இரவு உணவு முடித்து விட்டு, வீட்டின் பின்புறமிருந்த தோட்டப்பகுதியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, அங்கே குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். அம்மா, அப்பா பேசிக் கொண்டிருக்கச் சஹானாவின் கவனம் அவர்களின் பேச்சில் இல்லை. அலைபேசியைப் பார்ப்பதும், வானை வெறிப்பதுமாக இருந்தாள். மனம் சத்யமூர்த்தியையே சுற்றிச் சுற்றி வந்தது. பெற்றோரின் பேச்சும் அவனைச் சுற்றிதான் இருந்தது.
சத்யமூர்த்திக் குடும்ப வழக்கப்படி திருமணம் பெண் வீட்டில் என முடிவாகி இருக்க மண்டபம், உணவு, திருமணத்திற்கு வருவோர் தங்க அறைகள், போக்குவரத்து வசதி என அனைத்தையும் பெண் வீட்டினரே செய்ய வேண்டும் என்பதால், இப்போது அந்த ஏற்பாடுகள் குறித்த பேச்சு வார்த்தையில் மூழ்கி இருந்தார்கள் அவர்கள். சத்யமூர்த்திக் குடும்பம் அவளைப் பெண் பார்த்து விட்டுப் போன இரவே, அவளிடம் மனம் திறந்து தெளிவாக அனைத்தையும் சொல்லி விட்டார் முரளிதரன்.
“ஒரு மாசத்துக்கு முன்னாடி சத்யமூர்த்திக் கால் பண்ணார் மா. நான் கூட மெடிக்கல் ஷாப் பத்தி விசாரிக்கக் கூப்பிட்டு இருக்கார் நினைச்சேன். ஆனா, அவர் உன்னைப் பத்தி விசாரிச்சார். பளிச்சுன்னு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா சொன்னார். அப்பா, யோசிச்சு சொல்றேன் சொன்னேன். ஏன்னா, கல்யாணம்ன்றது, ரெண்டு பேரை மட்டுமில்ல, ரெண்டு குடும்பங்களையும் இணைக்கிறது. இல்லையா?”
“நான் சந்தேகப்பட்ட மாதிரி அவங்க வீட்ல ஏதோ பிரச்சினை இருந்தது போல. ஆனா, சத்யமூர்த்தி உறுதியா இருந்தார். என்கிட்ட ரெண்டு மூணு தரம் பேசினார். சரி, உங்க வீட்ல முதல்ல பேசுங்க சொன்னேன்.”
யாரின் காதல் கதையையோ கேட்பது போல் அத்தனை சுவாரசியமாய் இருந்தது அவளுக்கு. ஆர்வமுடன், “ம்ம்” கொட்டினாள் சஹானா.
“அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லவும், அவங்கப்பா பேசினார். பொண்ணு பார்க்க வர்றதா சொன்னாங்க. அப்போதான் நீ டூர் கிளம்புறதைப் பத்தி பேசின. எதுவும் உறுதியா தெரியாம, உன்னைக் குழப்ப வேணாம்னுதான் உன்கிட்ட சொல்லல சஹா.”
“மாப்பிள்ளை ரொம்பத் தெளிவா பேசினார்தான். ஆனா, அவங்க குடும்பம். என்னமோ ஒட்டாத ஃபீல். கடைசி நேரம் அவங்க வரலை சொல்லிட்டா? வேணாம் சொல்லிட்டா? அம்மாவும், நானும் அதான் அதைப் பத்தி உன்கிட்ட எதுவும் சொல்லல சஹா. பொண்ணு பார்க்க வர்றேன்னு சொன்னவங்க இங்க வந்து, சட்டுனு உறுதி பண்ணிட்டு போனதையும் நாங்க எதிர்ப்பார்க்கலதான். நம்ம வீட்ல வச்சுதான் அவங்க முடிவையே சொன்னாங்க. உனக்கும் பிடிச்சுருக்குனு தெரிஞ்சதும்தான் மேற்கொண்டு நாங்க ஓகே சொன்னது” முரளிதரன் சொல்லி முடிக்க,
“முதல் முறை அம்மா ரொம்பச் சொதப்பிட்டேன் இல்ல சஹா. அதான் இந்த முறை எல்லாம் உறுதியானதும் சொல்லிக்கலாம் நினைச்சோம். மறுநாள் வர்றோம்னு முந்தின நாள் ஈவ்னிங்தான் எங்ககிட்ட கன்பார்மா சொன்னாங்க அவங்க. அது வரை பெண் பார்க்க வர்றது, வெறும் வார்த்தையாதான் இருந்தது. நூறு சதம் உறுதியா சொல்லல”
“சரி, நீ காலையில வீட்டுக்கு வந்துடுவ, உன்கிட்ட சொல்லிக்கலாம் பார்த்தா, இப்பவும் லேட்டாதான் வந்த, நாங்க திரும்பவும் உனக்கு ஷாக் கொடுத்துட்டோம். இல்ல?” புனிதா கேட்க, இல்லை என்று மறுக்க முடியாமல் புன்னகைத்தாள் மகள்.
