அந்த வீடு கிராமத்து பாணியில் கட்டப்பட்ட கல் வீடு. ஒற்றைப் படுக்கையறை, கூடம், சமையல் அறை, முன் பகுதியில் தாழ்வாரம் என அமைந்திருந்த விஸ்தாரமான வீடு அது. வீட்டின் பின்பக்கம் மிகப் பெரிய அளவில் கூரை வேயப்பட்டு, ஒரு பக்கம் இரண்டு பசுக்களும் அதனுடன் ஒரு கன்று குட்டியும், ஒரு காளையும் இருந்தது. மறுபக்கம் ஐந்து ஆட்டுக் குட்டிகள், மூன்று ஆடு, ஒரு கெடா எனக் கட்டப்பட்டிருந்தது.
அதற்கு வடக்கு மூலையில் கோழிகளை அடைக்க மூன்று பஞ்சாரங்கள் கவிழ்த்து போடப்பட்டிருந்தன. ஆங்காங்கே சேவல்கள் சுற்ற, கோழிகள் தங்கள் குஞ்சுகளுடன் மண்ணைக் கிளறி கிளறி இரை எடுத்துக் கொண்டிருந்தன.
வீட்டின் பேரிழப்பு அவற்றுக்கும் புரிந்ததோ என்னவோ, அவைகளும் வாடித்தான் தெரிந்தன. தொட்டி நிறையக் கழனித் தண்ணியும், அதனருகில் புல்லும் இரைந்து கிடந்தாலும், மா, மே எனக் கத்தி வீட்டாள்களை அழைத்துக் கொண்டிருந்தன.
அந்தச் சத்தம் தேன்மொழியைத் தொந்தரவு செய்ய, பின் வாசலை நோக்கி நகர்ந்தாள்.
“தேனு.. உட்காரு செல்லம்” என்று அவளைப் போக விடாமல் தடுத்தார் பொற்கொடி.
பெரியம்மாவை பார்த்து தலையாட்டி விட்டு, அப்பத்தாவின் அருகிலேயே அமர்ந்து விட்டாள் சிறுமி.
“ஆத்தா, என்ன முடிவெடுத்திருக்கீங்க? சொல்லுங்க.” என்று பெரிய நாச்சியைப் பார்த்துக் கேட்டார் கந்தன்.
“என்னப்பா, அதான் ஏற்கெனவே எல்லாம் சொல்லிட்டேனே.. திரும்பத் திரும்ப அதையே கேட்டா என்ன அர்த்தம்.. ஏன் நீங்கல்லாம் உங்க முடிவை மாத்திக்கிட்டீங்களா என்ன? அப்படின்னா இப்பயே சொல்லிடுங்க. என் வம்சத்தை வளர்க்க எனக்குத் தெம்பிருக்கு.. எமனே என் முன்னாடி வந்தாலும், என் உசுர கையில பிடிச்சு என் பிள்ளைகளைக் காப்பாத்தி விட்டுட்டுதான் நான் போய்ச் சேருவேன்” என்றவரால் மேலே பேச முடியவில்லை.
மகனை எமனிடம் தூக்கி கொடுத்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத போது, மீண்டும் பயம் அவரின் நெஞ்சை அழுத்தியது. நாளை தனக்கு எதுவும் நேர்ந்தால் இந்தப் பச்சை பிள்ளைகளின் நிலைமை என்னவாகும்? அவரால் யோசிக்கவே முடியவில்லை.
“ஆத்தா, என்ன பேசுறீங்க?” என்று அம்மாவை அதட்டினார் கந்தன்.
“அத்த, நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்கறோம்” என்றார் அவரின் மருமகள் பொற்கொடி.
மீனாட்சியின் தமயன் மணிவண்ணன், அவர் மனைவி நிர்மலாவும் அங்கிருந்தனர். கந்தன் சொன்னதை ஆமோதித்து அவர்களும் பேச, பெரியநாச்சியின் மகள் பரமேஸ்வரி மௌனமாய் அவர்களின் பேச்சுக்கு தலையசைத்தபடி அமர்ந்திருந்தார்.
