இந்த வாழ்வென்பது – 10

அன்பழகனும் சென்னை வந்த பிறகு அவர்களின் வாழ்வு மேலும் சுவாரசியமாகச் சென்றது. அவர்களின் வாழ்வின் வசந்த காலம் அது.

அன்புவின் முன் அக்காவை யாரும் ஒரு வார்த்தை சொல்லி விட முடியாது. அவ்வளவுதான். தாய்க் கோழியாகச் சிலிர்த்துக் கொண்டு வந்து நிற்பான்.

அன்பழகன் சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் பிகாம் சேர்ந்திருந்தான். அத்தோடு தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான (டிஎன்பிஎஸ்சி) பயிற்சி வழங்கும் அகாடெமியிலும் சேர்ந்திருந்தான். வாரம் முழுவதும் கல்லூரி சென்றால், விடுமுறை தினங்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று விடுவான்.

அவனது ஆர்வத்தையும், உழைப்பையும், படிப்பையும் பார்த்து தேன்மொழியே மலைத்துப் போனாள். அவனது படிப்பிற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தாள்.

இரண்டு வீட்டில் இருந்தும் அடிக்கடி பிள்ளைகளைப் பார்க்கச் சென்னை வந்து சென்றார்கள். இவர்களும் விடுமுறைகள், பண்டிகைகள், திருவிழாக்களுக்கு மதுரை, திண்டுக்கல் சென்று வந்தார்கள்.

காலம் விரைந்தோட தேன்மொழி கல்லூரி இறுதியாண்டில் இருந்தாள். அன்பழகனுக்கும் இன்னும் ஒரு வருட படிப்பு மட்டுமே இருக்கிறது.

“தேனுக்கு அடுத்த வாரம் ஸ்டடி ஹாலிடேஸ் விட்டுடுவாங்க அம்மாச்சி. நீங்க அவள கூட்டிட்டு ஊருக்கு போய்ட்டு வாங்க. நான் டிக்கெட் போடுறேன்” அப்போதுதான் வேலை முடித்து வீடு வந்த சுதாகரன் சொல்ல, “ஏன்யா ஒரு மாசத்துக்கு முன்னாடியிருந்து ஊருக்கு போகணும்னு சொல்லிட்டு இருக்கேன் நான். உனக்கு மறந்து போச்சா? இப்போ வந்து ஊருக்கு போன்னு சொல்ற? இனிமேட்டுதான் டிக்கெட் போட போறியா?” என்று முத்தம்மா கேட்கவும், திருதிருவென்று முழித்தான் அவன்.

“ஏலே சின்னவனே, நீ ரெண்டு நாளைக்கு முன்னதானே ஊருக்கு போக டிக்கெட்டு போட்டேன்னு சொன்ன? இப்போ உங்கண்ணன் வந்து புதுசா டிக்கெட் போடவான்னு கேட்டுட்டு இருக்கான். என்னடா டிக்கெட் போட்டியா இல்லையா? முக்கியமான விஷேசத்துக்குப் போகணும் டா. உங்கத்த பரமேஸ்வரி வீட்டு சொந்தக்காரங்க கல்யாணம் டா. அதுக்குப் போகலன்னா அம்புட்டுதேன், உங்கத்த பேசியே கொன்றுவா..”

“ஏ அம்மாச்சி, நான் டிக்கெட் போட்டுட்டேன். கத்தாத” என்று உள்ளிருந்து கத்தினான் ஜெயபாலன்.

“எதுலடா போட்டுருக்க?” சுதாகரன் கேட்க, ஜெயபாலன் பதில் சொல்லும் முன், “எங்களோட நீங்களும் தானடா வரீங்க. உங்களுக்கும் சேர்த்து தானே டிக்கெட் போட சொன்னேன். போடலியா? இனிமே போட்டா சீட் கிடைக்குமா? எல்லாம் ஒன்னா போகலாம்னா இவிங்களோட..” என்று முந்திக் கொண்டு புலம்பினார்.

