இந்த வாழ்வென்பது – 11 (3)

தேன்மொழிக்குத் தேர்வுகள் முடியும் வரை அவளிடம் இந்தப் பேச்சே எடுக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான் ஜெயபாலன். ஆக, சென்னை திரும்பி வந்த சுதாகரன் கூடத் தங்கையிடம் எதுவும் சொல்லவில்லை.

அம்மாச்சி, தாத்தா என அனைவரின் வாய்க்கும் பூட்டுப் போடப்பட்டது.

தேன்மொழியின் கவனமெல்லாம் தேர்வுகளின் மீது மட்டுமேயிருந்தது.

மறுவாரமே அவளின் தேர்வுகள் முடிந்து விட்டிருந்தது. மிகவும் நன்றாக எழுதியிருந்தாள்.

“அப்பாடா, நான் காலேஜ் முடிச்சுட்டேன் அம்மாச்சி” என்று குதூகலத்துடன் கத்திய பேத்தியின் தலையில் கை வைத்து அழுத்தினார் முத்தம்மா.

“தாத்தா, இன்னையில இருந்து நான் ஃப்ரீ. சொல்லுங்க, நாம எங்க போலாம்? சிறுவாபுரி முருகன் கோவிலுக்குப் போகணும்னு சொன்னீங்க இல்ல? நாளைக்குப் போவோமா?” என்று கருப்பண்ணசாமியிடம் கேட்டவள், “இல்ல, அம்மாச்சி போகணும்னு சொல்லிட்டே இருந்தாங்களே காஞ்சிபுரம். அங்க போவோமா?” என்று கேட்டாள்.

அனைவருக்கும் பழச்சாறு எடுத்துக் கொண்டு அன்பு வரவும், “ஃபர்ஸ்ட் அம்மாச்சி, தாத்தா போகணும்னு ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் போய்ட்டு அப்புறமா நாம ஊர் சுத்தலாம் டா அன்பு. சரியா?” என்று தம்பியிடம் கேட்டாள்.

“நீ, உனக்கு எங்க போகணும்னு சொல்லுக்கா. நாம அங்க போகலாம்” என்று அன்பு சொல்ல, பெரியவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன அம்மாச்சி? எங்க போலாம்னு சொல்லுங்க?”

“நாம இன்னைக்கு ஊருக்கு போறோம்த்தா. உங்கண்ணே டிக்கெட் போட்டத சொல்லலயா உனக்கு?” என்று முத்தம்மா கேட்கவும், “ஊருக்கா?” என்று அதிர்ச்சியானாள்.

மாலை திருமணச் செய்தியை கேட்டதும் அவளின் அதிர்ச்சியின் அளவு கூடிப் போனது.

அவளின் விருப்பமின்மை அப்பட்டமாக அவள் கண்களில் வெளிப்பட்டது.

மறுநாள் வீடு வந்ததும் முதலில் பேச்சை ஆரம்பித்தது முத்தம்மாதான்.

“வீட்ல பெரியவங்கன்னு நாங்க ரெண்டு பேரு குத்துக்கல்லாட்டம் இருக்கையில நீங்களே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டா என்னா அர்த்தம்?”

“என்னம்மா பேசுற நீ, எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு.. கேட்டு கேட்டுதானே செஞ்சேன்.”

“என்னத்த செஞ்ச? உன் நாத்தனா சொந்தம்னா வேணவே வேணாம்னு நான் சொன்னேனா இல்லையா? அப்புறமும் எதுக்கு அவங்கள வரச் சொன்ன?” மருமகன் அங்கிருப்பதைப் பொருட்படுத்தாமல் கோபமாகப் பேசினார். அதற்குக் காரணமும் இருந்தது.

பையன் வீட்டார் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று சொன்ன பிறகும், பரமேஸ்வரி சும்மா இருக்கவில்லை.

பொற்கொடிக்கு போன் செய்து மிக நீண்டதொரு பட்டியலை நீட்டி விட்டார். அவர்கள் மனது வைத்தால், பணத்தைப் புரட்டினால் அதையெல்லாம் செய்து விடலாம்தான். ஆனால், கல்யாணத்திற்கே இப்படியென்றால், அதன் பிறகு? பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் அத்தோடு முடிந்ததா? அதற்குப் பிறகு பார்க்க வேண்டியது எத்தனை இருக்கிறது?

பையனுக்கு வெளிநாட்டு வேலை என்பதைச் சொல்லி சொல்லியே வரதட்சணை வரிசையைக் கூட்டினார் பரமேஸ்வரி.

