தன் தங்கையின் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்தி, அவனுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த மனைவியை இமைக்காமல் கண்ணாடியில் பார்த்தபடி, உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.
“இப்தி இல்லத்த” தலையில் அடித்துக் கொண்டு, சஹானா தவறாக வைத்திருந்த ப்ளாக்கை (Blocks) சரியாக மாற்றி வைத்தான் தருண். குட்டியாக வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள் இருவரும். தருண் குட்டி கைகளைக் கொண்டு தலையில் அடித்துக் கொள்வதைப் பார்த்து, கிளுக்கி சிரித்தாள் சஹானா. சட்டென பார்வையை திருப்பிக் கொண்ட சத்யமூர்த்தி, தொண்டையை சத்தமாக செருமினான்.
“என்ன சத்யா?” குழந்தையை கைகளில் அள்ளிக் கொண்டு எழுந்தபடி அவள் கணவனிடம் கேட்க, “மாமா..” என்றான் தருண். சத்யமூர்த்தி புருவங்கள் நெரிய மனைவியை முறைத்தான்.
“ஆமா, செல்லக் குட்டி. உங்களுக்கு மாமாதான். ஆனா, எனக்கு..” என சொல்ல வந்ததை முடிக்காமல் குழந்தையின் கன்னத்தை மூக்கால் உரசி முத்தமிட்டாள். தருணின் கள்ளமில்லா சத்தமான சிரிப்பு இருவரையும் நிறைக்க, புன்னகைத்தனர்.
“ஃபேக்டரி வர்றியா சஹானா?” திடீரென்று சத்யமூர்த்தி கேட்க, திகைத்தாள். சஹானா அவர்களின் திருமணத்திற்கு முன் ஒரே ஒரு முறை அவனோடு தொழிற்சாலை சென்றது. அதன் பின் கணவனோடு அங்கு செல்லவே அவளுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவன் பலமுறை அழைத்தும் மறுக்க வேண்டிய சூழல். ஒன்று வீட்டில் யாராவது உறவினர் இருந்தார்கள். இல்லையேல் அவளுக்கு ஏதாவது வேலை இருந்தது. சில நேரம் மாமியார் முறைத்து வைத்தார்.
இன்று நாத்தானர் இங்கிருக்க, எப்படி அவளை தனியாக எல்லா வேலையையும் செய் என்று விட்டுவிட்டுப் போவது என்ற யோசனையுடன் அவள் சத்யாவை பார்க்க, “ஓகே. நான் கிளம்புறேன்” என்றான் அவன். அவளின் மௌனத்தை புரிந்துக் கொண்டவனை சற்றே ஆச்சரியமாக பார்த்தாள்.
“தருண், அம்மா கூப்பிடுறாங்க பாருங்க” அறைக் கதவை திறந்து குழந்தையை வெளியில் விட்டாள் சஹானா.
“அம்மா” என்று அழைத்துக் கொண்டு ஓடினான் தருண்.
சஹானா திரும்பி வந்து கணவனிடம் நின்றாள்.
“ராதா இருக்கா, புரிஞ்சுது” என்றான் சத்யமூர்த்தி.
“நான் எதுவும் சொல்லவேயில்லையே.”
“சொல்லணும்னு அவசியம் இல்ல. புரியும்”
“எப்படி புரியும்?” கண்களை விரித்து ஆச்சரியம் போல அவள் கேட்க, கண்ணை சுருக்கினான் சத்யா.
“ஹலோ, கேள்வி கேட்டேன்?”
“அப்படியா?”
“சரி, இப்போ நான் என்ன பண்ணப் போறேன், என்ன யோசிக்கறேன் சொல்லுங்க. பார்ப்போம்” அவனை மெல்ல நெருங்கியபடி அவள் கேட்க, சட்டென அவளின் இடையை வளைத்தது அவன் கரங்கள். மறுகணம், “எப்படி?” என்று அவள் இமைகள் படபடத்து கேட்க, இதழ்கள் அவனோடு பேசிக் கொண்டிருந்தது.
