மழை நாளுக்குப் பிறகான வெயில் சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பின்மதிய வேளையில் வீரனூர் கிராமம் மொத்தமும் அமைதியில் அடங்கியிருக்க, அந்த ஒரு வீட்டில் இருந்து மட்டும் தொடர்ந்து பேச்சுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“தேனு..”
“தேனு..”
“இந்தாடி தேன்மொழி…” அன்பாய், பரிவாய், அதட்டலாய் அந்தப் பெயரை மாறி மாறி பலர் அழைக்க, அந்தப் பெயருக்கு சொந்தக்காரியோ, வீட்டின் பின்கட்டில் நின்றுக் கொண்டிருந்தாள்.
“ம்மா.. மா.. மே..” என்று அவளைக் கண்டதும் குரல் எழுப்பின அவள் வளர்க்கும் ஜீவராசிகள்.
“க்கா.. அக்கா..” இறுக்கமாகப் பற்றியிருந்த அவள் கையைப் பிடித்திழுத்து, முகத்தை உயர்த்தி அண்ணாந்து அவளைப் பார்த்தான் அவளின் தம்பி.
“கன்னுக்குட்டி பார்க்கலாம், வாக்கா” என்று அவளின் கைப் பிடித்து அந்தப் பக்கமாக இழுத்தவன் அங்கிருந்த கன்றுக் குட்டியை விடச் சிறியவனாக இருந்தான்.
“அடியே தேனு, தேன்மொழி. எம்புட்டு நேரமா கூப்பிடுறோம். உன் காதுல விழல? வா, இங்கிட்டு” விறுவிறுவென்று வேக நடையுடன் பின்கட்டு வாயிலை கடந்து அவளிடம் வந்தவர், அவளின் கைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனார். அவளின் மற்றொரு கையைப் பற்றியிருந்த அவளின் தம்பியும், அவளுடன் சேர்ந்து உள்ளே வந்தான்.
“தேனுவை நாங்க கூட்டிட்டு போறோம். அவ தம்பியை நீங்க வளர்த்து…”
வீட்டினுள் வந்த இருவரையும் பார்த்ததும் பட்டென்று பெரியவர்களின் பேச்சுப் பாதியில் நின்று போனது. அங்கிருந்த அனைவரின் பார்வையும் பரிதாபத்துடனும், பரிதவிப்புடனும் சிறியவர்களின் மேல் படிந்தது.
ஆனால் அவர்களின் பார்வையோ அந்த வீட்டின் ஓர் மூலையில் அடுத்தடுத்து சாய்த்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களின் மீது அழுத்தமாகப் படிந்தது. மறுநிமிடமே அழுகையில் உதடு துடிக்க, அனிச்சையாய் தேன்மொழியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
“தேனு, அழக் கூடாது குட்டி” ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டார் அவளின் பெரியம்மா பொற்கொடி. தேன்மொழியின் கரம் தம்பி அன்பழகனின் கரத்தை விடாமல் இன்னமும் இறுக்கமாகப் பற்றியிருந்தது. அவளின் கண்ணீரை கண்டதும் அவனது கண்களும் கலங்கி, உதடு அழுகைக்குத் தயாராகப் பிதுங்குவதைப் பார்த்ததும், தன் கண்ணீரை சட்டையில் துடைத்துக் கொண்டு தம்பியைப் பார்த்து புன்னகைத்தாள். அதைப் பார்த்ததும் பெரியவர்களுக்கு இன்னமுமே மனப்பாரமாகிப் போனது.
“வெளிய மோடம் போடுது. எந்நேரம் மழை வரும்னு தெரியல. பட்டுனு பேசி, ஒரு முடிவெடுங்க. எல்லாருக்கும் வேல கழுத கிடக்குதா இல்லையா, வீடு போய்ச் சேர வேணாமா?” என்று சத்தம் போட்டது அவளின் அத்தை, தாய் மாமா மணிவண்ணனின் மனைவி நிர்மலா. கணத்தில் சூழலில் கனம் கூடியது.
“ஆத்தா தேனு, இப்படி வா. அப்பத்தாகிட்ட வா” என்று பேத்தியை தன் பக்கமாக வரச் சொல்லி கை நீட்டினார் அவளின் அப்பத்தா பெரியநாச்சி.
