மறுநாள் மாலையிலேயே பொள்ளாச்சி பயணத்திற்கு ஏற்பாடுகள் நடக்க, பயணங்களை எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளும் சஹானா, முதல் முறையாகப் பயணம் செய்யத் தயங்கினாள். சத்யமூர்த்தியை கெஞ்சுதலாகப் பார்த்தாள் அவள். அவனோ, புருவங்களை நெரித்து, என்னவென்றான் கண்களால். அம்மா வீட்டில் இன்னும் சில நாள்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையை வாய் விட்டு சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. அவளது விழி பேசிய மொழி புரிந்ததும் கூட, அதை நிறைவேற்றும் நிலையில் அவனில்லை.
தொழிற்சாலை பார்க்க அவன் நாளை காலை பொள்ளாச்சியில் இருக்க வேண்டும். ஒற்றை வார்த்தையில் தொழிற்சாலை என்று சொல்லி விடலாம். ஆனால், உள்ளே ஆறேழு தொழில்கள் இருக்கிறதே. அவன் அங்கில்லா விட்டாலும் வேலைகள் சீராக நடக்கும் என்றாலும், அவனிருந்து பார்ப்பது போல வராதே. அவன் மட்டுமே பார்க்க வேண்டிய வேலைகள் இந்நேரம் வரிசைக் கட்டி நிற்கும் எனும் போது மாமியார் வீட்டில் அதிக நாள்கள் அவனால் உறவாட முடியாதே. அதனால் மௌனமாய் மனைவியின் முகம் பார்ப்பதை தவிர்த்தான் அவன்.
புனிதா மகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கிச் சேர்த்திருந்தார். அவளுக்குக் கொடுக்க வேண்டிய சீர் பொருட்கள் முன்னரே பொள்ளாச்சியில் பணம் கட்டி, முன்பதிவு செய்திருக்க, இரண்டு நாளில் அவர்கள் வீட்டிற்கே வந்து விடும் அவை.
சத்யமூர்த்திச் சீர், வரதட்சணை என எதுவும் வேண்டாம் என்று மறுத்தான்தான். ஆனால், அவனது அம்மாவின் முணுமுணுப்புக்களைப் பார்த்த பின் ஒன்று விடாமல் அனைத்தையும் கொடுப்பது என முடிவெடுத்து விட்டார் புனிதா.
சஹானாவிற்குப் புதிதாகத் திருமணத்திற்கு என்று வாங்கிய உடைகள், நகைகள் மட்டும் இப்போது பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் அவர். வரிசைக் கட்டி நின்ற பெட்டிகளைப் பார்த்து மலைத்து நின்று விட்டாள் சஹானா.
“ம்மா, ஜவுளி கடை எதுவும் திறக்க போறோமா என்ன?” என்று கேட்ட மகளை, “பேசாம இப்படி உட்காரு சஹா” என்று கைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டார். நக்கல் நையாண்டி எல்லாம் விட்டுவிட்டு மகளிடம் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன, “டூஸ் அண்ட் டோண்ட்ஸை” (Dos and don’ts) சிரத்தையுடன் சிரிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள் சஹானா.
“சரி, நீ போய் மாப்பிள்ளை கூட இரு சஹா. அம்மா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்” அவர் சொல்லவும் அடித்துப் பிடித்து, எழுந்து அவளது அறைக்கு ஓடினாள். அந்நேரம் பார்த்து சத்யமூர்த்தி அவளைத் தேடி வெளியில் வர, அவன் மேல் மோதி நின்றாள் சஹானா.
“சாரி” என்றாள் நாக்கை கடித்து, “ஐ ஆம் நாட் சாரி” என்றான் சிரித்து. அவன் சிரிப்பைப் பார்த்து, ஆவென்று வாய் பிளந்தவளை ஒற்றைக் கையால் தன்னோடு இழுத்துக் கொண்டான். மறுகரம் கதவை தாளிட்டிருந்தது.