“மாப்ள வீட்ல யோசிச்சது மாதிரி நாங்களும் நிறைய யோசிச்சோம்தான் சஹா. ரொம்பத் தயங்கினோம். பொள்ளாச்சி வேற ரொம்பத் தூரமா இருக்கு. நாம கேரளாவில் இருக்கோம். இதையெல்லாம் விட, எங்களுக்கு நீ ஒரே செல்லப் பொண்ணு இல்லையா?” மகளின் புன்னகைப் இப்போது பெரிதாக, “உன்னை ஒருத்தர் விரும்பிக் கல்யாணம் பண்ணக் கேட்டதுதான் எங்களுக்குப் பெருசா தெரிஞ்சது. அவரை நீ பிடிச்சிருக்குன்னு முன்னாடியே சொல்லியிருந்ததும்தான், நாங்க சத்யமூர்த்திக்கு ஓகே சொல்ல முக்கியமான காரணம்.” புனிதா சொல்லி விட்டு மகளின் கன்னம் வருடினார்.
“மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டோம் சஹா. நீ அவரோட நல்லா இருப்பன்ற நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம்தான் மேல பேசினோம். பொண்ணு பார்க்க வரச் சொன்னோம். கல்யாண நாள் குறிச்சோம்” அப்பா அவசரமாகச் சொன்னார். பெற்றோரின் பேச்சில் இருந்து, சத்யமூர்த்தித் தன்னை விரும்பி மணக்கக் கேட்டான் என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டாள் அவள்.
இருவருக்கும் எப்படி ஒருவரையொருவர் பிடித்தது? என்ற கேள்வி முளைக்க, அவளுக்கு அவனது சிரிப்பு நினைவில் வந்தது. தலை முதல் கால் வரை அவனை முழுவதுமாகக் கண்களில் கொணர்ந்தாள். சீராக வெட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டிருந்த அவனது சிகையில் இருந்து சீரான கால் நகம் வரை அவளது கண்களில் படமாக வர, அவனை இத்தனை கவனித்தோமா என்று அவளுக்கு வெட்கச் சிரிப்பு வந்தது. ஆனால், மொத்தமாக அவளைச் சாய்த்தது அந்தச் சிரிப்புதான். உதடு பிரியாமல் கண்களுக்கு மட்டுமே அவன் பழக்கப்படுத்தி வைத்திருந்த சிரிப்பு. பின்னர்ப் பல் தெரிய மலர்ந்து அவன் சிரித்தது தனிக் கவர்ச்சிதான்.
அவனும் ஏதோ ஒரு வகையில் தன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிகையில்தான் உணர்ந்தாள் கேரளத்தின் குளிரை. தலை முதல் பாதம் வரை ஊடுருவிய குளிர், சிலிர்க்க வைத்தது.
“சஹா…” என்ற அப்பாவின் சத்தமான அழைப்பில் நிகழ்வுக்குத் திரும்பி, “என்னங்கப்பா?” என்றாள்.
“அம்மா கேட்டுட்டே இருக்கா? பதில் சொல்லாம என்ன யோசனை?” அவர் கேட்க, “சாரிம்மா, சொல்லுங்க” என்றாள்.
“உனக்கு இந்தக் கல்யாணம் ஓகேதானே? உனக்குப் பிடிச்சுதானே சரின்னு சொன்ன?” புனிதா கேட்க, “ம்மா, கல்யாண தேதி குறிச்சி, மண்டபம் சொல்லியாச்சு. பத்திரிக்கை அடிக்கக் கொடுத்தாச்சு. இப்போ போய் என்ன கேள்வி கேட்கறீங்க?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“நீ சொல்றது சரிதான். ஆனாலும் எனக்குக் கேட்கத் தோனுச்சு. பதில் சொல்லேன்” மௌனமாய்ப் பெற்றோரைப் பார்த்தாள் சஹானா.
முரளிதரன் முப்பதாவது முறையாகச் சத்யமூர்த்தியை பற்றிச் சொன்னார்.
“லட்சுமி கோகனட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஓனர் அவர். நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்பு இருக்கு. அதுல இருபது ஏக்கரில் ஃபேக்டரி இருக்கு. தென்னை சம்மந்தப்பட்ட எல்லாத் தொழிலும் பார்க்கறார் மாப்பிள்ளை. அந்த வேலையைப் பார்க்க ஒரு நாள்ல அவருக்கு இருபத்தி நாலு மணி நேரம் போதாது. அவங்கப்பா சின்னதா செஞ்சிட்டு இருந்ததை, அவர் படிப்பு முடிச்சு பொறுப்பெடுத்து இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கார்.”
