காலை ஏழு மணிக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அழகியநல்லூர் கிராமம்.
அன்று மருதாயி ஆத்தா வீட்டில் புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்குக் கறி விருந்து. ஊருக்கே அழைப்பு விடுத்திருந்தார்கள். ஊருக்குள் எல்லாரும் அங்காளி, பங்காளி தானே.
அதிகாலையிலேயே ஊரின் முக்கியப் பகுதிகளில் மைக் செட் கட்டி இசையின் ராஜாவை இசைக்க விட்டிருந்தார்கள்.
“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது..” மூடியிருந்த அறைக் கதவை மீறி பாடல் அவன் செவியில் நுழைந்து உறக்கத்தைக் கலைக்க மெல்ல புரண்டு படுத்த தர்மதுரை, தலையணையால் காதை மூடிக் கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தான்.
“மாமா..”
“மாமா..” என்று கத்தியது இளம் குரல்கள் இரண்டு. அந்தக் குரல்களுக்கு முன்னே மைக் செட்டின் சத்தம் கூடக் குறைந்தது போன்ற பிரம்மை அவனுக்கு. படாரென்று அவனது அறைக்கதவு திறக்க, “மாமா” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து உறங்கிக் கொண்டிருந்தவன் மேல் பூக்குவியலாய் விழுந்தார்கள் அன்புக்கரசியின் பிள்ளைகள்.
தர்மதுரையின் பக்கத்தில் அமர்ந்து, “மாமா..” என்று அவனை உலுக்கி எழுப்பினான் ஆறு வயது தீபன்.
“மா…மா..” சட்டமாக அவன் மார்பின் மீதேறி அமர்ந்து, கன்னத்தில் தட்டி, இரு கையாலும் அவன் கண்ணைப் பிரித்து எட்டிப் பார்த்து, பால் பற்களைக் காட்டிச் சிரித்தாள் ஒன்றே கால் வயது ரோஜா.
மாமன் பட்டெனக் கண்களை மூடிக் கொண்டான்.
“மா..மா” மீண்டும் சிணுங்கி, அவன் மீசையைப் பிடித்திழுத்து, கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல வந்து நறுக்கென்று கடித்து வைத்தாள்.
“ஆஆஆஆஆ..” என்று மாமன் கத்த, “அய்…யோ” என்று பிஞ்சுக் கரங்களால் வாய் பொத்தி மாமனைப் பார்த்தாள்.
“வலிக்குது வாலு..” என்று வலித்தது போல நடித்து அவன் கத்தவும், அவன் கன்னத்தைத் துடைத்து முத்தம் வைத்தாள்.
“எந்திரிங்க மாமா. அம்மா கூப்டாங்க உங்கள..” தீபன் சொல்ல, “இருடா, இவள கடிச்சு வச்சுட்டு வர்றேன். என்னைய கடிச்சா இல்ல?” என்று அவன் மார்பில் அமர்ந்திருந்த ரோஜாவை கையில் அள்ளி, முகம் முழுக்க முத்தமிட்டு, கிச்சு கிச்சு மூட்டினான்.
குழந்தை கிளிக்கி சிரிக்கத் தொடங்கினாள். அதைப் பார்த்து தீபனும் சிரிக்க, குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் அறை முழுக்க எதிரொலித்தது.
பூ ஏற்றுமதியை பொறுத்தவரை விமான நிலையம் அவர்களுக்கு மிக அருகில் இருக்க வேண்டும். அப்போதுதான் குறித்த நேரத்திற்குள் பூக்களை விமானத்தில் ஏற்றி அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும்.
தர்மதுரை முதலில் மதுரை விமான நிலையத்திற்குத் திண்டுக்கலில் இருந்துதான் நேரடியாகப் பூக்களை அனுப்பிக் கொண்டிருந்தான்.
சில வருடங்களில் பூக்களுக்கான தேவை ஏகத்துக்கும் அதிகரிக்க, மதுரையில் அவனுக்குத் தெரிந்த பூ விவசாயிகளிடம் இருந்து தரமான பூக்களை நேரடியாகக் கொள்முதல் செய்தான்.
அவற்றைத் தரம் பிரிக்க, தொடுக்க என அனைத்திற்கும் ஆரம்பத்தில் திண்டுக்கல்தான் கொண்டு வந்தான்.
அது அவர்களின் நேரத்தையும், உழைப்பையும், செலவையும் கூட்டியது. அதற்குத் தீர்வாக என்ன செய்வது என்று யோசிக்கையில் மதுரையிலேயே ஒரு பேக்கிங் ஹவுஸ் அமைப்பதுதான் சரியான தீர்வாகப்பட்டது.
லோகேஷ்வரனுக்குச் சொந்த ஊர் மதுரை என்பதால் அங்கே அவனியாபுரத்தில் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான காலி மனைகள் இருந்தது. மதுரை விமான நிலையம் அவனியாபுரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் தூரம் தானே. ஆக, தர்மதுரை அதை வாங்க விரும்பினான்.
