“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்குப் பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்கதான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும் உங்களுக்குத் தானம் கொடுக்கற உயர்ந்த இடத்திலதான் இருக்கார். அவர், மகளை மட்டும் உங்க மகனுக்குத் தானமா கொடுக்கல. கூடவே, பொன்னும், பொருளும் கொடுத்துட்டேதான் இருக்கார். கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாம, மகனை காட்டி திரும்பத் திரும்ப அவர்கிட்ட பிச்சை எடுக்கறது நீங்கதான். சோ, பிச்சைக்காரி அப்படின்ற பேர் பிடிக்காட்டி, உங்களுக்கு நீங்களே வேற ஒரு பேர் வச்சுக்கோங்க” ஆவேசமாக அவள் கத்த, அவள் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி அவளை அடிக்கக் கை ஓங்கியிருந்தார்.
“தப்பு சஹா. நீ இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அவங்க பெரியவங்க கோபத்துல ஆயிரம் வார்த்தை விடலாம். ஆனா, நீ தவறி கூட, தெரியாம கூட இப்படியொரு வார்த்தை அவங்களைப் பார்த்துப் பேசியிருக்கக் கூடாது. எப்பவும் பேசும் முன்ன யோசிக்கணும் சஹா. அவங்க பெரியவங்க. உன் புருஷனோட அம்மா. உன் மாமியார். அவங்களைப் போய் இப்படிப் பேசலாமா? ரொம்பத் தப்பு டா” மகளுக்குச் சாதகமாகப் பேசத் தோன்றவில்லை அவருக்கு. மகளின் தவறை சுட்டிக் காட்டும் நேர்மையான தாயாக மட்டுமே இருக்க விரும்பினார் அவர்.
“என்ன இருந்தாலும் நீ இப்படிப் பேசியிருக்கக் கூடாது” கண்டிப்புடன் சொன்னார்.
“சாரிம்மா. கோபத்துல யோசிக்காம பேசிட்டேன். இனிமே பண்ண மாட்டேன்மா. நான் அவங்ககிட்ட, அத்தகிட்ட மன்னிப்பு கேட்கறேன் மா. பிராமிஸ். கண்டிப்பா சாரி சொல்லிடுவேன் மா. எனக்குத் தெரியும், நான் பேசினது தப்புனு. ஆனா, அவங்க அடிக்கக் கை ஓங்கினதும் கோபத்துல கிளம்பி வந்து…”
“நீ பதிலுக்கு அவங்களைப் போலப் பேசினதினாலதானே, அவங்க அடிக்க வந்தாங்க. உன்கிட்ட அப்படியொரு வார்த்தையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. அந்த அதிர்ச்சிதான் அடிக்கத் தூண்டியிருக்கு”
“சாரிம்மா” என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள் சஹானா.
“மாப்பிள்ளைகிட்ட நடந்ததைச் சொன்னியா?” புனிதா கேட்க மறுப்பாகத் தலையசைத்தாள் சஹானா. அவள்தான் கிடைத்தது காரணம் என்று கோபித்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டாளே. மாமியார், நாத்தனார் என வீட்டில் இருந்தவர்களுக்கே அவள் வீட்டை விட்டு வெளியேறியது தெரியாது. கணவனின் மேலும் கோபம் இருக்க, அவனிடமும் சொல்லிக் கொள்ளவில்லை அவள். இப்போது யோசிக்கத் தன் தவறு புரிந்தது அவளுக்கு. ஆனால், செய்து விட்ட தவறை திருத்த வழியில்லையே. தவறு செய்த சிறுமியாய் தாயின் முன் தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள் அவள்.
“மாப்பிள்ளை உன்கிட்ட நேத்து பேசினாரா?” புனிதாவிற்குச் சட்டென மகளின் வாழ்வு குறித்த கவலைத் தொற்றிக் கொள்ள, கேள்வியாக அடுக்கினார் அவர்.
“நைட் பேசினார் மா. வீட்டுக்குப் போய்ட்டியா கேட்டார். பாப்பா பத்தி கேட்டார்” குரலில் தடுமாற்றத்துடன் அவள் சொல்ல,
“பாரு. பாரு. உனக்காக அந்த மனுஷன் எப்பவும் இறங்கி வரத்தான் செய்யறார். அதை உனக்குச் சாதகமா எடுத்துட்டு ஆடுற நீ”
“இல்லம்மா..”
