காரில் ஏறி அமர்ந்ததும், அலைபேசியை எடுத்து அப்பாவிற்கு அழைத்தான் சத்யமூர்த்தி.
“என்னப்பா இதெல்லாம்? அம்மா என்ன பண்றாங்க?” எடுத்ததும் எரிந்து விழுந்தான். அந்தப் பக்கம் மாமனார் என்ன பேசுகிறார் என்பது கேட்காததால், கண்ணைச் சுருக்கி கணவனை ஆராயும் பார்வை பார்த்தாள் சஹானா.
“எத்தனை முறைப்பா சொல்றது? அம்மாகிட்ட சொல்லி வைங்க. இல்லனா, நான் சொல்ற மாதிரி இருக்கும். அப்புறம் என்கிட்ட சண்டைக்கு வராதீங்க” படபடத்தான்.
“என்ன சொன்னீங்க? சொன்ன மாதிரி தெரியலையே?”
“ப்பா, கல்யாணத்துக்கு முன்னாடியே நான் தெளிவா சொல்லிட்டேன்”
“பொண்ணு யாரு, எந்த ஊருனு எல்லாம் சொல்லிதான் நீங்க சம்மதிச்சீங்க. இப்ப அதையே குறையா சொல்லிட்டு இருந்தா?”
“அம்மாகிட்ட சொல்லி வைங்க. அவ்ளோதான்”
“இல்லனா, நான் சொல்லுவேன் ப்பா”
“ம்ம். கிளம்பிட்டோம். ஃபேக்டரியை பார்த்துக்கோங்க. பிரச்சனைன்னா கால் பண்ணுங்க” என்று விட்டு அழைப்பை துண்டித்தான் சத்யமூர்த்தி.
அவன் பேசியதை மட்டுமே வைத்து விஷயத்தைக் கிரகிக்க முயன்றாள் சஹானா. கணவன் தனக்காகத்தான் பேசினான், பேசுகிறான் என்பது புரிய, மனதில் சிலிர்த்துக் குதித்தது அருவி ஒன்று.
“என் பொண்டாட்டியை பேசினா, உன் பொண்டாட்டியை நான் பேசுவேன்” எனபது போல இருந்த அவன் மிரட்டலில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அதைத் தடுக்க முற்படாமல், கிளுக்கி சிரித்தாள் சஹானா. காரை நகர்த்திய சத்யமூர்த்தித் திரும்பி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
ஏனோ அவனுக்கு நன்றி சொல்லத் தோன்றவில்லை அவளுக்கு. தனக்காகப் பேச வேண்டியது அவனது கடமை என நினைத்தவள், அப்படியே இருக்கையில் சாய்ந்தாள்.
“சீட் பெல்ட்”
“போட்டாச்சு” என்று உதடு சுளித்துச் சொல்லி விட்டுக் கண்ணை மூடினாள். சத்யமூர்த்தி மிக நிதானமாகக் காரை ஓட்டினான். பின்மாலையில் பொள்ளாச்சியில் இருந்து பயணத்தைத் தொடங்கியவர்கள், நடுவில் நிறுத்தி இரவு உணவை முடித்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அவன் அமைதியாகக் காரை செலுத்த அவனோடு பேசிக் கொண்டே வந்தாள். அனைத்திற்கும் ஒற்றை வார்த்தையில், வரியில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.
“பிளாக் எப்படிப் போகுது?” அவன் திடீரென்று கேட்க, “ஓ. நல்லா போகுதே. இப்பத்தான் ஒவ்வொரு ஊரா கவர் பண்ணிட்டு வர்றேன்” என்றாள் சஹானா.
“எப்போ ஃபேக்டரி பார்க்க வரப் போற?”
“நீங்க கூட்டிட்டுப் போகும் போது..” அவனைப் போலவே பதில் கொடுத்தாள் சஹானா. சாலையில் இருந்து ஒரு நொடி பார்வையை விலக்கி மனைவியை முறைத்தான் சத்யமூர்த்தி.
“ஓகே. நீங்க நிறைய டைம் கூப்பிட்டீங்கதான். நமக்கு இப்பத்தான் கல்யாணமாகி இருக்கு. உடனே, உங்க பின்னாடியே ஃபேக்டரி வந்தா..” அவள் சொல்ல, இப்போது முறைப்புடன் தோளை குலுக்கினான் அவன்.
“ஏற்கனவே வீட்டுக்கு வர்றவங்களுக்கு நான் மட்டும் தனியாதான் தரிசனம் தர்றேன். இப்போ நானும் இல்லைன்னா.. அவங்க நமக்கான ஆசீர்வாதத்தை யார்க்கிட்ட கொடுத்துட்டு போவாங்க?” அவள் கேட்க, சிரித்தபடி காரை செலுத்தினான் அவன். அந்தச் சிரிப்பை பார்த்து இரவின் நட்சத்திரங்களுக்கு இணையாகச் சிமிட்டியது அவள் விழிகள்.
கணவனோடு இரவு பயணம், அவன் அதிகம் பேசாவிட்டால் கூட அவனது அண்மையும், காரை நிறைத்த அவன் வாசமும், இசையும், இரவின் ராகமான சஹானாவை இன்பமுற செய்தது.
சஹானாவின் வீட்டை நெருங்கும் போதே வீட்டில் வெளிச்சம் இருந்தது.
முரளிதரன் அவர்களின் கார் சத்தத்தில் விழித்து, அந்த நள்ளிரவிலும் புன்னகையுடன் அவர்களைக் காத்திருக்க வைக்காமல் வந்து கதவை திறந்தார்.
“சாரி மாமா.” என்றான் சத்யமூர்த்தி.
