல்லப்பா தொர..”
“வேணாம்னு சொன்னா விடேன் ம்மா” என்றான் சலிப்புடன்.
“இப்ப எனக்கு என்ன வயசாகிடுச்சுன்னு கல்யாண பேச்செடுக்கறீங்க? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்”
“இன்னும் ரெண்டு வருஷம் போனா கிழவனாகிடுவய்யா நீ..” என்று அப்பத்தா நொடிக்க, “இன்னும் ரெண்டு வருஷமா? இப்பவே உனக்கு 27 நடக்குது தம்பி. இந்த ஆவணி பிறந்தா 28 ஆகப் போகுது. இப்ப கல்யாணம் பண்ணாம எப்ப பண்ண போற? உங்கக்கா எப்ப கல்யாண பேச்செடுத்தாலும் வேணா வேணான்னு மறுத்து பேசுற? நீ யாரையும் விரும்புறாப்லயும் தெரியல. எங்களுக்கு நீ ஒத்த மவென் உங்கல்யாணத்த பார்க்கணும்னு எங்களுக்கு ஆச இருக்காதா?” என்று திலகவதி தன் ஆற்றாமையைப் பாட்டாகப் பாடி விட்டார்.
அவ்வளவுதான். அப்பத்தாவை கேட்கவா வேண்டும்? மருமகள் விட்ட இடத்தில் இருந்து பாட்டைப் பிடித்துக் கொண்டார் அவர்.
“என் பேரன் புள்ளைய பார்த்தாதான் என் கட்ட வேகும்” என்று அள்ளி முடிந்த கொண்டையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
தர்மதுரை எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இது சமீபமாக வீட்டில் அடிக்கடி நடக்கும் கூத்து என்பதால் அவனுக்குப் பழகி விட்டிருந்தது.
அதனால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வெளியில் கிளம்பத் தயாரானான்.
அழகியநல்லூரின் மைக் செட் சத்தத்தையும் மீறி அப்பத்தாவின் புலம்பல் சத்தம் அந்த வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தது.
“வாக்கா போலாம்” என்று அன்புவை அழைத்தவன், “ம்மா நான் கிளம்பறேன். ஏய் அப்பத்தாயேய். அப்போ நா வரட்டா..” என்று கத்தினான்.
“நாளைக்கு என் மவ வருவா. நா அவகிட்ட சொல்லத்தான் போறேன். என் பேத்திதான் இந்த வூட்டு மருமகள்னு…” என்றார் பவுனு அம்மாள் உறுதியாக.
மாமியாரையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டே வெளியில் வந்த திலகவதி, “நீ போனதும் அப்பாவை சாப்பிட அனுப்பி விடுப்பா.” என்றார்.
“ம்ம், சரிம்மா”
“நேரமாகுது வாக்கா”
“அப்படியே இந்தப் பூவ போற வழியில மருதாயி ஆத்தா வீட்ல குடுத்திடு. இத்த..” என்று வரிசையாகப் பேர்களைச் சொல்லி, பூக்கள் இருந்த பைகளை அவர் நீட்ட, “எனக்கு வேலையிருக்கும்மா. நீயே போய்க் குடுத்துக்கோ” என்றான் எரிச்சலுடன்.
“ஏன் டா, உனக்குப் போற வழி தானே? நீ போகையில அப்படியே குடுத்துட்டு போக முடியாதா? இதுக்காக என்னைய நடந்து போகச் சொல்றியா?’
“பூ குடுக்கறதோட முடியுமா? நாலு வீட்ல நிக்க வச்சு கத பேசுவாங்க”
“ரொம்பச் சலிச்சுக்காம எடுத்துட்டு போடா. நேத்தே பூ வேணும்னு சொல்லியிருந்தாங்க” அவன் அசையாமல் முறைத்தபடியே நிற்க, “யார் வீட்ல குடுக்கணும்ன்னு சொல்லும்மா. நான் குடுத்துடுறேன்.” என்று அவசரமாகக் கிளம்பி வந்த அன்புக்கரசி அதை வாங்கிக் கொண்டாள். தர்மதுரை அமைதியாகச் சென்று வண்டியை எடுத்தான்.
“கல்யாண தேன் நிலா…” பாடல் ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது.
தம்பியின் பின்னால் அமர்ந்திருந்த அன்புக்கரசி, “எனக்குத் தெரியாம யாரையும் லவ் பண்றியா டா?” என்று கத்தி கேட்டாள்.
“உனக்குத் தெரியாம? நானு? ஏன்க்கா நீ வேற..”
“வீணாவ பிடிக்கலன்னா விடுடா. நா வேற நல்ல பொண்ணா உனக்குப் பாக்கறேன். நீ ம்ம்னு மட்டும் சொல்லு போதும்”
“ம்ம்”
“டேய்.. தொர..”
“அதான் ம்ம்னு சொல்லிட்டேன் இல்ல?” என்று அவன் தீவிரமாகக் கேட்க, அன்புக்கரசி சத்தமாகச் சிரித்தாள்.
“இந்தா இப்பவே உங்க மாமாக்கு கால் பண்றேன் இரு. இன்னைக்கே உனக்குப் பொண்ணு பார்க்கற வேலையை நாங்க ஆரம்பிக்கறோம்” என்றாள் ஆர்ப்பாட்டமாக. அவள் குரலில் நிறைந்து வழிந்த மகிழ்ச்சி அவனையும் புன்னகைக்க வைத்தது.