அவருக்குப் புகுந்த வீட்டில் அவர் மரியாதை முக்கியமாகப்பட்டது. தேன்மொழி தம்பி மகள் என்றது பின்னே போய், புகுந்த வீட்டில் தன் கொடியை நிரந்தரமாக நாட்டி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். அதில் முத்தம்மா முதற்கொண்டு மொத்த பேருக்கும் மனத்தாங்கல் இருந்தது.

“சரி, உன் நாத்தனாவ நம்பி குடுக்கல. ஆனா, நாளைக்குப் பிள்ளைக்கு ஒன்னுன்னா எங்குட்டு ஓடிப் போய் நிக்கறது நாம?” என்று மகளிடம் சடைத்தவர், “நம்ம ராசாத்திய வளர்த்து இங்கனயே கண்ணு முன்னாடி கட்டிக் குடுக்கறத விட்டுட்டு.. எங்கயோ வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கறேன்றீங்க மாப்ள” என்று நேரடியாகக் கந்தனிடமே கேட்டு விட்டார்.

அந்தக் காலத்திலேயே அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக வர வைத்தவர்கள். பொண்ணுக்கே அப்படியென்றால் ஆசையாய் வளர்த்த பேத்திக்கு இன்னும் அதிகமாகத் துடிக்கும் தானே?

“வெளிநாட்டு மாப்ளயா?” என்று ஒவ்வொருவராகக் கேட்க கேட்கத்தான் பிரிவின் தூரம் உரைத்தது பெரிய தகப்பனுக்கு.

மனைவியின் பேச்சை ஆமோதித்து, கருப்பண்ணசாமியும் சாமியாடி விட்டார்.

அவர்கள் பேசி முடிக்கவும், “இப்போ என்னா அவசரம்னு தேனுக்கு இம்புட்டு பாஸ்ட்டா மாப்ள பாக்கறீங்க?” என்று ஜெயபாலன் கச்சேரியை தொடங்கினான்.

“நாங்களா டா அவசரமா பார்த்தோம்? அவங்களே ஆசைப்பட்டுப் பொண்ணு கேட்டு வந்தா குடுக்க முடியாதுன்னா சொல்ல முடியும்?”

“அப்புறம்? குடுக்க முடியாதுன்னுதாம்மா சொல்லணும். வேற எப்படிச் சொல்லுவீங்க?”

“சின்னவனே” என்று கந்தன் அதட்ட, “அவ இப்பதான் ப்பா காலேஜ் முடிச்சா. வேலைக்குப் போகணும்னு ஆசையா சொல்லிட்டு இருந்தா.. அது தெரியாம.. அவளுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்திட்டு இருக்கீங்க” என்றான் கோபமாக.

“நீ புரியாம பேசாத டா. அவளுக்கு இப்போ முடிச்சாதேன் சரியா இருக்கும். அடுத்து உங்கண்ணனுக்கு முடிச்சிட்டு, உனக்கும் பார்க்க வேணாமா..”

“அம்மா..” என்று சுதாகரன் சலிப்புடன் அழைக்க, “அண்ணனுக்கு மொத பாருங்க. எங்களைப் பத்தி பொறுமையா கவலைபடலாம் நீங்க” என்றான் ஜெயபாலன்.

“பொம்பள புள்ளய வீட்ல வச்சுட்டு எப்படிடா அண்ணனுக்கு மொத பாக்கறது? அதெல்லாம் சரியா வராது. நீயும், அண்ணனும் பைக் கடை தொறக்க போறேன்னுல்ல சொல்லிட்டு இருக்கீங்க. அண்ணே எடம் கூடப் பார்த்துட்டியான், இப்போ கல்யாணம் பண்ணுவானா? கடையைப் பார்ப்பானா அவென்?”

“அண்ணே கடைய பாக்கட்டும். நானும், தேனுவும் வேலையைப் பாக்கறோம். நீங்களும்..” என்று அவன் நிறுத்த, “டேய் என்ன மரியாத தேயுது?” என்று காய்ந்தார் பொற்கொடி.

“உங்களுக்கும் வயசாகுது இல்லடா. இந்தக் கார்த்திகை வந்தா பெரியவனுக்கு 29 ஆகப் போகுது. அண்ணனுக்கு முப்பதுக்குள்ள கல்யாணம் முடிக்க வேணாமா டா? அதுக்கு முன்ன பாப்பாக்கு முடிக்கணும் இல்ல?”

