அன்பின் ஆலாபனை – 5 (1)

இருவரும் இறுக்கமாக ஒருவரையொருவர் பார்த்தபடி நிற்க, அந்த நிசப்த நொடிகளைக் கலைத்தாள் சஹானா.

“ஃபோன் ஏன் எடுக்கல?” கோபமாகக் கேட்டாள்.

“வேலையா இருந்தேன்”

“ஃப்ரீயானதும் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?”

“ஐ வாஸ் பிஸி சஹானா” என்றான் அலுப்புடன். அந்தத் தொனி அவளுக்குக் கோபமூட்ட, “சரி, ஒரு மெசேஜாவது அனுப்பி இருக்கலாம், இல்ல?” சினத்துடன் சீறினாள். “ப்ச்” என்று சலித்து, இடக்கரத்தால் தலைமுடியை கலைத்து கோதிக் கொண்டான். அவள் முறைக்க, “ஃபேக்டரி மொத்தமும் சுத்தி வந்துட்டு இருந்தேன். பெர்சனல் போனை ரூம்ல விட்டுட்டுப் போய்ட்டேன். அபிஸியல் ஃபோன் என் அசிஸ்டன்ட் மாதவன்கிட்ட இருந்தது. சோ..” என்று முடிக்காமல் அவன் தோள் குலுக்க,

“சோ?” என்ற அவனின் இறுதி வாத்தையைக் கேள்வியாகத் தொடுத்தவள், “சோ, ஆபீஸ் விஷயம்தான் முக்கியம். நான் இல்ல?” என்று பதிலாக இழுக்க, மீண்டும் தலைக் கோதி கொண்டான் சத்யா.

“என்னை நிறையப் பேச வைக்காத சஹானா. பிளீஸ், புரிஞ்சுக்கோ” என்றான் ஒருவித சோர்வுடன்.

“இப்போ உங்களை என்ன நிறையப் பேச வச்சுட்டேன்? ஆபீஸ் போன் இருந்தது. அதுனால, பெர்சனல் போன் கையில் இல்லாதது தெரியலை, சொல்றீங்க. அப்போ பெர்சனல் நாங்க எல்லாம் முக்கியம் இல்லையா உங்களுக்குன்னு கேட்கறேன். என்ன தப்பு?” கோபமாகக் கேட்டவளை, அமைதியாய் தனக்கு நெருக்கமாக இழுத்தான்.

“என்ன பண்றீங்க? விடுங்க” அவள் திமிற, மௌனமாய் அவளை அணைத்து நின்றான்.

“ஒரு மெசேஜ் அனுப்ப கூடத் தோனல இல்ல, உங்களுக்கு? எனக்காகச் செலவு பண்ண நேரமே கிடைக்கல. எனக்காக நேரம் ஒதுக்க முடியல. அவ்ளோ அலட்சியம்?” அவனது அணைப்பில் பொருந்தி நின்று அவனிடமே காய்ந்தாள்.

“மணி என்ன?” என்று அவன் கேட்க, அவள் கேட்ட கேள்விக்குப் பதில் வராத கோபத்தில் நிமிர்ந்து அவனை முறைத்து, “ஏழரை இருக்கும்” என்று அந்த ஏழரையை அழுத்திச் சொன்னாள் சஹானா. உதட்டில் நெளிந்த குறுநகையை மறைத்தாலும், அவன் கண்கள் அதைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.

“எப்பவும் என்ன டைமுக்கு வீட்டுக்கு வருவேன்?”

“ஒன்பது மணிக்கு மேல வருவீங்க. சில நேரம் இன்னும் லேட்டாகும்” என்று சொல்லிக் கொண்டே போனவள், யோசனையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அசட்டையாய் தோள் குலுக்கினான் சத்யமூர்த்தி.

அவன் மார்பில் அடித்து, “சொல்லுங்க” என்றாள் சஹானா.

“அம்மா வீட்டுக்கு போகணும்னு காலையில ஒரு பாப்பா அழுதுச்சு. அதான், ரெண்டு நாளைக்கு அந்தப் பாப்பா வீட்டுக்கு போகலாம்னு ஃபேக்டரி வேலையை எல்லாம் இழுத்துப் போட்டு ஒரே நாள்ல பார்த்து முடிச்சேன். போதுமா?” என்று கேட்டவனைச் சட்டென மலர்ந்த முகத்துடன் பார்த்தாள் சஹானா.

