மாலைத் தென்றல் ஜன்னலின் வழி உள்நுழைந்து தேன்மொழியின் முன்நெற்றி முடியை கலைத்துச் சென்றது. லேசாய் வேர்வை பூக்க நின்றிருந்தவள் இரவு உணவு தயாரிப்பில் மூழ்கியிருந்தாள்.
அன்பழகன் சப்பாத்தி தேய்த்து கொடுக்க, அதைக் கல்லில் போட்டெடுத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“அம்மாச்சி, சப்பாத்தி ரெடி. உங்களுக்கு எடுத்துட்டு வரவா?”
என்று அன்பு கேட்க,
“மொத தாத்தாக்கு குடுய்யா. அவரு சாப்ட்ட பின்னாடி நான் சாப்டுறேன்” என்றார் முத்தம்மா.
“சப்பாத்தி போட்டு முடிச்சுட்டேன் அம்மாச்சி. உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வர்றேன்” என்ற தேன்மொழி, வேகமாகத் துருவிய தேங்காயை அரைத்தாள். அதைக் கோழிக் குழம்பில் ஊற்றும் முன் பெரியவர்களுக்காகக் கொஞ்சம் குழம்பை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தாள்.
“இதுல தேங்கா ஊத்தல. இத கொண்டுட்டு போ அன்பு. நான் கையோட இந்தப் பாத்திரத்தை தேய்ச்சு போட்டுட்டு வர்றேன்”
“ம்ம் சரிக்கா” சப்பாத்தி, கோழிக் குழம்பு இருந்த பாத்திரங்களைக் கூடத்திற்கு எடுத்துச் சென்றான் அன்பழகன்.
அப்போதுதான் வேலை முடித்து வீடு திரும்பிய சுதாகரன், “இன்னைக்கும் அந்தக்கா வரலையா டா அன்பு?” என்று சமையல் உதவிக்கு இருந்தவர் வரவில்லையா என்று விசாரித்தான்.
“இல்லண்ணா. அவங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு போன் பண்ணாங்க”
“போன வாரமும் இதத்தானே சொன்னாங்க. அதுக்கு முந்துன வாரமும்.. ஏன் அம்மாச்சி, நீங்க என்னனு கேட்கலாம் இல்ல அவங்கள? மத்த நாள்ல பரவால்ல, தேனுக்கும், அன்புக்கும் எக்ஸாம் நடந்திட்டு இருக்கு, அவங்க இப்போ போய் வராம இருந்தா எப்படி? பாருங்க ரெண்டு பேரும் படிக்கறத விட்டுட்டு சமையல் வேலையைப் பார்த்திட்டு இருக்காங்க”
“அவ காலையில ஒன்னும் சொல்லாம போய்ட்டு இப்போ போன் பண்ணி வர முடியாதுன்னு சொல்றாப்பா. புள்ளைக்கு உடம்பு முடியலன்னு சொல்லும் போது அவள வந்தே ஆகணும்ன்னு சொல்ல முடியுமா. அவகிட்ட நான் ஏற்கனவே பல தரம் சொல்லிட்டேன். நாளைக்கு வருவா இல்ல அப்போ இன்னொருக்கா கண்டிஷனா சொல்லிடுறேன்” என்று முத்தம்மா சொல்ல, அவருக்கு உணவை பரிமாறி நீட்டினான் அன்பழகன்.
“ஏன் டா அன்பு படிக்கிறத விட்டுட்டு ஏன் இந்த வேலை பார்த்திட்டு இருக்க? எனக்குப் போன் பண்ணி சொன்னா, நான் வெளிலருந்து வாங்கிட்டு வந்திருப்பேன் இல்ல?”
“நானும் அதான்ப்பா சொன்னேன். புள்ளைங்க கேட்காம அதுங்களே செய்யறேன்னு சொல்லுச்சுங்க. அதேன் அதுங்க கேட்ட கறி மட்டும் வாங்கிட்டு வந்து குடுத்தேன்” என்று கருப்பண்ணசாமி சொல்ல, திரும்பி அன்பழகனை முறைத்தான் சுதாகரன்.
“நான் படிச்சுட்டேன் ண்ணா” என்றான் அன்பழகன். அதையே சொல்லிக் கொண்டு வந்தாள் தேன்மொழி.
“நீயும் வாண்ணா சாப்பிடலாம்” என்று அவள் அழைக்க, “இரு முகம் கழுவிட்டு வர்றேன்” என்று எழுந்தவனின் அலைபேசி அடித்தது.
பொற்கொடிதான் அழைத்திருந்தார்.
“சொல்லும்மா” என்று அவன் சொல்வதற்குள், “நீ உடனே ஊருக்கு கிளம்பி வாப்பா” என்றார்.
“ம்மா, நான் நாளைக்கு நைட்டுதான் கிளம்பறேன். சனிக்கிழம காலைல அங்கருப்பேன்.”
“அவசரம் புரியாம பேசாதப்பா. நான்தான் உடனே கிளம்பி வான்னு சொல்றேன் இல்ல?”
“ஏன்மா, உடம்புக்கு எதுவும் முடியலையா? அப்பா நல்லாருக்கார் தானே?”
