சத்யமூர்த்தி உத்திரவாதம் கொடுத்த மறுநாளே ராதா, அவளின் மகனுடன் புகுந்த வீடு கிளம்பினாள். போகும் முன் மறக்காமல் மீண்டும் அவர்களை விருந்துக்கு அழைத்தாள் அவள்.
“வர்றோம் ராதா. போன் பண்றேன்” சத்யமூர்த்தி சொல்ல, சஹானாவிடம் பேசி விடை பெற்றாள் ராதா. அந்த வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கணவனுடன் தொழிற்சாலை சென்று வந்தாள் அவள். எதற்கும் உதவாது என்று நினைத்து தூக்கிப் போடும், தென்னை மட்டையில் இருந்து பிரிக்கப்படும் நாரில் இருந்து, எத்தனைப் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்று ஆச்சரியத்துடன் சுற்றி சுற்றி பார்த்தாள் அவள்.
அங்கே மனிதர்களும், இயந்திரங்களும் போட்டிப் போட்டு ஓய்வின்றி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தேங்காய் மட்டை, நாராகி, கயிருக்கு தனியாக, மெத்தைக்கு தனியாக, மரச் சாமான்கள் (Furniture) தயாரிப்புக்கு என்று தனியாக, பிரித்தெடுக்கப்பட்டு கிலோ கணக்கில் கட்டி வைக்கப்பட்டது. அப்படி பிரிக்கும் போது வரும் கழிவான கோகோ பித் உரம் தயாரிப்புக்கு மற்றும் விவசாயத்திற்கும், தோட்டம் அமைக்கவும் சிறிய சிறிய கட்டிகளாக பேக் (Pack) செய்யப்பட்டு, பெட்டிகளில் அடுக்கப்பட்டது. உள்ளூர், வெளியூர், வெளிநாடு பறக்க என தனித் தனியாக பகுதிகள் இருக்க, முதல் இரண்டிற்கும் செல்ல பொருட்கள் லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
“வாவ், சத்தியமா ஒரு தேங்காய் நாரில் இவ்வளவு விஷயம் இருக்கும்னு நான் நினைக்கலை சத்யா” என்றபடி கணவனைப் பின் தொடர்ந்தாள் சஹானா. அவளுக்கு ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டு, அனைவரிடமும் அவளை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தான் அவன். ஏற்கனவே வீட்டு விருந்தில் பார்த்திருந்ததால், அவளை பலருக்கும் தெரிந்திருந்தது. புன்னகைத்து, வணக்கம் வைத்தனர்.
சத்யமூர்த்தி எதுவும் பேசாமலேயே, அவனது கண் அசைவிலேயே வேலை மும்முரமாக பழுதின்றி நடப்பதை அதிசயமாய் பார்த்தாள்.
அவனை மனத்தில் மட்டுமல்ல, வாய் விட்டும் பாராட்டினாள் அவள். சிரித்தான். அவ்வளவுதான் அவனது எதிர்வினை. அந்த வார இறுதியில் மாமியாரின் வற்புறுத்தலின் பேரில், தவிர்க்க முடியாமல் சத்யமூர்த்தியின் தாய் மாமா வீட்டிற்கு விருந்திற்கு சென்றார்கள் அவர்கள்.
பட்டும், பூவுமாக நின்ற மனைவியை பார்த்து, “போகணுமா?” என்றான் சத்யமூர்த்தி.
“எண்ட குருவாயூரப்பா. கிளம்பிட்டு கேள்வியை பாரு” அவள் சலிக்க, “வா” என்று முன்னே நடந்தான் அவன். பட்டு வேட்டி சட்டையில் கவர்ச்சிக் காட்டியவனை கார் கண்ணாடியில் தலை சாய்த்து பார்த்து, “கண்டிப்பா போகணுமா சத்யா? ஒருவேளை போகலன்னா, உங்க மாமா கோவிச்சுப்பாங்களா?” கேட்டு, அவள் கண் சிமிட்ட, சட்டென காரில் இருந்து இறங்கப் போனான் சத்யா.