“நீ கொஞ்ச நேரம் புலம்பாம இரு அம்மாச்சி. உனக்கு ஊருக்கு போகணும். அம்புட்டு தானே? போகலாம்” என்றான்.

தேன்மொழி, அன்பழகனுக்குத் தேர்வுக்குப் படிக்க விடுமுறை விடப்பட்டதும் ஊருக்குக் கிளம்பினார்கள்.

“எல்லாத்தையும் எடுத்தாச்சு அம்மாச்சி. நீ மொதல்ல கீழ இறங்கு. ட்ரெயினுக்கு நேரமாச்சு” என்று ஜெயபாலன் கத்திக் கொண்டிருக்க, வெளியில் இருந்து, “சீக்கிரம் டா” என்று கத்தினான் சுதாகரன்.

“இருங்கடா, சாப்பாட்டு பையை எடுக்க வேணாமா? அத மறந்துட்டீங்க பாரு.” என்று கையில் கட்டைப் பையுடன் வெளியில் வந்தார் முத்தம்மா.

“அது வேணாம்னுதானே எடுக்காம இருந்தேன். அத வேற பொறுப்பா எடுத்துட்டு வர்ரியா நீ?”

“அப்புறம்? இதுல்லாம ராத்திரிக்கு என்னடா சாப்பிடுறது?”

“உன் பேத்தி என்னத்த செஞ்சு வச்சுருக்காளோ? இத்த இங்கனயே விட்டுட்டு வந்திருந்தியான்னா உனக்கு ஹோட்டல்ல நல்ல இட்லி சாம்பார் வாங்கித் தந்திருப்பேன்.‌ உன் விதி இதைத்தான் சாப்பிடணும்னு இருக்கு பாரு. வா வா” என்று கடுப்புடன் சொல்லிக் கொண்டே, அவர் கையில் இருந்து பையை வாங்கினான்.

அப்போது எல்லா அறைக் கதவையும் மூடி விட்டு வந்த அன்பழகன், “அக்கா தக்காளி சட்னி சூப்பரா செஞ்சுருக்கா. உனக்கு வேணாம்னா நீ சாப்பிடாதண்ணா” வெடுக்கென்று அவன் கையில் இருந்த பையைப் பிடுங்கி கொண்டு கீழிறங்கினான்.

“சூப்பராவா? சரிடா. அப்போ என் பங்கையும் சேர்த்து நீயே கொட்டிக்கோ டா” என்று கேலியாகக் கத்திக் கொண்டே அம்மாச்சியின் கைப் பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான்.

அத்தனை பரபரப்பாகக் கிளம்பி சென்று ரயிலேறினார்கள். பத்து நிமிட தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டது.

பெரியவர்கள் சோர்வுடன் படுக்க, “சாப்பிட்டு படுங்க அம்மாச்சி” என்று உணவு பையைப் பிரித்தாள் தேன்மொழி.

வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த பாக்கு மர தட்டில் உணவை வைத்து அவள் அனைவருக்கும் கொடுக்க, உண்ண ஆரம்பித்தார்கள்.

“ஆமா, இந்தச் சட்னிக்கு பேரென்ன?” என்று ஆரம்பித்தான் ஜெயபாலன்.

“தக்காளி சட்னி” வாயில் திணித்த இட்லியுடன் பல்லைக் கடித்துக்கொண்டு பதில் சொன்னான் அன்பழகன்.

“எதே தக்காளி சட்னியா? இது இந்தச் சட்னிக்கு தெரியுமா டா? இதான் அது பேருன்னு..”

அவனது நக்கலில் பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் சிரித்து விட, அண்ணனை கடுமையாக முறைத்தான் அன்பழகன்.

“தக்காளி சட்னின்னா மொளகா போட கூடாதா? ஒரப்பே இல்லாம சப்புன்னு இருக்குடா.” என்று சலித்துக் கொண்டான்.