“வர்றேன். முடிஞ்சா இந்த வாரம் ஃபேக்டரி வரப் பாரு” சொல்லியபடி அறையை விட்டு வெளியேறியிருந்தான் சத்யமூர்த்தி. அவன் தந்த முத்தத்தின் ஈரம் கூட காயாமல் இருக்க, உதட்டில் நிரந்தரமாய் உறைந்து விட்டப் புன்னகையுடன் கணினி முன் சென்று அமர்ந்தாள் சஹானா.
அவர்களது அறைக் கதவு லேசாக மூடப்பட்டிருந்தும் கூட, மாமியார் வெளியில் பேசுவது காதில் அறைய, எழுந்து வெளியில் போய் என்னவென்று பார்க்க உந்திய மனதை, உதாசீனப்படுத்தியபடி தன் வேலையை தொடர்ந்தாள்.
“பேசாம இருக்க மாட்டியா மா? எனக்கு ஒன்னும் வேணாம். நான் எங்க வீட்டுக்கு போறேன்.” இப்போது ராதாவின் குரல் உச்சஸ்தானியில் ஒலிக்க, அவளுக்கு கோர்த்துக் கொண்டிருந்த வார்த்தைகள் மறந்துப் போனது. மீண்டும் ஒருமுறை கட்டுரையை வாசித்து, வார்த்தைகளை சீராக கோர்க்க முயன்றாள்.
“உன் அம்மா, நான் எதுக்கு இருக்கேன்?. உன்னை அப்படி எல்லாம் அம்போனு விட்டுட மாட்டேன். நான் வாங்கித் தரேன் ராதா. நீ இங்கேயே இரு. நாளைக்கு உங்க வீட்டுக்கு போகலாம்” சுப்புலட்சுமியின் பேச்சில் ஏதோ விஷயம் இருப்பதாகப் பட, கணினியில் இருந்து கண்களை விலக்கினாள்.
“ஏம்மா இப்படி பண்ற? அண்ணா ஒன்னுமே பேசல. எனக்கு ஒரு மாதிரி இருக்கும்மா”
“உங்க அண்ணன் என்னைக்கு வாயைத் திறந்து பேசினான்? இன்னைக்கு பேச?” என்று மகளை சமாதானப்படுத்திய மாமியாரின் குரலைக் கேட்டபடி, மெல்ல எழுந்தாள்.
“கல்யாணம் ஆகிடுச்சு இல்ல? இப்போ பொண்டாட்டியை கேட்காம எதுவும் குடுக்க மாட்டான். நீ கவலைப்படாத. அம்மா, அப்பா இருக்கும் போது நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. அவன்கிட்ட பேசி வாங்கிக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு” சுப்புலட்சுமியின் குரலில் அப்படியொரு உறுதி.
எதற்காக இப்படி பொறுப்பு சவால் விட்டு கொண்டிருக்கிறார் மாமியார் என்பதை விட, நாத்தனார் இத்தனை நாளாக எதற்கு இங்கேயே இருக்கிறாள் என்ற கேள்வியே அவளின் ஆர்வத்தை தூண்டியது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது. கூடுதலாக கணவனிடம் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிய, என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். மாங்காய் புளித்தால் எப்படியும் ஊறுகாய்க்கு வந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் தோள் குலுக்கிக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.
காலை பதினோரு மணிப் போல கணினியை மூடி விட்டு, நாத்தனாருடன் இணைந்து, அவளுடன் பேசிக் கொண்டே மதிய சமையலை முடித்து, கணவனுக்கும், மாமனாருக்கும் அவரவர் வேலை இடத்துக்கு உணவை கட்டிக் கொடுத்து விட்டாள். அவர்களின் மதிய உணவு நேரத்தில் மாமியாரின் பார்வை தட்டில் இல்லாமல், அவளின் மேலேயே இருந்ததை கண்டவளுக்கு சிரிப்பாக வந்தது. அவளுக்கு உணவு ருசிக்கவில்லை என்றாலும், ரசித்து சாப்பிடுவது போல காட்டிக் கொண்டாள்.
