இந்த வாழ்வென்பது – 11 (2)

வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களின் அத்தை பரமேஸ்வரியுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் வந்திறங்கினார்கள்.

அவர்களை வரவேற்று உபசரித்த பொற்கொடி, “புள்ளைக்குக் காலேஜ்ல முக்கியமான பரிட்ச.” என்று தேன்மொழி வீட்டில் இல்லாததற்கான காரணத்தைச் சொல்ல, தேன்மொழியைத் திருமண வீட்டில் வைத்தே பார்த்து விட்டோம் என்றார்கள் அவர்கள். கூடுதலாகப் பையனும் பார்த்து விட்டான். அவனுக்கும் விருப்பம் என்று அவர்கள் சொல்ல, புன்னகைத்தார் பொற்கொடி.

அந்தக் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் வசதி அவர்களின் பேச்சிலும், தோரணையிலும், உடையிலும், அணிந்திருந்த நகைகளிலும் வெளிப்பட்டது.

அங்கே பிள்ளை வீட்டினரை முந்திக் கொண்டு அனைத்திற்கும் பரமேஸ்வரிதான் பேசினார். அவர் குரல்தான் அங்கு ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

பரமேஸ்வரி திருமணமாகி போனதோடு சரி. அதன்பிறகு பெரிதாகப் பிறந்த வீட்டோடு உறவாடியதில்லை.

பெரியநாச்சி இருந்தவரை அவர்தான் மகளை இழுத்துப் பிடித்தார். அவர் போன பிறகு, தங்கையை மறந்து விடாமல் அவருக்கு எல்லாம் செய்தார் கந்தன்.

பரமேஸ்வரி பிள்ளைகளின் சுப காரியங்களுக்கு, திருமணத்திற்கு என அனைத்திற்கும் தாய் மாமனாக முன்னின்று, முறையை முறையாக ஒரு குறையும் வைக்காமல் செய்திருக்கிறார்.

இன்றும் பொங்கல், தீபாவளி எனப் பண்டிகைகளுக்குப் பிறந்த வீட்டு சீரை செய்து விடுவார். வீட்டின் எல்லா நல்ல காரியங்களுக்கும் அவரை அழைத்து விடுவார். ஒருநாளும் அவருக்கான மரியாதை அங்குக் குறைந்ததேயில்லை.

தேன்மொழி பெரிய மனுஷியான போது அத்தை சீர் செய்திருந்தார் பரமேஸ்வரி. மற்றபடி அவ்வளவாகப் போக்குவரத்து இல்லை. பேச்சும் ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒருமுறை அளவுதான்.

இப்பொழுது அவரைத் தொட்டு அவளுக்கு ஒரு வரன் வந்திருக்கிறது. நான்தான் இங்கு எல்லாமே என்பது போல இருந்தது அவர் பேச்சு.

தங்கையின் அந்த அலட்டல் பேச்சு ஏனோ கந்தனுக்குப் பிடிக்கவில்லை. பொற்கொடி முகத்தில் எதையும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகமாகவே சுழன்று கொண்டிருந்தார்.

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, சுதாகரன் பையனை தனியாக அழைத்துச் சென்றான்.

ஒரு அரை மணி நேரம் அவனோடு பேசியதில், பையனை பிடிக்கவில்லை எனச் சொல்வதற்கு அவனிடம் காரணங்கள் இல்லை.

வெளிநாட்டு வேலை, மதிப்பான வருவானம், சொந்த வீடு, வசதி என எதிலும் குறைவில்லை. பேச்சும் மரியாதையாகவே இருக்க, அம்மாவிடம், “எனக்கு ஓகே” என்று கண் காட்டினான்.

அதற்குள் அங்கே கச்சேரியை ஆரம்பித்திருந்தார் பரமேஸ்வரி.

“அப்புறம் என்னண்ணே, அப்ப வர்ற வைகாசில கல்யாணத்தை வச்சுக்கலாம் இல்ல?”