மறுகணம் பெரியம்மாவின் கையை விலக்கி விட்டு அப்பத்தாவின் அருகில் சென்று அமர்ந்தாள் அவள்.
“என்னைப் பெரியம்மா கூட அனுப்ப போறியா அப்பத்தா? எம்புட்டு நாளைக்கு?” என்று அவள் அழுகுரலில் கேட்டதும், பெரியநாச்சி சேலைத் தலைப்பால் வாய் பொத்தி அழுகையை அடக்கினார்.
“தம்பி, என் கூட வர மாட்டானா அங்க?” தேன்மொழி அடுத்தக் கேள்வியைக் கேட்டதும், “ஐயோ…” என்று கதறி நெஞ்சில் அடித்துக் கொண்டார்.
“ஆத்தா, ராசா… என்கிட்ட என் பேத்தி என்ன கேள்வி கேட்கறா பார்த்தீங்களா? நான் என்னன்னுட்டு இதுக்குப் பதில் சொல்லுவேன். எங்களை இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டீங்களே. இந்தப் பச்ச மண்ணுங்களை நான் எப்படிக் காப்பாத்த போறேனோ” என்று அவர் அழுது அரற்ற, “ஆத்தா, பேசாம இரு” என்று அவரை அதட்டி அடக்கினார், அவரின் மூத்த மகன் கந்தன். ஆனாலும், அவரின் புலம்பல் நிற்கவில்லை.
அவரைக் கண்ணாகப் பார்த்துக் கொண்ட பிள்ளையைப் பறிக் கொடுத்தப் பாசத்தினால் விளைந்த துக்கம் அது. கண்ணீரும், கதறலுமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
“அப்பத்தா.. அழாத” தேன்மொழி அவரை நெருங்கி, தன் பிஞ்சுக் கரங்களால் அவரின் கன்னம் துடைத்து விட்டாள்.
“தங்கமே.. என் ராசாத்தி..” என்று பேத்தியை கட்டிக் கொண்டு பெரும் குரலில் அழுதார் அவர்.
பெரியநாச்சி, வீரய்யன் தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். கந்தன், சேகரன் என்று இரண்டு ஆண் மக்களை அடுத்துப் பிறந்த பெண் பரமேஸ்வரி. தங்களால் இயன்ற அளவுக்கு அவர்களைப் படிக்க வைத்து, ஆளாக்கி, அவரவருக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்திருந்தார்கள்.
அவர்களின் மூத்த மகன் கந்தன் திருமணமானதும், ஆண் வாரிசு இல்லாத அவரின் புகுந்த வீட்டுக்கு, வீட்டோடு மருமகனான சென்று விட்டார்.
கந்தன், பொற்கொடி தம்பதியருக்கு சுதாகரன், ஜெயபாலன் என இரண்டு மகன்கள். ஓரளவு நல்ல வசதியான வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருந்தது. கந்தன் அமைத்துக் கொண்டார் என்றும் சொல்லலாம்.
பரமேஸ்வரியை மானாமதுரையில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அவர் வாக்கப்பட்டுப் போனது நல்ல வசதியான குடும்பம். அத்தோடு பிறந்த வீட்டோடு அதிகம் உறவாடவில்லை அவர். இது போல நல்லது கெட்டதில் கலந்துக் கொள்வார். அவ்வளவே அவரின் பாசம், பந்தம் எல்லாம். பெரியநாச்சிதான் மகளை இழுத்துப் பிடித்திருந்தார், எல்லா வகையிலும்.
அவர்களின் இளைய மகன் சேகரனுக்கு மீனாட்சியை மணமுடித்து வந்ததில் இருந்து அவர்களுடன்தான் வசித்தார்கள். அதுதானே வழக்கமும் கூட. அதனால் தானோ என்னவோ, பெரிதாக வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும், பெரியநாச்சிக்கு அவர்களின் மேல் கூடுதல் பாசம் உண்டு.
பெரியநாச்சியின் கணவர் வீரய்யன் ஐந்து வருடங்களுக்கு முன்பு காலமான போது மனதொடிந்து போனவரை தேற்ற மகனும், மருமகளும் இருந்தாலும் கூட அப்போதுதான் பிறந்திருந்த பேரனின் பிஞ்சு முகம்தான் அவருக்குப் பித்துப் பிடிக்காமல் பார்த்துக் கொண்டது. தன் கணவரே பேரன் உருவில் மறுபிறவி கொண்டது போல மகிழ்ந்து அவனைத் தாங்கிக் கொண்டார்.