“கொள்ளு பருப்பு கடையல் நல்லா இல்லையா அண்ணி?” ராதா கேட்க, திருதிருத்தாள் சஹானா. அவளுக்கு சோறுடன் பருப்பும், பப்படமும் இருந்தால் திவ்யமாக இருக்கும்தான். ஆனால், கொள்ளு பருப்பு எல்லாம் சாப்பிட்டே அறியாதவள், என்னவென்று பதில் கொடுப்பாள். கொள்ளு கடையல் காரசாரமாக கத்திரிக்காய், முருங்கைக்காய் பொரியலுடன் சுவையாகத்தான் இருந்தது. ஆனால், அடிக்கடி சாப்பிடுவது அவளுக்குத்தான் இன்னமும் பழகவில்லை. அந்த வீட்டில் மாமியார்தான் கெடுபிடி. மற்றபடி மாமனார், நாத்தனார் எல்லாம் அவளிடம் இனிமையாக, இணக்கமாகத்தான் இருந்தார்கள்.
“ரெண்டு நாளா பார்க்கறேன். நீங்க ஒழுங்காவே, சாப்பிடல அண்ணி. அதான் கேட்டேன்” ராதா மீண்டும் அழுத்தி சொல்ல,
“குழம்பு நல்லா இருக்கே அண்ணி. சூப்பரா இருக்கு” என்றபடி மேலும் ஒரு கரண்டி குழம்பை தட்டில் ஊற்றி தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டாள் சஹானா.
சஹானாவுக்கு பயணங்களினால் பல ஊர்கள் மட்டுமல்ல, அங்கு கிடைக்கும் பலவித உணவுகளும் பழக்கம்தான். அப்படி வெளியூர் பயணிக்கும் சமயங்களில் அவளுக்கு பிடித்தது கிடைக்காது. அப்போதெல்லாம் கிடைத்ததை சாப்பிட்டு நகர்ந்திருக்கிறாள். அவள் காடுகள், மலைகள் என்று பயணிக்கும் போதெல்லாம், சமைத்து டப்பாக்களில் அடைத்துக் கொண்டு போகும் உணவே விஷமாகி விட கூடாது என்று பழங்களை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறாள்.
கேரளாவின் மீன் உணவும், தமிழகத்தின் சைவ உணவும், ஆந்திராவின் காரமும், வடநாட்டின் வகை வகையான சப்ஜிகளும் இப்போது நினைக்கையில் கூட அவளுக்கு நாவில் நீர் ஊறியது. ஆனால், அத்தனையும் தாண்டி அவள் ரசித்து, ருசித்து உண்பது அம்மாவின் கையால் வெறுமே காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு தாளித்து, சாதத்தில் பிசைந்து ஊட்டப்படும் பருப்பும், தேங்காய் சம்மந்தியும் (துவையல்), பப்படமும்தான்.
மாமியார் வீட்டில் அவர்கள் என்னதான் வகை வகையாக சமைத்து வைத்தாலும், ருசிக்கவில்லை அவளுக்கு. மனமும், நாவின் சுவை மொட்டுகளும் தாய் வீட்டு உணவுக்காக ஏங்கியது. அந்த வீட்டில் சத்யமூர்த்தியை தவிர எதுவுமே சுவை கூட்டவில்லை சஹானாவிற்கு. விரைவில் அனைத்தும் பழகிடும் என்று மனதில் தேறுதல் சொல்லிக் கொண்டாள். அவள் முதலில் உண்டு முடித்து, எழுந்து கொள்ள மாமியாரும் நாத்தனாரும் உணவோடு ராதாவின் புகுந்த வீட்டு உறவுகளையும் சேர்த்தே மென்றுக் கொண்டிருந்தார்கள்.
