அன்பின் ஆலாபனை – 7 (2)

“ரெண்டு பேரும் பேக்கிங் (Packing) டிபார்ட்மெண்ட். அந்தப் பொண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. இவனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தை இருக்கு. முதல்ல சாதாரணமா சிரிச்சு பேசியிருக்கான். அப்புறம் டபிள் மீனிங்ல பேசியிருக்கான். அப்பவே அந்தப் பொண்ணு ஒதுங்கிப் போயிருக்கு.”

“பாவம்”

“ஒரே இடத்தில வேலை இல்லையா? விடாம பேசியிருக்கான். ஒரு நாள் தனியா நிக்கும் போது லேசா உரசி இருக்கான். அப்புறம் அப்படி இப்படிப் பார்வை, தொடுறதுன்னு, கை நீட்டி தப்பு சொல்லச் முடியாத மாதிரி நடந்துக்கிட்டு இருக்கான்.”

“அவங்க இதை யார்கிட்டயாவது சொல்லியிருக்கலாம் இல்ல. கூட எத்தனை பொண்ணுங்க வேலை பார்க்கறாங்க?”

“என்னனு சொல்ல? இப்படிப் பேச்சு, பார்வை எல்லாம் ஆண்கள் எப்பவும் பண்றது தானேன்னு ஒதுங்கிப் போய் இருக்காங்க. அதைத் தனக்குச் சாதகமா எடுத்துக்கிட்டு, அவங்க போனுக்குக் கண்டபடி மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சுருக்கான். ஒரு நாள் நேராவே கேட்டும் இருக்கான். உனக்கும், கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. யாருக்கு தெரிய போகுது. சும்மா என் வீட்டுக்கு வா. இல்லனா, வெளில பார்த்துக்கலாம் சொல்லியிருக்கான்.”

“பொறுக்கி. அவனை என்ன பண்ணீங்க?”

“இந்தப் பொண்ணு முடியாது சொல்லியும் அவன் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கான். இன்னைக்கு ஃபேக்டரியில் வச்சு அவன், “ரொம்ப உத்தமி வேஷம் போடாம, ஒரு தடவை வந்து பாரு” சொல்லியிருக்கான்.”

“ச்சய்…” அருவருப்புடன் முகம் சுளித்தாள் சஹானா.

“அவனை அடிச்சே கொல்லணும்” பற்கள் அரைபடச் சொன்னாள்.

“அந்தப் பொண்ணும் சும்மா விடலை. நல்லா கேட்டுருக்கா அவனை. இன்னைக்குத் திட்டி, இரண்டு அறை விட்டும் இருக்கா. பதிலுக்கு இவன் அடிக்க, அந்தப் பொண்ணு முகம், நெத்தி எல்லாம் காயம்.”

“அய்யோ. இப்போ எப்படியிருக்காங்க?”

“ம்ம், பரவாயில்ல. சின்னக் காயம்தான். ஆனா, ரொம்ப மிரண்டு போய்த் தெரிஞ்சாங்க. நம்ம ஃபேக்டரில இப்படி நடக்கிறது.. இல்ல, என் பார்வைக்கு வர்றது, இதான் ஃபர்ஸ்ட் டைம். என்ன பண்ணனும்னு தெரியாம அப்படியே சில செகண்ட்ஸ்‌ பிரீஸ் ஆகிட்டேன் சஹானா. நீ என் கூட வந்துருக்கலாம். அந்தப் பொண்ணுகிட்ட பேசியிருப்ப. ப்ச், எப்படி இப்படி ஒருத்தனை வேலையில் வச்சேன்னு..”

“அதுல உங்க தப்பில்லையே. விடுங்க. என்னாச்சு? என்ன ஆக்சன் எடுத்தீங்க?”