“போதும்.” என்றாள் குறும்பாக. “ஆனாலும், ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் நீங்க” என்றவளை பொய் கோபத்துடன் பார்த்து, பெருமூச்சு விட்டான்.

“வீட்டுக்கு கிளம்பும் போதுதான் போனை பார்த்தேன். நேரா வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்னு வந்துட்டேன். ஏதாவது முக்கியமான விஷயம்னா, நீயே அதை மெசேஜ் அனுப்பி இருப்பியே? சோ, சும்மா பேசதான் கூப்பிட்டு இருக்கனு புரிஞ்சுது.” மீண்டும் தலைக் கோத போன அவன் கரத்தை தடுத்துப் பிடித்தாள் சஹானா.

“உங்களை ரொம்பப் பேச வச்சுட்டேன் போலயே” எனக் கேட்டு, அவள் கண் சிமிட்ட, “தெரிஞ்சா சரி” என்றான் சத்யமூர்த்தி, மறுக்காமல்.

“நகரு. ட்ரெஸ் எடுத்து வைக்கணும்” அவளை மென்மையாய் விலக்கினான். அவனை மேலும் ஒட்டிக் கொண்டு, “நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்க. நான் எடுத்து வைக்கிறேன்” என்றாள் சஹானா.

சிறிய தலையசைப்புடன் விலகி குளிக்கப் போனான் அவன். பத்து நிமிடத்தில் அவன் வெளியே வர, சஹானா சேலையைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.

“நைட் டிராவல். நம்ம கார்லதான் போறோம். கம்பர்ட்டபிளா இருக்க மாதிரி ட்ரெஸ் பண்ணு” அவன் சொல்ல,

“இல்ல, சேலையே..”

“சஹானா…” அதட்டலாய் உச்சரித்தான். அதற்கு மேல் எப்படி வாதாடுவாள்? தன்னிச்சையாகக் கைகள் சுடிதார் ஒன்றை தேடி எடுத்தது.

உடை மாற்றி, இருவரின் பொருட்கள் இருந்த பையை எடுத்து சரி பார்க்கத் தொடங்கினான் சத்யமூர்த்தி. சஹானா தயாராகி அவனருகில் வர, கைப் பிடித்து அவளை அருகில் அமர்த்திக் கொண்டான்.

“அத்தையை நான் அதட்டின கோபத்துல ஊருக்கு கூட்டிட்டு போறீங்கன்னு நினைச்சேன்.”

“அம்மாகிட்ட நீ குரல் உயர்த்தினது, எனக்குக் கோபம் இல்ல. அந்த டோன்தான்..”

“அவங்க…” என்று தொடங்கியவளை இடைமறித்து, “அவங்க என்ன பேசி இருந்தாலும் சரிதான் சஹானா. பதிலுக்கு நீயும் கத்தி, அவங்க அளவுக்கு இறங்கி போக வேண்டாம். அதுனால எல்லோருக்கும் வீண் மனக் கசப்புதான் வரும். உன்னால, என்கிட்ட பொறுமையா பேச முடியுது இல்ல? அதையே அவங்ககிட்டயும்..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் உதடு கடிக்க, “என்ன?” என்றான் புருவம் உயர்த்தி. “ஒன்னுமில்ல” என்று மறுப்பாகத் தலையசைத்தாள் சஹானா.

“சொல்லு..” பதிலை வாங்காமல் விட மாட்டான் என்பது புரிந்து, “இத்தனை நாள் பொறுமையாதான் இருந்தேன். ஆனா, அத்தை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருக்காங்க. அதான் கோபம் வந்துடுச்சு.” என்றவள், “உங்களுக்குச் சொந்ததுல நிறையப் பொண்ணுங்க இருக்காங்க. அவங்களை எல்லாம் விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம்..” என்று தொடர்ந்து சொல்ல, இடையிட்டு, “ஆமா, தானே? உண்மை அதானே?” என்றான் சத்யமூர்த்தி.

“எஸ். பட்..”