அதுவரை உறங்கிக் கொண்டிருந்த தருண் எழுந்து வெளியில் வர, அவனுக்கு கதைச் சொல்லியபடி அவனை கவனித்து, உணவை ஊட்டி விட்டு, சிறிது நேரம் அவனோடு அமர்ந்து டாமும், ஜெரியும் அடித்துக் கொள்வதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். ராதா வர, அவளிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் அறைக்குள் வந்து தான் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பயணக் கட்டுரையை தொடர்ந்தாள் சஹானா.
இம்முறை கர்நாடகாவை பற்றி எழுதிக் கொண்டிருந்தாள். பெங்களூரு, மங்களூர், உடுப்பி என்று தனித்தனி பிரிவாக நீண்டுக் கொண்டிருந்தது கட்டுரை.
ஒவ்வொரு ஊரின் சுற்றுலா தளங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள், அங்கு கிடைக்கும் உணவுகள், காலநிலை, தங்குமிடம், போக்குவரத்து வசதி என ஒன்றையும் விடாமல் கட்டுரையில் சேர்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கட்டுரைக்கு மேலும் வலுச் சேர்த்தது. அந்தந்த இடங்களின் அழகிய புகைப்படங்கள்.
அவளுக்கு எப்போதாவதுதான் இப்படியான மனநிலை அமையும். மிக நேர்த்தியாக ஐந்து கட்டுரைகளை எழுதி முடித்து, பிழையும் திருத்தி, அதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து உடனே வெளியிட்டு (Publish) மற்றவைகளை தேதியும், நேரமும் குறிப்பிட்டு, ஸ்கெட்யூல் (schedule) செய்து ஒத்தி வைத்தாள்.
மனதில் எதையோ சாதித்து விட்ட உணர்வு வர, கண்களை தேய்த்து விட்டுப் புன்னகைத்துக் கொண்டாள். அதே மனநிலையுடன் ஆறாம் கட்டுரையாக மங்களூரை பற்றி எழுத ஆரம்பித்தாள்.மங்களூரில் இருந்து கோவா செல்லும் நெடுஞ்சாலை. அதன் ஒரு பக்கம் மரவந்தே கடற்கரை. சாலையின் மறுபக்கம் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது சௌபர்ணிகா ஆறு.
சாலையின் இரு பக்கமும் இருந்தது என்னமோ தண்ணீர்தான். ஆனால், ஒருபுறம் அலைகள் ஓயா கடல். மறுபுறம் அமைதியாய் சுழித்து ஓடும் ஆறு. அதைப் பற்றி எழுதுகையில் கண்ணில் கவிதையாய் அந்தக் காட்சி விரிய, அந்திச் சாயும் சூரியனின் மஞ்சளில் குளித்தபடி, கண் முன்னிருந்த இயற்கையை ரசித்தது அவளுக்கு நினைவில் வந்து மனம் குளிர புன்னகைக்க வைத்தது.
பயணக் கட்டுரையோடு அந்த சாலையின் படங்களையும், ட்ரோன் (Drone) உதவியுடன் எடுக்கப்பட்ட கழுகு பார்வை காணொளியையும் (Video) அதில் இணைத்தாள் சஹானா. அவள் காணொளியை ஒருமுறை ஓட விட்டு சரி பார்க்க, “ம்ம்ம்” என்று ஏற்ற இறக்கத்துடன் ஒலித்த கணவனின் குரல் அவளை அதிர்ந்து திரும்பிப் பார்க்க செய்தது.
சத்யாவின் கண்களை நேராக பார்த்து, ஆச்சரியத்துடன், “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க” என்று வேகமாக எழுந்தாள்.
அவள் தோள் பிடித்து இருக்கையில் அமர வைத்து, அவளின் பின்னிருந்தே கட்டுரையை முழுமையாக வாசித்து, அவளை சோதித்து, புகைப்படத்தை புருவம் உயர்த்தி சிலாகித்தான். அவன் விழிகளை தொடர்ந்து, அதில் தெரிந்த உணர்வுகளைப் படித்து, விழி விரித்த மனைவியை ரசித்தான்.