“வைகாசியா? அதுக்கு இன்னும் முழுசா ஒரு மாசம் கூட இல்லையே?” என்று கந்தன் யோசிக்க,

“நம்ம தேனு இன்னும் பையனை பார்க்கல.” என்றார் பொற்கொடி.

“ஆமா, உங்க பையனுக்குப் பிடிச்சுருக்க மாரி எங்க பிள்ளைக்கும் பிடிக்க வேணாமா? நாங்க மொத அவகிட்ட பேசிட்டு..”

“தேனு என்னா உங்க பேச்ச மீற போறாளாண்ணே? அவ நீங்க சொன்னா சரின்னு கேட்டுக்கப் போறா. இத காரணமா சொல்லாம மேலே பேசுங்கண்ணே” என்று அவரை இடைவெட்டினார் பரமேஸ்வரி.

கந்தனால் சபையில் வைத்து தங்கையைக் கடிந்து கொள்ள முடியவில்லை.

“இல்ல பரமு. தேன்மொழி சம்மதிக்கணும். அவ மாமா கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும். பிள்ளை கல்யாணத்த நாம மட்டுமே முடிவெடுக்க முடியாது” என்றார் தீர்க்கமாக.

“நீ சொல்றதும் சரிதான்ண்ணா. நீங்க அவகிட்ட பேசிட்டு சொல்லுங்க. உங்களுக்குப் பையனை பிடிச்சா மாரி அவளுக்கும் பிடிச்சுடும் நாம மேற்கொண்டு நடக்க வேண்டியத பேசுவோம்” என்றார்.

கந்தன் திரும்பி மனைவியைப் பார்க்க, “பாத்துக்கலாம், பேசாம இருங்க” என்ற செய்தியை கணவருக்குக் கடத்தினார் அவர்.

பூ வைத்துப் பரிசம் போடுவது, திருமணம் எனப் பேசிக் கொண்டே போனார்கள் பையன் வீட்டினர். பேச்சு வாக்கில் பொண்ணுக்கு எவ்வளவு செய்வீர்கள் என்ற பேச்சு வர, “அதெல்லாம் நாம கேட்காமயே எங்கண்ணே நிறையச் செய்யும். அவருக்கு இருக்குறது ஒரே பொண்ணு தானே? அவளுக்குக் குடுக்காம யாருக்குக் குடுக்கப் போறாங்க?” என்று ஆரம்பித்து வைத்தார் பரமேஸ்வரி.

“நீங்க எதிர்பார்க்கறத விட அதிகமாவே செய்வோம்” என்று முடித்து விட்டார் கந்தன்.

“அதான் ண்ணே நானும் சொல்றேன். ஒரு நூறு பவுணாவது போட மாட்டீங்க? அப்புறம் அம்மா அவளுக்கு விட்டுட்டு போன நகைங்க இருக்கு. அவ பேர்ல மதுரையில சொத்து இருக்கு. அது போக நீங்களும் பொண்ணுக்கு சொத்துல பங்கு குடுப்பீங்க. இல்லண்ணே?” என்று நீட்டி முழக்கினார்.

பொற்கொடி மெல்ல தலையசைத்து கணவரின் முகம் பார்த்தார்.

சுதாகரன் திரும்பி பையனை பார்த்தான். பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில் அவனுள் அதிருப்தி பரவியது.

பையனின் அத்தையின் கண்கள் அந்த வீட்டை பார்வையால் அளவிட்டது.

“வீடு புதுசு போல..” என்று கேட்டார்.

“புது வீடில்ல. இதைக் கட்டி பத்து வருஷமாச்சுங்க” என்றான் சுதாகரன்.

“சரிங்க, தம்பி. பக்கத்தில இருக்கப் பழைய வீட்டை அப்படியே வச்சுருக்கீங்க போல..”

“அது எங்க அப்புச்சி காலத்து வீடு. அதையும் புழங்கிட்டுதான் இருக்கோம். இது பிள்ளைங்க வளரவும் கட்டினது” என்று அவருக்கு விளக்கம் சொன்னார் பொற்கொடி.