சத்யமூர்த்தி முதுகுக்குத் தலையணை கொடுத்துப் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். கண்கள் அறையைச் சுற்றிய மனைவியை மென்நகையுடன் தொடர்ந்து கொண்டிருந்தன. அவளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, அறையையே காலி செய்து கொண்டிருந்தாள் சஹானா. பச்சை ஜார்ஜெட் புடவையில் பசுமையாய் தெரிந்தாள். கொலுசும், வளையலும் இணைந்து புதியதொரு சங்கீதம் இசைக்க, தனது ராகத்தைப் பார்த்தான் அவன். சஹானாவை விட்டு நகர மறுத்த கண்களைப் பெருமுயற்சி செய்து திருப்பினான்.
சுவரில் நிறைந்திருந்த புகைப்படங்கள் இந்தியாவின் பல்வேறு ஊரை, ஆறை, அருவியை அவன் கண்களுக்கு விருந்தாக்கியது. சஹானாவின் கரங்கள் இறுக்கமாய் அவளது பயணப் பையைப் (Backpack) பிடித்திருந்தது. பெற்றோரை, பிறந்த ஊரை பிரிவதே கொடுமையாக இருக்க, இனி பயணத்தையும் நிரந்தரமாகப் பிரிய வேண்டும் என்று நினைக்கையில் அவளுக்குக் கண்ணைக் கரித்தது.
அமைதியாய், மென்மையாய் பையை வருடிக் கொடுத்தாள். நினைத்த நேரம் எல்லாம் அந்த ஒற்றைப் பையை முதுகில் சுமந்தபடி, புதிய ஊர்களை நோக்கி, புதிய மனிதர்களை, அனுபவங்களைத் தேடி இனி செல்ல முடியாது என நினைக்கையில் கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.
“சஹானா” கண்டிப்புடன் சத்யமூர்த்தி அழைக்க, கண்ணைத் துடைத்துக் கொண்டாள். பையைப் பொக்கிஷம் போல உள்ளே வைத்து பீரோவை மூடினாள்.
“கிளம்பலாம். நேரமாச்சு” சொல்லிக் கொண்டே அவளருகில் இருந்த பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவன் வெளியேற, கணவனைப் பின் தொடர்ந்தாள் சஹானா.
ஆயிற்று! அவர்களுக்குத் திருமணமாகி முழுதாக இருபது நாள்கள்.
திருமணமான புதிதில் அவளின் நாள்கள் பரபரப்புடன் செல்லும் என்று சஹானா எதிர்பார்த்திருந்தாள்தான். ஆனால், இத்தனை பரபரப்பை அல்ல.
சத்யமூர்த்திக் குடும்பத்தில் திருமணம் என்பது திருவிழா என்பதை அவள் அறியாதிருக்க, அவர்கள் பொள்ளாச்சி போன நாளில் இருந்து இன்று வரை திருமணக் கோலத்தைக் கலைக்காமல் இருந்தது அவளது புகுந்த வீடு. அவளுக்கு அது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். விருந்து சமையல் தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. மாமியார் துணைக்கு ஆள் வைத்துக் கொண்டாரே தவிர அவளைப் பக்கத்தில் நெருங்கவே விடவில்லை.
அது மருமகள் மீதிருந்த அக்கறையினால் அல்ல. அவர்கள் வீட்டு பழக்க வழக்கம் அவளுக்குத் தெரியாது என்ற காரணத்தினால். அவர் சொல்வதும் சரிதானே என்று அதைச் சரியான பார்வையில் எடுத்துக் கொண்டாள் சஹானா. அவளின் பெற்றோர் அவளுடன் இரண்டு நாட்கள் தங்கி விட்டே வண்டிப் பெரியார் சென்றார்கள். முதல் நாள் மட்டும்தான் ஓய்வாக இருந்தான் சத்யமூர்த்தி. அப்போதும் கூட முழுதாக வீட்டில் இல்லை. சிறிது நேரம் தொழிற்சாலை சென்று விட்டே வந்தான்.
மறுநாள் அதிகாலையில் ஆரம்பித்து விட்டது விருந்து. கெடா வெட்டு. ஊரை, உறவை அழைத்து அத்தனை பிரம்மாண்டமாக விருந்து கொடுப்பதை அதிசயமாகப் பார்த்தாள் சஹானா. புனிதா மகளை யோசனையுடன், சற்றே கவலையுடன் பார்த்தார்.