“என்ன இல்லம்மா? உங்க கல்யாணம் அப்பவே நான் சொன்னேன் தானே? சத்யமூர்த்திச் சாதாரண விளையாட்டு பையன் இல்லைனு. அதையும் விளையாட்டாதான் எடுத்துக்கிட்டியா நீ? அவர் பேசலை, சிரிக்கலைன்னு சின்னப் பிள்ளை மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்க நீ”
“நான் எப்போம்மா அப்படிச் சொன்னேன்?” தாயிடம் ஒருநாளும் கணவனைக் குறைச் சொல்லியதில்லை சஹானா. இப்பொழுது அதிர்ச்சியுடன் அவள் கேட்க, “இங்க நம்ம வீட்ல வச்சே எத்தனை முறை அவரை, உங்களுக்குப் பேசவே வராதா? சிரிக்கவே தெரியாதான்னு திட்டியிருப்ப? ஒன்னுமே செய்யாத மாதிரி முழிச்சு, கேள்வி கேட்கற இப்போ?” மகளின் மேலிருந்த கோபத்தில் சூடாக வந்து விழுந்தது அவரின் வார்த்தைகள். கணவனை எல்லோர் முன்பும் பேசியிருக்கிறோம் என்பதே அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.
“சாரிம்மா” என்றாள் அழுகையில் துடித்த உதடுகளைப் பற்களால் கடித்து, கண் கலங்க அமர்ந்திருந்த மகளைக் கனிவாகப் பார்த்த புனிதா, “சரி, சரி. அழக் கூடாது சஹா. எல்லாத்தையும் சரி பண்ணலாம். நான் அப்பாவை மாப்பிள்ளைகிட்ட பேசச் சொல்றேன். நீயும் அவர்கிட்ட பேசு.” அவளுக்கு ஆறுதலான பதிலை சொன்னார்.
“நீ இங்க ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் பொள்ளாச்சி போகலாம். நானும், அப்பாவும் உன் கூட வர்றோம்” என்றவருக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை அவளால். அவளின் கோபம் மாமியாரின் மீது மட்டுமில்லையே, கணவனின் மேலும் கன்னா பின்னாவென்று கோபத்தை வளர்த்து வைத்திருந்தாளே அவள். அப்படியிருக்க, உடனே புகுந்த வீடு செல்ல எப்படிச் சம்மதிப்பாள்?
“ம்மா. நான்..”
“எதுவும் சாக்கு போக்கு சொல்லாத சஹானா. நாம ரெண்டு நாள்ல ஊருக்கு போறோம். நீ உன் மாமியார்கிட்ட மன்னிப்பு கேட்கற. இனிமேல் இப்படி யார்கிட்டேயும் யோசிக்காம பேசக் கூடாது நீ, சரியா?” புனிதா கண்டிப்புடன் குரலை உயர்த்திச் சொல்ல, எல்லாப் பக்கமும் தலையை ஆட்டினாள் சஹானா.
“முதல் வேலையா மாப்பிள்ளைக்குக் கூப்பிட்டு பேசு. அவர்கிட்ட நடந்ததைச் சொல்லி சாரி சொல்லு. தப்பே பண்ணாலும், தப்பாவே பேசினாலும், அவங்க அவரோட அம்மா சஹா. எங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு. அவரை நீ இப்படிச் சங்கடப்படுத்தக் கூடாது. கால் பண்ணி பேசு. சாரி சொல்லு”
“ம்ம். பேசுறேன் மா” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில். அந்த அதிகாலை வேளையில், சோர்ந்து, ஓய்ந்து போய்த் தெரிந்த மகளைப் பார்க்கையில் புனிதாவிற்கு அத்தனை வருத்தமாக இருந்தது. கைக் குழந்தையை வைத்திருந்த மகளே இன்னும் குழந்தையாகத்தான் அவரின் கண்களுக்குத் தெரிந்தாள். மகளின் வாழ்வை நினைக்கையில் அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விட, “நம்ம ஊரை பொறுத்தவரை கல்யாணம் ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல நடக்கறது சஹா. ஒரு கல்யாணத்தால ரெண்டு பேர் மட்டுமில்ல. ரெண்டு குடும்பமும் இணையுது. அதுனாலதான் ஒரே ஊர், இனம், மதம், குணம்னு தேடிப் பார்த்துக் கல்யாணம் பண்றாங்க.” அவர் சொல்ல,
“ஆனா, நீங்க அதையெல்லாம் எப்பவும் பார்த்தது இல்லையே மா” அவசரமாகக் கேட்டாள் சஹானா.