“நீங்க கிண்டலா சொல்றா போலச் சொல்லணும்னா, அவர் சின்னத் தொழிலதிபர். கேரளா, தமிழ்நாட்டைக் காட்டிலும், வெளிநாட்டு ஏற்றுமதிதான் அவருக்கு அதிகம் லாபம் கொடுக்குது போல. அதுனால, நேரம் தவறாமை அவருக்குத் தொழிலில் ரொம்ப முக்கியம்”
“அவங்கப்பாவை ஒரேடியா வீட்டில் உட்கார வைக்காம, கூடவே தொழிலில் வச்சுட்டு இருக்கார். என்ன இருந்தாலும் அனுபவத்துக்குத் தனி மதிப்புதானே? அதுவும் இல்லாம, அவங்கப்பாதான் இன்னமும் தேங்காய் எண்ணெய் செக்கை பார்த்துக்கிறார் போல” முரளிதரன் சொல்லிக் கொண்டே மகளைப் பார்க்க, கண் இமைக்காமல் அமர்ந்திருந்தாள் சஹானா.
“தேங்காய் நார் தொழில் தானேன்னு நீ சாதாரணமா நினைக்கலாம் சஹா” புனிதா ஆரம்பிக்க, “ம்மா, நான் எப்போ அப்படி நினைச்சேன்?” என்று முறைத்தாள் மகள்.
“சரி. நீ நினைக்கல. ஆனா, உன்னால சமாளிக்க முடியுமா? நீ நினைக்கிறது போலச் சத்யமூர்த்திச் சாதாரண விளையாட்டு பையன் இல்ல. உன்னைப் போல வாழ்க்கையை வேறொரு கோணத்தில பார்க்கற பையன் இல்ல. படிப்பு, குடும்பம், தொழில்னு சின்ன வயசுலயே ரொம்பப் பொறுப்பான பையன்”
“ம்மா, அப்போ நான் பொறுப்பில்லையா?”
“பாரு. இதைத்தான் சொன்னேன். உன்னை மாதிரி இப்படித் தொட்டதுக்கு எல்லாம் முறைக்க மாட்டார் அவர்.”
“அதுக்காக? அப்பா, நீங்க சொல்லுங்க. நானும் உங்க பார்மசில வேலைப் பாக்கறேன்தானே?”
“சஹா, அம்மா சொல்ல வர்றது உனக்குப் புரியுதுதானே?”
முரளிதரன் கண்டிப்பான குரலில் கேட்க, லகுத்தன்மையை விட்டுவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள் சஹானா.
“நாம வாழ்ற சூழல்தானே நம்மை உருவாக்குது ப்பா? இரவு, பகல் பார்க்காம, எந்த நோயா இருந்தாலும், பெயர் தெரியாதவங்களா இருந்தாலும், யோசிக்காம அவங்களுக்கு வைத்தியம் செய்யற, ஓடி ஓடி நோயாளிகளுக்கு உதவிட்டே இருக்க நர்ஸ் அம்மா, யாரோட நோய்க்கோ ஒவ்வொரு நிமிஷமும் மருந்துக் கொடுக்குற அப்பா, அறிவுரை சொல்ற அப்பா. மனிதாபிமானம், மனுஷத்தன்மை, அன்பு இதெல்லாம் உங்களைப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன். தெரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பார்த்து வளர்ந்த நான், நீங்க சொல்லிக் கொடுத்ததை மனதில் பதிய வச்சு வளர்ந்த நான். எப்படி இருப்பேன் சொல்லுங்க? பயணம் எனக்கு உலகம் குறித்த, வாழ்க்கைக் குறித்த பார்வையை விசாலமாக்கும்னு சொல்லித்தானே என்னை ஒவ்வொரு முறையும் ஊர் சுற்ற அனுமதிச்சீங்க? பயணம் எனக்கு நிறைய ஊரை மட்டும் இல்லாம, நிறைய மனுஷங்களையும் சந்திக்க வச்சிருக்கு. புதுப் புது அனுபவங்களைத் தந்திருக்கு.”
“அருவி பிரவாகமா குதிச்சு ஓடி வந்து, சலசலத்து ஆறா ஓடி, சலனமில்லாத குட்டையாய் தங்கிப் போறதையும், அதே அருவி இன்னொரு பக்கம் பிரிஞ்சு மேடு பள்ளம் கடந்து கடலை அடையறதையும் கண்ணால ரசிச்சுப் பார்த்திருக்கேன் மா. ஒரு முறை இல்ல, பல முறை. வாழ்க்கையின் நெளிவு சுழிவை என்னால நதி போலச் சமாளிக்க முடியும்மா. எனக்குக் கைட் பண்ணதான் எப்பவும் கூடவே நீங்க இருப்பீங்களே” சஹானா பேசி முடிக்க, பெற்றோர் முகத்தில் மலர்ச்சி. மகளின் தலைக் கோதி விட்டு, எழுந்து உள்ளே போனார் முரளிதரன்.
புனிதா அமைதியாய் அமர்ந்திருக்க, சஹானாவின் கண்கள் அலைபேசியை அடிக்கடி தொட்டு மீண்டது. நேரம் பத்தைத் தாண்டியிருக்க, “வா, படுக்கலாம் சஹா” என்றார் புனிதா. அவளுக்கு உறக்கம் வருவேனா என்று ஆட்டம் காட்ட, விட்டத்தைப் பார்த்தபடி சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.