அன்பின் ஆலாபனை – 8 (1)

ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்தப் பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள் இருக்கும் மாமியார், மகனது திருமணம் பேசிய உடனேயே உயிர் பெற்று விடுவாள் என்று சஹானாவிற்குத் தோன்றியது.

சுப்புலட்சுமி தானொரு சிறந்த தாயார் என்று மகள் ராதா விஷயத்தில் நிரூபித்த மறுகணமே, தானொரு அதிசிறந்த மாமியார் என்பதையும் சஹானாவிடம் காட்டிட மறக்கவில்லை.

சத்யமூர்த்தி – சஹானா திருமணம், சத்யமூர்த்தியின் விருப்பத்தினால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது என்பதைத் திருமணமான சில நாட்களிலேயே புரிந்துக் கொண்டாள் சஹானா. அப்பொழுது, சதா சர்வ காலமும் அவளைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த மாமியாரை பார்க்கையில் அவளுக்கு வருத்தமாகக் கூட இருந்தது. அவர்களுக்குத் திருமணம் முடிந்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கையில் மாமியார் இப்படி எதிர்மறையாகப் பேசிக் கொண்டேயிருப்பது, சமயங்களில் அவளை மிகுந்த எரிச்சலூட்டியது.

இந்த வீட்டில் தான் வாழப் போகும் காலம் முழுமைக்கும் மாமியாரின் இப்பேச்சை கேட்க வேண்டும் என்று நினைக்கையிலேயே அவளுக்குக் கண்ணைக் கட்டியது. ஒரே விஷயத்தை அவர் அலுக்காமல் பேசுவதைப் பல நேரங்களில் பெரிதுப்படுத்தாமல், பொருட்படுத்தாமல் கடந்து செல்ல பழகியிருந்தாள் சஹானா. ஆனாலும், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது, சச்சரவுகளைத் தவிர்க்க முடியவில்லை. மாமியாரின் பேச்சு அவளுக்குச் சஞ்சலத்தை, சங்கடத்தைக் கொடுக்க, இறுதியில் அது சத்யாவிடம் சண்டையில் போய்தான் முடியும். காரணம் சொல்லாமல் காச் மூச்சென்று கத்தும் மனைவியைக் கவலையுடன் பார்ப்பான் சத்யமூர்த்தி. சமாதானமும் செய்வான். ஆனாலும், அவளுக்குத்தான் அது போதவில்லை.

“சஹா, சஹா.. அம்மா, எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்? அப்படி என்ன யோசனை?” புனிதாவின் அழைப்பு, சஹானாவை கடந்த காலத்தில் இருந்து, நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

“சாரி மா. கவனிக்கல. என்னம்மா, சொல்லுங்க?”

“பாப்பா தூங்கிட்டா பாரு. அவளைக் கீழ படுக்க வை. இந்தா, உனக்குக் காஃபி” அவளின் மடியில் தன் சொப்பு வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்த மகளைப் புன்னகையுடன் பார்த்து, படுக்கைக்கு மாற்றினாள் சஹானா. அவளுக்காக, அம்மா நீட்டிய காபியை கையில் வாங்கிக் கொண்டே, “உங்களுக்கு மா?” என்று கேட்டாள்.

“நான் குடிச்சிட்டேன் சஹா. நீ சூடு ஆறும் முன்னாடி குடி”

வண்டிப் பெரியாரில் விளைந்த காஃபி கொட்டைகளில் தயாரித்த காபியின் சுவை அலாதியாய் இருக்க, ஒவ்வொரு சொட்டையும் ருசித்துப் பருகினாள் அவள். மகளின் ரசிப்பைப் பார்த்து விட்டு சிரித்தார் புனிதா.

அவருக்கு மருமகனின் நினைவு வந்தது. மனைவிக்குப் பிடித்தம் என்று ஒவ்வொரு முறை, மாமியார் வீடு வரும் போதும் கிலோ கணக்கில் காஃபி பொடி வாங்கிப் போகும் சத்யமூர்த்தி நினைவில் வந்தான்.