“என் வேலை எனக்கு எத்தனையோ கத்துக் கொடுத்தது சஹா. அதில் முக்கியமானது மனுஷங்களை, மனுஷங்களா மட்டும் பார்க்கறது. நான் ஒரு நர்ஸ், என்கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வர்றவங்க ஜாதி, மதம் எல்லாம் பார்த்தா, என்னால ஒரு நிமிஷம் கூட வேலைப் பார்க்க முடியாது டா. இரத்தமும், சீழுமா வந்து நிக்கிறவன் உயிரை இனம் பார்த்தா காப்பாத்த முடியாது. மதம் பார்த்து வைத்தியம் பார்த்தா, தினம் ஒரு குட்டி ரோஜா பூவை இந்த உலகத்துக்குக் கொண்டு வர முடியாது சஹா.” ஆதூரத்துடன் மகளின் முகம் வருடி சொன்னார் அவர்.
“அதுக்காக இனம், மதம்னு பார்க்கறவங்களை நாம தப்பு சொல்லக் கூடாது சஹா. அவங்கவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அதை நாம குறை சொல்லவும் கூடாது. கேலி பண்ணவும் கூடாது. உன் மாமியாரோட வருத்தம் காலத்துக்கும் இருக்கத்தான் போகுது. நீயோ, நானோ இனி நினைச்சா கூட எதையும் மாத்த முடியாது. அவங்களால உன்னை ஏற்றுக்க முடியலைன்னா, அது உன் தப்பு இல்ல சஹா. அதை யோசிச்சு உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத.”
“எப்படி மா முடியும்? எல்லாரும் ஒரே வீட்ல இருக்கும் போது? எப்படிக் கண்டுக்காம கடந்து போக முடியும்? எத்தனை நாளைக்கு அமைதியா போக முடியும்?” வெடித்தாள் சஹானா.
“மாப்பிள்ளைகிட்ட பேசு சஹா. யார் மேலயோ இருக்கக் கோபத்தை எல்லாம் சேர்த்து வச்சு அவர் மேல காட்டாத. அது ரொம்பத் தப்பு. வீட்டு நிலைமை கண்டிப்பா அவருக்குத் தெரிஞ்சுருக்கும். நிச்சயமா ஏதாவது பண்ணுவார்.”
“சரிம்மா” என்றாள் சஹானா. மெல்ல எழுந்து கொண்ட புனிதா, அறை வாயிலை நோக்கி நடந்தார். ஏதோ நினைவு வந்தவராக நின்று, அங்கிருந்தே பேசத் தொடங்கினார்.
“ஒருத்தர் மேல நாம கோபமா இருக்கும் போது, அவங்க செய்யற நல்லது கூட நமக்குக் கெடுதலாதான் தெரியும். அந்த நேரம் யாராவது நம்மகிட்ட அவங்களைப் பத்திக் கேட்டா, குறையாதான் சொல்லுவோம். நமக்கு வசதியா, அவங்க நமக்குச் செஞ்ச நல்லதை எல்லாம் மறந்துப் போய்டுவோம்.”
“அம்மா…” மகள் கோபத்துடன் சிணுங்க,
“ஒன்னை பத்தாக்கி சொல்றது மனுஷ இயல்பு சஹா. நீ இப்போ அதைத்தான் பண்ணிட்டு இருக்க. மாப்பிள்ளை உனக்குப் பண்ண நல்லது எல்லாம் உனக்கு மறந்துப் போச்சு. நீ மாப்பிள்ளையைப் படுத்தினது எல்லாம், எவ்வளவு ஈசியா மறந்து, ஒன்னுமே இல்லாத மாதிரி ஒதுக்கிட்ட இல்ல?”
“ம்மா, நான் அவரை என்ன பண்ணேன்?”