“ம்மா, நீங்க இவ்வளவு பயப்படத் தேவையில்ல” தாயைத் தேற்றினாள் மகள். அன்றிரவு அவளின் பெற்றோர் ஊர் திரும்பிட, மறுநாள் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் தொழில் சம்மந்தப்பட்ட அனைவரையும் விருந்துக்கு அழைத்திருந்தான் சத்யமூர்த்தி.
அன்று அவனோடு இணைந்து, புன்னகையுடன் அவளுமே தொழிலாளர்களுக்கு உணவைப் பரிமாறினாள். சத்தியமூர்த்திக் கண்ணில் மின்னலாய் மெச்சுதல். முகம் நிறைத்தது புன்னகை.
உறவுகளைக் காட்டிலும், தொழிலாளர்கள்தான் கணவன் மேல் அதிகம் அன்பும், மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பது போல அவளுக்குப்பட்டது. அன்று தொழிலாளர்களுக்கு விருந்தோடு ஒரு மாத சம்பளமும், உடையும் சஹானாவும், சத்யமூர்த்தியும் இணைந்து நின்று வழங்க, பலர் வார்த்தைகளில் வாழ்த்த, சிலர் கை உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்தனர். மனம் நெகிழ்ந்து போனாள் சஹானா. கணவனைப் பார்க்க அவளுக்குப் பெருமையாகக் கூட இருந்தது.
“நீங்க நல்ல முதலாளி சத்யா” அன்றிரவு அவள் பாராட்ட, அவள் உதட்டில் வலிக்காத வண்ணம் சுண்டினான் அவன்.
அவளுக்கு வலித்திட, “ஆ..” என்று முகம் சுளித்து, ஒற்றை விரல் கொண்டு அவள் உதட்டை தேய்த்து விட, அவள் விரல்களைப் பின்னுக்கு இழுத்து, அவன் உதட்டால் வருடினான்.
“பேர் சொல்லாத” மிரட்டினான்.
“சொல்லுவேன், சத்யா” மிஞ்சினாள்.
“நோ”
“எஸ், சத்யா” அதற்கு மேல் அவள் வாதிடவில்லை. “சத்யா” என்று அவள் பலமுறை சொல்லியும், அன்றிரவு அவனும் அதைப் பொருட்படுத்தவில்லை.
ஒற்றைப் பெண்ணாக வளர்ந்த சஹானாவிற்கு மாமியார் வீட்டில் எப்போதும் ஆட்கள் நடமாடிக் கொண்டேயிருந்தது வித்தியாசமாக இருந்தது. அவள் போக்கில் ஓரமாக அமர்ந்து மனிதர்களைச் சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்து, கவனித்துக் கொண்டிருந்தாள்.
கல்யாணம் கேரளாவில் நடந்த காரணத்தினால், அங்கு வர முடியாத உறவினர்கள் எல்லாம் இப்போது வீட்டிற்கு வந்து வாழ்த்தி, பேசி விட்டுச் சென்றனர்.
சத்யமூர்த்திக் காலையில் தொழிற்சாலைக்குக் கிளம்பினால், வீடு திரும்ப இரவாகி விடும். அவனுக்கு மதிய உணவு மட்டும் வீட்டில் இருந்து செல்லும். அதனால் அந்த ஆசீர்வாதங்களைச் சஹானா தனியாகத்தான் வாங்கிச் சமாளிக்க வேண்டியிருந்தது.
“என்ன? பொண்ணு கேரளாவா?”
“அப்போ நம்ம இனம் இல்லையா?”
“அதானே பார்த்தேன். நீங்க கல்யாணத்தை அங்க வைக்கும் போதே ஏதோ இருக்குனு நினைச்சேன்”
“ஆமா, எவ்வளவு நகை போட்டாங்க?”
“என்ன ஆளுங்க?” குரலைத் தழைத்துக் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும், அவளும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள்.
முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். விசித்திரமாக அவர்களின் கேள்விகள் எல்லாம் அவளுக்குச் சினத்திற்குப் பதில், சிரிப்பையே மூட்டியது. இன்னமும் இனத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களைப் பார்க்கையில் மனிதன் நாகரீக விலங்கு என்று தோன்ற, சிரிப்பை அடக்கினாள்.
இந்தக் கூட்டத்தில் கணவன் மட்டும் எப்படி வித்தியாசமாக வந்து சேர்ந்தான் என்று அவனை ஆச்சரியப் பார்வை பார்க்க மறக்கவில்லை அவள். இரவில் மறக்காமல் அவனிடம் அதையும் கேட்கவே செய்தாள் அவள்.
“சத்யா, எனக்கொரு டவுட்”
“சொல்லு”
“வொய் மீ?” (Why me) என்ற அவளின் கேள்வியில் பார்த்துக் கொண்டிருந்த அலுவலகக் கோப்பை மூடி வைத்து விட்டு அவளுக்கு அருகில் வந்தான் சத்யமூர்த்தி.
“ஸ்டாப், ஸ்டாப், சத்யா. எனக்குப் பதில் வேணும். அங்கேயே நின்னு சொல்லுங்க” அவளுக்கு நெருக்கமாக வந்து நின்று, “பதில்தான் சொல்றேன்” என்றான், மீசைக்கு அடியில் புன்னகையை மறைத்து.
“அய்யோ. உங்களோட.. பேசவே தெரியாதா உங்களுக்கு” மூச்சுக்கு திணறியபடி அவள் கத்த, அவள் கழுத்தில் இருந்து முகத்தை உயர்த்தி, அவள் கண்களை ஊடுருவினான் சத்யமூர்த்தி.
“நான் பேசுறது உனக்குப் புரியலையா?” அழுத்தமாகக் கேட்டான்.
“இப்படிப் புதிர் போட்டு பேசினா..”
“புரிஞ்சுக்கணும்” கூர்மையாக வந்து விழுந்தது பதில்.
“சத்யா.. ஒரு நிமிசம்..” அவன் உதடுகள் பேசிக் கொண்டிருக்க, கத்தினாள் சஹானா. அவனோ, சட்டைச் செய்யாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.
“நீங்க பேசுறது புரிய, புது டிக்சனரி தேடனும் நான்..”
“போட்டுத் தரேன்” அவளின் காதில் கிசுகிசுத்தான், கிளுக்கிச் சிரித்தாள் சஹானா. ஒரே ஒரு நொடி அந்தச் சிரிப்பை, புன்னகையுடன் பார்த்தவன், சட்டென அதைச் சிறைப் பிடித்தான்.
அதிகாலையில் அவனுக்கு முன்பே எழுந்து குளித்திருந்தாள் சஹானா. அறையின் மூலையில் இருந்த சத்யமூர்த்தியின் அலுவல் பகுதியில், சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவளது தினசரி வழக்கமும் அதுதான். அவன் குளித்து உடை மாற்றும் வேளையில், விழிகளால் அவனைப் பின் தொடர்ந்து விழுங்கிக் கொண்டிருப்பாள். இன்றோ அசதியில் கண்ணயர்ந்து விட்டாள் அவள்.
“சஹானா” நெருக்கமாய் ஒலித்த கணவனின் குரலில், இமைகளைச் சிரமப்பட்டுப் பிரித்து, “என்ன சத்யா” என்றாள்.
“தூங்கு”
“ம்ம்”
“நான் கிளம்பறேன்”
“எனக்குச் சாயா வேணும்” இன்னமும் உறக்கம் கலையா குரலில் அவள் சொல்ல, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, “நீதான் எனக்குப் போட்டுத் தரணும்” என்றான்.
“உங்கம்மா நான் காஃபி போட்டா நூறு குறை சொல்லுவாங்க. உங்களுக்குச் சக்கரை இப்படிப் போடணும். இவ்வளவு போடணும். பாலை கொதிக்க, ஊத்தணும். நுரைக்க ஊத்தணும்னு…” உறக்கம் கலையா குரலில் அவள் புலம்ப, சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அந்தச் சிரிப்புச் சத்தத்தில் கண்ணை முழுதாகத் திறந்து அவனை முறைத்தாள் சஹானா.