“அய்யோடா உட்காருங்க. போகலாம்” சிரிப்புடன் அவன் கைப் பிடித்து தடுத்தாள். அவளின் வழக்கமாக, அவள் பேசிக் கொண்டே வர, அவன், “ம்ம்” கொட்டிக் கொண்டிருந்தான். பின் காலைப் பொழுதில் பொள்ளாச்சியின் மற்றொரு மூலையில் இருந்த சத்யாவின் மாமா வீட்டிற்கு அவர்கள் போய் சேரும் போதே பதினொரு மணி என்றது கடிகாரம். புதுமண தம்பதிக்கு வரவேற்பு தடபுடல் பட்டது. அவர்கள் கொடுத்த பழச் சாறுடன், அந்த வீட்டுப் பெண்களுடன் சமையல் அறைக்குள் ஐக்கியமானாள் அவள். ஆனால், அங்கு போனதே தவறென்று ஐந்தே நிமிடங்களில் உணர்ந்து விட்டாள்.
முதலில் அவளின் பட்டையும், நகையையும் ஆராயத் தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொன்றாக விசாரிக்கத் தொடங்க, சஹானா சங்கடமாக உணரத் தொடங்கினாள். இருமுறை திரும்பி கூடத்தில் இருந்த கணவனைப் பார்க்க, அவனோ மாமாவுடன் மும்முரமாக பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டிருந்தான். அவளிடம் திருமணமான நாளில் இருந்து கேட்கப்படும் அதே கேள்விகளுக்கு பதில் தெரிந்தும், அவர்களும் தங்கள் பங்கிற்கு மீண்டுமொரு முறை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள தவறவில்லை.
“சொந்த ஊரே கேரளாவா?”
“அம்மா, அப்பா, என்ன பண்றாங்க?”
“நீ ஒரே பொண்ணா?”
“எவ்ளோ நகைப் போட்டாங்க?”
“நீங்க.. எங்க ஆளுங்களா?”
“லவ் மேரேஜா? எங்க சத்யமூர்த்தியை உனக்கு எப்படித் தெரியும்?” அனைத்து கேள்விகளையும் ஒருவாறு சமாளித்து, கடைசி கேள்விக்கு மட்டும், “அவர் எனக்கு வீட்ல பார்த்த மாப்பிள்ளை” என்றாள் சஹானா.
“என்னது?” என்று அதிர்ந்த சத்யாவின் அத்தை, “உங்க கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ல பார்த்த பொண்ணை எல்லாம் பார்க்காமயே வேணாம் சொன்னான். தெரியுமா? என் பொண்ணை எல்லாம் கட்டவே முடியாதுன்னு எங்ககிட்டயே சொன்னான். காரணம் கேட்டா, சொந்தத்தில் கட்டக் கூடாது, அது, இதுனு சாக்கு போக்கு சொன்னான். கடைசியில்தான் தெரிஞ்சது. உனக்காகத்தான்…” அவர் பேசுவதைக் கேட்டு அவஸ்தையும், எரிச்சலுமாக சஹானா திரும்பி பார்க்க, அருகில் இருந்த அவரின் மகள், கூடத்தில் அமர்ந்திருந்த சத்யமூர்த்தியை கண்ணால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.
“எண்ட அம்மே.” என்று மனத்தில் அலறி, “அவர் கூப்பிடுறார், பெரியம்மா. இதோ வர்றேன்” என்று கணவனிடம் ஓடினாள் சஹானா. சத்தியமூர்த்தி அவளைப் பார்த்து புருவங்களை நெரித்தான் கேள்வியாக. அவனுக்குப் பக்கத்தில் நகர்ந்து அமர்ந்து, “ஒன்னுமில்ல. சாப்பிட்டு வீட்டுக்கு போவோமா?” என்று கிசுகிசுத்தாள் சஹானா.
“ம்ம்” என்றான் சுவாரசியமாக. அந்நேரம் அங்கு வந்த சத்யாவின் மாமன் மகன், ஆர்ப்பாட்டமாக அவர்களை வரவேற்றான். அவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள், சஹானாவை ஆர்வக் கோளாறுடன் ஆராய்ந்தது. சத்யா அதை கவனிக்காமல் மாமனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் விருந்துக்கு வந்ததை அறியாமல் அவனது அலைபேசி அடிக்க, “ஃபேக்டரியில இருந்து கால்” என்று பொதுவாக சொல்லியபடி, எழுந்து அழைப்பை ஏற்று, தள்ளி சென்று பேசி விட்டு வந்தான். அவன் கண்களில் பதற்றம், கைகளில் இறுக்கம், உடலில் கோபம் தெரிய, “என்னாச்சு?” என்றாள் சஹானா.