“இல்லன்னா என்னம்மா? ஊர் பேசுமா? பேசிட்டு போறாங்க. அதுக்காகல்லாம் தேனுவ கட்டி குடுக்க முடியாது”

“எப்படிப் பேசுறான் பாருங்க”

“சின்னவனே..” கந்தன் நிதானமாக அழைக்க, “சரிப்பா, நீங்க பாருங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா, இந்த வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறதுலாம் முடியாது. திண்டுக்கல், மதுரன்னு நம்ம பக்கமே பாருங்க. அதைத் தாண்டிலாம்.. வேணாம்” என்றான் முடிவாக.

மகனின் தொனியில் கந்தன் சட்டெனச் சிரித்து விட்டார். இனி மகன்களின் பேச்சுதான் முடிவு என அவருக்குப் புரிந்தது.

தேன்மொழியை விரும்பி பெண் கேட்டு வந்த வரனை வேண்டாமெனச் சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. மகளை ஆசைப்பட்டு மணமுடிப்பவன் நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு. அதனாலேயே இரண்டு மனதாகத் தடுமாறிக் கொண்டிருந்தார்.

மெதுவாகத் திரும்பி மனைவியைப் பார்த்தார். அவரின் எண்ணத்தையே பிரதிபலித்தது பொற்கொடியின் முகம்.

“ரெண்டு நாள்ல பையன் வீடு பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்காங்க. அவங்க வரட்டும். தேனு பையனை பார்க்கட்டும். மத்ததை அப்புறமா பேசிக்கலாம்” என்று சொல்லி சபையைக் கலைத்தார் கந்தன்.

அக்காவிற்குத் திருமணம் என்றதும் அன்பழகன் முகத்தில் அதிர்ச்சிதான் முதலில் வந்தது.

அவனுக்கு இன்னும் ஓராண்டு கல்லூரி இருக்கிறது. அக்கா சென்னையில் வேலைப் பார்த்தால், இருவரும் ஒன்றாகவே இருக்கலாம் என்ற அவனது மகிழ்ச்சி குமிழை அந்தச் செய்தி உடைத்தது.

மணிவண்ணன் பையனை பற்றி நல்லவிதமாகப் பேசவும், கொஞ்சம் சமாதானமானான். ஆனால், உடனேயே திருமணம் வைக்கப் போகிறார்கள். அதன் பிறகு அக்கா வெளிநாடு சென்று விடுவாள் என்றதும் அவனது அகமும், முகமும் கவலையை அப்பிக் கொண்டது.

பிரிவின் துயரம் இப்பொழுதே அவனை அழுத்தத் தொடங்கியது. அவனுக்கு அது பழகியதுதான் என்றாலும் வலித்தது.

மதுரை செல்லாமல் நேராக அக்காவுடன் திண்டுக்கல் வந்திருந்தான் அவன். வீட்டில் நடக்கும் வாக்குவாதங்கள் எல்லாவற்றையும் அவர்களும் கேட்டுக் கொண்டு தானிருந்தார்கள்.

அக்காவின் முடிவை அறிய அவள் முகத்தையே எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தான். ஆனால், தேன்மொழி எதுவும் பேசவில்லை.

“தேனு..” என்று பொற்கொடி அழைக்கவும், தேன்மொழி மௌனமாக எழுந்து செல்ல அவளைப் பின் தொடர்ந்தான் அன்பழகன்.

“தேனு, நாங்க பேசினதை எல்லாம் கேட்டுட்டு தானே இருந்த? நீ சொல்லு. நாங்க என்ன பண்ணட்டும்? உங்கத்த நாளான்னைக்குப் பையன் வீட்டை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னா. அவங்களை வரச் சொல்லவா? இல்ல, வேணாம்னு சொல்லிடவா?”

முதன்முறையாகத் தேன்மொழியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். முடிவெடுக்கும் பொறுப்பையும் அவள் வசமே ஒப்படைத்தார்கள்.

பெரியம்மா, பெரியப்பா முகத்தைப் பார்த்தாள் அவள்.

“என்ன ராசாத்தி, வர வேணாம்னு சொல்லிடுவோமா?” முத்தம்மா கேட்க, தேன்மொழி தயக்கத்துடன் தன் பதிலைச் சொன்னாள். அதைக் கேட்டதும் வீட்டினர் முகத்தில் கலவையான உணர்வுகள்.

*****

வெள்ளிக்கிழமை மாலை அவரது வழக்கமாகக் குளக்கரையில் அமைந்திருந்த கங்கையம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தார் திலகவதி.

அன்றும் பச்சை பட்டில் காட்சி தந்தாள் கங்கையம்மன்.