“அம்மா உண்மையைதானே சொல்றாங்க. நீ சரியா காஃபி போட கத்துக்கோ” என்றான்.
“ஹலோ, எனக்குக் காஃபி போட தெரியும்” சீறினாள். சிரித்தான்.
“எனக்குப் பிடிச்ச மாதிரி இப்போ உனக்குக் காஃபி போட தெரியலை இல்லையா? அதைத்தான் அம்மா சொல்றாங்க. நீ சரியா போட்டுக் கொடு. அவங்க பேச மாட்டாங்க” அவன் நீளமாகப் பேசி முடிக்க, விழி விரித்து அவனைப் பார்த்தாள்.
“எப்பா சத்யமூர்த்தி. ஆனாலும், இவ்ளோ சத்தியம் ஆகாது” அவள் உதடு சுழித்துச் சொல்ல,
“சரி, தூங்கு” என்றான் மறையா சிரிப்புடன்.
“சும்மா, ஏன் தூங்க சொல்லிட்டே இருக்கீங்க??” சஹானா சுதாரித்துக் கேட்க, சத்யமூர்த்தி அவளை விட வேகமாகச் சுதாரித்து எழுந்து கொண்டான். மெல்ல எழுந்து முகம் கழுவி, சேலையைச் சரி செய்து, அவன் பின்னோடு நடந்தாள். காலை உணவை முடித்து அவன் தொழிற்சாலை கிளம்ப, “சத்யா” என்றழைத்தாள். அவன் திரும்பி முறைக்க, நாக்கைக் கடித்து, “மாமா” என்றாள் நக்கலாக. அதற்கும், அவன் முறைக்க, “அப்புறம் உங்களை வேறென்ன சொல்லி கூப்பிட?” என்றாள் கோபத்துடன்.
“என்ன?” என்றான் கறார் குரலில்.
“மிண்டா பிராணி” (அதிகம் பேசாத – வாயில்லா பூச்சி) என்று மலையாளத்தில் முணுமுணுத்தவள், “அம்மா வீட்டுக்குப் போகணும் சத்யா. அப்பா உங்களுக்குக் கால் பண்ணாங்கதானே? மறுவீடு இன்னும் போகவே இல்ல நாம” காரில் ஏற நின்றவனுக்கு நெருக்கத்தில் போய்தான் சொன்னாள் அவள். கண்ணைச் சுருக்கி, புருவங்கள் நெரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.
“ஏன் அப்படிப் பார்க்கறீங்க?” அவள் குழப்பத்துடன் கேட்க,
“என்ன சொன்ன நீ?” என்றான்.
‘ஐயோ, நான் சொன்னது கேட்டுடுச்சா?’ என்று மனதில் அலறியபடி, “என்ன சொன்னேன்? அம்மா வீட்டுக்குப் போகணும் சொன்னேன்” என்றாள், அவன் பார்வையில் திக்கியது வார்த்தைகள். அவனது நெரித்த புருவங்கள் அப்படியே இருக்க, கண்கள் கூர்மையாய் அவளை ஊடுருவ, ஒற்றை விரல் நீட்டி, அவனது புருவத்தை நீவி விட்டாள்.
“வெளில இருக்கோம்” கண்டித்தான்.
“நம்ம வீட்லதான் இருக்கோம்” பட்டெனப் பதில் கொடுத்தாள் சஹானா.
“ரெண்டு நாள்ல சொல்றேன். போகலாம்.” அவனது தந்தி மொழி இப்போது அவளுக்குப் புரிய ஆரம்பித்திருக்க, “ஓகே.” என்றாள். அவன் கார் கண்ணை விட்டு மறைந்ததும், வீட்டுக்குள் வந்தாள் சஹானா.
வீட்டு வேலைகளுக்கு ஆட்கள் இருக்க, சமையலறை பக்கம் மாமியார் விடப் போவதில்லை என்பதால், தங்களின் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.