“என்ன பேசினீங்க சஹா? ஸ்வீட் நத்திங்ஸ், ஸ்வீட்டா இருந்ததா?” என்று அவளின் தோழி ரோஹிணி கேட்டது நினைவில் வந்தது. அவளும், அவனும் பேசிய, “நீ நலமா? நான் நலம்” என்பதை எப்படி ஸ்வீட் நத்திங்கில் சேர்க்க முடியும் என்பதை நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. “பிஸி” என்று திட்டி அனுப்பியிருக்கிறான் என்பதைத் தோழியிடம் சொல்லாமல் விழுங்கினாள்.
அவன் இரண்டு முறை அழைப்பை ஏற்காத போதே, வேலையாக இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் மூன்றாவது முறையாக அழைக்கவும்தானே அப்படியொரு செய்தி அனுப்பினான் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் அவள். இப்பொழுது அலைபேசியை ஆவலுடன் பார்த்தபடியே, உறங்கியும் போனாள்.
அதிகாலை வேளையில் அலைபேசி அடித்து அவளை எழுப்பி விட, உறக்கம் சுமந்த விழிகளைத் திறவாமல், கைகளால் அலைபேசியைத் தேடித் துழாவி எடுத்து, “ஹலோ” என்றாள் குழறலாக. எதிர்ப்புறம் மௌனத்தைப் பதிலாகத் தர, மீண்டும், “ஹலோ” என்றாள் அதே குரலில்.
“சஹானா” அடர்த்தியான அவன் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் சஹானா.
“குட் மார்னிங்” என்றவன், அதைத் தொடர்ந்து, “சாரி” என்றான். அதிர்ச்சியில் சஹானாவிற்குக் கண்களும், உதடுகளும் திறந்து மூடின.
“சஹானா, ஐ ஆம் சாரி” சாரலாய் இதயம் நனைத்தது அவ்வார்த்தைகள். மெல்ல தொண்டையைச் செருமினாள்.
“என்ன இவ்வளவு நேரம் தூக்கம்?” அவன் கேட்க, கண்ணை அழுந்த மூடித் திறந்து எதிரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். ஏழு மணி என்றது. அவளுக்கு அது அதிகாலை என்று எப்படி அவனிடம் சொல்வாள்?
அவனோ, அவளின் பதிலை எதிர்பாராமல், “அப்புறமா கூப்பிடவா?” என்று கேட்டான்.
“இல்ல இல்ல. இப்பவே பேசலாம். சொல்லுங்க” இந்த வாய்ப்பை தவற விட விரும்பவில்லை அவள். அவளின் பதட்டமான பதிலில், மெலிதாகச் சிரித்தான். பின், “சாரி” என்றான்.
“நேத்து நிஜமா பிஸியா இருந்தேன். உனக்குத் திருப்பிக் கூப்பிட நினைச்சேன். ஆனா, நான் வீட்டுக்கு வரவே ரொம்ப லேட்டாகிடுச்சு. அதான் கூப்பிடல. சாரி” என்றான் சமாதானக் கொடி அசைத்து, அவன் நீட்டிய வெள்ளைக் கொடியை இறுக பற்றிக் கொண்டாள் சஹானா.
“ஓகே. நானும் திரும்பத் திரும்பக் கால் பண்ணியிருக்கக் கூடாது. சாரி” அதே கொடியை இப்போது அவள் அசைக்க, அவனின் மெல்லிய சிரிப்புச் சத்தம், துல்லியமாக அவள் காதை நிறைத்தது.
“பிடிச்சிருக்கு” திடீரென்று அவன் சொல்ல, அவள் கண்களில் மிச்ச மீதியிருந்த தூக்கமும் காணாமல் போயிருந்தது.
“என்ன?”
“அன்னைக்குக் கேட்டியே, உன்னைப் பிடிச்சிருக்கான்னு?”
“ஓ, ஆமா. கேட்டேன் இல்ல”
“ம்ம்” என்றான். அவ்வளவுதான். மீண்டும் அந்த வார்த்தைகளை அவனிடமிருந்து பெறவே முடியவில்லை அவளால்.