அவர்கள் மூவரின் பிள்ளைகள் ஆறு பேரும் வெளியே திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டின் உள்ளே தீவிர பேச்சு வார்த்தை தொடங்கியிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் வீடு, ஆடு, மாடுகள், வயக்காடு, நிலபுலன்கள், சொத்து, பிள்ளைகளின் பொறுப்பு, பங்கு பிரிப்பது எனப் பேச்சு சூடு பிடிக்க, தேன்மொழியையும், அன்பழகனையும் மெல்ல எழுப்பி வீட்டிற்குப் பின்னால் அழைத்துச் சென்றார் பொற்கொடி.
“ஏலே சுதாகரா…” என்று அவர் குரல் கொடுக்க, “இதோ வர்றேன் ம்மா..” என்று ஓடி வந்தான் பதிமூன்று வயதான அவரின் மூத்த மகன் சுதாகரன்.
“தேனு கூடவும் தம்பி கூடவும் விளையாடு தம்பி. அவங்களைத் தனியா விடாத” என்று அவர் சொல்லவும், “சரிம்மா” என்றான் வேகமாக.
அவனுக்கு நன்றாக விவரம் தெரியும் வயது என்பதால், தங்கையையும், தம்பியையும் பார்த்துச் சிரித்து, அவர்களையும் விளையாட அழைத்தான். தேன்மொழி அவ்விடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டாள்.
“தம்பி கன்னுக் குட்டி பார்க்கணும்னு சொன்னான். இங்கேயே இருப்போம் ண்ணா” இரண்டு மாதங்களே ஆகியிருந்த கன்றின் அருகில் நின்று அவள் கண்ணைச் சுருக்கி கேட்கையில் பெரியவனால் மறுக்க முடியவில்லை.
“ஆமா, தேனு. இந்தக் குட்டி பேர் என்ன சொன்ன?” அவன் கேட்க, “மீனு. எங்கம்மா பேர்” என்றாள் சின்னவள். சட்டென மனம் வருந்த, தங்கையைப் பார்த்துச் சிரமப்பட்டுச் சிரித்தான்.
“மீனு..” மெல்ல அதனருகில் நெருங்கி, அதற்குப் புல்லை எடுத்து நீட்டிக் கொண்டிருந்தான் சிறியவன்.
“அன்பு, அதுக்கிட்ட போகாத. முட்டும் டா” என்று தம்பியை தடுத்து அணைவாகப் பிடித்து, கன்றை அவன் கைப் பிடித்துத் தடவிக் கொடுத்தாள் தேன்மொழி.
குட்டி சிலிர்த்து, “ம்ம்மா” என்றது.
அம்மா என்ற அழைப்பை கேட்கும் போதெல்லாம் அவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது. இதே இடத்தில் அம்மாவின் சேலையைப் பிடித்தபடி சுற்றிய நாள்களின் ஏக்கத்தில் மனம் கலங்க, அங்கிருந்த தாய் பசுவை தடவிக் கொடுத்தாள். அவளை மென்மையாய் முட்டி சாந்தமாய் அவள் நீட்டிய புல்லை வாங்கியது பசு.
“தேனு, இந்த மாடு முட்டுமா? நான் அதுக்குப் புல்லு குடுக்கவா?” என்று சுதாகரன் கேட்க, “நம்ம மாடு முட்டாதுண்ணா” என்றாள் சிறு குரலில். அந்நேரம், “குட்டிங்களா, உள்ள வாங்க” என்று அவர்களை அழைத்தார் பொற்கொடி.
அவர்கள் உள்ளே நுழைய, வீட்டினுள் அசாத்திய அமைதி இரைந்து கிடந்தது. அனைவர் முகத்திலும் கலவையான உணர்வுகள்.
ஒரு முடிவுக்கு வந்து விட்ட பின், அதைச் செயல்படுத்த முடியாத தயக்கத்தின் தாக்கம் அது. ஒருவர் மற்றவர் முகத்தை மாறி மாறி பார்த்தபடி சில நொடிகளைக் கடத்தி பின்னர்த் திரும்பி குழந்தைகளைப் பார்த்தார்கள்.
இருவரையும் அழைத்துத் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார் பெரியநாச்சி.