“என்ன பண்ணலை கேளு சஹா. நீ பிரார்த்தனாவை வயித்துல வச்சுட்டு இருக்கும் போது, என்னெல்லாம் பண்ண? நீ சாப்பிட அவர் சமைக்கல. நீ தூங்க அவர் தாலாட்டு பாடல. அவ்ளோதான். மத்த எல்லாம் செஞ்சார் மனுஷன். நான் கூட உனக்காக அவ்ளோ செய்யல. இப்போ டெலிவரிக்கு அப்புறம் டிப்ரஷன்ல நீ பண்ற எல்லாத்தையும் மனுஷன் பொறுத்து போய் நிதானமா, உன்னைப் புரிஞ்சு ஹாண்டில் பண்றார்தானே?” அம்மா கேட்டதில் ஆணித்தரமான உண்மை இருக்க, அவளால் பதில் பேச முடியவில்லை.
“உங்களுக்கு எப்பவும் உங்க மருமகன்தான் உசத்தி” என்று சடைத்துக் கொண்டாள் சஹானா. மென்மையாகச் சிரித்தார் புனிதா.
“அம்மா போய் டிஃபன் வேலையைப் பார்க்கறேன். பாப்பா தூங்கும் போதே, நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கோ” அக்கறையுடன் அவர் சொல்ல, தலையசைத்தாள் சஹானா. மகளின் அறைக் கதவை லேசாக மூடி விட்டு, வெளியே போனார் புனிதா. அம்மாவிடம் பேசியதை, அம்மா பேசியதை மனதில் அசைப் போட்டபடி கட்டிலில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் சஹானா.
மனதில் கணவன் வந்து நின்று, புருவங்களை நெரித்துப் பார்த்தான். அவளுக்குக் கோபம் பின்னுக்குப் போய், இப்போது குற்ற உணர்வாக இருந்தது. கணவனிடம் பேச வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். ஆனால், போதிய உறக்கமில்லாத காரணத்தால் கண்கள் எரிய, எழுந்து முகம் கழுவச் சென்றாள் அவள். குளிர் நீர் முகத்தில் பட்டதும், உடலோடு மனதும் சில்லென்று குளிர்ந்த உணர்வு. அவள் முகம் கழுவி துவாலையால் துடைத்தபடி வெளியில் வர, அவளின் அறைக் கதவை திறந்தபடி உள்ளே வந்தான் சத்யமூர்த்தி. சஹானா சத்தியமாய்க் கணவனை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. இருவரும் ஒரு நொடி பேச்சு மறந்து உறைந்து நின்றனர். சத்யமூர்த்தி முதலில் சுதாரித்து, அறைக் கதவை தாழிட்டுத் திரும்பினான்.
அவசர எட்டுக்கள் வைத்து, அவளுக்கு அருகில் வந்தான். விழிகளை விரித்து அவனை வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை இழுத்து இறுக அணைத்திருந்தான். அவன் வழக்கம் போல எதுவும் பேசவில்லை. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மௌனமாய் அணைப்பின் வழி அன்பைக் கடத்தினான். மெல்ல குனிந்து மனைவியின் முகம் பார்த்தான். அவள் கண்களை நிறைத்திருந்தது குழப்ப ரேகைகள். அவனுக்கும் குழப்பம்தான். இரண்டரை வருடங்களாக அவனது அன்பு உணர்த்தாத எதை அவன் வார்த்தைகள் மனைவிக்கு உணர்த்திடப் போகிறது என்று நினைக்கையிலே அவனுக்கு ஆயாசமாக வந்தது. மெல்ல மனைவியை விலக்கி விட்டு திரும்பிப் படுக்கையில் இருந்த மகளைப் பார்த்தான் சத்யமூர்த்தி.
அவன் உதடுகள் தாமாகப் பிரிய, சஹானா உதடுகள் இறுகியது.
மகளுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தான் சத்யமூர்த்தி. மெல்ல அவளின் கன்னம் வருடிக் கொடுத்தான்.
“நீ தூங்கு சஹானா” என்றான் அமைதியாக, அழுத்தமாக.
“பாப்பாவை நான் பார்த்துக்கறேன். அவ தூங்கற வரை நீயும் தூங்கு” கணவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அவளுக்குப் புரிய, அமைதியாக அவனையே பார்த்தபடி படுக்கையில் அமர்ந்தாள்.
“சாரி..” என்றான் சத்யமூர்த்தி, சஹானாவின் கண்களை நேராகப் பார்த்து.
“எது.. எதுக்கு?” திக்கினாள் சஹானா.