“அவன் சீட்டை கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டேன். அவன் பொண்டாட்டி, பிள்ளைக்காகப் பார்த்துதான் இதோட விட்டேன். நல்லா மிரட்டி அனுப்பியிருக்கேன். பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு அழுதான். அவங்களுக்குத் தெரிஞ்சா, செத்துடுவாங்கன்னு சொன்னான். அதுக்காக விட்டேன். இல்லனா, போலீஸ் வரை போய் இருப்பேன். இனி யார்க்கிட்டயாவது அவன் வாலாட்டினா கண்டிப்பா களிதான்னு சொல்லியிருக்கேன். இவனுங்க எல்லாம் திருந்த மாட்டாங்கன்னுதான் தோணுது. போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருக்கணும் நான். அடி வெளுத்துட்டேன். ஆனாலும், மனசு அடங்கல சஹானா. பொண்டாட்டி, பிள்ளைன்னு அழுறான். அப்போ அடுத்தவன் வீட்டு பொண்ணு மட்டும்?? ச்சே, மிருக பிறவிங்க”

அவனது இயல்பை மீறி அவளுக்கு நிலைமையை விளக்கி நீளமாய்ப் பேசியவனை, ஆதூரத்துடன் பார்த்து, “உங்களால முடிஞ்சதை செஞ்சீங்கதானே. போதும், விடுங்க. அவ்வளவு சீக்கிரம் அவனுக்கு வெளில வேலை கிடைக்காத மாதிரி பண்ணுங்க. அதுவே தண்டனையா இருக்கட்டும்.” சஹானா சொல்ல, “ஆல்ரெடி மாதவன்கிட்ட சொல்லிட்டேன். அவன் பார்த்துப்பான்” உறுதியுடன் வந்தது அவன் வார்த்தைகள்.

“அந்தப் பொண்ணு இப்போ ஓகேதானே?”

“கொஞ்சம் தெளிவாதான் தெரிஞ்சாங்க”

“இதை மறக்க அவங்களுக்கு ரொம்ப நாள் ஆகும்” என்று கவலையுடன் சொன்ன சஹானா, “ஃபேக்டரியில சிசிடிவி உண்டுதானே? அப்புறமும் எப்படி?” என்று கேட்க, “சிசிடிவி கவராகாத இடமா பார்த்து வச்சுருக்காங்க. வேலையில் ப்ரேக் எடுத்து உட்கார, அரட்டை அடிக்க அந்த இடத்துக்குப் போவாங்க போல. ஆனா, அதை இவன் இப்படி யூஸ் பண்ணி..” இறுகிய அவன் கை விரல்களைப் பிரித்து விட்டாள் சஹானா.

“இனி சிசிடிவி எல்லா இடத்தையும் கவர் பண்ற மாதிரி வைக்கணும்” சத்யமூர்த்திச் சொல்ல, “அதோட நம்ம ஃபேக்டரியில வேலை பார்க்கற லேடீஸ், அவங்க பிரச்சனையைப் பயப்படாம சொல்ற மாதிரி ஒரு லேடி ஸ்டாப் அப்பாயிண்ட் பண்ணுங்க”

“ஆல்ரெடி இருக்காங்க சஹானா. அதான் என் கோபமும். இந்தப் பொண்ணு அவங்ககிட்ட போய்ச் சொல்லியும் இருக்கா. அவங்க வயசுல அவ்ளோ பெரியவங்க. ஆனா, இந்தப் பொண்ணுகிட்ட, இதெல்லாம் ஒரு விஷயமா? கண்டுக்காம போம்மான்னு சொல்லியிருக்காங்க. எப்படி இருக்காங்க பாரு”

“என்னது?” அதிர்ச்சியில் அவளின் விழிகள் விரிய, தலையசைத்தான் சத்யமூர்த்தி.