“ஓகே, சஹானா. நீ எழுந்து காஃபி குடி. நான் ஃபேக்டரிக்குக் கிளம்பிட்டேன். அப்புறம் பேசவா?”
“என்ன? ஏழு மணிக்கு தொழிற்சாலைக்குச் செல்கிறானா?” என்று மனதில் அதிர்ந்தாள் சஹானா. நல்லவேளை சத்தமாகக் கேட்டு விடவில்லை அந்தக் கேள்வியை.
“ம்ம். ஓகே.” என்ற சஹானாவிற்கு வேறென்ன பேசுவது என்று தெரியவில்லை. அவன் அழைப்பை துண்டித்த பின்பும் அப்படியே அமர்ந்திருந்தாள். தினமும் அதிகாலையில் அதே நேரத்தில் சொல்லி வைத்தது போலத் தொடர்ந்து அழைத்தான் சத்யமூர்த்தி. அவளும் உறக்கக் கலக்கத்துடன் எழுந்து பேசிக் கொண்டிருந்தாள். நான்காம் நாள் அவன் அழைக்கும் முன்பே எழுந்து குளித்துக் காஃபியுடன், அவன் அழைப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தாள்.
“குட் மார்னிங்” என்றாள் அழைப்பை ஏற்று உற்சாகத்துடன்.
“நீ தூங்கல?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“இல்ல, சீக்கிரம் எழுந்துட்டேன்”
“தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சேன்” அதிருப்தி, ஏமாற்றம் என்ன இருந்தது அவன் குரலில்? அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் ஐந்தரைக்கு அவன் அழைத்த போதுதான் அவளுக்குக் காரணமே பிடிப்பட்டது. அவளின் உறக்கக் குரலில் கிறங்கி இருக்கிறான் என்று. இப்படி அவன் சொல்லாமலே ஒவ்வொன்றையும் அவள்தான் பின்னாளில் பார்த்து பார்த்து, தேடித் தேடி அவனது பிடித்ததைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
அந்த நிச்சயிக்கப்பட்ட நாள்களில் அதிகம் இல்லையென்றாலும் அடிக்கடிப் பேசினான். திருமண ஏற்பாடுகளால் அவ்வப்போது சந்திக்கவும் நேரிட்டது. ஜவுளி, நகை என்று காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர் பெரியவர்கள். திருமண நாள் நெருங்க நெருங்க ஏதோ ஒரு பதற்றம் அவளுள் நிறைந்து வழிய, “ஒரு ட்ரிப் போய்ட்டு வர்றியா சஹா?” என்று கேட்டார் முரளிதரன்.
கடந்த முறையே அவர் தன்னைக் காரணத்தோடுதான் பேகல் அனுப்பியது போல அவளுக்குத் தோன்றியது. கடைசியாய் ஒரு பயணம் என்பது போல. இப்பொழுதும் அப்படியே தோன்ற, “வேணாம் ப்பா” என்று மறுத்தவள், வண்டிப் பெரியாரை சுற்றி வந்தாள். தேயிலை, காஃபி தோட்டங்கள், மிளகு கொடிகள், பெரியார் ஆறு என்று ஊரை பிரிய மனமில்லாமல் தோழிகளுடன் நகர்வலம் போனாள்.
ஊரையும், உறவையும் பிரிய மனதளவில் தயாரானாள். திருமண நாளுக்கு இரண்டு நாள்கள் இருக்க, சத்யமூர்த்தியின் குடும்பம் வண்டிப் பெரியார் வந்து விட்டது.
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டார்கள் அவர்கள். மறுநாள் மாப்பிள்ளை சத்யமூர்த்தி வந்திறங்க, உள்ளிருந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா. ஆரத்தியோடு சேர்ந்து அவள் கண்களும் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அன்றிரவே குடும்பத்தினர், நெருங்கிய சொந்தங்கள் சூழ, அவர்களின் நிச்சயமும், மறுநாள் ஊரும், உறவும் கூடியிருந்த சபையில் அவர்களின் திருமணமும் சிறப்பாக, வெகு விமர்சையாக நடந்து முடிந்திருந்தது.