மற்றவர்கள் தயங்க, விஷயத்தைப் பேர பிள்ளைகளிடம் பொறுமையாக விளக்கினார் அவர். ஆனால், அவர்களுக்குத்தான் அவர் பேசியது ஒன்றுமே விளங்கவில்லை. மலங்க மலங்க முழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
“நான் பெரியம்மா கூடப் போகணுமா அப்பத்தா? ஏன்? எம்புட்டு நாளைக்கு?” தேன்மொழியிடமிருந்து அந்தக் கேள்விகள் மட்டுமே வந்தது. சில நாள்களாக இது குறித்துப் பெரியவர்கள் பேசிக் கொண்டேயிருந்ததை அடிக்கடி அவளும் கேட்டிருந்தாள். ஆனால், பிரிவு புரியாத வயதில் என்னவென்று அவர்கள் பேசுவதைப் புரிந்துக் கொள்வாள்?. ஆகையால், இப்போதும் கேள்வியே கேட்டாள்.
இனி தேன்மொழியை வளர்க்கும் பொறுப்பைத் தாங்கள் எடுத்துக் கொள்வதாக, பெண் பிள்ளை இல்லாத கந்தன், பொற்கொடி தம்பதியர் உறுதி கொடுக்க, அன்பழகனின் பொறுப்பை அவனது தாய் மாமா மணிவண்ணன் குடும்பம் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களோடு அன்பழகன் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.
தங்கையின் மேலிருந்த பாசத்தினால் மணிவண்ணன் அதைச் செய்ய, பெரியநாச்சிக்கு அவர்களின் கஷ்டம் தெரிந்தே இருந்தது. அப்படியொன்றும் வசதியில்லை அவர்களுக்கு. அதே நேரம் ஒரேடியாக வறுமை என்றும் சொல்லி விட முடியாது. அவருக்குத் தையல் தொழில். இப்போதெல்லாம் ரெடிமேட் துணிகள் பிரபலமாகியிருக்க, அவருக்குப் பெரிதாக வாடிக்கையாளர்கள் இல்லை. ஆக, அந்தத் தொழிலை விட்டுவிட்டு மனைவியின் அறிவுரையின் பேரில், பெற்றோர் அவருக்காக விட்டுப் போயிருந்த சொற்ப நிலத்தில் விவசாயத்தில் இறங்கியிருந்தார். அதில் அவருக்குப் போதிய அனுபவம் இல்லாததால், நிறையத் தடுமாறி இப்போதுதான் கொஞ்சம் வருமானம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.
அவரின் நிலை புரிந்த பெரியநாச்சி இந்த வீட்டை அவருக்கு எழுதிக் கொடுப்பதாக வாக்கு கொடுத்து விட்டார். அதாவது அன்பழகனுக்கு. அவன் வளர்ந்து வரும் வரை அவர்கள் தானே அங்கே வசிக்கப் போவது. அவர்களின் நிலபுலன்கள், விவசாயம், ஆடு, மாடுகள் என அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தார். நாளை பிள்ளைகள் பெரிதானதும் நிலத்தை மட்டும் பிரித்துக் கொடுப்பது என்ற அவர் முடிவில் அனைவரும் உடன்பட்டனர்.
மீனாட்சியின் மொத்த நகைகள், பெரியநாச்சியின் சொற்ப நகைகள் பெண் பிள்ளையான தேன்மொழிக்கு என்று முடிவானது.
அத்தனை முடிவையும் அவர்களே எடுத்திருக்க, அவர்களின் முடிவை செயலாற்ற முடியாமல் பிள்ளைகள்தான் பிரிவில் வாடிப் போனார்கள்.
“அக்கா.. நானும் வர்றேன்.”
“அக்கா, என்னையும் கூட்டிட்டு போ.”
“அக்கா வேணும்.. அம்மா.. அக்கா” என்று உருண்டு புரண்டு கதறி தீர்த்து விட்டான் ஐந்து வயது அன்பழகன்.
“அக்கா.. அக்கா.. வேணும்… என்னைய விடு அப்பத்தா..” என்று அவனைத் தடுத்துப் பிடித்த அனைவரையும் உதறி தேன்மொழியிடம் ஓடி வந்தான். வந்த வேகத்தில் அவள் காலை பிஞ்சு விரல்களால் இறுக பற்றி, அவளை நகர விடாமல் நிறுத்தி, அழுகையுடன் அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்தான்.