“மூணு முறை போய்ச் சொல்லியிருக்காங்க”

“அப்படியும் கண்டுக்காம இருந்தாங்களா?” கோபத்துடன் அவள் கேட்க,

“அட்ஜஸ்ட் பண்ணி போ சொல்லியிருக்காங்க. தப்பு செய்யறவனை விட, அதைப் பார்த்தும், பார்க்காதது போல அசட்டையா போறவனைப் பார்த்தாதான் ஆத்திரமா வருது. அந்தம்மா பொண்ணுக்கு வர்ற மாசம் கல்யாணம். ஆனா, ஈவு இரக்கம் பார்க்காம அவங்களை வேலையை விட்டுத் தூக்கிட்டேன். அவங்க மக கல்யாணத்துக்குக் கொடுக்க இருந்த பணத்தையும் கொடுக்கக் கூடாது சொல்லிட்டேன். நான் பண்ணது சரியா, தப்பா தெரியல”

“நியாயம், தர்மம் எல்லாம் நம்ம நிக்கிற இடத்தைப் பொறுத்துதான். விடுங்க. உங்க முடிவு சரிதான்” சஹானா சொல்ல, நகர்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தான் சத்யமூர்த்தி.

“நீ ஃபேக்டரி வா சஹானா. இதையெல்லாம் நீ பார்த்தா எனக்கு நிம்மதியாருக்கும்” அவன் சொல்ல, அவன் சொல்லாமல் விட்டதையும் சேர்த்தே புரிந்துக் கொண்டாள் அவள். முதலாளியின் மனைவி என்பதால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு இருக்கும். இளம்பெண் என்பதால் அவளை அணுகுவதும் எளிது. யாருக்கும் பயப்படாமல் நடவடிக்கை எடுப்பாள் என்று நம்பி அவளை நெருங்குவார்கள்.

“நான் ஃபேக்டரி வரேன் சத்யா”

“உன் பிளாக் வேலையை அங்கருந்து பாரு, பிளீஸ்” கண்களை மூடி சோர்வாக அவன் சொல்ல, “மதியத்தில் இருந்து சாப்பிடலையா நீங்க?” அவன் முகம் பார்த்து யோசனையுடன் கேட்டாள் சஹானா. அவளின் கேள்விக்கு அவன் பதில் கொடுக்காமல் அமர்ந்திருக்க, அவள் பட்டென எழுந்து போய்ச் சூடாகத் தோசை ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த குழம்பை சூடுப்படுத்தி எடுத்து வந்தாள்.

“சாப்பிடுங்க” என்று நீட்டினாள். அவன் அசையாமல் அமர்ந்திருக்க, “சத்யா” என்று குரல் உயர்த்தினாள்.

“நீயும் வா” என்றபடி அவன் வர, “நீங்க சாப்பிடுங்க. நான் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன்” என்று குளிக்கப் போனாள். அவள் குளித்து உடை மாற்றி வந்த பின்பு, அவளோடு இணைந்துதான் உண்ணத் தொடங்கினான் அவன்.

“பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லையில்ல. சொந்தக்காரன் வீடு, வேலைப் பார்க்கிற இடம்னு…”

“சிலருக்கு சொந்த வீட்ல கூடப் பாதுகாப்புக் கிடையாது சத்யா” சட்டென இடையிட்டு சொன்னாள் சஹானா. சத்யாவின் கண்களில் வலியின் சாயல். அன்று அதிகமாகப் பேசினான். ஆனால், பேச்சு அவர்களைப் பற்றி அல்ல. அவனது தொழிலாளர் நலனைப் பற்றியதாகதான் இருந்தது. சஹானா அவளுக்குத் தோன்றிய ஆலோசனைகளைச் சொல்ல அவைகளை மனதில் குறிப்பெடுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி. அப்படியே உறங்கியும் போனார்கள். சஹானாவின் கோபமும் சேர்ந்தே உறங்கிப் போனது.

அது போன்ற நிகழ்வுகள் அன்றோடு நிற்காமல் அடிக்கடி அவளுக்கு நடக்கத்தான் செய்தது. ஆனால், சத்யமூர்த்தியின் செயல்களுக்குப் பின்னால் சரியான காரணமும், விளக்கமும் இருக்க, அவள்தான் இறங்கிப் போக வேண்டியிருந்தது. அவளின் கோபத்தை, ஏமாற்றத்தை யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் மென்று விழுங்க வேண்டியிருந்தது.

வெயிலும், மழையும் போல, அவள் வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வர, எப்படி எதிர்வினை ஆற்றுவது என அவளுக்குத்தான் தெரியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top