“அதெல்லாம் நல்லா இருக்கோம்ப்பா”
“அப்புறம் என்னம்மா அவசரம்? நான்தான் சனிக்கிழம எடம் பார்க்க வர்றேன்ல..”
“அது கெடக்குதுடா..”
“என்னாது? அது கெடக்குதா? நான் ஷோரூம் வைக்க ஆறு மாசத்துக்கு மேல தேடி அலைஞ்சு இப்பதான் ஒரு நல்ல எடமா அமைஞ்சிருக்கு. நீ என்னன்னா கெடக்குதுன்னு அசால்ட்டா சொல்ற..”
“தம்பி, இப்போ அதுவா முக்கியம்?”
“நான் சொந்தமா தொழில் தொடங்குறது முக்கியம் இல்லாம, வேறென்னம்மா முக்கியம் உனக்கு?”
“என்னைய பேச விடுப்பா. நாளைக்கு நம்ம தேனுவ பொண்ணு கேட்டு வர்றாங்களாம், உங்கத்த பரமேஸ்வரி பங்காளி வீடு” பட்டென்று விஷயத்தைச் சொல்லி விட்டார்.
“தேனுவ…” என்று இழுத்தவனுக்கு அம்மா சொன்னதைக் கிரகித்துக் கொள்ளச் சில நொடிகள் பிடித்தது.
“ஆமாப்பா. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஊருக்கு வந்திருந்தீங்கல்ல? அப்போ அவள கல்யாணத்துல பார்த்தாங்களாம், அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்.”
அம்மாவுக்கு உம் கொட்டியபடி தேனுவை நிமிர்ந்து பார்த்தவன் மெல்ல அங்கிருந்து நழுவி வெளியேறினான்.
“சரிம்மா. என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல? இந்த அம்மாச்சி கூட ஒன்னுமே சொல்லலையே”
“நீ வேற.. எங்கோபத்த கிளப்பிட்டு.. எங்களுக்கே உங்கத்த இப்பதான்ப்பா போன் பண்ணி சொல்லுது. அப்புறம் நான் எப்படி உங்கிட்ட முன்னாடியே சொல்ல?”
“அதுசரி”
“உங்கத்த நாலு நாளைக்கு முன்னாடி உங்கப்பாக்கு போன் பண்ணி தேன்மொழி ஜாதகத்த குடுண்ணானு கேட்டிருக்கு..”
“ம்ம்”
“உங்க மாமாவோட தம்பி மகனுக்குத் தேன்மொழி ஜாதகம் பொருந்துதான்னு பார்க்கணும்னு சொல்லவும், உங்கப்பா புள்ளைக்கு மொத பரிட்சை முடியட்டும். அப்புறம் பொறுமையா வாங்கன்னு சொல்லியும் கேட்காம, திடுதிடுப்புன்னு நாளைக்கு வர்றோம்னு இப்போ போன் பண்ணி சொல்லுது” என்றார் பதற்றத்துடன்.
“நாளைக்கு எந்நேரம்மா வார்றாங்க?”
“சாந்தரம் நாலரைக்கு மேலப்பா..”
“சரிம்மா. நான் இப்ப கிளம்பி வர்றேன். ஆமா, அம்மாச்சி, தாத்தாவுக்குத் தெரியுமா? அவங்களையும் கூட்டிட்டு வரவா?”
“இல்லப்பா, அவங்ககிட்ட இன்னும் சொல்லல. நீ மொத பஸ் ஏறிட்டு எனக்குப் போன் பண்ணு. நான் அம்மாச்சிக்கிட்ட சொல்லிக்கறேன்” என்றார்.
“பாப்பாகிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு அப்பா சொன்னார்ப்பா. மொத நாம பார்த்து முடிவு பண்ணிட்டு அப்புறமா அவகிட்ட சொல்லிக்கலாம்னு சொன்னார்” அவனுக்கும் அதுவே சரியென்று பட்டது. அதனால் அம்மா சொன்னதை அமைதியாக ஏற்றுக் கொண்டான்.
அவசரமாக ஊருக்கு கிளம்ப உள்ளே வந்தான்.
“சாப்பிட வாண்ணா” என்று தேன்மொழி அழைக்க, ஊருக்கு செல்வதைத் தெரியப்படுத்தினான்.
“என்னய்யா திடீர்னு? எடம் பார்க்க நாளைக்குத் தானே போறேன்னு சொன்ன?”
“இன்னொரு நல்ல எடமும் வருது. அதையும் சேர்த்து பார்த்திட்டு வந்துடலாம்னு இப்பவே கிளம்பறேன் அம்மாச்சி” என்று உண்மையைச் சற்றே திரித்துச் சொன்னான்.
“சரி சரி, அப்போ நீ பத்திரமா போய்ட்டு வாப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ ஆசைப்பட்ட எடம் கண்டிப்பா அமையும்” என்று வாழ்த்தி அனுப்பினார்.
அவன் அவசரமாகக் கிளம்ப, அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீடு வந்த ஜெயபாலன்தான் சென்று அண்ணனை பேருந்து ஏற்றி விட்டு வந்தான்.
சுதாகரன் தம்பியிடம் லேசாகக் கோடிட்டு காண்பித்து விட்டான்.
ஜெயபாலன் முகம் மாறினாலும், எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை அவன்.