“நீ அப்பத்தா கூட இருடா. அக்கா பெரியப்பா வீட்டுக்குத்தான் போறேன். நாளைக்கு வந்துடுவேன்” என்று பெரிய மனுஷியாக அவள் சமாதானம் சொல்ல, அதைக் கேட்டிருந்த பெரியவர்களின் கண்களில் கண்ணீர். ஆனால், அவளோ அழுத்தமாகத் தம்பியை தன்னிடம் இருந்து பிரித்தாள்.
“அ…க்….கா…” அவளின் பாவாடையை விடாமல் பிடித்திழுத்தான். மெல்ல திரும்பி, கலங்கிய கண்களுடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலகிய பேத்தியை பார்க்கையில் பெரியநாச்சியின் நெஞ்சத்தில் நீங்கா பாரமேறியது. முதலில் அவரும் பேத்தியுடன் பெரிய மகனின் வீட்டிற்குப் போவதாகத் தானிருந்தது. ஆனால், அங்கு மகனே வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் அவருக்கு அங்குச் செல்ல மனம் வரவில்லை. மேலும், இங்குப் பயிர்களும், வயலும், வரப்பும், அவரை நம்பி வாயில்லா ஜீவன்களும் இருக்கையில், அதையெல்லாம் எப்படி விட்டுப் போவார்?
அவரின் மனத் தராசில் பேத்தி மட்டுமே நிற்கும் தட்டு தாழ்ந்துப் போக, அவளைத் தனித்து விட்டு விட்டார் அவர்.
தேன்மொழி முதலில் அழுதாலும், சீக்கிரம் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
அங்கு நடப்பதை எல்லாம் பார்த்திருந்த பொற்கொடிக்கு அவளின் இந்த அழுத்தமும், அழுது அரற்றாத குணமும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.
“தேனு, நீ பெரியப்பா கூட வண்டில வா. அம்மா, அண்ணனுங்களைக் கூட்டிட்டு பஸ்ல பின்னாடியே வந்துடுறேன். என்னா?” என்று அவர் கேட்க, “நான் உங்க கூடவே வர்றேன் பெரியம்மா. பஸ்ல வர்றேன்” என்றாள் விழிகளை விரித்து, மெல்ல தலையசைத்து. சற்றே அவரை நெருங்கி நின்று அவர் முகத்தையே கூர்ந்து பார்த்தாள். எங்கே இவரும் தன்னை வேண்டாமென்று விட்டுவிட்டுப் போய் விடுவாரோ என்ற பயமும், பரிதவிப்பும் அந்தக் கண்களில் தெரிய, அவருக்கு மனம் உருகிப் போனது.
“சரி, வா. நாம பஸ்ல போவோம். உன் அண்ணனுங்க ரெண்டு பேரையும் நம்ம கூடக் கூட்டிட்டு போவோம். உங்க பெரியப்பா மட்டும் வண்டில நம்ம பின்னாடி வரட்டும்” என்று அவர் சொல்ல, மெலிதாகத் தலையசைத்தாள்.
“என் ராசாத்தி, நீ நல்லா இருக்கணும் தாய்யி. அப்பத்தா அதுக்காகத்தான் பாடுபடுறேன். நீ வளர்ந்த பின்னாடி என்னைய புரிஞ்சுப்ப..” பெரியநாச்சி, பேத்தியை உச்சி முகர்ந்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார்.
“அக்கா… போறேன், நானும் போவேன்.. என்னைய விடே..” என்று அன்பழகன் இன்னமும் கத்திக் கொண்டேயிருந்தான்.
மாமா மணிவண்ணன் அவனைத் தடுத்துப் பிடித்தும் அவர்களின் பின்னேயே அழுதபடி ஓடி வந்தான்.
அப்படியாகப் பிறந்த வீட்டையும், பிரியமான பாசத் தம்பியையும், அப்பத்தாவையும், அவளைச் செல்லமாக வளர்த்த வீட்டையும், அவள் செல்லமாக வளர்த்த ஆடு, மாடுகளையும் பிரிந்து பேருந்தில் ஏறினாள் தேன்மொழி.