“சரி. பொண்ணுக்கு உங்க விருப்பம் போலச் செய்யுங்க” என்று புன்னகையுடன் சொன்னவர்களை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் பெண் வீட்டினர். அவர்களுக்கு அதுவரை இருந்த மனசஞ்சலங்கள் கொஞ்சம் விலகியது.

“எங்க பையன் ஆசைப்பட்டுட்டான். நீங்களும் வேற யாரோவா? நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே? பொண்ணுக்கிட்ட பேசிட்டு சொல்லுங்க. கல்யாணத்த நல்லபடியா முடிப்போம்” என்றார், அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணி.

தங்களின் யோசனைகளை ஒதுக்கி விட்டு கந்தன், பொற்கொடி வந்தவர்களை நல்லவிதமாகப் பேசி வழியனுப்பி வைத்தார்கள்.

காரில் ஏறும் முன் சுதாகரனிடம் வந்தான் பையன்.

“உங்களுக்குத் தெரியாதது இல்ல. கல்யாணம்னா வரதட்சணை, சீர்லாம் எல்லா வீட்லயும் எதிர்பார்க்கதான் செய்வாங்க. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க. நான் பார்த்துக்கறேன். உங்க தங்கச்சிக்கு சம்மதமான்னு மட்டும் சீக்கிரமா கேட்டு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்” என்று பையன் சொல்ல, புன்னகைத்தான் சுதாகரன்.

பரமேஸ்வரி காரில் ஏறாமல் தனியாக அண்ணனிடம் வந்தார். “அவங்க ஒன்னும் வேணாம்னுதான் சொல்லுவாங்க. அதுக்காக நாம செய்யாம இருக்க முடியுமா அண்ணே? நம்ம புள்ள மரியாத இல்ல நமக்கு முக்கியம். நீங்க கணக்கு பார்க்காம செய்ங்க அண்ணி” என்று இருவரிடமும் சொல்லிச் சென்றார் அவர்.

திருமணம் என்று வந்து விட்டால் பெண் வீட்டினரிடம் எதிர்பார்ப்பது இயல்பு தானே.

பொறுப்பான பெற்றோராக இப்போதே எவ்வளவு செய்யலாம் என்று கணக்கிடத் தொடங்கினார்கள் அவர்களும்.

அன்றிரவே மணிவண்ணனுக்குச் செய்தி அனுப்பி விட்டார்கள். பரமேஸ்வரி சொந்தத்திலா என்று அதிர்ந்தாலும், பையனை அவருக்கும் பிடித்து விட்டது. கந்தன், மணிவண்ணன் இருவரும் மதுரையில் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.

“பையன் வீட்டினர் கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பார்கள் போலத் தெரிகிறது” என்று கந்தன் சொல்லவும், தேன்மொழிக்கு நானும் செய்கிறேன் என்று முன்வந்தார் மணிவண்ணன். உடனடியாக மறுத்து விட்டார் கந்தன்.

பையன் குடும்பம் இருவருக்கும் தெரிந்த குடும்பம்தான் என்றாலும், பெண்ணைக் கொடுக்கையில் விசாரிக்க வேண்டும் அல்லவா. ஆகையால், நன்றாக விசாரித்தார்கள்.

பதில்கள் எல்லாம் அவர்களுக்குச் சாதகமாகவே வந்தது. பையனுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படப் பெண் வீட்டினருக்கு நிம்மதியானது.

“நம்ம புள்ள அவங்க வீட்ல நல்லா இருக்கணும். அதேன் முக்கியம். காசு, பணம்லாம் சம்பாதிக்க முடியாமயா இருக்கு. அவங்க கேட்கிறத விட அதிகமாவே போட்டு கட்டிக் கொடுப்போம்” என்று விட்டார் கந்தன் தீர்மானமாக.

“தேனு சரின்னு சொல்லிட்டா, அவங்க சொல்ற மாரி வைகாசியில கல்யாணத்தை வச்சுடலாம்” என்ற ஒருமித்த முடிவுக்குப் பெரியப்பா, மாமா இருவரும் வந்திருந்தார்கள்.

error: Content is protected !!
Scroll to Top