“தள்ளிப் போங்க.” இருக்கையை தள்ளிக் கொண்டு எழுந்து, கணவனின் தோளில் கை வைத்து தள்ளினாள். சத்தமில்லாமல் சிரித்தான் சத்யா.
“உங்களோட…” என்று அவள் சலிக்க, “சஹானா..” என்றான் சத்யமூர்த்தி கரகரத்த குரலில்.
“என்னை ஒன்னுமே பண்ணல. ஆனா, என்னென்னவோ பண்ற ஃபீல். அதுக்கு நீங்க ஏதாவது பண்ணிட்டா கூட தேவலாம் போல இருக்கு.” புலம்பியவள், “கீப் டிஸ்டன்ஸ்” என்றாள் கணவனிடம் கை காட்டி.
அப்பொழுதுதான் அவளை அருகில் இழுத்து, இடையோடு கட்டிக் கொண்டு, இடைவெளி இல்லாமல் செய்தான் சத்யமூர்த்தி.
“என்ன சொன்னா, என்னப் பண்றீங்க?” என்று முறைத்தவள், அவனோடு இழைந்து, “என்ன இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்க,
“இந்த பக்கம் ஒரு வேலை.” என்றான் சத்யா.
“ஓ, அப்படியா? ஒரு வேலையா இந்த பக்கம் வரும் போது என் ஞாபகம் வந்தது. அதுனால போற வழியில என்னை பார்க்க வீட்டுக்கு வந்திருக்கீங்க” அவன் சொல்லாமல் விட்டதை அவள் சொல்லி முடிக்க, சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கினான் சத்யா. ஆனால், மின்னிய அவன் கண்களும், உப்பிய அவன் கன்னங்களும் காட்டிக் கொடுத்து விட, “தேங்காயில் மட்டுமா, வாயில கூட நல்லா கயிறு திரிப்பார் ஒருத்தர்” நக்கலாக சொன்னாள் சஹானா. அதைக் கேட்டதும் சத்தமாக சிரிக்கத் தொடங்கியிருந்தான் சத்யா.
“சாயா குடிங்க. வாங்க”
“ஒரு நிமிஷம். வர்றேன்” என்று அவர்களின் அறைக்குள் இருந்த, அவனது சிறிய அலுவல் அறைக்குள் புகுந்தான் சத்யா. அவனுக்கு தேநீர் தயாரிக்க வெளியில் போனாள் சஹானா. அன்று மாமனாரும், மகனோடு சேர்ந்து விரைவாக வீடு வந்திருக்க, வீட்டு கூடத்தில் தேநீர் மாநாடு நடந்துக் கொண்டிருந்தது. மாநாட்டில் ராதா பிறந்த வீடு வந்து காத்திருப்பதற்கான காரணமும் வெளிவந்தது.
சத்யமூர்த்தியின் பெயரில் மாமனார் பாலகுமார் சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியின் மையத்தில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, தனக்காக கேட்டு வந்திருந்தாள் ராதா. அவளுக்கு புதிதாக வீடு கட்ட அந்த இடம் தேவைப்படுகிறது என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, சஹானா அமைதியாய் அனைவருக்கும் தேநீர் கோப்பையை நீட்டினாள்.
தேநீர் கோப்பையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறுகையில் மனைவியின் கரம் பிடித்து தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டான் சத்யமூர்த்தி. ஒரு நொடி வீட்டினர் அவர்களைப் பார்த்து விட்டு, பேச்சை தொடர்ந்தனர்.
சுப்புலட்சுமி மகளுக்காக பெரியதொரு உரையாற்றி முடிக்க, மாமனார் எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். சத்யமூர்த்தி தங்கையை நேராக பார்த்து, “எப்போ வீட்டு வேலை தொடங்கப் போறீங்க?” என்று கூர்மையாக கேட்டான். ஒரு நொடி திடுக்கிட்டு விழித்தாள் ராதா.
சஹானாவிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. புகுந்த வீட்டு தொல்லையா, இல்லை அவளின் கணவன் வாங்கி வரச் சொன்னானா, அவளால் அனுமானிக்க முடியவில்லை.
பிறந்த வீட்டில் அவளுக்கு முழு உரிமை இருந்தாலும், தானாக விரும்பிக் கேட்காமல், யாரின் கட்டாயத்தாலோ இங்கு வந்து அமர்ந்திருந்து, சொந்த வீட்டினரிடம் விளக்கம் கொடுத்து, பதில் இல்லாமல் விழித்து, விரும்பியதை வாங்கிச் செல்லும் அவளின் நிலையை சஹானா அறவே வெறுத்தாள்.
“வீட்டு வேலை அது சீக்கிரம் தொடங்கணும் ண்ணா. நல்ல நாள் பார்த்து செய்யணும். நீங்க ஓகே சொன்னா, தொடங்கிடுவோம்” பதற்றத்துடன் ராதா பதில் அளிக்க, “உனக்கு ஓகேதானே சஹானா?” திரும்பி மனைவியை கேட்டான் சத்யமூர்த்தி.
“என்ன கேள்வி இது?” என்று தொடங்கியவள், “இந்த வீட்டு சொத்துல அவங்களுக்கும் உரிமை இருக்குல்ல. கொடுங்க” என்று அமைதியாய் சொன்னாள். அவள் சத்தத்தை குறைத்தாலும், அங்கிருந்த அனைவருக்கும் கேட்டிருந்தது. அவளின் பதிலால் மலர்ந்த மாமியாரின் சிரிப்பை பார்த்து அதிர்ந்து திரும்பி கணவனைப் பார்த்தாள் அவள்.
அவனோ தங்கையிடம், “சரி. வீட்டு வேலையை தொடங்குங்க.” என்றவன், “இடத்தை உன் பேர்லதான் பதியறோம்” என்று அழுத்தமாக, முடிவாக சொல்லி விட்டு எழுந்தான்.
“நாளைக்கு சொத்து பிரிக்கும் போது இதெல்லாம் உனக்கு கொடுத்த கணக்கில் வரும் பாப்பா. சரியா? அப்போ வந்து அண்ணனுக்கு எப்படி அதிகம் கொடுக்கறீங்கன்னு நிக்க கூடாது. என்ன?” என்று மகளைப் பார்த்து சொன்னவர், “ஏய், உனக்கும் தான்டி. நாளைக்கு ஏதாவது ஏடாகூடமாக சொன்ன. அவ்ளோதான்” என்ற மாமனாரின் பேச்சைக் கேட்டபடியே கணவனைப் பின் தொடர்ந்து அறைக்குள் சென்றாள் சஹானா.
“நீங்க இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம் இல்ல. அவங்க எவ்ளோ நாளா வெயிட் பண்றாங்க. அண்ணி பாவம்”
“அப்பா சம்மதிக்கல. அந்த இடத்தை பொண்ணுக்கு கொடுக்க அவருக்கு விருப்பம் இல்ல” என்றான் சத்யா.
“ஓ? அப்புறம், இப்போ மட்டும் எப்படி சம்மதிச்சார்?” என்று ஆச்சரியத்துடன் தொடங்கி, “உங்க வேலையா?” என்று அவள் கேட்க, தோள் குலுக்கலுடன் படுக்கையில் சரிந்தான் சத்யமூர்த்தி. மனைவியை தன்னோடு சேர்த்து இழுத்து, மாலையை இரவாக்கினான்.
“தங்கச்சி மேல எப்பவும் பாசம் அதிகமா இருக்குதான்” இப்போதும் அதை உணர்ந்த சஹானாவிற்கு, ஏனோ கணவனின் மேல் இருந்த கோபம் குறையவேயில்லை. மனதை மீண்டும் கடந்த காலத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள் அவள்.