கல்யாணம் அவளின் வாழ்வில் பெரிதான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்ததுதான். அதில் முக்கியமானது தனிமையும், தள்ளிக் கொலை செய்து கடத்த வேண்டியிருந்த நேரமும்தான். அருவியைப் போல எப்போதும் சலசலத்து கொண்டிருந்தவளுக்குச் சட்டெனக் கண்ணைக் கட்டி அருவியில் விட்டது போலிருக்க, பயந்துப் போனாள் சஹானா. ஆனால், சிறிது நாட்களில் யோசித்து இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்த அவளின் ப்ளாகில் (Blog – website) பயணக் கட்டுரைகள், குறிப்புகள் எழுத ஆரம்பித்திருந்தாள்.
“வாண்டர்லஸ்ட்” (Wanderlust – பயணங்களை நேசிப்பவர்) என்ற அவளின் வலைத்தளத்தில் ஏற்கனவே சில, பல பயணப் பதிவுகள் இருக்க, இப்போது அதில் தொடர்ந்து, தொடராக எழுதத் தொடங்கினாள். கேரளா, தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் அவள் பார்த்த அத்தனை மாநிலங்களின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி விரிவாக, தெளிவாகப் புகைப்படங்களுடன் எழுதி பதிவேற்ற தொடங்கினாள். திருமணமான பத்தாம் நாளில் இருந்தே அந்த வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் அவள்.
இப்போது ஒரு மாதத்தை நெருங்குகையில் பதிவுகளைச் சரி பார்த்து, பிழைகள் திருத்தி வெளியிடத் தொடங்கினாள். அதையே அவளின், “வாண்டர்லஸ்ட்” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவள் பகிர, ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே போனது. விருப்பங்களும், கருத்துகளும் வந்த வண்ணமிருக்க, தனக்குப் பிடித்த ஒன்றை செய்து, அதற்குப் பாராட்டும் பெறுவதில் மனம் நிறைந்து போனது அவளுக்கு.
நேரம் மதியத்தைத் தொட்டுக் கொண்டிருக்க, லோனாவாலாவை பற்றிக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தவள், அப்படியே பாதியில் நிறுத்தி விட்டு எழுந்து வெளியில் போனாள். மாமியார் சமையல் அறையில் நிற்க, “நான் ஹெல்ப் பண்ணவா அத்த?” என்று கேட்டபடியே பின்னால் போய் நின்றாள்.
“ம்ம்.” என்று இழுத்தவர், “இவ்வளவு நேரம் நானேதான் செஞ்சேன். யார் ஹெல்ப் பண்ண வந்தா” என்று புலம்பிக் கொண்டே வழி விட்டு நின்றார்.
அமைதியாக வந்த வேலையை மட்டும் பார்த்தாள் சஹானா. நான்கு அடுக்குக் கொண்ட பாத்திரத்தில் கணவனுக்கான உணவை எடுத்து வைத்தவள், “நான் கொண்டு போகவா அத்த?” என்று அனுமதி கேட்க, “உனக்கு வழி தெரியுமா? தெரியாதுதானே? அப்புறம் எப்படிப் போவ?” கேள்வியும் கேட்டு, பதிலும் அவரே சொல்லிக் கொள்ள, சிரிப்பை அடக்கினாள் சஹானா.
“கூகிள் மேப் போட்டுப்பேன் அத்த” அவள் சொல்ல, அதிர்ச்சியுடன் பார்த்தார் அவர்.
“உனக்கு இந்த ஊரே தெரியாது. இதுல போனை பார்த்து போறேன் சொல்ற சின்னப் புள்ள கணக்கா” கோபத்துடன் கேட்டவர்,
“பொறுப்பே இல்ல. உன்னைப் போய் என் புள்ளைக்குக் கட்டி வச்சு..” என்று தொடர்ந்து புலம்ப ஆரம்பிக்க, ‘ஊரை மட்டுமா? உங்களை எல்லாம் கூடதான் எனக்குத் தெரியாது. அதுக்காக வாழ மாட்டேன்னு அழவா செஞ்சேன் நான்’ மனதிற்குள் புலம்பியபடி நின்றிருந்தாள் சஹானா. முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இருக்க, அவள் மிகுந்த பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.