“எமர்ஜென்ஸி ஃபேக்டரி போகணும். கிளம்பு.” என்று மனைவியிடம் சொன்னவன், “ஒரு அவசர வேலை மாமா. நான் உடனே போகணும்” என்றான் அவனது மாமாவிடம். அந்த குரல் கேட்டு வெளியில் வந்தார் அவனின் அத்தை. மாமா தொழிற்சாலையில் பிரச்சனை என்னவென்று விசாரிக்க, அத்தை அவர்களைச் சாப்பிட்டு போக வற்புறுத்தினார். சத்யமூர்த்திக்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான்.
“அப்போ நீ கிளம்பு பா. உன் பொண்டாட்டி இங்க இருக்கட்டும். வேலையை முடிச்சுட்டு வந்து, இங்க சாப்பிட்டுட்டு, இவளையும் கூட்டிட்டு போவ” அத்தை சொல்ல, திரும்பி மனைவியை பார்த்தான்.
அவள் கண்களில் மறுப்பு தெரிய, “இல்ல..” என்று அவன் தொடங்க, “என்னப்பா சத்யா. விருந்துக்கு வந்துட்டு சாப்பிடாம போனா நல்லாவா இருக்கும். அதான், அத்தை சொல்றா இல்ல. சஹானா இங்க இருக்கட்டும். எங்களோட சாப்பிட்டு, பேசிட்டு இருக்கட்டும். நீ வேலையை முடிச்சுட்டு வாயேன்” அவனுக்கு இருந்த அவசரத்தில், வாதிட முடியவில்லை அவனால். மனைவியை பார்த்தான் அவன். தர்ம சங்கடத்துடன் தலையசைத்தாள் அவள்.
சஹானா அவர்களோடு தனியாக விருந்து உண்டாள். அவர்கள் பேசுவதை வேறு வழியின்றி உதடுகளை இழுத்து பிடித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல், கணவனை அழைத்தாள் அவள். அவனோ அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தாள். பதிலில்லை.
அவனது உதவியாளர் மாதவனுக்கு அழைக்க, “சார், முக்கியமான வேலையா இருக்கார் மேம். நீங்க கூப்பிட்டதை சொல்றேன்” சத்யாவை போலவே தந்தி மொழியில் பேசி வைத்தான் அவன். கணவனுக்காக காத்திருந்து, மதியம் மறைந்து மாலையும் வந்து விட, அவர்களிடம் விடை பெற்று தனியாகவே கிளம்பி விட்டாள் சஹானா.
சத்யாவின் மாமன் மகன் இளித்துக் கொண்டு, “நான் ட்ராப் பண்றேன்” என்று முன் வர, மொத்த குடும்பமும் அதை பிடித்துக் கொண்டது. அவனது உதவியை ஒரேடியாக திடமாக மறுத்து விட்டு, அவன் அழைத்து வந்த ஆட்டோவில் ஏறியவளின் மனது கொந்தளித்துக் கொண்டிருந்தது. கணவனின் கழுத்தை நெரிக்கும் கோபத்துடன் வீடு வந்தாள் அவள்.
“உன் புருஷனை எங்க? நீ மட்டும் தனியா வர்ற?” என்று அவளின் கோபத் தீயில் கேள்வி கேட்டு எண்ணெய் ஊற்றிய மாமியாரிடம், “அவசர வேலையா ஃபேக்டரி போய் இருக்கார்” என்று விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். கோபம், அழுகை, சுய பச்சாதாபம் என கலவையான உணர்வுகள் அவளை அழுத்த, அவளை சுற்றியிருந்த பட்டை கூட அகற்றாமல் கண் மூடி படுக்கையில் சரிந்தாள் சஹானா.
இரவு எட்டு மணி கடந்து வீடு திரும்பிய சத்யமூர்த்தி, உறங்கும் மனைவியை பார்த்துக் கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தான். வெறுமே கண் மூடி படுத்திருந்த சஹானா, “வெளியே வரட்டும். இன்னைக்கு இருக்கு. எப்படி பேசாம இருக்கார், பார்க்கறேன்” என்று சபதமெடுத்துக் கொண்டாள். குளித்து, இடையில் சுற்றிய துவாலையுடன் வெளியில் வந்த சத்யமூர்த்தி, “நீ இன்னும் தூங்கலையா?” என்று வெகு இயல்பாக மனைவியிடம் கேட்டான்.