“சஹா, நேத்து நீ தனியா வர்றேன்னு மாப்பிள்ளை ஃபோன் பண்ணி சொல்லவும், எனக்கு அப்படியொரு கோபம் வந்தது. நீ எங்களுக்குப் போன் பண்ணி ஊருக்கு வர்றேன்னு சொல்லாததில் இருந்தே, அங்க ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சது.”

“இல்லம்மா. அது..”

“அப்பா நேத்து நைட் உன்னைக் கூப்பிட பஸ் ஸ்டாண்டு வர கிளம்பினார். நான்தான் போக வேணாம்னு சொன்னேன்.”

“ம்மா, ஏன்மா?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“இன்னைக்கு உனக்காக அப்பா வந்து நின்னா, நாளைக்கும் அப்பா வந்து நிப்பார்னு எதிர்ப்பார்ப்ப இல்ல? அதுனாலதான் அப்பாவை அனுப்பல. என்ன பிரச்சனையா இருந்தாலும் அங்கேயே நின்னு திடமா சமாளிக்காம, அதென்ன தனியா பிள்ளையைத் தூக்கிட்டு கிளம்பி வர்ற கெட்ட பழக்கம்?”

“என்னம்மா இப்படிப் பேசுறீங்க? எனக்காக நீங்க இருக்கீங்கன்னு நினைச்சேன்.” ஆதங்கத்துடன் சொன்னாள்.

“நீ எங்களுக்கு ஒரே மக சஹா. உனக்காக நாங்க எதையும் செய்யத் தயாரா இருக்கோம். அதுக்காக, நீ இப்படித் தனியா வரலாமா?”

“என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா மா? பிரச்சனையைச் சமாளிக்க எனக்குத் தெரியாதா? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லம்மா? எவ்வளவு நாள்தான் பொறுத்துப் போறது? அத்தை ரொம்பப் பேசுறாங்க மா? இவர்.. இவர்..”

“சஹா, புகுந்த வீட்ல மட்டும் பொறுமைக்குல்லாம் எல்லையே இருக்கக் கூடாது. உங்க அத்தையை விடு, மாப்பிள்ளை உன்னை என்ன கொடுமை பண்ணார். அதைச் சொல்லு? சின்னச் சின்ன விஷயத்துக்கும் உன் முகம் பார்த்து, உன் விருப்பம் தெரிஞ்சு, உன் சம்மதம் கேட்டு, உனக்காக எல்லாத்தையும் செய்யறாரே அதைத்தான் தப்பு சொல்றியா நீ?”

“ம்மா. அவர் எனக்காக என்ன செஞ்சுட்டார்? ஒன்னும் செய்யல. என்கிட்ட ஒழுங்கா பேசுறது கூடக் கிடையாது. எனக்காக அவங்க அம்மாகிட்டயும் பேசுறது கிடையாது”

“மனசாட்சி தொட்டு சொல்லு சஹா. உனக்காக மாப்பிள்ளை ஒன்னுமே செய்யலையா?” அழுத்தம் திருத்தமாகக் கேட்டார் புனிதா. அவரின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலைக் குனிந்தாள் சஹானா.

“சத்யமூர்த்தி, உன்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டார் சஹா. அதுக்காக உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி அவரை வளைச்சுட்டே இருக்கணும்னு நினைக்காத.”

“நான் அப்படி…” சஹானா தொடங்க, கை நீட்டி மகளைப் பேச விடாமல் செய்தார் புனிதா.

“இது வாழ்க்கை பயணம் சஹா. நீ போற சுற்றுலா பயணம் இல்ல. நீ எல்லா நேரமும் டிராவல் பண்றதுக்கு முன்னாடி கையில ஒரு செக் லிஸ்ட் வச்சு, இது இருக்கா, இது எடுத்து வச்சாச்சான்னு சரி பார்க்கிற மாதிரி சத்யமூர்த்தியை பார்க்காத. எல்லா இடமும் டிக் அடிக்கணும்னு அவசியமில்ல. நிறை, குறை இரண்டும் நிறைஞ்சவன்தான் மனுஷன். நீ குறைகளை மட்டும் பூதக் கண்ணாடி வச்சுப் பார்க்கறன்னு எனக்குத் தோணுது.” அம்மாவின் பேச்சை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் சஹானா.