சேகரன் மீனாட்சி தம்பதிக்கு மூத்தது பெண் குழந்தை, தேன்மொழி. இரண்டாவது மகன் அன்பழகன்.
அன்பழகனை அதுவரை வளர்த்ததெல்லாம் பெரியநாச்சிதான். அம்மா மீனாட்சியை விட அப்பத்தாவிடம்தான் அதிக ஒட்டுதல் அவனுக்கு. ஆனால், அதை விட அதிகப் பாசம் அவனுக்கு அக்கா தேன்மொழியின் மீதுதான். எப்போதும் கிளுக்கி சிரித்தபடி தன்னைச் செல்லம் கொஞ்சும், சோறூட்டும், சீராட்டும் அக்காவின் மேல் அலாதி அன்பு அவனுக்கு. அதிலும், அம்மா தவறிய பிறகு அக்காவின் கையைப் பிடித்தது பிடித்ததுதான், விடவேயில்லை அவன்.
அந்தப் பாசப் பிடிப்பில் இப்போது விரிசல் விழப் போகிறது என்பதை அறிந்து தேன்மொழி துடிக்க, இன்னும் அறியா சிறுவனாக இருந்தவனுக்கு வீட்டு நடப்பும், இழப்பும் என எதுவும் புரியவில்லை.
சரியாக ஓராண்டுக்கு முன்பு இதே போன்றதொரு மழை நாளில் காய்ச்சல் என்று தொடர்ச்சியாக ஒரு வாரம் உறக்கமும், சோர்வுமாகப் படுக்கையில் இருந்த அவர்களின் தாய் மீனாட்சி, ஒருநாள் நிரந்தரமாகக் கண் மூடி விட்டிருந்தார்.
“தீவிர மஞ்சள் காமாலை தாக்கம். ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவர்களைச் சந்திக்காததால் நேர்ந்த இழப்பு” என்று பெரியவர்கள் பேசிக் கொண்டது பிஞ்சுக்களுக்குப் புரியவேயில்லை.
“அம்மா, அம்மா” என்று அழுது கரைந்து, தேடி, தவித்துச் சிறிது நாள்களிலேயே அம்மாவின் அன்பை அப்பத்தாவிடம் தேடி கோழிக் குஞ்சாய் அவர் மடியில் சுருண்டு தஞ்சமடைந்தார்கள் குழந்தைகள் இருவரும். ஆனால், அவர்களைப் பெற்றவரோ, மனைவியின் இழப்பில் இருந்து மீள முடியாமல், வீட்டிலேயே அடைந்து கிடந்தார்.
பெரியநாச்சி, பிள்ளைகளைக் காண்பித்து அவரிடம் முறையிட, அச்சாக மனைவியை உரித்துப் பிறந்திருந்த மகள் தேன்மொழியைக் கண்டு அழுது கரைந்த சேகரன், தன் துக்கத்தை மறக்க, வேலையில் கவனத்தைச் செலுத்தினார். அவருக்குத் தொழில் விவசாயம்தான். நாள் முழுக்க, உடல் அலுக்க உழைத்தாலும், வீட்டில் மீனாட்சி இல்லாத வெறுமை அவரின் துக்கத்தை அதிகரித்துத் தூக்கத்தைத் களவாடிக் கொண்டது.
சில மாதங்களிலேயே சரியாக உண்ணாமல் உறங்காமல் ஆள் பாதியாகக் குறைந்தவர், அப்போதுதான் கூட்டாளிகளின் சகவாசத்தால் குடிக்கத் தொடங்கினார். அதுவே அவருக்கு இறுதி முடிவை எழுதியது.
இத்தனைக்கும் அன்றைக்கு அதிகம் குடித்திருக்கவிலை அவர். மது உடலுக்குக் கேடு. கெட்டதில், கொஞ்சமென்ன அதிகமென்ன? கேடு, கேடுதான். அந்த மாலை வேளையில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தவர் மழை பெய்யவும், விரைந்து வீடு செல்லும் தீவிரத்தில் நடையில் வேகத்தைக் கூட்டினார். அவரின் போதையும், ஈரப் பாதையும் சேர்ந்து அவரைத் தள்ளாட செய்ய, தடுமாறி தரையில் சரிந்திருந்தார். அவர் விழுந்த வேகத்தில் தலை தரையில் கிடந்த கல்லில் நன்றாக மோதியிருந்தது.