“என்ன மாப்ள, எல்லாம் நம்ம எடம் தானே? என்னத்துக்கு மார்கெட் ரெட் தர்றேன், எடத்த எழுதி தாங்கன்னு கேட்டுட்டு இருக்க?” என்று லோகேஷ்வரன் கோபித்துக் கொள்ள, தர்மதுரைக்கு அக்கா கணவரிடம் இருந்து இடத்தை இலவசமாக வாங்க மனம் வரவில்லை. ஏற்கெனவே அவர்களுக்கும் அன்புக்கரசி புகுந்த வீட்டினருக்கும் லேசான சடவும், மெலிதான மனக் கசப்பும் ஓடிக் கொண்டிருந்தது.
என்னதான் சொந்த தொழில் என்றாலும் அதில் மாப்பிள்ளையாக லோகேஷ்வரனை கூட்டுச் சேர்த்ததில் சந்தோஷம் என்றாலும், அவர் வீட்டோடு மாப்பிள்ளையாகச் சென்றதில் அவர் குடும்பத்தினருக்கு அத்தனை பிடித்தமில்லை.
வீட்டோடு மாப்பிள்ளை என்றாலே இன்னமும் கௌரவக் குறைச்சலாகத் தானே பார்க்கப்படுகிறது. அது போலவே ஊரும் உறவும் பேச, அந்தக் கோபத்தை அன்புக்கரசியின் பக்கமாகத் திருப்பினார்கள்.
அந்த விஷயத்தில் தர்மதுரைக்கும் வருத்தம்தான். அதனாலேயே அவர்களுக்குச் சொந்தமான இடத்தை இலவசமாகத் தொழிலுக்குப் பயன்படுத்த மறுத்து விட்டான் அவன்.
அந்த இடத்திற்கான சரியான விலை கொடுத்தே வாங்கி அக்காவின் பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டான்.
மூன்றே மாதங்களில் மதுரையில் அவர்களின் முக்கியக் கிளை தொடங்கப்பட்டது. அத்தோடு அக்காவின் குடும்பமும் அங்கே குடி பெயர்ந்தது. லோகேஷ்வரனின் குடும்பத்தினருக்கும் அதில் மகிழ்ச்சி.
அவன் முன்தினம் வேலையாக மதுரைக்குச் சென்ற போது அக்காவையும், பிள்ளைகளையும் உடன் அழைத்து வந்திருந்தான்.
“எந்திரிச்சுட்டியா டா? இந்தா காஃபி” கையில் சூடான காஃபியுடன் உள்ளே வந்தாள் அன்புக்கரசி.
“அப்படி டேபிள்ல வை கா, முகம் கழுவிட்டு வந்து குடிக்கறேன்” என்றான். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு குரங்கு குட்டியை போலத் தொங்கிக் கொண்டிருந்தாள் ரோஜா.
“அம்மாகிட்ட வாங்கடி தங்கம். மாமா குளிச்சுட்டு வரட்டும்” என்று அன்புக்கரசி குழந்தைக்காகக் கை நீட்ட, “ம்ஹூம்” என்று தலையசைத்து, மாமன் கழுத்தில் முகம் புதைத்து, அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தாள்.
“அம்மாச்சி உளுந்து அல்வா செஞ்சுருக்காங்க தங்கம். சாப்பிடலாம் வாங்க” என்று ஆசைக் காட்டி அழைக்க, அப்போதும் மறுப்பாக முகம் திருப்பினாள்.
“வாடி குட்டி”
“ம்…ஹூம்” என்றாள் அழுத்தமாக.
“மாமா குளிச்சுட்டு உன்னைய மாரியே ஃப்ரெஷ்ஷா வர்றேன் ரோஜாக்குட்டி, அதுவரைக்கும் அம்மாகிட்ட இருங்க தங்கப்புள்ள” என்று மாமன் கொஞ்சிச் சொல்லவும் மனமிரங்கி அம்மாவிடம் தாவினாள்.
“எங்கம்மா தம்பிய இன்னும் காணோம்?” சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து திலகவதி மகளிடம் கேட்க,
“இப்பத்தேன் காஃபி குடுத்துட்டு வந்தேம்மா. குளிக்கப் போறேன்னு சொன்னான்” என்றாள் அன்புக்கரசி, அப்பத்தா பவுனு அம்மாளிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்த மகளைப் பிடித்திழுத்துப் புத்தாடை அணிவித்தாள்.
“தம்பி எட்டு மணிக்கு தோட்டத்துக்குப் போகணும்னு சொன்னான். மணி ஏழே முக்கா ஆகப் போகுது. இன்னும் அவென ஆளையே காணோம். அப்புறம் அவதி அவதியா கிளம்பி சாப்பிடாம கொள்ளாம அரக்க பரக்க ஓடுவான்.” என்று மகளிடம் புகார் படித்தவர், “தொர தம்பி..” என்று சத்தமாக மகனை அழைத்தார்.
“தம்பி என்ன பண்றான்னு பாரும்மா..” என்று மகளிடம் சொல்லி சமையல் வேலையைக் கவனிக்க உள்ளே சென்றார்.