“இங்க பாரு சஹானா, இன்னைக்கு உனக்கு அவங்க மாமியார், மாமனார். ஆனா, அதுக்கு முதல்ல அவங்க எனக்கு அம்மா, அப்பா. நான் என்னைக்கும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு. அவங்க மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்”

“அப்போ நான்…”

“இதென்ன கேள்வி?” சட்டென அவனின் குரலும், கோபமும் உயர விழித்தாள் சஹானா.

“எல்லாத்தையும் விளக்கிட்டே இருக்கணுமா உனக்கு? நிஜமாவே நான் பேசுறது உனக்குப் புரியலையா?” அவன் இரைய, “புரிஞ்சுது” என்றபடி பட்டென்று கோபத்துடன் எழுந்துக் கொண்டாள் சஹானா.

அவன் சொல்லும் வார்த்தைகளை மட்டுமல்ல, சொல்லாமல் விடும் வார்த்தைகளையும் தன்னைப் புரிந்து கொள்ளச் சொல்கிறான் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. சற்றே அயர்ச்சியாகக் கூட இருந்தது. “நீயும் எனக்கு முக்கியம்” என்று தன் மனத்தை வார்த்தைகளில் இவன் வெளிப்படுத்தினால்தான் என்ன? என்று கவனமாக மனத்திற்குள் நினைத்தாள்.

மாமியாரின் குத்தல் பேச்சுக்களை மொத்தமாகக் கணவனிடம் சொல்ல அறிவுறுத்தியது அவள் மனம். ஆனால், திருமணமாகி முழுதாக ஒரு மாதமே முடிந்திருக்க, குடும்பத்தில் பிரச்சனையைக் கிளப்ப விரும்பவில்லை சஹானா. கணவன் சொன்னது போல மாமியாரின் புலம்பலிலும் நிறைய உண்மை இருக்கிறதுதானே என்று அப்போதைக்குத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் அவள். இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்போம். அந்தப் பொறுமையின் எல்லை தீரும் போது பார்த்துக் கொள்ளலாம். அதன் பின் கணவனிடம் பஞ்சாயத்துக்குப் போகலாம் என்பதே அவளின் எண்ணமாக இருந்தது.

ஆனால், எதையுமே தொடக்கத்திலேயே தெளிவுப்படுத்த வேண்டும் என்பது அவளுக்குத்தான் தெரியவில்லை.

மருமகளின் மௌனத்தை மாமியார் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடும் என்ற பட்டறிவும் அவளுக்கு அப்பொழுது இருக்கவில்லை. சஹானா புகுந்த வீட்டில் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினாள். மேலும், தன்னால் அம்மா, மகன் உறவு கெட கூடாது என்று நினைத்தாள் அவள்.

அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டுதானே? ஒருவர் மட்டுமே எப்படி முடிவை எடுக்க முடியும்? ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள் சஹானா. அவள் போக்கில் சிந்தனையில் மூழ்கியபடி, அவள் கணவனை விட்டு விலகி நகரப் போக, “சஹானா” என்று கண்டிப்புடன் அழைத்தான் சத்யமூர்த்தி.

“என்ன, இப்போ?”

“பேசிட்டு இருந்தேன்.”

“யாரு? நீங்களா?” போலி ஆச்சரியத்துடன் அவள் விழிகளை விரித்துக் கேட்க, சிதற துடித்த சிரிப்பை மறைத்தான் சத்யமூர்த்தி.

“ம்ம்”

அவனைப் போலவே, “ம்ம்” என்று அசட்டையாகச் சொன்னவள், “இனிமே அத்தைகிட்ட கத்திப் பேச மாட்டேன். ஓகே. ஹேப்பி?” என்று அவள் மொத்த பற்களையும் காட்டிக் கேட்க, கை நீட்டி அவளை இழுத்துக் கொண்டான் கணவன்.

“ஒன்னும் வேணாம். விடுங்க” உதறிக் கொண்டு எழுந்தாள் சஹானா.