அவரின் வேண்டுதல் என்றைக்கும் மாறியதில்லை.

“எல்லாரும் நல்லாருக்கணும் தாயே” என்று கண் மூடி மனமுருக வேண்டுதலை வைத்து, மனம் நிறைய அம்மனை வழிபட்டு வெளியில் வந்தார்.

அவரின் மகன் வருகிறேன் என்று சொல்லியிருக்க, அவனுக்காகக் காத்திருந்தார்.

அந்நேரம் பொற்கொடி சாமி கும்பிட வரவும், அவரிடம் பேச்சு கொடுத்து நின்றார்.

அப்போது, “அம்மா” என்று கத்தி அழைத்தான் அங்கு வந்த தர்மதுரை.

“நீங்க போய்ச் சாமி கும்பிடுங்க அண்ணி. என் புள்ள வந்துட்டான், நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்று பொற்கொடியிடம் சொல்லிக் கொண்டு மகனிடம் வந்தார்.

“நான்தான் பேசிட்டு இருக்கேன்னு தெரியுது இல்லடா. ஏன் அந்த ஹாரனை போட்டு அடிச்சிட்டே இருக்க? உன்னால கொஞ்ச நேரம் காத்துட்டு இருக்க முடியாதா டா? அப்படியென்ன அவசரம்?”

“எம்மா எனக்கு நேரமாகுது வண்டியில ஏறும்மா. நீங்க அப்படியென்ன முக்கியமான விஷயம் பேசியிருப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியாது பாரு. ஊர் கதை தானே பேசிட்டு இருந்தீங்க?”

“ஆமா, இவனுக்குதான் எப்பவும் தலை போற வேலை காத்துட்டு நிக்குது. நாங்களாம் வெட்டியா ஊர் நியாயம்தான் பேசிட்டு இருக்கோம்” அம்மா சொன்ன வேகத்தில் சிரித்தபடியே குளத்தை எட்டிப் பார்த்தான் தர்மதுரை.

ஓர் ஓரம் முழுவதும் அல்லி, செந்தாமரை மொட்டுக்கள் நிறைந்திருக்க, அவன் உதட்டில் புன்னகை மொட்டு விட்டது.

அப்படியே அம்மாவை திரும்பிப் பார்த்து, “வண்டியில ஏறும்மா. சாயந்தரம் நாலு மணி ஃப்ளைட்ல மும்பைக்குப் பூ அனுப்பி இருக்கோம். கல்யாண ஆர்டர் மா. அவங்களுக்குப் பூ பத்திரமா போய்ச் சேர்ந்துச்சான்னு நான் போய்ச் செக் பண்ணணும்.” என்றான் கெஞ்சுதலாக.

“உன்னய நாளைக்குக் காலையில அந்த அத்த வீட்ல கொண்டு விடுறேன், மிச்ச கதையை அப்போ பேசிக்கோம்மா” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“நாங்களும் முக்கியமான விஷயம்தான் டா பேசினோம். அவங்க பொண்ணுக்கு நல்ல வரன் வந்திருக்குன்னு போன வாரம் சொன்னா. அதேன் என்னான்னு கேட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட”

“யாருக்கும்மா கல்யாணம்?”

“தேன்மொழிக்கு டா.”

“தேன்மொழியா? ஹம்ம், யாரு அந்தச் சிலுப்பியா?” என்று சிரிப்புடன் கேட்டான்.

“டேய்..” என்று மகனின் தோளில் அடித்தார் திலகவதி.

“அது சின்னப் பிள்ளை இல்ல?” என்று யோசனையாகக் கேட்டான். அவன் கண்கள் அனிச்சையாகக் குளத்து அல்லி, செந்தாமரையை வருடியது.

“அதெல்லாம் இப்போ நல்லா வளர்ந்துட்டா டா. இப்பதான் காலேஜ் கடைசிப் பரிட்சை எழுதி முடிச்சாளாம்”

“ஓ? இப்பத்தானா? அப்போ சின்னப் பொண்ணுதான்” என்றான் சிரிப்புடன்.

“ஆமா. சின்னப் பொண்ணு. நாம பேசுறதுக்கு ஏட்டிக்கி போட்டியா பேசணும் இவனுக்கு.” என்று அலுத்தவர், “இப்போ நேரமாகலையா உனக்கு, வண்டியை எடுடா.” என்று அதட்டினார். மெலிதான சிரிப்புடன் வண்டியை இயக்கி நகர்த்தினான் தர்மதுரை.

error: Content is protected !!
Scroll to Top