“அக்கா வந்துடுவேன் அன்பு.” என்று மிகுந்த நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் தம்பிக்கு ஆறுதல் சொன்னாள்.
பேருந்து நகரும் வேகத்தில் எதிர்காற்றில் அவள் வார்த்தைகள் அலைபாய்ந்து தம்பியின் செவியைச் சென்று சேர்ந்தது. அந்தப் பேருந்தை போலவே அவளின் வாழ்க்கையும் அங்கிருந்து நகர்ந்து விட்டது. அடுத்து அவள் உதிர்த்த வார்த்தைகள் எல்லாம் காற்றின் திசைக்கு ஏற்ப அடித்துச் செல்லப்பட்டுத் தம்பியை சரியாகச் சேராதது போல, அவளும் சேரப் போவதில்லை என்பது அவளுக்கு அப்பொழுது புரியவில்லை.
மூன்று மணி நேரப் பேருந்து பயணத்தில் பெரியம்மாவின் ஊரான அழகியநல்லூர் வந்து விட்டார்கள். அந்த ஊருக்கு மிகப் பொருத்தமான பெயரது. எங்குத் திரும்பினாலும் பச்சை பசேலெனப் பசுமை நிறைந்திருந்தது.
அது விவசாயம் நன்கு செழித்திருந்த ஊர். கண்மாய், குளம், கிணறுகள் எனத் தண்ணீருக்கும் பஞ்சமில்லாத பூமி.
தேன்மொழிக்கு அந்த ஊரை மிகவும் பிடிக்கும். விடுமுறைக்கு, விசேஷங்களுக்கு அம்மா, அப்பாவுடன் அந்த ஊருக்கு வரும் போதெல்லாம் அங்கிருக்கும் குளம், கண்மாயில் குளித்து, நீச்சல் பழகி தத்தளிப்பவளை கரைக்கு இழுத்து வந்து, அண்ணன்கள் திருட்டுச் சோளம், கம்பு கதிர் சுட்டு தருவதை ஆசையாய் தின்றிருக்கிறாள். அண்ணன்கள் செய்யும் அத்தனை சேட்டைகளையும், அவர்கள் ஆடும் கேரம் போர்டு, கிரிக்கெட்டையும் வேடிக்கைப் பார்த்திருக்கிறாள்.
முன்பு இந்த ஊருக்கு வருவதென்றாலே அத்தனை ஆவலுடன் துள்ளிக் குதித்து வருவாள். இப்போது ஏதோ ஒருவித பயத்துடன், தயக்கத்துடன் அவள் பேருந்தில் இருந்து கீழிறங்கி, கண்களை நாலாபுறமும் சுழற்றி அந்த ஊரைப் பார்த்தாள்.
அவர்களை இறக்கி விட்ட பேருந்து நகரவும், எதிர்புறத்தில் இருந்து வந்த லாரி சத்தமாக ஒலியெழுப்ப பதறி ஒதுங்கினாள்.
அந்தப் பதற்றத்தில் தள்ளாடி தடுமாறியவளை பிடித்துத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டார் பொற்கொடி.
“பயப்படாத தேனு, அம்மா கையைப் பிடிச்சுக்கோ” என்று அவளிடம் தன் வலக்கரத்தை நீட்டினார்.
“வீட்டுக்கு போவோமா?” அவர் கேட்க, “போலாம் பெரியம்மா” என்றவளின் தளிர் கரம் மெல்ல நீண்டு அவரின் கரத்தைப் பற்றியது.
வாழ்வு நம்மைக் கை விடும் போதெல்லாம் யாராவது ஒருவர் நமை நோக்கி கை நீட்டி விடுகிறார்கள். இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள.
சில சமயம் ஆறுதலாக, பல நேரம் பற்றுதலாக. எப்போதாவது இது போல ஆயுளுக்குமாக பற்றிக் கொள்ள.
தேன்மொழி மென்மையாக பற்றிய கரத்தில் பொற்கொடி இறுக்கம் கூட்டினார்.