“இந்தாங்க தண்ணி. ரொம்பப் பேசிட்டீங்க இன்னைக்கு. தண்ணியைக் குடிங்க” நக்கலாகச் சொல்லி, மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து நீட்டினாள். அதுவரை தீவிர முகபாவத்துடன் இருந்தவனின் முகம் சற்றே இளகி, சிரிப்பு எட்டிப் பார்க்க, “மயங்க மாட்டேன்” என்று முணுமுணுத்து கழுத்தை வெட்டினாள் சஹானா. சத்தமாகச் சிரித்தான் சத்யமூர்த்தி.

இருவரும் அறைக்குள் இருந்து வெளியில் வர, மாமியாரும், நாத்தனாரும் கூடத்தில் இருந்து நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தார்கள்.

“எப்போ வந்த ராதா?” என்று தங்கையைப் பார்த்துக் கேட்டவன், அவள் பதில் சொல்லும் வரை காத்திருக்காமல், “போய்ட்டு வர்றோம் மா” என்றான் அம்மாவிடம்.

“எங்கே?” என்று கேட்க முடியாமல் அவர் விழிக்க, சஹானாவிற்கு அதைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது.

“அண்ணா, நான் உங்களையும், அண்ணியையும் விருந்துக்குக் கூப்பிட வந்தேன்.” என்ற தங்கையை யோசனையுடன் பார்த்து விட்டு, அம்மாவை பார்த்தான் சத்யமூர்த்தி.

“ஆமாம் பா. தங்கச்சி அவங்க வீட்டுக்கு உங்களை விருந்துக்குக் கூப்பிட வந்திருக்கா. உட்காருங்க ரெண்டு பேரும். இப்பத்தானே வீட்டுக்கு வந்த? ஒரு வாய் டீ கூடக் குடிக்கல. அதுக்குள்ள எங்கயோ கிளம்பிட்டீங்க.” என்று அங்கலாய்த்தவர், “நான் போய் டீ போடுறேன். நீ தங்கச்சிகிட்ட பேசிட்டு இரு” என்று எழுந்து கொள்ள முயற்சிக்க,

“நாங்க சஹானா வீட்டுக்கு கிளம்பிட்டோம். இப்போ நேரமில்ல” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்புலட்சுமி.

“என்ன தம்பி திடீர்னு?”

“கல்யாணமாகி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு” என்றதோடு அவன் நிறுத்திக் கொள்ள, “மறுவீட்டுக்கு எங்களை நீங்க அனுப்பி இருக்கணும். ஆனா, நீங்க அதைப் பத்தியே பேசல” கணவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை மனதில் சொல்லிக் கொண்டு நின்றிருந்தாள் சஹானா.

“ஆமா, தம்பி. ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுல்ல? நான் கவனிக்கலை பா. அதுக்காக இப்படியா திடீர்னு அவசரமா கிளம்பி போவாங்க. ஒரு நல்ல நாள் பார்த்து..”

“அம்மா…”

“இல்ல, தம்பி. முன்னாடியே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல. இப்போ தங்கச்சி வேற வந்து உட்கார்ந்துருக்கா. இந்த வாரம் நீங்க அங்க விருந்துக்குப் போகலன்னா, அவங்க வீட்ல அவளைப் பேசுவாங்க” சுப்புலட்சுமி மகனையும், மருமகளையும் பார்த்து அதிருப்தியுடன் சொல்ல, “அப்பாகிட்ட எப்போ பேசினீங்கம்மா?” அழுத்தமாய்க் கேட்டான்.

“அது…” மாமியார் தடுமாற, கணவன் ஏற்கனவே மாமனாரிடம் பயணம் குறித்த தகவல் சொல்லி விட்டான் என்பது சஹானாவிற்குப் புரிந்தது.

“அப்பா சொன்னார்தானே?” அவன் கேட்க, “அப்புறமும் என்ன குறுக்கு விசாரணை வேண்டிக் கிடக்கு?” என்று அவன் கேளாமல் விட்டதை மனத்தினுள் கேட்டுக் கொண்டாள் சஹானா. அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. சிரித்தால் தொலைந்தோம் என்று நினைத்தபடி, சற்றே கணவனுக்குப் பக்கத்தில் நகர்ந்து நின்றாள்.