“உங்க தூக்கத்தைக் கெடுத்துட்டோம் இல்லப்பா. அதுக்காகச் சாரி சொல்றாங்க” அவன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தாள். சத்யமூர்த்தியின் முறைப்பையும், சிரிப்பையும் கண்டு கொள்ளாமல் உள்ளே நடந்தாள் சஹானா.
“பரவாயில்ல மாப்பிள்ளை. நீங்க இந்நேரம்தான் வருவீங்கன்னு தெரியும். நான் ரொம்ப அலர்ட்டாதான் தூங்கிட்டு இருந்தேன்” என்றார் முரளிதரன்.
அந்த அதிகாலையிலும் எழுந்து வந்து, அவர்களுக்காகக் காஃபி போட்டுக் கொடுத்தார் புனிதா. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றார்கள் நால்வரும்.
புனிதா மகளுக்காக இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்து அவர்களின் கூடவே இருந்து, விருந்து சமைத்து மாப்பிள்ளையைப் பலமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து வந்த நாள்கள் சஹானா பிறந்த வீட்டு சீராடலை சுகமாய் அனுபவித்தாலும் கணவனை இன்னும் கொஞ்சம் அங்கு வைத்து புரிந்துக் கொண்டாள். அவனின் விருப்பு, வெறுப்புகள், ரசனைகள் கொஞ்சமே கொஞ்சம் பிடிபட்டது அவளுக்கு.
ஆனால், சத்யமூர்த்தி அவளைப் புரிந்துக் கொண்டானா? என்பது குறித்த கவலை அவளுக்கு அப்போதிருக்கவில்லை.
அவளுக்கு மட்டுமே தெரிந்த வண்டிப் பெரியாரை, அதன் இயற்கை அழகை, ஊரை, கணவனுக்கு ஒரே நாளில் சுற்றிக் காட்ட முனைந்தாள் சஹானா. அவன் மௌனமாய் அவளைப் பின் தொடர்ந்தது அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இரண்டாம் நாள் இரவு சற்றே நேரம் சென்று பதினொரு மணி போலப் பொள்ளாச்சியை நோக்கி விரைந்தது அவர்களது கார். இம்முறையும் பெற்றோரை பிரிவது பெரும் கொடுமையாகத்தான் அவளுக்கு இருந்தது. ஆனால், சமாளித்துக் கொண்டாள்.
அதிகாலையில் அவர்கள் பொள்ளாச்சியை அடைந்து, வீடு போய்ச் சேரும் போது, “வாங்கண்ணா” என்று முதலில் எதிர்ப்பட்டது ராதாதான்.
சத்யமூர்த்தி, “காஃபி கொடு ராதா” என்றபடி உள்ளே நடக்க, நாத்தனார் இன்னுமா இங்கே இருக்கிறாள்? என்று அவளைப் பார்த்த சஹானா, இது அவள் வீடு, அவள் விருப்பம் போல இருக்கிறாள் என்று மனத்தில் சொல்லிக் கொண்டு கணவனைப் பின் தொடர்ந்தாள்.
“நான் காஃபி போட்டு எடுத்து வர்றேன்.” என்றவளை கைப் பிடித்துத் தடுத்து, “நீ தூங்கு. ராதா காஃபி போடுவா” என்று அழுத்தமாக மறுத்து விட்டு, குளியல் அறைக்குள் நுழைந்தான் சத்யமூர்த்தி. அவன் வரும் வரை ஓய்வாகப் படுத்திருந்தவள் அப்படியே உறங்கி இருந்தாள்.
துவாலையில் முகத்தின் ஈரத்தை துடைத்தபடி வெளியில் வந்தவன், “சஹானா” என்று மனைவியை எழுப்ப, “என்ன சத்யா?” உறக்க கலக்கத்தில் குழறலாய் அவள் குரல் வர, சிரிப்பை மறைத்து, “எழுந்துக்கோ” என்றான்.
அந்நேரம் ராதா கதவைத் தட்டி காஃபி கொடுக்க, வாங்கி மேஜையின் மேல் வைத்து விட்டு, மனைவியிடம் வந்தான்.
“சஹானா..” படுக்கையில் அவளுக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து அவன் அழைக்க, “ப்ச், எப்ப பார்த்தாலும் தூங்கும் போதுதான் எழுப்பறீங்க” பயண அலுப்பு தந்த அசதியில், உறக்கம் சுமந்த குரலில் சலித்துக் கொண்டு புரண்டவளோடு, காத்திருந்த காஃபியை மறந்து சேர்ந்து புரண்டான் சத்யமூர்த்தி.
இருவரும் சில மணி நேரங்கள் அப்படியே உறங்கியிருந்தனர். அன்று தாமதமாகதான் தொழிற்சாலை சென்றான் அவன். சஹானா அவன் சென்ற பின் மாமியார், நாத்தனாருடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு வந்து, தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அவள் பார்வையில் மிக அழகாக, அவள் எழுத்தில் மிகத் தெளிவாக, விரைவாக வடிவம் பெறத் தொடங்கியது பயணக் கட்டுரைகள்.
அந்த வார இறுதியில் சத்யமூர்த்தியின் தாய் மாமா வீட்டிற்கு விருந்துக்குப் போனார்கள் இருவரும். மதிய உணவு நெருங்கும் வேளையில் சத்யமூர்த்திக்குத் தொழிற்சாலையில் இருந்து அவசர அழைப்பு வர, சஹானாவை தனியாக அங்கேயே விட்டுப் போனான் அவன். மாலை ஆட்டோ பிடித்துத் தனியாக வீடு வந்த சஹானா, சத்தியமாய்ச் சத்யமூர்த்தியின் மேல் கொலை வெறியில் இருந்தாள்.