சஹானாவின் மொத்தத்தையும் விநோத பதட்டம் நிறைத்திருந்தது.
அன்று காலை திருமணத்திற்கு அவள் தயாராகும் போது நடந்த எதுவுமே அவளை அந்நேரம் அதிகம் பாதிக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம். மாமியார், நாத்தனார் என்று புதிய உறவுகளை அன்று காலை எத்தனை ஆவலாக எதிர்கொண்டாள். ஆனால், அவர்களின் பேச்சு? சற்றே அதிர்ச்சிதான் அவளுக்கு. மணமகள் அறைக்குள் அவளுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க, உறவினர் சூழ உள்ளே வந்தார் சுப்புலட்சுமி.
அவளைச் சுற்றி நின்று, அவளை அளந்து, எடையிட்டு, போனால் போகிறதென்று பாராட்டி, குற்றம், குறைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மூத்த பெண்மணி, “கல்யாணத்தை நம்ம ஊருல வைக்கிறது விட்டுட்டு, இப்படிக் கேரளாவுலயா வைப்பாங்க? ஆறு மணி நேரம் டிராவல் பண்ணி வந்ததே அசந்துப் போச்சு” என்று அங்கலாய்த்துக் கொள்ள, “ம்ம். எங்க பேச்சை, எங்க கேட்டான் அவன்? கொக்குக்கு மீனே குறினு, கட்டினா, இவளைத்தான் கட்டுவேன்னு இல்ல சொன்னான்.” என்று புலம்பியவர், “நம்ம ஊர்ல, நம்ம இனத்துல, நம்ம சொந்தத்துல பொண்ணா இல்ல? லட்டுக் கணக்கா பொண்ணுங்க இருக்கும் போது…” சட்டென்று நிமிர்ந்து அவரைக் கண்ணாடியில் பார்த்தாள் சஹானா.
“அழகாதான் இருக்கா” போனால் போகிறதென்று பாராட்டினார். அவளுக்குச் சிரிப்பு எட்டிப் பார்க்க, தலையைக் குனிந்து கொண்டாள் சஹானா.
அடுத்தடுத்து அவளின் நகைக் குறித்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்க, குனிந்து தன்னைப் பார்த்தவளுக்கு, நகைக் கடை பொம்மையின் சாயல் தெரிய, இவர்களுக்கு இதுவே குறைவாகத் தெரிகிறதா என்று மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டாள். மீண்டும் மீண்டும் கிசுகிசுப்பான பேச்சு அவளையும், சத்யமூர்த்தியையும் சுற்றியே வர, அவள் மனத்தில் குளிர் அருவி ஒன்று குதித்து ஓடியதை அவர்கள்தான் அறியவில்லை. அவள் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் சிறியதாக இருந்த சந்தேகத்தையும் துடைத்து எறிந்திருந்தது மாமியாரின் பேச்சு. சத்யமூர்த்திக்குச் சத்தியமாய்ச் சஹானாவைப் பிடிக்கும். அவ்வளவுதான் என்று கண்ணை மூடி தலையசைத்து தனக்குத்தானே நிச்சயமாய்ச் சொல்லிக் கொண்டாள் சஹானா.
இப்பொழுது திருமண ஆரவாரங்கள் முடிந்து, அமைதியாய் அவர்கள் அமர்ந்திருக்க, அப்படியொரு அமைதி அவள் ஆழ் மனத்தில். இப்போதும் சத்யமூர்த்தியின் முகத்தை முழுமையாய் நிறைத்திருந்தது புன்னகை மட்டுமே. அவளின் கண்களைச் சந்திக்கும் போதெல்லாம் உதடு பிரித்துச் சிரித்தான். மயங்கினாள் சஹானா.
திருமண மண்டபத்தில் கூட்டம் கலைய வீடு வந்தார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தும் முடிந்து அவர்கள் ஓய்வாக அமர, தம்பதிகளைப் பிரித்துத் தள்ளிக் கொண்டு போனார்கள்.
சஹானா குழந்தையில் இருந்து வளர்ந்த வீடு அது. பின்புறமிருந்த தோட்டத்தில் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள். கேலியும், கிண்டலும் எல்லை மீறிக் கொண்டிருந்தது.