“நீ மாசமான நாள்ல இருந்து, குழந்தை பிறந்து, இதோ இன்னைக்கு வரைக்கும்.. உனக்காக என்ன செய்யலை அவர்? நீயே சொல்லு? திருமண வாழ்க்கையில் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தாதான், வாழ்க்கை பாலன்ஸ்டா போகும் சஹா. ஆனா, அதை ஒருத்தரே எல்லா நேரமும் செய்யணும்னு அவசியமில்ல. அப்படிச் செஞ்சா வெறுத்துப் போய்டும். அவங்க அம்மா உன்னைப் பேசினா அவர் என்ன பண்ணுவார்? அவங்க அம்மாகிட்ட உனக்காக எவ்வளவுதான் பேசுவார்? உனக்காக நீதான் பேசணும் சஹா.”

“ம்மா, அத்தை ரொம்பப் பேசுறாங்க மா.”

“சரி, அவங்க பேச இடம் கொடுத்தது யாரு? நீதானே?”

“என்னம்மா, நீங்க இப்படிப் பேசறீங்க? இனம், ஊரு, உறவு, வரதட்சணைன்னு அவங்க பேசுறதை, நான் எப்படிம்மா தடுக்க முடியும்? எல்லாம் தெரிஞ்சுதானே எங்க கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னாங்க? இப்போ அதையே குத்தமா சொல்லி சொல்லி காமிச்சுட்டு இருந்தா, நல்லாவா இருக்கு” கடுப்புடன் அவள் கேட்க, “ஒன்னு அவங்களுக்கான சரியான பதில் கொடு. இல்லையா, கண்டுக்காம போ சஹா. அவங்க அப்படிப் பேசுறதால நீ எந்த விதத்திலயாவது குறைஞ்சுப் போய்ட்டியா என்ன?” புனிதா தீர்க்கமாகக் கேட்க,

“எப்படிம்மா கண்டுக்காம போக முடியும்? எத்தனை நாள் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்? அப்பாவை பிச்சக்காரன், பிச்சக்காரன்னு எப்போ பார்த்தாலும் அத்த சொல்றதை என்னால தாங்கிக்கவே முடியலம்மா. இதுக்கு என்னனு பதில் கொடுக்க நான்?” சட்டென அவளின் குரல் உடைய, கண்களும் உடைந்தது. தாயின் தோளில் தன்னிச்சையாகச் சாய்ந்துக் கொண்டாள் சஹானா. மகள் சொன்ன வார்த்தைகளில் பலமாக அதிர்ந்துப் போன புனிதாவிற்குப் பேச்சே எழும்பவில்லை.

மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் அவர். அத்தனை எளிதில் யாரையும் குற்றம் சாட்டி விட மாட்டாள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், அவர்கள் மகளுக்கு நகை, சீர்வரிசை என அனைத்தையும் நிறைவாகவே செய்திருந்தனர். அதற்கு மேல் எதையும் செய்ய அவர்களைச் சத்யமூர்த்தி அனுமதிக்கவில்லை.

மருமகனின் மறுப்பை மீறி எதையும் செய்யத் துணியவில்லை அவர்கள். அப்படியிருக்கையில் சுப்புலட்சுமி இப்படிப் பேசுகிறார் என்றால், என்ன செய்வது?

“என்னாச்சு சஹா? ஏன் அப்படிப் பேசினாங்க?” பயத்துடன் மகளிடம் விசாரித்தார் புனிதா.