“எங்க சொந்தத்தில் இல்லாத பொண்ணா? என்ன படிப்பு படிச்சு இருக்காங்க தெரியுமா? எவ்வளவு வசதி, நகை கொட்டி கொடுத்து…” அவர் முடிக்கும் முன்பே இடையிட்டு, “போன் அடிக்குது அத்த” என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் சஹானா. திருமணமான முதல் நாளிலிருந்து இதே பேச்சை கேட்க அவளுக்குச் சலிப்பூட்டியது. இப்போதெல்லாம் எரிச்சலும், கோபமும் எட்டிப் பார்த்தது. ஆனால், அதை வெளியில் காட்டி, மாமியார் இன்னும் பேச வாய்ப்பு வழங்கவில்லை அவள்.
ஒருவித கோபத்துடன் மதிய உணவை மறந்து அப்படியே அறைக்குள் அடைந்திருந்தாள். கணவனுக்கு உணவை மாமியார் அனுப்பி விடுவார் என்பது நிச்சயம். ஆக, கண்ணை மூடி படுத்திருந்தவளுக்குக் கணவனைத் தேடியது. அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். இரு முறையும் அழைப்பை எடுக்கவில்லை அவன். முன்னாள் அனுபவத்தின் காரணமாக, மூன்றாம் முறை அழைக்கவில்லை சஹானா. மாலை மறைந்து இரவு வந்த பின்னும் சத்யமூர்த்தி மனைவியை அழைக்கவேயில்லை.
அந்த அலட்சியம் அவளுக்கு அப்படியொரு கோபத்தை ஏற்படுத்தியது.
ஏழு மணி போல வேறு வழியின்றி அறையை விட்டு வெளியில் வந்தாள் சஹானா. அங்கே இப்போது மாமியாருடன், நாத்தனார் ராதாவும் அமர்ந்திருக்க, ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
“வாங்க அண்ணி. எப்போ வந்தீங்க? எப்படி இருக்கீங்க?” சம்பிரதாய நலம் விசாரித்தாள்.
“இவ்வளவு நேரம் தூக்கமா? இப்போ எழுந்து வர்ற? காலையில இருந்து அந்த ரூமுக்குள்ளயே இருந்து என்னதான் பண்ணுவ?” என்று மாமியார் சத்தமாகக் கேட்க, சஹானா பதில் தேட எடுத்துக் கொண்ட வினாடியில் மீண்டும் பேச்சைத் தொடங்கியிருந்தார் சுப்புலட்சுமி.
“புதுசா கல்யாணமான பொண்ணு, வெளியில வந்து வீட்டு ஆளுங்க கூடப் பேசி, பழக எதுவும் கிடையாது. எப்ப பாரு ரூமுக்குள்ள போய்க் கதவை சாத்திக்க வேண்டியது”
“அம்மா” என்று ராதா கண்டிக்க, “பின்ன என்னடி, என்கிட்ட அத்தன்னு ஆசையா பழகறாளா, பேசுறாளா? கிடையாது. ஒரு வார்த்தை சொல்லும் முன்ன, காணாம போய்டுறா” நிமிர்ந்து சஹானாவை முறைத்து சொன்னவர்,
“புருஷன் மட்டும் போதும்னு நினைச்சா எப்படி? இதுவே எங்க சொந்தத்தில் பொண்ணு கட்டியிருந்தா எங்களைத் தாங்கி இருப்பா. என்ன இருந்தாலும், இனம்னு..” சஹானாவிற்கு அந்த வார்த்தையைக் கேட்டதும், ஏன் அத்தனை கோபம் வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.