“அப்பா சொன்னார்தான் தம்பி. ஆனாலும், நீ சொல்லலையா, அதான்”

“அப்பா மதியமே உங்ககிட்ட சொல்லிட்டேன்னு சொன்னார். அப்புறம், தனியா நான் வேற சொல்லணுமா மா? போகும் போது சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். இப்பத்தானே வீட்டுக்கு வந்தேன்? அதுக்குள்ள..?” அவன் குரலில் இருந்த எரிச்சலை துல்லியமாக உணர்ந்த சஹானா, திரும்பி மாமியாரின் முகத்தைப் பார்த்தாள்.

“சரி தம்பி. இப்போ ராதா வேற வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கா. அவங்க வீட்ல..” அம்மாவின் பேச்சை கேட்டுக் கொண்டே திரும்பி தங்கையைப் பார்த்தான் அவன்.

“உனக்குக் கால் பண்ணேன் ண்ணா. நீ எடுக்கல.” ராதா தயக்கத்துடன் சொல்ல,

‘அட, அப்போ அலட்சியம் லிஸ்டில் நான் மட்டும் இல்லையா?’ என்று அல்பத்தனமாகச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள் சஹானா.

“மெசேஜ் பண்ணேன்தானே? பிஸியா இருக்கேன்னு. கேரளா போறேன்னு” கையில் இருந்த பயணப் பையைக் கீழே போட்டு விட்டு அவன் கைக் கட்டி கேட்க, “ஷப்பா” என்று முணுமுணுத்தாள் சஹானா. ஓரக் கண்ணால் அவளை முறைத்தான் சத்யமூர்த்தி. அவளுக்கு இதெல்லாம் மிகுந்த அந்நியமாகப்பட்டது.

மனம் தேவையில்லாமல் பிறந்த, புகுந்த என இரண்டு வீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தது. அம்மாவின் நக்கல், நையாண்டி பேச்சும், அப்பாவின் சிரிப்பும், பொறுப்புமான பேச்சும் உயிர்ப்பூட்டிய பிறந்த வீடு நினைவில் வர, புகுந்த வீட்டில் இருந்து எப்போது தப்பிப்போம் என்றிருந்தது அவளுக்கு.

“இல்லண்ணா. அம்மாதான்..” என்ற தங்கையைக் கை நீட்டி பேச விடாமல் தடுத்தான் சத்யமூர்த்தி.

“நான் போன வாரம் மாப்பிள்ளை என்கிட்ட பேசும் போதே தெளிவா சொல்லிட்டேன். இப்போ நான் வேலையில் பிஸி. கொஞ்சம் ஃப்ரீயானதும் வர்றேன்னு. ரெண்டு நாளைக்கு முன்னாடி உன் மாமனாரை பார்த்தப்பவும் சொல்லிட்டேன். இப்போ வர முடியாது. சீக்கிரம் வர்றோம் அப்படினு. அப்புறம் நீ என்ன டிராமா பண்ணிட்டு இருக்க?” கணவன் இத்தனை நீளமாகப் பேசுவானா என்று அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் சஹானா. இப்போதும் ஓரக் கண்ணால் அவளை முறைக்கத் தவறவில்லை அவன். ராதா அம்மாவை கோபத்துடன் பார்த்து விட்டு சத்யமூர்த்தியின் பக்கம் பார்வையைத் திருப்ப, “அடுத்த வாரம் வர்றோம் ராதா. இப்போ முடியாது. சரியா? பார்த்து, பத்திரமா வீட்டுக்கு போ. மாப்பிள்ளையை வரச் சொல்லு. இல்லனா, அப்பா கூடப் போ” என்று முடிவாக முடித்து விட்டான். தாயும், மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, அவனிடம் திரும்பினர்.

“அது வந்து தம்பி.. ராதா..” சுப்புலட்சுமி சொல்ல வந்ததை முடிக்காமல் நிறுத்த, “வந்து பார்க்கறேன் மா” என்றவன், மனைவியைப் பார்த்தான். அவளோ, இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வர்றேன் மா” ஒற்றை வார்த்தையில் விடை பெற்று, தங்கைக்குத் தலையசைப்பில் விடைக் கொடுத்து, பையைக் கையில் எடுத்துக் கொண்டான். மாமியார், நாத்தனாரிடம் சொல்லிக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள் சஹானா

error: Content is protected !!
Scroll to Top