“நேத்து ராதா அண்ணி வீட்டுக் கிரகப்பிரவேசம் பத்தி அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்கம்மா. அந்நேரம் நான் வெளில வரவும், என்னைப் பார்த்து அத்த ஜாடை பேசிட்டே இருந்தாங்க. நீங்க எனக்கு ஒன்னும் செய்யல. பாப்பாக்கு ஒன்னும் செய்யல. அது, இதுன்னு குத்திக் காட்டி பேசிட்டு இருந்தாங்க. நான் காது கேட்காத மாதிரி என் வேலையைப் பார்த்திட்டு அமைதியாதான் மா இருந்தேன். ஆனா, என் பிள்ளை மாதிரி ஏமாளி கிடைச்சா, ஏய்க்கத்தான் சொல்லும். அவனை என்னமோ பண்ணி, ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு, பிள்ளை பெத்து, அதுக்கு ஒத்த குண்டு மணி நகை கூடப் போட்டு வரல இவ. பிச்சக்காரன் கூட இன்னைக்குத் தேதிக்கு கிலோ கணக்குல நகைப் போட்டுக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறான். பேரன், பேத்தி பொறாந்தா கொடி, கொலுசுனு தங்கத்துல இழைக்கறான். இந்தப் பிச்சைக்கார குடும்பத்துக்கு அதுக்குக் கூடத் துப்பில்லன்னு உங்களைச் சொன்னாங்கம்மா” கேவியபடி மகள் சொல்ல, கோபத்தை அடக்கினார் புனிதா.

காலம் காலமாக, வீட்டுக்கு வீடு நடக்கும் அதே கூத்துதான் என்றாலும், தன் மகளுக்கு என்று வரும் போது துடித்துத்தான் போனார் அவர். மேலும், கணவரை பேசிய பேச்சுகளை அவராலும் கூடத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

சத்தியமூர்த்தித் திடீரென்று வந்து நின்று, மூன்று மாத குழந்தையுடன் இருந்த மனைவியை, அவசர அவசரமாகத் தாய் வீடு அழைத்துப் போயிருக்க, பேத்திக்கு வாங்கியதை கொடுத்து அனுப்ப கூட அவர்களுக்குச் சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்னர், அவர்கள் பொள்ளாச்சி சென்று பேத்தியை பார்த்து விட்டு, மகளிடம் அவளுக்காக வாங்கிய நகைகளைக் கொடுத்து விட்டு வந்தார்கள்தான். ஆனால், அதில் எல்லாம் சுப்புலட்சுமி அத்தனை எளிதாகத் திருப்திப்பட்டு விடுவாரா என்ன? சமயம் கிடைக்கும் போதெல்லாம் மருமகளைச் சொல்லிக் காட்ட தவறியதில்லை அவர். அன்று தாய் வீட்டில் இருந்து அவதி அவதியாகப் புகுந்த வீடு அழைத்துச் சென்ற கணவனின் மேல்தான் சஹானாவின் கோபம் எல்லாம் திரும்பியது.

“அவங்க பேசினா பேசிட்டு போறாங்க சஹா. அப்பா அதுனால பிச்சைக்காரன் ஆகிட போறது இல்லையே மோளே. இதுக்கா கோவிச்சுட்டு வந்த?” மகளின் கன்னம் வருடியபடி கேட்டார் புனிதா.

“சாரி மா” என்று மன்னிப்புடன் தொடங்கிய சஹானா, “நான், நானும் பதிலுக்குப் பேசிட்டேன் மா” என்றாள் தயக்கத்துடன். சட்டென நிமிர்ந்து, மகளை விலக்கி, அவளின் முகம் பார்த்தார் புனிதா.

மெல்ல தலையசைத்து, “யாரு பிச்சைக்காரன்? எங்கப்பாவா? இல்ல, நீங்களா? கல்யாணமான நாள்ல இருந்து எங்கப்பாவை இப்படியே சொல்லிட்டு இருக்கீங்க. எங்கப்பா எனக்காக என்ன செய்யாம இருக்கார்? இன்னும் என்ன செய்யணும்னு எதிர்ப் பார்க்கறீங்க?” மாமியாரின் முகத்துக்கு நேராகக் கத்தியிருந்தாள் சஹானா.

error: Content is protected !!
Scroll to Top