“அத்த..” என்று அதட்டலாக அவள் அழைத்த நொடி, வீட்டிற்குள் நுழைந்தான் சத்யமூர்த்தி. ஒரு கணம் அங்கிருந்த மூவரும் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவன் கண்கள் சஹானாவின் மேல் நிலைத்து நின்றது.
“உள்ள வா” என்று விட்டு, அவன் முன்னே நடக்க, இதென்ன பழக்கம் என்று அசையாமல் நின்றாள் சஹானா.
“இல்லப்பா தம்பி…” என்று ஆரம்பித்த சுப்புலட்சுமியின் பேச்சை கேட்க அவன் அங்கிருக்கவிலை.
“சஹானா” அறைக்குள் இருந்து சத்தமாக அவன் அழைக்க, ஆழ மூச்சிழுத்து அறையை நோக்கி நடந்தாள் அவள்.
“கிளம்பு. உங்க வீட்டுக்கு போறோம். ரெண்டு நாள் போதும்தானே?” அவன் கேட்க, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் சஹானா.
“சத்யா, நான்…”
“ட்ரெஸ் எடுத்து வை, சஹானா”
“நான் சண்டை போடல. அத்தையைத் திட்டல. அவங்க பேசவும்தான்..” அவள் குரல் உயர்த்தியதில் கோபமாக இருக்கிறான் என்று நினைத்து அவள் விளக்க முயற்சிக்க, கையில் இருந்த உடையைப் படுக்கையில் வைத்து விட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் சத்யமூர்த்தி.
“சரி. அவங்க பேசினா?” அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தாள் சஹானா.
“பெரியவங்களை இப்படிதான் அதட்டுவியா?”
“அவங்க பேசினாங்க. அதான்..”
“கத்தின? இல்லையா?” கூர்மையாய் வந்து விழுந்தது கேள்வி. பதட்டத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் சஹானா.
“நான் என்ன சொல்ல வர்றேன்னு..”
“இந்தப் பொறுமை ஏன் அவங்ககிட்ட வரல” மீண்டும் அவன் கேள்வியில் வாயடைத்து போனாள் அவள்.
“சஹானா, பேர்ல மட்டும்தான் பொறுமையா?” அவன் புருவங்களை நெரித்துக் கேட்க, அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் சஹானா. அவளது பெயருக்கு அர்த்தம் எல்லாம் தேடி தெரிந்து வைத்திருக்கிறானே என்ற ஆச்சரியம் அருவியாய் மனதில் ஆர்ப்பரிக்க,
“அட, சத்யமூர்த்திக்கு என் பேரோட அர்த்தம் எல்லாம் தெரிஞ்சுருக்கே” நொடியில் கோபம் மறந்து அவனை நோக்கி அவள் நகர, புருவங்களை மேலும் நெரித்தான் அவன். ஒற்றை விரல் கொண்டு அவன் புருவங்களை வருடி, அவள் நீவி விட, “சஹானா” என்றான் அடர்த்தியான குரலில்.
“இவ்வளவு சத்யம் ஆகாது, சத்யா” என்று கண்ணடித்தாள் சஹானா. அவனோ மீண்டும் கோபமாகக் கண்களைச் சுருக்கினான்.
“நான் இன்னைக்கு உங்களுக்கு ரெண்டு டைம் கால் பண்ணேன். நீங்க ஏன் எடுக்கல? வேலையா இருந்தா ஒரு மெசேஜ் கூடப் போட மாட்டீங்களா? அப்படியென்ன அலட்சியம்? என் மேல அக்கறையே கிடையாதா உங்களுக்கு?” இப்போது அவள் தீவிரமாகக் கேட்க, ஒரு நொடி அவன் கண்களில் அதிர்ச்சி வந்து போனது. பதில் சொல்லாமல் முறைத்தான் அவன். இருவரின் கேள்வியும், கோபமும் அவர்களுக்கு நடுவில் இடையூறாய் நிற்க, அவர்களோ நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள்.