“டி, சஹா” என்று கிசுகிசுப்பாக அழைத்து,
“அவன் வந்தானா? முத்தம் தந்தானா? அவன் பார்க்கும் போது உடல் வண்ணம் மாறும் அழகே” என்று ராகம் இழுத்துப் பாடி, அவளை முகம் சிவக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ரோஹிணி அவளுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து, “சஹா” என்று தொடங்க, “ச்சீ, எழுந்து போ” பேசும் முன்னே யூகித்துக் கத்தரித்தாள் சஹானா.
“அடியே, உள்ள போய் இப்படிக் கத்தி வைக்காத” ரோஹிணி கிண்டலாகச் சொல்ல, கொல்லென்று சிரித்தனர் தோழிகள்.
“அதான் என் கல்யாணத்தைப் பார்த்துட்டீங்க இல்ல? எல்லாம் அவங்கவங்க வீட்டைப் பார்த்து கிளம்புங்க”
“அப்படியெல்லாம் உன்னை விட்டு போக முடியாது” மீண்டும் ராகம் இழுத்தார்கள். இப்போது, “ஒன்றா, ரெண்டா ஆசைகள்.. எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?” பாடலை ஒலிக்க விட்டனர்.
சஹானாவின் முகம் வெட்க சிவப்பை பூச, “சஹா” என்று அழைத்தபடி அங்கு வந்து விட்டார் புனிதா. மகளைத் தக்க சமயத்தில் காப்பாற்றியும் விட்டார் அவர்.
இருபது நிமிடம் கழித்து அவளது அறைக்குள்தான் இருந்தாள். ஆனால், அத்தனை அந்நியமாகத் தெரிந்தது அறை. பூ, பால், பழம், செண்டட் கேண்டில் என்று அங்கிருந்தவை அனைத்தும் அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்டியது. சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டாள் சஹானா. நேற்று வரை அந்நியமாய்த் தெரிந்தவன் இன்று உரிமையாகி, நெருங்கி வர, பேச்சு தொண்டையைத் தாண்டி வர மறுத்தது அவளுக்கு.
பாலை அவன் கையில் எடுக்க, “குடிக்க மாட்டேன்” என்று வேகமாக மறுத்தாள் சஹானா. அடுத்துப் பழத்தின் மேல் அவன் பார்வை போக, தொண்டை வறண்டு போனது அவளுக்கு. இதெல்லாம் சம்பிரதாயம் என்று எவன் கண்டுபிடித்தான்? மனத்தில் அவள் அர்ச்சிக்க, அகத்தைக் காட்டிய அவள் முகத்தைச் சிரிப்புடன் பார்த்தான் சத்யமூர்த்தி. அத்தனை நெருக்கத்தில் அவனின் சிரிப்பைக் காண, விழிகளை விரித்து விழுங்கிக் கொண்டாள் அவனை.
ஒன்றா, இரண்டா இல்லை ஓராயிரமா? ஆசைகளைப் பற்றிய பேச்சே எழவில்லை. அவ்வளவு ஏன், பேசவே இல்லை அவன்.
அவன் கண்கள் பேசியது. கைகள் பேசியது. காதல் பேசியது.
சஹானா திணறி, “சத்யா…” என்க, கண்ணைச் சுருக்கி புருவம் உயர்த்தினான்.
“ஏதாவது.. பேசுங்க” என்றாள்.
“ம்ம்”
“பேசிட்டு…” கூச்சத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்தப் புன்னகை மறையும் முன் மொத்தமாகத் திருடிக் கொண்டான் சத்யமூர்த்தி.
இருவரின் இதழ்கள் பேசியது, இமைகள் பேசியது. இரவு பேசியது.
சஹானா பேச்சு மறந்து சத்யமூர்த்தியை போல, “ம்ம்” சொல்லிக் கொண்டிருந்தாள். இரவின் ராகமான சஹானாவை அவன் சுக ராகமாய் இசைக்க, அந்த அறையை மொத்தமாய், மோகனமாய் நிறைத்தது அவளின் ஆலாபனை.