பெரும் மழை, அந்த மாலைப் பொழுதை இரவாக்கி இருந்தது. அவருக்குப் பின் தலையில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் மயக்க நிலைக்குச் சென்று விட்டார். அது அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. இரவு எட்டு மணி போல நகரத்திற்குள் வேலை முடித்து வீடு திரும்பியவர்கள் அவரைக் கண்டு, உதவுவதற்குள் காலம் கடந்திருந்தது.
பெரியநாச்சிக்கும் அவரின் பேரப் பிள்ளைகளுக்கும் அந்த இழப்பு மிகப் பெரியது. கணவர், மருமகள், மகன் என அடுத்தடுத்த பேரிழப்புகள். மனத்தளவில் மிகவும் தளர்ந்து போனார் அவர்.
இதோ அவரின் மகனுக்குக் காரியம் செய்து மூன்று நாள்கள் முடிந்து விட்டது.
அவரின் இழப்பிற்கு வந்த சொந்த பந்தங்கள் அனைவரும் அவரவர் வழி சென்றிருக்க, குடும்பத்தினர் மட்டுமே அங்கிருந்தார்கள். அதற்குக் காரணம் இருந்தது.
பேரன், பேத்தியின் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்திருந்தார் அவர். பிள்ளைகள் இருவரையும் அவரே கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளலாம்தான். ஆனால், எத்தனை நாளைக்கு? அவருக்கும் வயதாகிறதே. அவரும்தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருப்பார்? ஒரு பத்து அல்லது பதினைந்து? ஆனால், அதற்குப் பின் பிள்ளைகளின் வாழ்வை நினைக்கவே அவருக்குப் பதறியது. தான் திடமாக இருக்கும் போதே அவர்களுக்கு நிலையான, நிம்மதியான ஓர் வாழ்வை அளித்திட விரும்பினார்.
உறவுகள் அவர் முடிவை ஆதரித்தார்கள்தான். உள்ளத்தில் இருந்து உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் முடிவில் அவருக்கே உடன்பாடில்லை. ஆனால், என்ன செய்ய? சமீபமாக அவரின் உடல்நிலையும் மோசமாக அல்லவா இருக்கிறது. அடிக்கடி ஒற்றைத் தலைவலி கொல்கிறது. பார்வையும் சரியாக இல்லை. அதற்கு வேறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதை விட எதையும் உண்ண முடியாது படுத்தி எடுக்கும் இந்த வயிற்று வலிக்கு என்ன வைத்தியம் பாத்தும் ஒரு முடிவு கட்ட முடியவில்லை. அதுவே அவருக்குப் பெரிய மனக்கவலையாக இருந்தது.
அவை எல்லாவற்றையும் விட நிலையற்ற வாழ்வின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போனதுதான் முதற்முழு காரணமும்.
தேன்மொழிக்கு ஏழு வயது. தன்னைச் சுற்றி நடப்பதை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாமல், அழுகையை அடக்கியபடி அனைவரையும் பார்வையால் வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் கை இறுக்கமாகத் தம்பியை தன்னோடு பிணைத்திருந்தது.
அவள் தம்பி அன்பழகனுக்கு ஐந்து வயது. பிரிவு புரியும் வயதா அது? அன்பாக வளர்த்த அம்மாவை காணவில்லை என்று அழுதவனுக்கு, அதான் அக்கா இருக்கிறாளே தன்னைப் பார்த்துக் கொள்ள என்று அதுநாள் வரை அவளின் சட்டையைப் பிடித்துப் பின்னாலேயே சுற்றியவன், இப்போதும் அப்படித்தான் நின்றிருந்தான்.
பேரப்பிள்ளைகளைப் பார்க்கப் பார்க்கப் பெரியநாச்சிக்கு நெஞ்சம் நடுங்கியது.
இந்த வாழ்வென்ன தன்னைச் செய்து விடும், வருவது வரட்டும். பாத்துக் கொள்ளலாம் என்று கூட ஒரு நொடி யோசித்தார். ஆனாலும், மனம் முரண்ட மக்களைப் பார்த்தார்.