“உன் வாய்க்கு அப்படி இருக்கு போல. எனக்கு ஒரப்புச் சரியாத்தான் இருக்கு” என்று முத்தம்மா சொல்ல, “உன் பேத்தி சமையலுக்கு நீ தானே ட்ரெயினிங்கு அப்புறம் உனக்கு நல்லா இருக்காம எப்படி இருக்கும்?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“இப்ப என்னடா? ட்ரெயின்ல வேகாதத வித்திட்டு வருவான். அதை வாங்கிச் சாப்பிடு நீ” என்று பேரனை முறைத்த கருப்பண்ணசாமி, உணவை முடித்து ஓய்வாக அமர்ந்து விட்டார்.

“நாம வரும் போதே வழியில டாக்ஸியை நிப்பாட்டி பிரியாணி வாங்கி இருக்கலாம். என் பேச்ச யாரு கேட்கறா” என்று புலம்பிக் கொண்டே இட்லியை முழுங்கி கொண்டிருந்தான். அவனுக்கு மட்டும் இட்லிப் பொடியும், எண்ணெய்யும் வைத்திருந்தாள்.

அன்பழகன் கோபத்தில் வெடுக்கென்று அவன் தட்டைப் பிடுங்க, “அன்பு, சாப்பிடும் போது தட்டை பிடுங்க கூடாது டா. இதென்ன புதுப் பழக்கம்” என்று கண்டித்து, அவனிடமிருந்து தட்டை வாங்கி அண்ணனிடம் கொடுத்தாள்.

ஜெயபாலன் வக்கணையாகச் சாப்பிட்டுக் கொண்டே வாய் பேசிக் கொண்டிருந்தான்.

சுதாகரன் ஏதோ தீவிர சிந்தனையுடன் ஒரு கையில் அலைபேசியும், மறு கையில் உணவுமாக இருந்தான். அவன் கவனமெல்லாம் அதில்தான் இருந்தது.

“அம்புட்டுதான் டா, உங்கக்காக்குக் காலேஜ் முடிஞ்சது. இனி இந்தச் சாப்பாட்டுக் கொடுமையில் இருந்து நாம தப்பிச்சோம் டா” என்று சிரித்த ஜெயபாலன், “நமக்குப் பதிலா ஏதோ ஒரு இளிச்சவாய் குடும்பம் வந்து மாட்ட போகுதுடா. பாவத்த, எவன் வந்து சிக்கப் போறானோ?” என்று இரண்டு கையையும் விரித்து அங்கலாய்த்தான்.

“ரொம்பப் பண்ணாதண்ணா” என்று முறைத்த அன்பழகன், அவன் மேல் பாய்ந்து அடிக்க, “ஹேய் விடுடா, வலிக்குது” என்று கத்தினான்.

“எவனும் வந்து மாட்ட வேணாம். நான் வேலைக்குப் போகணும்” என்றாள் தேன்மொழி.

“சுதாண்ணா கம்பெனில ஓபனிங் இருக்கு. அண்ணா ஏற்கனவே உனக்காகச் சொல்லி வச்சிருக்கான். அப்படி அங்க கிடைக்கலன்னா வேற பாக்கலாம் தேனு. நீ மொத பரீட்சையை ஒழுங்கா எழுதி முடி” என்றான் ஜெயபாலன், இப்பொழுது பொறுப்பான அண்ணனாக.

அப்படியே உணவை முடித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து உறங்கினார்கள்.

அவர்கள் அடிக்கடி ஊருக்கு வந்தாலும், விடுமுறைக்கு வரும் போதெல்லாம் சொந்த பந்தங்களின் நலவிசாரிப்புகள் குறைந்ததில்லை. அதிலும் இம்முறை வரிசையாக விசேஷங்களுக்குச் சென்றார்கள்.

“கந்தன் மக்களா? நல்லா வளர்ந்துட்டீங்களேப்பா. ஆள் அடையாளமே தெரியல” என்று ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

சுதாகரன், ஜெயபாலன் இளவட்டங்களாக வளர்ந்திருந்தார்கள். நல்ல உயரமும், உடற்கட்டும், மீசையுமாக அவர்களைப் பார்க்கையில் பலருக்கும் அடையாளம் தெரியவில்லை.

“சென்னையிலேயே பதுங்கி இருந்தா எப்படி மாப்ள? ஊரு பக்கம் அப்பப்போ வந்தா தானே எங்களுக்கும் அடையாளம் தெரியும்” என்று முறைமைக்காரர்கள் கேலி போலப் பேசி, பார்த்துச் சென்றார்கள்.

அன்பழகன் ஆளே மாறியிருந்தான். பட்டு வேட்டி சட்டை அணிந்திருந்தாலும், அவன் முகத்தில் இருந்த இளமை, கல்லூரி மாணவன் தோற்றத்தை அவனுக்குத் தந்தது.

பருவம் வந்ததும் பெண்கள் சட்டென வளர்ந்து விடுவது இயல்பு தானே. தேன்மொழி பட்டுச் சேலையில் பெரிய பெண்ணாகத் தெரிந்தாள்.

அடர் பச்சையில் அரக்கு நிற பார்டர் வைத்த பட்டுப் புடைவையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள்.

காதில் தொங்கிய குடை ஜமிக்கி, அவளின் அசைவுக்கேற்ப அசைந்தாடி கொண்டிருந்தது. கழுத்தை ஓட்டிய பச்சைக்கல் பதித்த நெக்லஸ், அதனுடன் காசு மாலை, கை நிறையப் பச்சை நிற கண்ணாடி வளையல்கள் எனப் பார்ப்பதற்கு அத்தனை பாந்தமாய் இருந்தாள். அவளின் நீள கூந்தலின் பாதியை தொட்டிருந்த அவர்களின் ஊரின் மல்லிகை, அவளை மேலும் அழகியாக்கி காட்டியது.

“என்னா பொற்கொடி பாத்துக் கொள்ள நாள் ஆச்சு, எப்படியிருக்க? கல்யாணத்துக்கு வந்தீங்களா?” என்று உறவினர் கேட்க, “நல்லாருக்கேன் அத்தாச்சி. நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று பதில் சொன்ன பொற்கொடியை விடுத்து, தேன்மொழியைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.

“உன் மகளா? நல்லா வளர்ந்துட்டாளே. வேலைக்குப் போறாளா?”

“இல்ல, படிச்சுட்டுதான் இருக்கா. இந்த வருஷத்தோட படிப்பு முடியுது”

“ஆஹன். அப்படியா?” என்று இழுத்தவரின் கேள்விகளும் இழுத்துக் கொண்டே போனது.

அத்தை பரமேஸ்வரியின் சொந்தம் என்பதால் பிள்ளைகளும் அவரிடம் பேசினார்கள். அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதில் சொன்னார்கள். ஆனால், அவரின் பார்வை முழுக்கத் தேன்மொழியின் மீதே இருந்தது.

அவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார்கள்.

தேன்மொழி, அன்பழகன் இருவருக்கும் கல்லூரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்நேரம் திண்டுக்கல்லில் தேன்மொழியைக் கல்யாணத்தில் பார்த்துப் பிரியப்பட்டுப் பெண் கேட்டு வந்தது பரமேஸ்வரியின் உறவினர் குடும்பம்.

பையனுக்கு வெளிநாட்டு வேலை. இரண்டு மாத விடுமுறையில் ஊர் வந்திருந்தான். நல்ல வரன். வரதட்சணை கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தார்கள். அது மட்டுமே தேன்மொழி குடும்பத்தை யோசிக்க வைத்தது. மற்றபடி அவர்களுக்கு முழுத் திருப்தி.

பையன் வீட்டினர் முகூர்த்த தேதி வரை முடிவு செய்து வந்திருக்க, பெண் வீட்டினர் மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றார்கள்.

அன்றே மாமா மணிவண்ணனுக்குச் செய்தி சென்றது. அவருக்கும் கூடப் பையனை பிடித்து விட்டது. அதனால், கிட்டத்தட்ட திருமணம் முடிவான நிலைதான்.

error: Content is protected !!
Scroll to Top